தனியார்மயமாகும் ரயில்வே – மோடியின் “தற்சார்பு பொருளாதாரம்“

04 Jul 2020

பிரதமர் மோடி கூவிக்கொண்டிருக்கும் “தற்சார்பு பொருளாதாரம்“, “சுயசார்பு இந்தியா“ என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் என்பது, நாட்டின் ஏகபோக முதலாளிகளான அதானியின் பொருளாதாரத்தையும் அம்பானியின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் அரசுத்துறை தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் ஏகபோக முதலாளிய வர்க்கத்திற்கு வேகமாக கூறுபோட்டு விற்கப்படுவது தற்போது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அவ்வகையில் உலகின் மிகப்பெரிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே துறையை ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக  தனியார்மயப்படுத்துகிற வேலையை மோடி அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலும் ஊரடங்கும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சூறையாடிவருகிற  நிலையில், இதுகுறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் லாபம் தருகிற நாட்டின் பொதுத்துறை சேவை நிறுவனத்தை ஏலம் விடுவதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டுவருகிறது.

கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டில் ராஜிய சபாவில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பிரகாஷ் கோயல், இந்திய ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தவில்லை, சில சேவைகளை மட்டுமே தனியாருக்கு வழங்குகிறோம் என்றார். இந்திய ரயில்வே இந்திய நாட்டின் சொத்து எனப் பேசினார். ஆனால் தற்போது அவரது பேச்சு முழுவதும் கடைந்தெடுத்த வெற்றுப்பொய் உரையாகிவிட்டது.

தற்போதைய அறிவிப்பையொட்டி செய்திகள் வருமாறு,

  • சென்னை,மும்பை,தில்லி,கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான  நூறு  வழித்தடங்களில் 151 பயணிகள் ரயில்களை தனியார் ஏற்று நடத்துகிற ஏல அறிவிப்பை கடந்த ஜூலை 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
  • ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் விளையாட்டு வீரர்கள் ஏலம் எடுப்பதைப்போலே, இந்திய பயணிகள் ரயில்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏலம் எடுக்கும்.
  • இந்த ஏலத்தில் அதானி போர்ட், இ.எஸ்.எஸ்.ல் குழுமம் , டாட்டா ரியல்ட்டி,போம்பரிடர்(ஜெர்மனி) மற்றும் ஆல்ஸ்டோம்(பிரான்ஸ்) உள்ளிட்ட இருபது நிறுவனங்கள் போட்டி போடவுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக ஏலம் விடும் பணி முடிவடைந்து தனியார் சேவை தொடங்கப்படவுள்ளது.
  • அதானி குழுமமானது தனது துறைமுகம் மற்றும் இதர தொழில் மையங்களை இணைப்பதற்கு சுமார் 300 கிமீட்டர் தொலைவிற்கு சொந்தமாக சரக்கு ரயில் தடத்தை கட்டமைத்து இயக்கி வருகிறது. மத்திய ரயில்வே துறையுடனும் நெருக்கமான உறவை பராமரித்து வருகிறது. 2019 ஆண்டில் மெட்ரோ ரயில் துறைக்கென தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
  • சுபாஷ் சந்திராவின் இ.எஸ்.எஸ்.ல் ESSEL குழுமமானது கடந்த 2018 ஆம் ஆண்டில் ஹவுரா – சென்னை இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை முதன் முதலாக பெற்றது. அது முதலாக ரயில்வே துறையில் கால் பதிக்க முனைப்பு காட்டி வருகிறது.
  • தற்போது ஏலத்தில் பங்கெடுக்கிற நிறுவனங்கள், தங்களது தகுதிகளை பரிசீலனை செய்கிற விண்ணப்பங்கள்(RFQ) ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பவேண்டும். நிறுவனங்களின் தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட அடிப்படையான விசயங்கள் கணக்கிலெடுக்கப்பட்டு, ஏலத்தில் பங்கேற்க தகுதியான நிறுவனங்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுக்கும்.
  • தனியார்மய அறிவிப்பால் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு தனியார் நிறுவனங்கள் ரயில்வே துறையில் முதலீடு செய்யும் என இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • நாட்டிலே முதல் முறையாக பயணிகள் ரயில் போக்குவரத்து தனியார் வசமாகிறது. அதாவது தயாரிப்பு, இயக்குதல் மற்றும் பரமாரிப்பு ஆகிய அனைத்தையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும். இதன்மூலமாக ரயில்தடங்கள், ஊழியர்கள் முதல் அனைத்தும் தனியார் கட்டுப்பாட்டில் செல்கிறது. வரும்காலத்தில் ரயில்வே ஊழியர்களின் வேலை பறிபோகும் ஆபத்துள்ளது.
  • ரயில்களின் தொழில்நுட்பமும் ரயில் கட்டணத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றை மட்டும் அரசே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த தனியார்மய முடிவானது, ‘நாட்டின் தொழிலில் அரசுக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்  என 2014 ஆண்டில்  பாஜகவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பிரதான் பேசியது தற்செயலானது அல்ல என்பது தெளிவாகிறது!

அவர்கள் எதையுமே உருவாக்கவில்லை. மாறாக உருவாக்கி வைத்திருந்ததை ஒவ்வொன்றாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டையே விற்றுக் வருகிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.

நாட்டின் பொருளாதார வடிவத்தை நேரடியாக கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு,தற்போது பொருளாதார விவகாரங்களை கார்ப்பரேட்களின் நலன்களுக்காக ஒழுங்குபடுத்துகிற தரகு வேலையை மட்டுமே தற்போதைய மோடி அரசு தேர்ந்து  செய்துவருகிறது.

ஒருபுறம், “சுய சார்பு இந்தியா“ என கதையளந்து நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் சூறையாடும் முதலாளிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பதே பாஜக ஆட்சியின் “புதிய இந்தியா“ முழக்கத்தின் சாரமாக உள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்களானது, லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிற தனியார் நிறுவனங்களைப் போல இயங்குவதில்லை. அதாவது பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ அனிமல் ஸ்ப்ரிட் இயக்குவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ மதிப்பு விதிக்கு கட்டுப்படுத்தவில்லை. ஆனால் தற்போது ரயில்களை தனியார்மயப்படுத்துவது  மூலமாக ரயில் கட்டண நிர்ணயம் தனியாரின் கட்டுப்பாட்டின்கீழ் விடப்பட்டுவிடும். சாமானிய மக்களுக்கு ரயில் சேவை எட்டாக்கனியாகிவிடும்.

தற்போதைய ஆட்சியில் இந்தியாவின் பெரு முதலாளிகள் பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்குடைய செல்லப்பிள்ளையாக மாறிவிட்டனர். நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அறவே நீக்குவது என்ற ஏகபோக முதலாளித்துவ சக்திகளின் கோரிக்கைகளை மிக விரைவாகவே பாஜக நிறைவேற்றி வருகிறது.இப்போக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை.

 

  • அருண் நெடுஞ்சழியன்

 

ஆதாரம்:

https://theprint.in/india/modi-govt-makes-first-move-to-privatise-railways-invites-private-players-to-run-151-trains/452699/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW