சென்னையின் மூச்சை திணறடிக்கப் போகும் தமிழக அரசின் மூன்று தவறுகள்!

27 May 2020

சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையர் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினரான (vulnerable sections) முதியவர்கள் 8 இலட்சம் பேர் என்றும் அவர்களில் தொற்றா நோய் கொண்டோரின் எண்ணிக்கை 2 இலட்சம் என்றும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும்  ஊடங்களிடம் சொன்னார்.  பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பதை 24 -48  மணி நேரத்தில் கண்டுபிடித்து விடுகிறோம் என்றும் சொல்லியிருந்தார்.  பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினரை அடையாளம் கண்டு தனிக்கவனம் செலுத்துவது வரவேற்புக்கு உரியது. ஆனால், இதன் நோக்கம் என்பது அவர்களுக்கு கிருமித் தொற்றாமல் தடுப்பதும் கிருமித் தொற்று ஏற்பட்டால் உடனடியாக அறிகுறியின் வழியாக தெரிந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சையை மேற்கொள்வதாகும். கிருமித் தொற்று அத்தகைய பாதிப்புக்குள்ளாக கூடியவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் அவர்களின் தொடர்புக்கு செல்லவிடாமல் தடுத்தாக வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்த இலக்கை அடைவதற்கு உரிய வகையில் இல்லை என்பதே கள நிலவரமாக இருக்கிறது.

வீட்டிலேயே தனிமைப்படுத்தும் போங்கு:

நோயர்கள் மெல்லிய(mild), மிதமான(moderate), தீவிர(severe) அறிகுறி என்று வரையறுக்கப்பட்டு மெல்லிய அறிகுறி கொண்டோர் கோவிட் பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதுதான் இந்திய நலவாழ்வு அமைச்சகம் முதலில் கொடுத்த வழிகாட்டல். பின்னர், மிக மெல்லிய நோயர்கள் என்ற ஒரு வரையறையை ஏற்படுத்தி அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வைக்குமாறு ஓர் அறிவிப்பை அமைச்சகம் வழங்கியது. ஒருவர் 24 மணி நேரமும் அவருடன் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்

வீட்டிலேயே தனிமைப்படுத்துவது என்றால் தனியறை, தனிக் கழிப்பறை அவருக்கென்று ஒதுக்கப்பட்டு அந்த நோயர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டில் ஒரு வீட்டுக்கு ஒரு கழிப்பறை என்ற இலக்கையே நாம் இன்னும் எட்டவில்லை. நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் பொதுக் கழிப்பறை மிக சாதாரணமான ஒன்று.  ஒரு கழிப்பறைக் கொண்ட வீட்டில் வாழ்பவர்கள் கணிசமாக இருக்கின்றனர். ஒரு வீட்டில் இரண்டு கழிப்பறைகள் கொண்ட வசதிப் பெற்றவர்கள் பத்து விழுக்காட்டினர் கூட இருக்கமாட்டார்கள். இப்படியான யதார்த்தம் நிலவும்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகச் சொற்பமானவர்களுக்கே உண்டு.

வழக்கம் போல, தமிழக அரசு நலவாழ்வு அமைச்சகத்தின் இந்த பரிந்துரையையும் சிரமேற் தாங்கி செயல்படுத்த தொடங்கிவிட்டது.

எவ்வளவு சீக்கிரமாக கிருமித் தொற்றுக்கு ஆளானவர் தனிமைப்படுத்தப்படுகிறாரோ அவ்வளவுக்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் எப்படி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்? அவர் வீட்டில் முதியவர்கள், சர்க்கரை நோய், உயர் அழுத்தம் போன்ற குறைப்பாடுகள் இருப்பவர்கள் இருந்தால் அவர்களை எப்படி கிருமி தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்?.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை:

நோய் பரவும் சங்கிலியை அறுத்துவிடுவதற்கு கிருமித் தொற்றியவரின் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். இதைதான் தொடர்பு கண்டறிதல் (contact tracing) அல்லது நூல் பிடித்துச் செல்லுதல் எனலாம். கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியமானது இந்த தொடர்பு கண்டறிதல் ஆகும். எனவே அதை vigorous contact tracting – ’வீரியமிக்க தொடர்பு கண்டறிதல்’ என்பர். தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தோர், கோயம்பேடு கிருமித் தொற்று தொகுதி(cluster) என தொடக்க காலத்தில் தொடர்பு கண்டறிந்தது போல் இப்போது செய்வது இல்லை.

எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் அக்கா 9 மாத கர்ப்பினி. அவருக்கு கிருமித் தொற்று இருப்பது தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அறிகுறி எதுவும் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அறிகுறி எதுவும் இல்லை என்று சொன்னவுடன் ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ மாத்திரைகளைக் கொடுத்து இரண்டு வேளை சாப்பிடுமாறு சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். கிருமித் தொற்றுக்கு ஆளான அவரது அக்காவும் வீட்டில்தான் இருக்கிறார். அவரது அம்மாவுக்கு அகவை 47. அவருக்கு மட்டுமாவது கிருமித் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யுங்கள் என்று நண்பர் கேட்டுள்ளார். பரிசோதனை கருவி இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருப்போருக்கே பரிசோதனை செய்யவில்லை என்றால் அவரது தொடர்பில் இருந்தவர்களை எங்கே கண்டறியப் போகிறார்கள்.

குடும்பத்தாருக்கே பரிசோதனை செய்யப்படாத இன்னொரு சான்று ‘தி வயர்’ இணைய தளத்தில் “COVID-19: Has Community Transmission Taken Root in Chennai?” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையிலும் பதிவாகியுள்ளது. எனவே, இதுவொரு சகஜமான நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊடகத் துறையினர், காவல் துறையினர், பெரும்புள்ளிகள் என்றால் அவர்களுக்கு பரிசோதனை உடனடியாக நடக்கிறது. சாதாரண மக்கள் தம்மைப் பரிசோதிக்குமாறு கேட்டால் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு எந்த அளவுக்கு கிருமி தொற்றைக் களங்கப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு களங்கப்படுத்திவிட்டனர். தாமாக முன் வந்து எனக்கு பரிசோதனை செய்யுங்கள் என்று சொல்லக் கூடியவர்கள் மிகக் குறைவே. அரசோ குடும்பத்தாருக்கே பரிசோதனை செய்வதில்லை என்றால் வேறென்ன சொல்வது?

வீரியமான தொடர்பு அறிதல் செய்யாவிட்டால் எப்படி பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினருக்கு நோய்ப் பரவாமல் தடுக்க முடியும்?

வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை:

கிருமித் தொற்று ஏற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு முறை பரிசோதனை செய்து அதில் அவர்களுக்கு ’நெகட்டிவ்’ வந்தால்தான் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவந்தனர். இதுதான் முதலில் இந்திய நலவாழ்வு அமைச்சகம் வழங்கிய விடுவிப்புக் கொள்கையாகும். ஆனால், திடீரென்று மே 8 ஆம் நாள் அன்று புதிய விடுவிப்புக் கொள்கையை நலவாழ்வு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, மெல்லிய(mild), மிதமான(moderate) அறிகுறி இருப்போருக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் அவர்களுக்கு பரிசோதனை எதுவும் செய்யாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவரது வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மிதமான (moderate) நோய் அறிகுறி இருப்ப்போருக்கு காய்ச்சல் ஏற்பட்டு நான்கு நாட்களில் தணிந்துவிட்டால், மூச்சுத் திணறல் இல்லை என்றால் நோய் அறிகுறி ஏற்பட்டு பத்து நாட்கள் ஆகிவிட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் இவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பும் முன் பரிசோதனை செய்து நெகட்டிவ் வருகிறதா? என்று பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் வீட்டில் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

தீவிர நோய் அறிகுறி இருப்போருக்கு மட்டும் விடுவிப்பதற்கு முன் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தொடக்கத்தில் இரண்டு நெகட்டிவ் வருவதற்காகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்ன நலவாழ்வு அமைச்சகம் இப்போது அறிகுறியின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறது. இந்த அரசாணையோடு சேர்த்து கேள்வி, பதில் வடிவில் சில விளக்கங்களையும் அமைச்சகம் கொடுத்துள்ளது. அதாவது, பல நாடுகள் அறிகுறியின் அடிப்படையில் விடுவிக்கின்றனவாம். இப்படி விடுவிப்பவர்களிடம் இருந்து நோய்ப் பரவும் அபாயம் இல்லையா? என்ற கேள்விக்கு ஏற்கெனவே பெறப்பட்ட சான்றுகளின் படி, அவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் பரவும் வாய்ப்பில்லை என்று பதிலளிக்கப்படுகிறது.

இது பரிசோதனைக் கருவிகள் போதாமைக் காரணமாக மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றமே அன்றி அறிவியல் பூர்வமான கொள்கை தெரிவு கிடையாது. வீட்டில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு பெரும்பாலான இந்திய மக்களுக்கு கிடையாது. அதனால்தான், கேரள அரசு இதுவரை தனது விடுவிப்புக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முன்பு போலவே பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புகிறது. எப்போதும் போல தமிழக அரசு ஆட்டு மந்தைப் போல் பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டது. இப்படி நோயில் இருந்து முற்றாக விடுபடாதவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டால் அவர்களிடம் இருந்து பிறருக்குப் பரவும் வாய்ப்பு இன்னும் குறிப்பாக பாதிக்கப்படக் கூடியவர்களாக அடையாளங் காணப்பட்டவர்களுக்கு பரவிவிடும்.

கொரோனா சீனாவில் தோன்றாமல் தமிழகத்தில் இருந்து புறப்பட்டிருந்தால் இதை ஒரு மர்மக் காய்ச்சல் என்று சொல்லி நலவாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் வேலையை முடித்துவிட்டுப் போயிருப்பார். சீனா, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா என்றெல்லாம் கிருமி பரவி இந்தியாவுக்குள் வந்ததால் அவர்கள் மேற்கொண்ட பொது முடக்கம், பரிசோதனை, தொடர்பறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகியவற்றை எல்லாம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டும் என்று அக்கறை செலுத்துவது போல் எவ்வளவு காலத்திற்கு நடிக்க முடியும். சளி, காய்ச்சலுக்காக எவ்வளவு பரிசோதனை செய்ய முடியும்? எனவே, எதையாவது செய்வது போல் கணக்கு காட்டிவிட்டு அப்படியே காலத்தைக் கடத்திவிட்டுப் போவோம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டது போல் தெரிகிறது. எம் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்ற கதைப் போல் நாங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம் என்று கணக்குக் காட்டிக் கொள்ளலாம் அல்லவா? இருக்கவே இருக்கிறது  – இந்தியாவிலேயே அதிகமாகப் பரிசோதனை செய்யும் மாநிலம் என்ற பல்லவி!

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW