நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி 1
நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டச் செலவுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்ப்பதற்குச் சொல்லப்படும் காரணிகளாகிய பணவீக்கம், அரசின் கடன் சுமை மற்றும் புதிய தாராளவாதக் கொள்கை போன்றவை போதுமானதாக இல்லை. நம் நாட்டின் நலத்திட்டச் செலவுகளை எதிர்க்கும் இதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவர்களது நாட்டின் அரசு ஒவ்வொரு நிதி நெருக்கடியின் போதும் முதலீட்டாளர்களை பிணை எடுக்க முன்வரும் போது அதை வரவேற்கின்றார்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் அரசின் நலத்திட்டச் செலவுகளை எதிர்ப்பதற்கான உண்மையான காரணம் ஒன்றே ஒன்று தான். அவ்வாறு நலத்திட்டச் செலவுகளை குறைப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் போது, தனியார் முதலீடு ஒன்றே ஒரே தீர்வாகவும் இறுதித் தீர்வாகவும் அமைந்துவிடுகிறது. அத்தகைய சூழல்களில் தனியார் முதலீட்டாளர்கள் தங்கள் பெரும்பணத்தை முதலீடு செய்வதற்காக அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளை கறந்து விடுகின்றனர். மேலும் அத்தகைய நிதிக் குறைப்புக் காலங்களில் அரசாங்கம் சீர்திருத்தம் என்னும் பெயரில் பெரு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை மேற்கொள்கின்றது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்கின்றோம் என்னும் பெயரில் அரசின் விலை மதிப்புள்ள பொது நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு அடிமட்ட விலைக்கு விற்றுவிடுகின்றது. இது தனியார் நிறுவன முதலாளிகளுக்கு பெருத்த லாபமாகும். நெருக்கடி காலத்தில் இத்தகைய வாய்ப்புகளை கையகப்படுத்திக்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களே பலம் பொருந்திய இடத்தில் இருக்கின்றனர்.
பொதுவாக நிதி நெருக்கடி காலங்களில் மக்களிடம் செலவுச் செய்யப் கையில் பணம் இல்லாத போது, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகிறது. அத்தகைய சூழல்களில் அரசு தாமாக முன்வந்து மக்கள் கையில் பணம் கிடைக்க வழி செய்து தேவையை (demand) ஊக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய அரசு முன்வராதபோது அல்லது செய்ய முடியாமல் கட்டுப்படுத்தப்படும் போது நாட்டின் ஒட்டுமொத்த தேவையும் குறைகின்றது. பொருள்களுக்கான தேவை குறையும் போது நாட்டில் உள்ள பல்வேறு குறு சிறு நடுத்தர மற்றும் தனியார் பெரு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்க முடியாமல் போகின்றது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு சந்தையில் தேவை இல்லாததால் அதன் சந்தை விலை உற்பத்தி விலையைக் காட்டிலும் சரிகின்றது. இதனால் இந்நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றது.
இவ்வாறு தேவை குறைவினால் பெரும் இழப்பை சந்திக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை கிடைக்கும் விலைக்கு விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு தள்ளப்படுகின்றது. இத்தகைய சூழலில் தங்கள் சொந்த நாட்டில் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு நிதியால் கையில் பெரும் பணத்துடன் வலம்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நிறுவனங்களை அடிமட்ட விலைக்கு வாங்குவதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். தென்கொரியா, தாய்லாந்து, கிரேக்கம் ஆகிய நாடுகள் சந்தித்துள்ள நெருக்கடிகள் இதற்குச் சான்றாகும்.
இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் தேவை என்றுமே குறைவாகவே இருந்துள்ளது. தற்போது உள்ள அமைப்பினால் இது மாறக் கூடியதல்ல. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கிடையில் அதி விரைவான பொருளாதார வளர்ச்சி என்பது சிறப்பு உந்துதல் மூலமாகவே சாத்தியப்படும் ஆனால் அதுவும் வெகு விரைவில் தீர்ந்து போக்கக்கூடியது.
இந்தியாவில் 2003-08 ஆண்டுகளில் நாம் கண்ட அதி விரைவான வளர்ச்சி என்பது வெளிநாட்டு நிதியால் கிடைத்த ஏற்றம் ஆகும். அளப்பெரிய கடன் வரத்தால் உருவான நீர்க்குமிழி ஆகும். இந்தியப் பெருமுதலாளிகளால் கடன் வாங்கி மிகக் குறுகிய காலத்தில் குவிக்கப்பட்ட செல்வமானது நம் நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும், அரசின் பல்வேறு மானியங்களையும் கையகப்படுத்திக் கொள்ள ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை செயல்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் கூட்டு (PPPs ) என்பது ஒரு வழியாக கடைபிடிக்கப்பட்டது. இத்தகைய கூட்டு நிறுவனங்களுக்கு அரசின் பொதுத்துறை வங்கிகள் கடனுதவி வழங்கியது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பெரும்பணத்தை முதலீட்டாளர்கள் மடைமாற்றுவதும், மோசடி செய்வதும் பரவலாகியது.
இவ்வாறு நீடித்து கொண்டிருந்த மூலதன வரத்து 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியினால் திடீரென்று நின்று போனது. கடன் முடக்கம் மற்றும் நிச்சயமற்ற சூழல்களினால் வளர்ச்சி குன்றியது. மீண்டும் வளர்ச்சியை மீட்டெடுக்க அரசின் செலவுகளை அதிகரிப்பதற்கு முதலில் முதலாளித்துவ நாடுகள் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 2009-10 ஆண்டுக்குள் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் உலகப் பொருளாதாரம் மீண்டெழுந்தவுடன் முதலாளித்துவ நாடுகள் அரசின் செலவுகளை குறைக்கும் படி மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது.
ஏற்கனவே கூறியது போல் இந்தியாவின் தேவை குறைவினால் ஏற்படும் அடிப்படை சிக்கல்களையும் தாண்டி மறுபடியும் வளர்ச்சியை தூண்டிவிட்டு ஏற்றப் பாதையில் செலுத்த அரசின் நிதி ஊக்குவிப்பு முதன்மையான தீர்வாக கருதப்பட்டது. கடன் பெறுதலை எளிதாக்குவது அதாவது குறைந்த வட்டியில் கடன் வழங்குவது மற்றுமொரு தீர்வாக அறியப்பட்டது. எனினும் வளர்ச்சியை முடுக்கிவிட்ட இவ்விரு தீர்வுகளையும் 2010 ஆம் ஆண்டுக்கு பின்பான காலங்களில் அரசு கைவிட்டது. ஒன்றிய அரசு, செலவுகளுக்கும் உள் நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதத்தை வெகுவாக குறைத்தது. ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டது. இதன் விளைவாக உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்தது.
முன்னதாக 2003-10 ஆம் ஆண்டுகளில், வங்கிகள் தனியார் பெருநிறுவனங்களுக்கு பெருமளவில் கடனுதவி வழங்கி இருந்தது. இதன் மூலம் பெரு நிறுவனங்கள் அதி விரைவாக தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்தியது. ஆனால் இந்த வளர்ச்சி என்னும் நீர் குமிழி வெடித்து சிதறியவுடன் பெருமளவு கடன் பெற்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் கடனை செலுத்தத் தவறியது. வங்கிகளுக்கோ இவை வாராக் கடன்களாக மாறியது.
மேற்கொண்டு வங்கிகளிடம் கடன் வாங்க முடியாததால் தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பொருளாதார ஆபத்தையும் கணக்கிலெடுக்காமல் வெளி நாடுகளில் கடன் பெறத் துவங்கியது (External Commercial Borrowings). இதற்கிடையில் மற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்க வழியில்லாததாலும் அரசின் கொள்கைகளினாலும் பிழைக்க வழியின்றி சுருங்கிப் போயின.
ஒரு கட்டத்தில், மேலும் மேலும் அதிகரித்து கொண்டு இருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கும், நலிவடைந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க இரண்டே தீர்வுகள்தான் பரிந்துரைக்கப்பட்டது. ஒன்று வெளிநாட்டு கடன்களை நிராகரித்தல் மற்றொன்று உள்ளூர் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பறிமாற்றுதல். மீட்கமுடியாத கடன்களை கண்டுணர்வதற்கான ரிசர்வ் வங்கியின் கடுமையான விதிமுறைகளும் மற்றும் திவால் நிலை, கடன் செலுத்த முடியாத நிலைக்கான விதிமுறைகளும் நமது நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு துணை புரியும் செயலாக அமைந்தது.
தனியார் பெருநிறுவனங்களின் கடன் சுமை, நீண்ட காலமாக நீடித்து வரும் பொருளாதார தேக்கம் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளின் சரிவு ஆகியவற்றை காரணம் காட்டி இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. மூலதனத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்தல், சிறு நிறுவனங்களை அழித்தொழித்தல், பொதுத்துறை நிறுவனங்களை நிர்மூலமாக்கி அபகரித்தல், உள்நாட்டு நிறுவனங்களை வெளிநாட்டு பெரு நிறுவனங்களுக்கு விற்றல் என்று திட்டங்கள் பல வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் பல ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தனியார் நிறுவனங்களின் கணிசமான சொத்தைப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சரிவு இத்திட்டங்களை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
தனியார்மயம் என்பதே நம் நாட்டின் பொது சொத்துக்களை இந்தியத் தனியார் பெருநிறுவனங்களும், வெளிநாட்டு மூலதனமும் துணிகரமாக கையகப்படுத்தி கொள்வதற்கான செயல்முறை திட்டமாகும். நம் நாட்டின் பெறுமதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமன்றி மிகவும் லாபகரமாக இயங்கி வரும் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான பிபிசிஎல்’லை (BPCL) விற்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவே அடுத்து என்னென்ன திட்டங்கள் வர இருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாகும். அரசு கிட்டத்தட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் விற்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. உலகெங்கிலும் பிற நாடுகளில் நிகழ்ந்ததைப் போல நம் நாட்டிலும் பொதுத் துறை நிறுவனங்கள் அடிமட்ட விலைக்கு விற்கப்படும். அதுவே தனியார்மயத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்.
மற்ற நாடுகளில் பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கு மக்களிடம் எழுந்த எதிர்பாலும் அரசியல் கொந்தளிப்பாலும் ஆட்சியாளர்கள் முதலில் மறுப்பு தெரிவித்து, பின்பு அடிபணிய மறுத்து, எதிர்ப்பு குரல் எழுப்பி இழுத்தடித்தனர். ஆனால் இந்தியாவில் நம் ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கை தொகுப்பு மற்றும் மறுசீரமைப்பு என்னும் பெயரில் மிகத் துரிதமாக கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பதற்கு தாமாகவே முன்வந்துள்ளனர். இதில் விசித்திரமான சிறப்பம்சமும் விநோதமும் என்னவெனில், இத்தகைய செயல்திட்டங்களை சுயசார்பு திட்டம் என்று விளம்பரப்படுத்துவதுதான்.
- Rupeindia வெளியீடு
தமிழில்: ராபின்சன்
நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 2