முதலாளிகளின் நலனை காப்பதற்காக, புலம் பெயர் தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக நடத்தாதே!
திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தற்போது மோடி அரசு திட்டமிட்ட துல்லியத்தாக்குதலை நடத்திவருகிறது. கொரானா ஊரடங்கால் வருமானமிழந்து, குடும்பத்தை பிரிந்து சூழ்நிலை அகதிகளாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை, வேலை வாங்குவதற்காக சிறப்பு ரயில்களை இயக்காமலும், அறிவித்த ரயில்களை ரத்து செய்தும் மத்திய-மாநில அரசுகள் புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வை பணத்திற்காக சூறையாடுகிறது. தாங்கள் எழுப்பிய நகரங்களே அவர்களுக்கான சிறைச்சாலைகளாக மாறி இருக்கின்றன. தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களிடம் பேசி, தொழிலாளர்களை போக விடாமல் செய்ய வேண்டுமேனே மத்திய தொழிலாளர் துறை அமைச்சரே பகிரங்காக பேட்டி கொடுக்கிறார்.
முன்னதாக கர்நாடக மாநிலத்திலிருந்து பீகாருக்கு செல்வதற்கு மட்டுமே சுமார் 50,000 புலம்பெயர் தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், கட்டுமான முதலாளிகளின் சங்கமான CREDAI யின் வேண்டுகோளுக்கு இணங்க, கர்நாடகாவிலிருந்து செல்லவிருந்து பத்து ரயில்களை அம்மாநில முதல்வர் எட்டியூரப்பா ரத்து செய்துள்ளார். CREDAI யின் கேரள மாநில கிளை விடுத்துள்ள அறிவிப்பில் “தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்டறிவதற்கு முன்பு அரசாங்கம் எங்களை அல்லவா கேட்டிருக்க வேண்டும்” என்று அடிமைசாசன பாணியில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசோ புலம்பெயர் தொழிலாளர்களின் கணக்கெடுப்பை கூட இன்னும் நிறைவுபடுத்தவில்லை. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், வெறும் 50,000 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்று நமது முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வேலையும், வருமானமும் இல்லாதபோது ஊருக்கு போகவேண்டும் என தொழிலாளர்கள் கூறி வந்தார்கள், தற்போது வேலை உள்ளபோது தொழிலாளர்கள் ஏன் செல்ல வேண்டுமென CREDAI யும் அரசும் தொழிலாளர்களை வஞ்சித்து உழைப்பை சுரண்ட முனைகிறது. சிறைக் கொட்டடியில் அடைத்து வேலை வாங்குவதற்கும் ரயிலை ரத்து செய்து பலவந்தமாக வேலை வாங்குவதற்கு பெரிய வித்யாசமொன்றுமில்லை!
கட்டுமானத்துறை முதலாளிகள், ஜவுளித்துறை முதலாளிகள் போன்ற பெரும் முதலாளிகளின் தொழில் லாபத்துக்காக புலம் பெயர் தொழிலாளர்களை ஊருக்கு செல்லவிடாமல் தடுத்தும் கட்டாயப்படுத்தியும் நவீன கொத்தடிமையாக மாற்றியுள்ளனர். இதற்கு மத்திய மாநில அரசு ஊதுகுழலாக உள்ளது.
முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலையில் கால்நடையாக நடந்த தொழிலாளர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடெங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த வரலாற்றுத்துயர் மிக்க நடைபயணத்தில் மட்டுமே சுமார் 300 புலம் பெயர் தொழிலாளிகள் மரணமடைந்தனர்.
இக்கேடான நிலையிலும், இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கத் துணிந்திராத மத்திய அரசு, பிரச்சனை நீதிமன்றத்திடம் சென்றதும் வேறு வழியின்றி, புலம் பெயர் தொழிலாளர்களின் உணவு தங்குமிட வசதியை மாநில அரசுகள் உத்தரவாதப் படுத்த வேண்டும் என்றது. சுமையை மாநில அரசின் தோளுக்கு மாற்றிவிட்டு நழுவிக்கொண்டது.
இரண்டாம் சுற்று ஊரடங்கின் போதும் புலம் பெயர் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் குரல் செவிடன் காதில் ஊதிய சங்கு கதையாகியது. குஜராத் போன்ற சில மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரையில் லாபம் என்பதுபோல வருமானமிழந்து நைந்து போய் நிக்கின்ற தொழிலாளர்ககளிடம் 800 ரூபாய் ரயில் கட்டணமும் வசூலித்து. காசுக்காக சொந்த மக்களையும் சுரண்டுகிற இந்த கேடு கேட்ட அரசை உலகம் இதுவரை பார்த்திருக்காது.தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை காங்கரஸ் ஏற்கும் என சோனியா காந்தி அறிவித்ததை அடுத்து அவமானம் தாங்க முடியாமல், நாங்களே கட்டணத்தில் 85 விழுக்காடு ஏற்போம் என பா.ஜ.க சப்பைக்கட்டு கட்டியதே தவிர அதிகாரபூர்வ முடிவாக இதுவரை அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் அங்கங்கு கட்டிடப்பணிமனைகளிலும், வாடகை அறைகளிலும், தொழிற்சாலை விடுதிகளிலும் தங்கி உள்ளனர். 50 நாட்களை கடந்து உணவுக்கும் கைசெலவிற்கும் உத்திரவாதமில்லாமல் பெற்றோரை குடும்பங்களை பிரிந்து தவித்து வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு திருப்பி அணிப்பிவைக்க வேண்டும் என சில இடங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கில் நிலுவை ஊதியத்தை கேட்டு போராட்டம் நடத்திய புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்க பெருங்களத்துர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, ஒரகடம் ஆகிய இடங்களில் காவல்துறையும் முதலாளிகளும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். L&T, LNW, Casa Grande, St Angelos VNCT Ventures ஆகிய குழுமங்களுக்கு சொந்தமான தொழில் கூடங்களில் ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தும், விடுதிகளில் அடைத்துவைத்தும் தொழிலாளர்களின் சுயாதீனமான இயக்கத்தை முடக்கியுள்ளனர். மீண்டும் வேலையை தொடங்கினால் மட்டுமே உணவும் சம்பள மீதமும் கிடைக்கும் என்று ஒப்பந்ததாரர்கள் மிரட்டிவர, அதற்கு இந்திய அணுசக்தி உற்பத்தி நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகிய அரசுத்துறை பெரும் நிறுவனங்களுமே துணைப்போய் வருகின்றன. இந்நிலையில் அவசரம் அவசரமாக சாராயக் கடையை திறக்கின்ற தமிழக அரசு, புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்புவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறது.
கர்நாடக மாநில கட்டுமான முதலாளிகளின் நலனை எட்டியூரப்பா அரசு காப்பது போல இங்கு தமிழக அரசும் தமிழ்நாட்டின் கட்டுமான முதலாளிகளின் நலனை காப்பதற்கு இந்த மௌன நாடகம் நடத்தி வருகிறது.
தமிழக அரசே!
- முதலாளிகளின் நலனை காப்பதற்காக, புலம் பெயர் தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக நடத்தாதே!
- புலம் பெயர் தொழிலாளர்களை கட்டணமில்லாமல் சொந்த ஊருக்கு உடனே அனுப்பிடு!
- புலம் பெயர் தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை தாமதிக்காமல் பெற்றுக் கொடுத்திடு ! ஊர்திரும்பும் வரை உணவு அளித்திடு!
சோசலிச தொழிலாளர் மையம்
9940963131 / 9994094700