வளைகுடா நாடுகளில் வாழும் வாழ்வின் வழி முழுக்கவே வஞ்சனைகள் தானா ?
(வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் விமானப் பயணச் சீட்டின் விலையை நான்கு மடங்காக உயர்த்தியிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு)
“’மாசம் 30,000 ரூபாய் சம்பளம், ஏசி இருக்கற சூப்பர் மார்க்கெட்’ல தான் வேலை, கடினமான வேலை என எதுவும்இருக்காது, சாப்பாடு, தங்குகிற இடம் எல்லாம் அவங்களே கொடுத்துடுவாங்க, ஒரு வருடத்துல கடனெல்லாம் அடைச்சுடலாம்….. இரண்டு வருடம் கான்ட்ராக்ட்.. வருடத்திற்கு 30 நாள் விடுமுறை…. விசா / டிக்கெட் / கமிஷன் எல்லாம் சேர்த்து ஒரு 85,000 ரூபாய் மட்டும் தேத்திடுங்க…. ஒரே மாசத்துல உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிடலாம்” – வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஆலோசனை நிறுவனங்களின் ஆசை வார்த்தைகள் தான் இவை.
ஒன்றரை லட்ச ரூபாய் கடனுக்காக மேலும் 85,000 ரூ கடனாகி ஊரை விட்டு, வெளிநாட்டு வேலைக்கு வந்த நண்பருக்கு, பிடித்தம் எல்லாம் போகக் கிடைத்த சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 ரூபாய் மட்டுமே…. அவரது முகாமில் அவர் போலவே ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். அந்த நிறுவனம் விற்பது மனிதர்களை..!! ஆம் குறைந்த விலைக்கு ஆஃபிஸ் பாய் வேலைக்கும், கழிவறை கழுவும் வேலைக்கும், எடுபிடி வேலைக்கும் ஆட்கள் சப்ளை செய்வது. அந்த நிறுவனம் இன்னொரு நிறுவனத்துக்கு தங்கள் ஆட்களை அனுப்பி அந்த நபருக்கு 30,000 ரூபாயை அந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஆனால் வேலைக்கு போகும் நபருக்கு கொடுக்கப்படும் சம்பளம் 10,000 ரூபாய் தான். Port cabins என்று சொல்லப்படுகின்ற மரப்பெட்டி போன்ற அறைகளில் 10 க்கு 10 அளவே இருக்கும் அவ்வறைகளில் எட்டு பேர்கள் ஒரு அறையில் அடைந்து கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கானோருக்கு நூற்றுக்கும் குறைவான கழிவறைகளும் குளியலறைகளும் மட்டுமே உள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்கான உபரி வருமானம் அந்தந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் உயரதிகாரிகளின் கார்களைத் துடைப்பது, வார விடுமுறைகளில் தெரிந்தவர்களின் வீடுகளை சுத்தம் செய்வது, லோடு மேன் வேலை பார்ப்பதன் மூலம் கிடைக்கிறது. முக்கியமாக இவையெல்லாவற்றையும் தான் பணிசெய்யும் நிறுவனங்களுக்குத் தெரியாமலும், அரசுக்குத் தெரியாமலும் செய்ய வேண்டும் என்பது கூடுதல் தலைவலி.
இந்தக் கொடும் ஏய்ப்புகளில் இருக்கும் வெளிநாட்டுக் கடைநிலைத் தொழிலாளர்களுக்குத் தான் இப்போது பணியிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இவர்களிடம் தான் தற்போது விமானப் பயணத்திற்கான டிக்கெட்டின் விலையை நான்கு மடங்காக உயர்த்தி தன் பங்குக்கு கொள்ளையடிக்க பார்க்கிறது இந்திய அரசு .
பயணச் சீட்டை இந்த விலையில் பெறுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மற்ற காரணங்களாகிய வேலையிழப்பு, நோய்க் காரணங்கள் , மற்றவை எல்லாம் அப்புறம் தான்.
இந்தச் சூழலில் charter விமானங்களை இயக்க அனுமதியளித்த அரசுகள், தற்போது அந்தச் சார்ட்டர் விமானங்களை நான்கு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணங்களுடன் தானே இயக்குகிறது. மஸ்கட்டில் இருந்து சென்னை வர தோராயமாக 40 ரியால்களுக்கும் குறைவாக (இந்திய ரூபாய் மதிப்பில் 7800 ரூ) இருந்த டிக்கெட்டின் விலை தற்போது 170 ரியால்..!!!! அதாவது 33,000 ரூபாய். ஒரு டிக்கெட்டின் விலை கிட்டத்தட்ட நான்கு மடங்கிற்கும் மேலாக உயர்த்தப்பட்ட நிலையில் தான் ஜூன் மாதம் -7 ஆம் தேதி ஏர் இந்தியாவின் சார்ட்டர் விமானம் இயக்கப்பட்டது.
அதில் பயணித்தவர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் கட்டணத்தை ஏற்க முடிந்தவர்கள். இன்னும் சற்று தாமதப்படுத்தி அவர்களை அழைத்து வந்திருந்தாலும் அந்நிய தேசத்தில் நன்றாகவே வசிக்கவும் வாழவும் முடிகிற மேல்மட்டத்து நபர்கள்.
ஆனால் இங்கு உணவில்லாமல் இருப்பதற்கு இடமில்லாமல் வேலையிழந்து இருக்கிற எண்ணற்ற இந்தியர்களுக்கும் குறிப்பாகத் தமிழர்களுக்கு சக தமிழர்களையும் இந்தியர்களையும் தாண்டி உதவிக்கு வருவதற்கு யாரும் இல்லை.
இந்தியத் தூதரகம், இந்திய ஒன்றிய அரசைப் போலவே கீழ்மட்ட இந்தியர்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.
வளைகுடா நாடுகளில் தொழிலாளர் வேலை ஏய்ப்பின் காரணமாக ஒரு நாளைக்கு நூற்றுக்கும் அதிகமான புகார்கள் தூதரகங்களுக்கும் அந்தந்த நாட்டு தொழிலாளர் நீதிமன்றங்களிலும் பதிவாவதாக தகவல்கள் வருகிறது. அதற்கு எந்த வகையிலும் அவர்களுக்கான சரியான உதவிகளையோ வழிகாட்டுதல்களையோ இந்தியத் தூதரக அதிகாரிகள் தருவதில்லை. இதில் மிகப் பெரிய பிரச்சனை ‘மொழி’. இந்தி தெரியாத தமிழர்கள் இது போன்ற வேலை ஏய்ப்பு வழக்குகளில் சிக்கிக் கொண்டால் இங்கிருக்கும் அரபியும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் அரைகுறை ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடு வார்த்தைகளின் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இப்படி வழக்குகளில் சிக்கியும், கொரோனாவின் மூலமாகப் பணியும் இழந்து தவிக்கும் இந்தியர்கள் எண்ணற்றவர்கள். இவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டு வாழ்வுக்கான வழியறியாமல் இருப்பவர்களும் பலர்.
இந்த வகையில் கேரள மாநிலத்தவர்கள் கோலோச்சும் வளைகுடா நாடுகளில் அவர்களுக்கென்று தனியாக நல வாரியங்களும் அமைப்புகளும் மாநில மற்றும் அந்தந்த நாடுகளின் அரசுகளின் உதவியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் விளைவே ஒவ்வொரு வளைகுடா நாடுகளிலிருந்தும் வாரம் குறைந்தது 5 விமானங்கள் அளவில் கேரளாவின் எல்லா விமான நிலையங்களுக்கும் அவர்களால் இயக்கமுடிகிறது. அதற்கான அழுத்தத்தையும் நடவடிக்கைகளையும் சீரிய வகையில் எடுக்க முடிகிறது..
இந்திய தூதரகங்களின் மூலம் மீட்பு விமானங்களை அனுப்புவோம் என்றும், வார்த்தை ஜாலங்களாக ‘வந்தே பாரத் மிஷன்’ என்றெல்லாம் பெயரிட்டு இந்தியர்களை மீட்போம் என்றெல்லாம் சூளுரைத்த இந்திய ஒன்றிய அரசு, இலவசமாக இயக்காமல் அதற்கும் இரட்டிப்பு கட்டணம் வசூலித்திருந்தார்கள். தற்போது சார்ட்டர் விமானங்களுக்கு அனுமதி என்று பெயரிட்டு, அதையும் அவர்களே இயக்கி நான்கு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் இயக்குகிறது.
நியாயப்படி வழியற்றும் வாழ்வற்றும் இருக்கும் இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய ஒன்றியமோ, அவர்களின் தொடர் நடவடிக்கைகளால் மேல்தட்டு மக்களுக்கே முன்னுரிமை அளித்து, இந்தக் கட்டணத்தை ஏற்க முடிபவர்களுக்கு மட்டும் சார்ட்டர் விமானங்களை கொள்ளை லாபத்துடனும் இயக்குகிறது.
விமானத்தின் நடு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகலை கடைபிடிக்க முயல்வதே கட்டண உயர்விற்கான காரணம் என்று சொன்ன இந்திய ஒன்றிய அரசு, நிகழ்வில், எந்த இருக்கையையும் காலி செய்யாமல் எல்லா இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றி எந்த சமூக விலகல் நடவடிக்கைகளையும் கடைபிடிக்காமல் வெறும் கொள்ளை லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயக்கி வருகிறது.
சாதாரண நேரங்களில் ஒரு இருக்கையின் கட்டணம் 40 ரியால்கள் எனில் மூன்று இருக்கைகளின் கட்டணம் 120 ரியால்கள். நடு இருக்கையை சமூக விலகலுக்கு நிறைவு செய்யாமல் விட்டாலும் அந்த இருக்கைக்கான கட்டணத்தை மற்ற இரு இருக்கைகளில் பகிர்ந்தாலும் ஒரு இருக்கையின் கட்டணம் 60 ரியால்களை தாண்டியிருக்கக் கூடாது. ஆனால் தற்போதைய கட்டணம் 170 ரியால்கள் என்பது என்ன கணக்கில் நிர்ணயிக்கப்பட்டது ?
பொருளாதார ரீதியாக இதனை தாங்கிக் கொள்ளும் கேள்வி கேட்க விரும்பாத வர்க்கத்தினருக்கு இது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் இதற்கான வாய்ப்பில்லாத தொழிலாளர்களைக் கருத்தில் கொள்ள தமிழக மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசு என எந்த அரசும் தயாராக இல்லை.
இது யாருக்கான அரசு ? யாருக்காக இயங்குகிறது ? வளைகுடாவிற்கும் இந்தியாவிற்கும் நடந்து செல்ல வாய்ப்பிருந்திருந்தால் வளைகுடாவில் வேலையிழந்த அடிமட்டத் தொழிலாளர்களும் எப்போதோ நடக்கத் தொடங்கி நாடு திரும்பும் முன் நடைப்பிணமாகியிருப்பார்கள். வாய்ப்பில்லாததால் தான் இன்னும் உங்களின் வாய் உதிர்க்கும் வார்த்தைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்திய ஒன்றியத்திற்கும் – இந்திய தூதரகத்திற்குமான அழுத்தமான கோரிக்கைகள்
#இலவச சேவை விமானங்களை வேலை இழந்த வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்காக தனித்து இயக்கப்பட வேண்டும். குறிப்பாக மிகக் குறைவான அளவில் இயக்கப்படுகின்ற தமிழகத்திற்கான விமானங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்
#பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கான சார்ட்டர் விமானங்களின் கட்டணம் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்படவேண்டும்.. சமூக விலகல் கடைபிடிக்கப்படாத பட்சத்தில் கட்டணம் சாதாரண கட்டணமாக மட்டுமே வசூலிக்கப்படவேண்டும்..
#சார்ட்டர் விமானங்கள் தனியார் நிறுவனங்களால் இயக்க முடிகிற சூழலில் அரசு தன் விமான சேவையை துரிதமாக இயக்கி வேலையிழந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் அவரவரின் மாநிலங்களுக்கு திரும்ப ஆவண செய்யப்படவேண்டும்.
#நிலுவை சிவில் வழக்குகளில் சிக்கி பாஸ்போர்ட் முடக்கப்பட்டு நாடு திரும்ப வழியில்லாமல் இருக்கும் தொழிலாளர்களின் வழக்குகளில் தலையிட்டு இந்திய தூதரகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#வெறும் இணைய வழிகளின் மூலம் மேல்மட்ட மக்களை மட்டும் தொடர்பு கொள்ளாமல், அடித்தட்டு தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களை நேரில் சென்று நிலை அறியும் குழு ஒன்றை அந்தந்த நாட்டில் அமைத்து அவர்களை திருப்பி அனுப்பும் பணியைச் செய்ய அந்தந்த நாட்டு இந்தியத் தூதரகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
#அந்தந்த மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களைச் சார்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் வருகையையும், வெளிநாட்டில் அவர்கள் வாழ்வியலின் தரவுகளையும் உறுதி செய்ய வேண்டும்.
மாரி இள செந்தில்குமார்,
ஒமான் தமிழ் குழுமம்
+968 94
இரண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும்.
ஏனென்றால், மத்தியிலும் மாநிலத்திலும் நமக்கான அரசுகள் இல்லை எனும் வேதனை.
இனியாவது சரியானவர்களை தேர்ந்தெடுப்போம்…