கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடிப்படையையே கோட்டைவிட்ட தமிழக அரசு! தயாரிப்பும் இல்லை! வெளிப்படைத்தன்மை இல்லை! பாரபட்சம் உண்டு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடக்கம் முதலே உலக நலவாழ்வு மையம் வலியுறுத்தி வரும் உத்தி – Identify-Test-Isolate-Treat-Trace கண்டுபிடி – பரிசோதனை – தனிமைப்படுத்து – சிகிச்சையளி – தொடர்பறி என்பதே ஆகும்.
இதை அன்றாட நடவடிக்கையாக கைகொள்வதற்கு நலவாழ்வு இயந்திரத்தை அணியமாக்குவதே ஊரடங்கின் நோக்கம். ஏனெனில் இது இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கப்போகிறது.
’சிகிச்சையளி’ என்பதைப் பொருத்தவரை இந்த கிருமி தொற்றுக்கு மருந்து இல்லை. முதலில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையைக் கொடுக்கச் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன்பு உலக நலவாழ்வு மையம் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியுள்ளது. ஆனால், அதற்குள் அமெரிக்காவில் ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர். இந்த மாத்திரை கிருமித் தொற்றுவதை தடுக்காது, ஆனால் ஒரு தடுப்பு மாத்திரையைப் போல் இந்தியாவில் கொடுக்கப்பட்டு வருகின்றது; கிருமித் தொற்றியபின் ஓரளவுக்கு சிகிச்சைக்கு உதவக்கூடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால், இதற்கு தீமையான துணை விளைவுகள் உண்டு என்று தொடக்கம் முதலே எச்சரிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் இறுதிவாக்கில் ரெம்டெசிவர்(remdisivir) என்ற மாத்திரை சிகாகோவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. அது நல்ல பலன் தருவதாக நலவாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கரும் சொல்கிறார். எதுஎப்படியாயினும், இந்த கிருமித் தொற்றுக்கு தீர்வுக் காணக் கூடிய மருந்து எதுவும் இல்லை. எனவே, ’சிகிச்சையளி’ என்ற இடத்தில் நாம் செய்யக்கூடியது எல்லைக்குட்பட்டதே.
ஆகவே, கிருமித் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படக் கூடிய பிரிவினரை இலக்கு வைத்து அவர்களுக்கு கிருமித் தொற்றாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உத்தியை நோக்கி அரசு செல்கிறது. அதாவது, முதியவர்கள், சர்க்கரை நோய், காசநோய், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிருமி தொற்றாமல் தடுக்க வேண்டும். இது சரியே. எனவே, ’சிகிச்சையளி’ என்பது நீங்கலாக ’கண்டுபிடி – பரிசோதனை – தனிமைப்படுத்து – தொடர்பறி’ என்பதுதான் நம்மால் செய்யக்கூடியது.
இதில் பரிசோதனை செய்வதில் நமக்குள்ள இடர்பாடுகளில் முதன்மையானது பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு. அதற்குப் போதிய நிதியில்லை. நம்மிடம் இருந்து வரிப்பணத்தை சூறையாடிய நடுவண் அரசு இக்கட்டான நேரத்தில் நிதி கொடுக்க மறுக்கிறது. இதுவொரு முதன்மை சிக்கலாக இருக்கிறது. இந்த விசயத்தில் நடுவண் அரசுக்கு எதிராகப் போராடித்தான் நிதிப் பெற்றாக வேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய நகரங்களிலாவது பெருமளவிலான பரிசோதனையை நோக்கி நாம் சென்றாக வேண்டும்.
பரிசோதனை பணம் சம்பந்தப்பட்ட விசயம். ஆனால், தனிமைப்படுத்தலும் தொடர்பறிதலும் தமிழக அரசு முனைப்புக் காட்டினால் மக்களின் ஒத்துழைப்போடு செய்யக்கூடியதே. ஆனால், இதில் பெரிய ஓட்டையை விட்டுவைத்திருக்கிறது தமிழக அரசு. ஓட்டை மட்டுமின்றி பணக்கார மற்றும் அதிகார வர்க்க சார்பு என்ற வழக்கமான பாரபட்சம் காட்டிவருகிறது.
தனிமைப்படுத்துவதில் நிலவும் ஓட்டை:
கிருமித் தொற்றியவர்களை மெல்லிய, மிதமான, தீவிர என்று வகைப்படுத்தி கோவிட் பராமரிப்பு மையம் (dedicated Covid Care Centres),கோவிட் நலவாழ்வு மையம் (dedicated Covid health Centre), கோவிட் தனி மருத்துவமனை (dedicated Covid hospitals) ஆகியவற்றில் தங்க வைக்க வேண்டும்.
ஐரோப்பா, அமெரிக்காவில் கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் 50% அறிகுறியுடன் இருக்க தமிழ்நாட்டிலோ 80% ற்கு மேலானவர்கள் எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களாக உள்ளனர். இது ஒரு சாதகமான விசயம். இரு நாட்களுக்கு முன்பு நலவாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் கூற்றின்படி 86% அறிகுறியின்றி உள்ளனர். அதாவது, இவர்கள் மெல்லிய அல்லது மிக மெல்லிய வகையினர். தனிக் கழிப்பறை, தனியறைகள் கொண்ட வீட்டை உடையவர்களாக மட்டுமின்றி அவர்கள் வீட்டில் முதியவர், தொற்றா நோய் உடையோர் இல்லாமலும் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சொல்லலாம். ஆனால், இது நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு சாத்தியமில்லை. எனவே, கோவிட் பராமரிப்பு மையங்களில்தான் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களுக்கு சிகிச்சை என்பது தேவையில்லை. தொடர் கண்காணிப்பு இருந்தால் போதுமானது. பத்து, பதினைந்து நாட்கள் ஓரிடத்தில் தங்க வைத்து,, ஊட்டச்சத்தான உணவு அளித்து, சில வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து, காய்ச்சல் வருகிறதா? எனக் கண்காணித்து, கொரோனா பரிசோதனையில் ’நெகட்டிவ்’ வந்தால் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். இந்த மையங்கள்தான் பெரும் எண்ணிக்கையில் இப்போது தேவை.
இது விசயத்தில் தொடக்கம் முதலே தெளிவில்லாமல்தான் நலவாழ்வுத் துறை நடந்துவந்தது. தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தோர், ஊடகத் துறையினர் போன்றோரில் கிருமித்தொற்று ஏற்பட்டோரை அறிகுறி எதுவும் இல்லாத போதும் ஓமந்தூரார், இராஜீவ் காந்தி மருத்துவமனை போன்ற இடங்களிலேயே தங்க வைத்தது அரசு. இப்படி மருத்துவமனையில் கூட்டம் சேர்ப்பது மருத்துவப் பணியாளர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதும் மருத்துவமனையைக் ‘கொதிப்பு மையமாக’(hot zone) மாற்றுவதும் ஆகும். அரசின் மதிப்பீடு நோய்ப் பரவல் தீவிரம் அடையாது மருத்துவமனைக் கட்டமைப்பை வைத்தே சமாளித்துக் கொள்வோம் என்று இருந்தது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டலுக்கு முரணானது, தவறான அணுகுமுறை. ஆனால், கோயம்பேடு தொகுதி(Cluster) வெடித்தப் பின்புதான் பராமரிப்பு மையங்களை முறையாக தயார்ப்படுத்த தொடங்கியது அரசு.
தற்சமயம் நந்தம்பாக்கம், லயோலா கல்லூரி, ஐஐடி, வைஷ்ணவா கல்லூரி போன்ற மையங்கள் உள்ளன. இன்னும் சில மையங்கள் இருக்கலாம். பராமரிப்பு மையங்களைத் தயார் செய்யாமல் பலரை வீட்டில் இருந்தே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்கிறது அரசு. அதுமட்டுமின்றி மருத்துவமனைகளையும் நிரம்பி வழிய வைத்துக் கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, தற்சமயம் ( 28-05-2020) படி சென்னையில் கிருமித் தொற்றில் பாதிக்கப்பட்டிருப்போர் 6351. இதில் 85% அறிகுறி ஏதுமற்றவர்கள் என்றால் அதன் எண்ணிக்கை 5398. இவர்கள் கோவிட் பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எஞ்சியவர்கள் 953. இந்த 953 பேரிலும்கூட மிதமான, தீவிர அறிகுறி என்று வகைப்படுத்தப்பட்டு கோவிட் நலவாழ்வு மையங்கள் மற்றும் கோவிட் தனி மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் கொரோனா இணையத்தில் மூன்று வகையான இடங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பராமரிப்பு மையத்தைப் பொருத்தவரை சென்னையில் ஒரேயொரு இடத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அது மத்திய சித்தா ஆய்வு மையம். இவையன்றி அரியலூர், கடலூர், தர்மபுரி, நீலகிரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்குமட்டும் சொற்பமான மையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உண்மையில் இந்த மையங்களில் தான் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த பட்டியல் வெளிப்படையாக கொடுக்கப்படாமல் இருக்கிறது. முழுமையானப் பட்டியல் இல்லை என்பது ஒரு வகையாகவும் பல மாவட்டங்களில் இதற்கான தயாரிப்பு இல்லை என்பது இன்னொரு வகையாகவும் இருக்கக் கூடும். எது எப்படியோ இதில் அரசு போதிய தயாரிப்புடன் இல்லை என்பதும் வெளிப்படையாகவும் இல்லை என்பதும் தெளிவாக புலப்படுகிறது.
கோவிட் நலவாழ்வு மையங்கள் குறித்து விரிவானப் பட்டியல் இருந்தாலும் சென்னையைப் பொருத்தவரை கொடுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களும் தனியார் மருத்துவமனைகள்!
கோவிட் மருத்துவமனைகளைப் பொருத்தவரை சென்னையில் உள்ள 12 அரசு மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன!
இது தலைகீழாக இருக்க வேண்டும். கோவிட் பராமரிப்பு மையங்கள் அதிகமாகவும் அதைவிட குறைவாக நலவாழ்வு மையங்களும் அதனினும் குறைவாக கோவிட் மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்.
கோவிட் மருத்துவமனைகளில் கொண்டு போய் அறிகுறியற்றவர்களைத் தங்க வைப்பது அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் மீது அதிக கிருமிப் பாரத்தை(Virus Load) ஏற்றுவதும் கொரோனா அல்லாத ஏனைய நோயர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுமாகும்.
கோவிட் பராமரிப்பு மையங்களை விரிவாக்குவதுதான் முதன்மையானது. சென்னையைச் சுற்றி மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கும் போது நந்தப்பாக்கத்தில் 550 படுக்கைகளுடன் ஒரு மையத்தை உருவாக்கும் அளவுக்குத்தான் தமிழக அரசின் புத்திசாலித்தனமும் செயல்திறனும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற தனியார் கல்லூரிகளின் முதலாளிகளாக அதிமுக, திமுக பண முதலைகளே இருப்பதால் அவற்றை ஈடுபடுத்தாமல் இருக்கின்றது தமிழக அரசு.
தனிமைப்படுத்துவதிலும் பாரபட்சம்:
இரு நாட்களுக்கு முன்பு வந்த ’டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி தமிழக அரசு கடைபிடிக்கும் பாரபட்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கிருமித் தொற்று ஏற்பட்ட ஒருவர் காலை 10 மணி அளவில் அவர் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒரே வாகனத்தில் 9 பேர் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே இடமில்லை என்று சொல்லப்பட்டதால் வெகுநேரம் சாலையோரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இரவு 11 மணி அளவில் அங்கிருந்து ஐஐடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. அங்கிருந்த அதிகாரி, ‘இது காவல்துறையினர், அவர்தம் குடும்பத்தினர், அரசு அதிகாரிகளுக்கான இடம். நீங்கள் இங்கே தங்க முடியாது’ என்று சொல்லியுள்ளார். ”எங்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கிறது, இன்றிரவு மட்டும் இங்கே தங்கிக் கொள்கிறோம்” என்று நோயாளிகள் சொல்லியுள்ளனர். ஆயினும், அந்த அதிகாரி மறுத்துவிட்டார். பின்னர் வேறொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து புழலில் இருக்கும் வேலம்மாள் கல்லூரிக்கு நள்ளிரவில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கே ஒரே அறையில் அந்த ஒன்பது பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதில்கூட அரசு அதிகாரிகள், சாதாரண மக்கள் எனப் பாரபட்சம் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இப்படியாக, கிருமித் தொற்றியவர்கள் நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி அரசை நம்பி தன் வீட்டில் இருந்து வருவார்கள். இது அவமானகரமானதில்லையா?
கொரோனா எல்லாவித ஏற்றத் தாழ்வுகளையும் அம்பலப்படுத்தி நோயுற்றிருக்கும் இந்த அமைப்பை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கிறது.
உண்மையிலேயே அரசு வெளிப்படையாக இருக்கிறதென்றால், பராமரிப்பு மையங்கள், நலவாழ்வு மையங்கள், கோவிட் மருத்துவமனைகள் ஆகியவற்றின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளிப்படையாக கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொன்றிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பதும் வெளிப்படையாக இணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். நோயாளிகள் வகைப்படுத்தப்பட்டு அவர்தம் அறிகுறிக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டு அறிகுறியற்றவர்கள் மருத்துவமனையில் குவிக்கப்படவும் கூடாது, வீட்டிலேயே தங்க வைக்கப்படவும் கூடாது. மாறாக பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ட்ரோன் விடுவது, ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயப்படுத்துவது என்ற வேவு பார்ப்பதற்கெல்லாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் ஒரு சாப்ட்வேர் மூலம் இந்த மூன்று வகையான மையங்களின் பட்டியல், நிரப்பப்பட்ட இடங்கள், காலியான இடங்கள் ஆகியவற்றைக் வெளிப்படையாக தெரிவிக்க அரசு முன்வர வேண்டும்.
-செந்தில்
- https://stopcorona.tn.gov.in/wp-content/uploads/2020/03/Category-I-Dedicated-COVID-Hospitals-DCH.pdf
- https://stopcorona.tn.gov.in/wp-content/uploads/2020/03/Category-II-Dedicated-COVID-Health-Center-DCHC.pdf
- https://stopcorona.tn.gov.in/wp-content/uploads/2020/03/Category-III-Dedicated-COVID-Center-DCCC.pdf
- https://timesofindia.indiatimes.com/city/chennai/covid-positive-patients-made-to-shuttle-across-chennai-for-a-bed/articleshow/76026214.cms