மின்சாரத் துறை – ஒரு தரம்! இரண்டு தரம்! மூன்று தரம்!

18 May 2020

மின்சாரத் திருத்த சட்டம் 2020,  மோடி 2.0  அரசின் மற்றுமொரு மக்கள் விரோத கார்ப்ரேட் நல பொருளாதார சீர்திருத்த கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த திருத்த சட்டம் ஒரு பக்கம் மாநில அரசுகளின் அரசியல் பொருளாதார அதிகாரத்தை பறிப்பதோடு நாட்டு மக்களின் மின்சார நுகர்வு உரிமையையும் இந்தியாவின் ஏகபோக கார்ப்பரேட்  கும்பலிடம் அடமானம் வைக்கிறது.

முன்னதாக பாதுகாப்புத் துறையில் ரபேல் விமான தயாரிப்பிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை நுழைத்து, அரசுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனம் ஓரம் கட்டப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் BSNL ஐ ஒழித்து அம்பானியின் ஜியோ நிறுவனத்தை மோடி அரசு ஏகபோகமாக வளர்த்துவிட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும் லாபகரமாக இயங்கிய BPCL தனியார்மயமாக்கியது. தற்போது கொரோனா நெருக்கடிகாலத்தில் விண்வெளித்துறை (இஸ்ரோ), ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, அணு சக்தி துறை என தேசப் பாதுகாப்பில் முக்கியமாக உள்ள துறைகளையும் கூட விட்டு வைக்காமல் அந்நிய நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கும் கையளிக்கப்படுகின்றன. இதற்கு சுய பொருளாதாரம் என்ற புதிய விளக்கம் வேறு!

பொருளாதார அறிஞர்களையும்  கிறக்கமடையச் செய்கிற மோடி அரசின் இந்த சுய சார்பு பொருளாதார அலையில் மின்சாரத் துறையும் தப்பவில்லை! தற்போது இந்தியாவெங்கிலும் மின் பகிர்மான துறையில் அதானியையும் அம்பானியையும் டாடாவையும் பிர்லாவையும் நுழைத்து மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு சவக்குழி தோண்டப்படவுள்ளது. மின் திருத்த சட்டம் 2020  அதைத்தான் முன்னரிவிக்கின்றது!

பிரதமரின் பேச்சை நம்பி வீட்டின் விளக்கை ஐந்து நிமிடத்திற்கு அனைத்த நாட்டு  மக்களுக்கு   ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’  எனும் அற்புத பரிசை மோடி வழங்கியுள்ளார். 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல முக்கிய  திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, வெறும் 21 நாட்களுக்குள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என்கிறது.

பேரிடர் காலத்தில் முக்கிய திருத்த சட்ட அறிமுகம், அதுவும் குறுகிய கால அவகாசத்திற்குள் மாநில அரசுகள் கருத்து கூறவேண்டும் என கெடு விதிப்பது என மத்திய அரசு இந்த திருத்தத்திற்கு அவசரம் காட்டுகிறது. இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று முக்கிய மாற்றங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

இலவச மின் மானியம் ரத்து

புதிய திருத்த சட்டத்தின் பிரிவு 65 இன் கீழ் மின் மானியம் ஒழிக்கப்பட்டு நேரடி பணப் பட்டுவாடா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போது தமிழகத்தில் முதல் நூறு யூனிட்டுக்கு கட்டணமில்லா இலவச மின்சாரக் கொள்கை அமலில் உள்ளது.மேலும் குடிசைகள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம்  வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 19 லட்சம் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் உள்ளன. உலகமயத்தால் தமிழகத்தின் வேளாண் பொருளாதாரம் கால் நூற்றாண்டு காலமாக சீரழிந்து வந்தாலும், காவேரி நீர் பங்கீட்டு உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு வந்தாலும் இலவச மின்சார பம்ப் செட் மோட்டார் பயன்பாடே (ஒப்பீட்டளவில்)  டெல்டாவின் விவசாயப் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலையாமல் காத்து வருகிறது.

தற்போதைய புதிய திருத்த சட்டத்தின் மூலமாக மானிய சலுகைகள் முற்றிலும் ஒழிக்கப்படுவதால், பம்ப் செட் மின்சார செலவை முதலில் விவசாயி தன் சட்டைப்பையில் இருந்து வழங்கவேண்டும். காசில்லாமல் கட்டத் தவறினால் மின் இணைப்பு பறிக்கப்பட்டு மீண்டும் பணம் கட்டி இணைப்பிற்கு அலையவேண்டும். மேலும், தமிழகத்தில் சுமார் நாற்பது ஐம்பதாண்டு காலமாக  விவசாய பம்ப் செட் மின் இணைப்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் பயனாளிகள் பெயரில் இல்லாமல் வேறு நபர்கள் பெயரில் இருக்கும். இவ்வளவு காலத்தில் நிலம் பல கைகளுக்கு மாறியிருக்கும்.குத்தகைகள் கூட மாறியிருக்கும். அவ்வாறு உள்ள நிலையில் இந்த மானியத் தொகை எவ்வாறு முறையான பயனாளிகள் கையில் சேரும்? தமிழக அரசே நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் திணறி வருகிற நிலையில் சாராயக் கடைகளை நம்பியே ஆட்சி நடத்துகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் வரை சென்று  போராடுகிறது. இந்நிலையில் மானியத் தொகையை மாநில அரசு எவ்வாறு வழங்கவியலும்? மேலும்மாநில வருவாயை ஜிஎஸ்டி மூலமாக மத்திய அரசிடம் இழந்ததோடு,15 ஆவது நிதி ஆணையப் பரிந்துரையும் தமிழகத்தை வஞ்சித்துவிட்ட நிலையில் அரசுக்கு வருமானம் ஏது?

புதிய திருத்தத்தால், இலவச மின்சார பயன்பாட்டால் பயனடைந்து வந்த விவசாயிகள் மற்றும் நலிவுற்ற பிரிவினரின் வாழ்க்கையே நிலை குலையும். இலவச மின்சேவைகள் விலக்கப்படுவதால் குடிசை வீட்டில் குடியிருப்போர் கூட இனி மின்கட்டணமாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டவேண்டிவரும். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு குறைந்தபட்சம்  ரூ 5000 -7,000  தண்ணீருக்காக செலவு செய்ய  வேண்டி நிலை வரும். உழவடித்தல், நடவுக், கூலி, இடுபொருட் செலவு,  அறுப்புப் கூலியோடு இனி மின்சார கட்டணமும் சேர்த்துவிட்டால் உற்பத்தி பொருளுக்கும் செலவுக்கும் சரியாப் போகும். உழுதவன்  கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்ற நிலையில், தற்போதைய புதிய மின் கொள்கையால் கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்து இறுதியில் அழிந்தே போய்விடுகிற அபாயமுள்ளது.

தமிழகத்தில் இலவச மின்சாரத்தைப் பெறுவதற்குப் போராடி உயிர் நீத்த   64 விவசாயிகளின் உயிர்த்தியாகத்தை  மோடி அரசின் கார்பரேட் நலனுக்காக வீணடிக்கப்படுகிறது..

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

புதிய சட்டத் திருத்தத்தில் சட்டப் பிரிவு 2  இன் கீழ் புதிதாக Electricity contract Enforcement Authority எனும் நடுவண் ஆணையம்  ஒன்று உருவாக்கப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஆணையமானது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்படும், இந்த ஆணையத்திற்கு மத்திய சிவில் நீதிமன்றத்தின் அதிகாரமும் வழங்கப்படும் (கைது ஆணை உட்பட). இந்த அமைப்பானது இரு தரப்பு/இரண்டுக்கும் மேற்பட்ட தரப்புகளுக்கு இடையிலான மின்சார கொள்முதல், பகிர்வு, மின் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் எழுகிற பூசல்களை தலையீடு செய்து தீர்த்து வைக்கும். இது வரைக்கும் இந்த வேலையை மாநில ஒழுங்காற்று ஆணையம் (SERC) செய்து வந்தது. மாநில ஒழுங்காற்று ஆணையத்த்தால் தீர்க்கப்பட முடியாத சிக்கல்கள் மைய ஒழுங்காற்று ஆணையதிற்கும் மின்சார தீர்ப்பாயத்திற்கும்  செல்லும் ((Appellate Tribunal of Electricity ) (APTEL)).  இதில் திருப்தியடையாத தரப்பு உயர் நீதிமன்றத்திடமும்  உச்சநீதிமன்றத்திடமும் செல்லலாம். இதுநாள்  வரையிலும் இந்த முறைகளிலேதான் சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. தற்போது இந்த புதிய ஒப்பந்த ஒழுங்காற்று ஆணையத்தால் இதுவரை நடைமுறையில் இருந்த மாநில ஒழுங்காற்று ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.  மாநில அரசுகள் சொந்த மாநில மின்சார ஒப்பந்தங்கள் குறித்து எந்த தலையீடும் செய்ய இயலாத வகையில் பல்பிடுங்கப்பட்ட பாம்பாக மாற்றப் பட்டுவிடும்.

இந்த சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் மாநில அதிகாரத்தையும் செல்லாதவையாக்குகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி,, மின்சாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால் இந்த சட்டமானது, புதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு மாநில அரசை பார்வையாளராக மாற்றுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார வரைவு திருத்தச் சட்டமானது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். நீட் விவகாரம், காவேரி மேலாண்மை வாரியத்தை நீர்த்து போகச்செய்வது போன்ற விஷயங்களில் மைய அரசை பூசியும் பூசாமல் எதிர்க்கிற எடப்பாடி அரசின் சந்தர்ப்பவாத அணுகுமுறையை கவனத்தில் கொண்டால், இந்த விஷயத்திலும் எடப்பாடி அரசு  இரட்டை வேடம் போட்டு மாநில உரிமையை மோடி அரசிடம் அடமானம் வைக்கபோவதை இப்போதே நாம் முன் அறிவிக்கலாம்!

மின் பகிர்மானம் தனியார்மயம்

புதிய திருத்த சட்டப் பிரிவு 126, 135, மற்றும் 64, இன் படி இனி மின் பகிர்மான கட்டமைப்பு  முழுமையாக தனியார் ஒப்பந்தத்திற்கு விடப்படும். இந்தியாவில் மும்பை, தில்லி போன்ற ஒரு சில நகரங்களில்  மட்டுமே நடைமுறையில் இருந்த தனியார் ஒப்பந்த முறை தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் போல நாடு முழுமைக்கும் விரிவாக்கப்படவுள்ளது. தில்லியிலும் மும்பையிலும் ஒப்பந்தம் எடுத்துள்ள அதானி  நிறுவனம் தற்போதுநாடு முழுமைக்கும் ஒப்பந்தம் எடுக்கும். டாட்டாவும் பிர்லாவும் அம்பானியும் வரிசைக் கட்டி நின்றுகொண்டு மாநில வாரியாக நகர வாரியாக மின் விநியோக முறையை பாகப் பிரிவினை செய்து கொள்வார்கள்.

1990 களின் தொடக்கத்தில் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் அறிமுக மானபோதே Indian Electricity Act, 1910,  மற்றும் Electricity (Supply) Act, 1948 ஆகியவற்றில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்து 2003 திருத்த சட்டத்தில் மேலும் தனியார்மயப் படுத்தப்பட்டது. தற்போது நாடு தழுவிய அளவில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை கார்பரேட்களிடம் தாரை வார்ப்பதற்கு புதிய திருத்த சட்டம் வகை செய்கிறது. இதனால் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும், கூட தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படலாம். பெட்ரோல் டீசல் விலையை தனியார் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளை லாபம் ஈட்டுவது போல இனி அதானியும் அம்பானியும் மின் கொள்ளையில் ஈடுபட அரசு சட்டப்பூர்வ  அனுமதி வழங்கலாம்.  உதாரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி கண்டிருக்க இந்தியாவிலோ பெட்ரோல் டீசல் விலை ஏற்றப்படுகிற அவலத்தை கண்டு வருகிறோம். இனி இந்நிலை மின்கட்டணத்திற்கும் வரலாம். ஏனெனில் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விட்டால்  மின் துறை மக்களுக்கான சேவைத் துறை என்பது மாறி கார்ப்பரேட்களின் ஆண்டு லாப வீத உயர்வையே நோக்கமாக கொண்டு செயல்படும்.

சென்னை பெரு வெள்ளம், வர்தா புயல் மற்றும் கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில், மின்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க வேலையால்  மட்டுமே குறைவான காலத்தில் தமிழக மக்கள் மின் இணைப்பை திரும்பப் பெற்றார்கள். இதில் பல மின் தொழிலாளிகள் உயிரையும் விட்டுள்ளனர். தற்போது மின்துறை சேவையில் இருந்து லாபமாக மாறினால், பேரிடர் காலத்தில் மக்கள் கார்பரேட்களால் கைவிடப் படுவார்கள். தற்போது உலகெங்கிலும் கொரோனா கொள்ளை நோய் பரவி, வளர்ந்த நாடுகளையே அச்சுறுத்தி வருகின்றது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் சுகாதார கட்டமைப்பை தனியாரிடம் கையளித்து விட்டதால், மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். தற்போது மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். இந்தியாவில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரையிலும் அரசுத்துறை சுகாதாரக் கட்டமைப்பே பேரிடர் காலத்தில் மக்களை காக்கின்றன. இந்த படிப்பினையை பெறாமல்,சேவைத் துறையை லாப நிறுவனங்களுக்கு மாற்றினால் நிலைமை மோசமடையும்.

தற்போது நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா கொள்ளை பரவலால் வேலையிழந்து வருமானமிழந்து வீட்டில் முடங்கி கிடைக்கிற துயர நிலையில், பேரிடர் கால முடக்க சூழலை பயன்படுத்தி, மக்கள் விரோத திருத்த சட்டங்களையும்  தனியார்மய சீர்திருத்தங்களையும்  அமலாக்குவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. 20  லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்கத் தொகுப்பை நான்கு கட்டமாக  அறிவித்த  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சீர்திருத்தம் என்ற பெயரில் நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியர்மயப்படுதுகிற அறிவிப்பையே பொருளாதார ஊக்கமாக  புரிந்து கொள்ள கோருகிறார்.

தொழிலாளர் சட்டங்களை மூன்று வருடங்களுக்கு ரத்து செய்வது, பத்து முதல் 12 மணி நேரமாக தொழிலாளர் வேலை நேரத்தை உயர்த்துவது பொதுத்துறை நிறுவனங்களை  தனியார்மயப்படுத்துவது என ஒட்டுமொத்த நாட்டின் வளங்களை கார்ப்பரேட்  நலனுக்காக அடகு வைப்பதற்கு  இதயமற்ற அரசால் மட்டுமே சிந்திக்க முடியும்.

மோடி நீட்டி முழங்குகிற சுய சார்பு பொருளாதாரம் என்பதே  அம்பானியும் அதானியும் டாடாடவும் சுய சார்படைவது என்றே பொருள் கொள்ள வேண்டும். மோடியின் சௌதிகார் (நாட்டின் காவலன்) கோஷமும் தற்சார்பு கோஷமும் நாட்டு மக்களை ஏமாற்ற அணிந்துகொள்கிற முகமூடிகள்தான்  என்பதை அரசு ஊழியர்கள் முதலாக தொழிலாளர்கள் வரையிலும் எதார்த்தத்தில் உணர்ந்துவிட்டனர்.

 

–  அருண் நெடுஞ்சழியன்

 

ஆதாரம்:

https://powermin.nic.in/sites/default/files/webform/notices/Draft_Electricity_Amendment_Bill_2020_for_comments.pdf

https://www.business-standard.com/article/economy-policy/proposed-electricity-contract-enforcement-authority-mired-in-confusion-120042700575_1.html

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW