அமெரிக்க ‘பொது’ சுகாதார கட்டமைப்பும் கொரோனா மரணங்களும்

22 Apr 2020

கொரோனா நோய்த்தொற்று உலகெங்கும் பரவி பெரும் உயிர்சேத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகானில் தொடங்கி கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்த போதும் அதன் பாதிப்பால் பெருமளவும் பாதிக்கப்பட்ட நாடுகிளில் முதலானதாக அமெரிக்க இருக்கிறது. மிகவும் முன்னேறிய நாடாக உலகின் ஒற்றை வல்லரசாக தன்னை முன்னிறித்தி கொண்ட அமெரிக்கா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. இன்றுவரை (ஏப்ரல் 22 ) 8,19,175 நபர்களுக்கு நோய்த்தொற்றும்,  45,343  பேர் இறந்துள்ளனர், இந்த எண்னிக்கை ஒவ்வொரு  நாளும்  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இதன் பின்னணியில் அமெரிக்காவின் பெருளாதார கொள்கை,  பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ காப்பீடு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது.

வளர்ந்த பொருளாதாரமும் எதார்த்த நிலவரங்களும்

அமெரிக்க ஜனாதிபதி முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை அனைவராலும் கூறப்படுவது அமெரிக்கா ஒரு வளர்ந்த பொருளாதாரம் என்று. “வளர்ந்த பொருளாதாரம்” என்பது வளர்சியின் உச்சம் என கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. பின்தங்கிய வளரும் நாடுகளுடன் ஒப்பிடுவதால் மட்டுமே அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன. கோவிட் -19 பாதிப்பு அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தான பிரச்சாரத்தின் விரிசல்களைக் காட்டியுள்ளது.

 

அமெரிக்காவில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 2.9 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. இது துர்க்மெனிஸ்தான் (1,000 பேருக்கு 7.4 படுக்கைகள்), மங்கோலியா (7.0), அர்ஜென்டினா (5.0) மற்றும் லிபியா (3.7) ஆகியவற்றைக் காட்டிலும் குறைவு. உலக சுகாதார அமைப்பால்  கணக்கெடுக்கப்பட்ட 182 நாடுகளில் அமெரிக்கா 69 வது இடத்தில் உள்ளது. போதிய  படுக்கைகள் இல்லாததால் நாடு முழுவதும் உள்ள கோவிட் -19 நோயாளிகள், உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை.  மாறாக மருத்துவமனையில் படுக்கை காலியாகும்வரை காத்திருக்க வேண்டிய சூழலில் இறப்புகள் அதிகரிக்கிறது.

அமெரிக்காவின் மருத்துவர்களின்  எண்ணிக்கையும் திருப்தி தர கூடியதாக இல்லை. அமெரிக்காவில் 1,000 பேருக்கு 2.6 மருத்துவர்கள் உள்ளனர். இது முன்னேறும் நாடாக கருதப்படும் ரஷ்யா’ வை (1,000க்கு 4.0 மருத்துவர்கள்) விட குறைவானது. சிலி மற்றும் சீனாவை விட அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் ஆயுட்காலம் குறைவாக உள்ளது. ஈரான் மற்றும் சவுதி அரேபியாவை விட அமெரிக்காவில் பேறுகால இறப்பு விகிதம் அதிகம்.

 

மாலி மற்றும் ஏமனில் இருப்பதை விட அமெரிக்காவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகமாக உள்ளது, இனவெறி நாடான இஸ்ரேல் இதற்கு அடுத்தபடியாக உள்ளது.

 

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா உலகில் 81’வது இடத்தில் உள்ளது. எனவே அமெரிக்காவை விட  வியட்நாமிலோ அல்லது அல்பேனியாவிலோ வசிக்கும் பெண்ணுக்கு அதிகாரத்தில்  அமர்வதற்கான  வாய்ப்பு அதிகம்.  ஆப்பிரிக்கா பாராளுமன்றத்தில் 24% பெண்கள் பிரதிநிதித்துவத்துடன்  அமெரிக்காவிற்கு இணையாக உள்ளது.

 

அமெரிக்காவில், 83% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை பெலாரஸ், ​​உக்ரைன், கஜகஸ்தான், பார்படாஸ், ஆர்மீனியா, போஸ்னியா & ஹெர்சகோவினா மற்றும் மாண்டினீக்ரோ போன்ற நாடுகளில்  அதிகமாக உள்ளது. அந்த நாடுகள் எதுவும் ஐக்கிய நாடுகள் சபையால் “வளர்ந்த பொருளாதாரங்கள்” என்று கருதப்படவில்லை .

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களே வேறுவிதமாக கூறும்போது அமெரிக்காவை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக ஏன் அது கருதுகிறது? அதற்கு காரணமாக பெருஞ்செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பரந்த அளவில் கணக்கிடப்பட்ட  தனிநபர் வருமானம் என்று வாதிடலாம்.

ஆனால் அவை வளர்ச்சியின் அளவீடாக இருந்தால், ஐரோப்பிய நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை “வளர்ந்த பொருளாதாரம்” என்ற சொல்லுக்கு தகுதி பெறக்கூடாது, அதே நேரத்தில் பெர்முடா, கத்தார், சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். தவிர, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் மதிப்பீடாக இருக்க முடியாது, உதாரணமாக அமெரிக்க போன்ற ஒரு நாட்டில்  செல்வந்தர்களில் 5% பேர் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செல்வங்கள் வைத்துள்ளனர்.

உண்மைகள் அயர்சியடைய செய்கின்றன.  இவை எல்லாவற்றிலிருந்தும் ஒன்று தெளிவாகிறது.  நாம் ஏமாற்றப்பட்டு‌ருக்கிறோம். மற்ற வெள்ளை இன  பெரும்பான்மை நாடுகளைப் போலவே அமெரிக்காவும் “வளர்ந்த பொருளாதாரம்” என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அது உண்மை இல்லை. ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய் அந்த குழந்தையை வைத்திருக்க 39.95 டாலர் வசூலிக்க கூடாது . இலாபத்தை அதிகரிப்பதற்காக  தொடர்ந்து மருத்துவமனைகளை தேவைக்கு நெருக்கமாக இயக்க கூடாது. பொது நலனுக்காக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளில் தனியார் முதலீடு என்பது நெறிமுறையிலோ அல்லது நடைமுறையிலோ எந்த நன்மையையும் செய்யவில்லை.

ஒரு நாடு வளர்ந்த  நாடாக வரையறுக்கப்படுகிறதா இல்லையா என்பது ஏன் முக்கியம்?  ஏனென்றால் இதன் வழியே ஆட்சியாளர்கள்,  வாக்காளர்களை  ‘இராணுவமும் வர்த்தகமுமே வளர்ச்சி என திசைதிருப்ப முடியும். ஆனால் உண்மையில் அமெரிக்கா மிக அவசரமாக சரிசெய்ய வேண்டிய பிரச்சினைகள்… மருத்துவம் மற்றும் கல்வியே ஆகும்.  இவை  சிறப்பாக கையாளப்பட்டிருந்தால், அமெரிக்கா இப்போது இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கியிருக்காது.

 

 அமெரிக்காவின் நவதாராளவாத பொது சுகாதார அமைப்பு:

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநரும் டிரம்ப் நிர்வாகித்தல்  உண்மையை பேசும் ஒரே நபராக அறியப்பட்ட டாக்டர் ஆண்டனி எஸ் பைவுசி “நமது தற்போதைய தேவைக்கேற்ப நமது கட்டமைப்பு தயாராக இல்லை. அது தோல்வியடைந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். இதில் நாம் அடிப்படையான ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். சிறிது திறம்பட செயல்படும் அதிபரின் கீழும் அமெரிக்காவின் கட்டமைப்பு தோல்வியடையவே செய்யும். விரைவில் அனைவரும் வெளிப்படையாக அறியப்போகும் ஒரு இரகசியம் என்னவென்றால் அமெரிக்காவில் பொது சுகாதார அமைப்பு என ஒன்று இல்லவே இல்லை என்பதுதான்.

சீனாவின் யூவாகினில் பரவிய அதே வேகத்தில்  அமெரிக்காவில் கொரோனா பரவுவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்கா  கொரோனாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார கட்டமைப்பு அங்கு இல்லை என்பதை உணர்ந்துள்ளது.

பொது சுகாதார அமைப்பிற்கு மாறாக இலாப நோக்கத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சமூக காப்பிட்டு திட்டங்கள்     பணம் உள்ளவர்கள்,  உத்தரவாதமான நல்ல வேலை உள்ளவர்களுக்கு  மட்டும் பயன்படும் விதமாக உள்ளதுஇவை இரண்டும் ஒட்டுமொத்தமான பொதுநலனை விட தனிநபர் நலன்களுக்கே பயன்படுகின்றன. அமெரிக்காவில் பொது மருத்துவம், பொது கல்வி, பொது நலன் ஆகியற்றிலுள்ள “பொது” என்கிற சொல் பொதுவான சமூக நலனை குறிக்காமல் குறிப்பிட்ட தனிநபர்களின் மொத்த பலனையே குறிக்கிறது.

கோவிட் -19 பாதிப்பு காலத்தில் அனைவருக்குமான “மெடிக்கர்” எனப்படும் மருத்துவ காப்பீட்டு உதவி குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது பற்றிய விவாதம் சிக்கலானது, கொரோனா தொற்றிற்கு எதிராக முன்னணியில் செயல்படுவது பொது சுகாதார நிறுவனமே தவிர மருத்துவ காப்பீடுகள் அல்ல. ஆண்டுதோறும் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பொது சுகாதார நிறுவனங்களுக்கு குறைந்த  நிதி ஒதுக்கி அவற்றை கொரோனா போன்ற ஒரு நோய்த்தொற்றிக்கு தயார் படுத்தாதன் விளைவாக அமெரிக்கா தனக்கு தானே தீங்கிழைத்து கொண்டது. அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவி கோருவதென்பது கட்டுபடுத்துதலுக்கு மிகவும் தேவையானது. பாதிப்பட்வர்களை பரிசோதித்து தனிமை படுத்த அது உதவும் .  ஆனால் அதிகபடியான மருத்துவ கட்டணம் குறித்த பயம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு வராமல் தடுக்கிறது. எனவே மருத்து சேவைக்கான செலவை கையாள்வதும் இன்றியமையாதது. தைவான் அரசின் செய்தித் தொடர்பாளர், அந்த நாட்டின் காப்பீட்டு முறையே கோவிட் -19 ஐ வெற்றிகரமாக கட்டுக்க்குள்ள  வைத்திருப்பதற்கான காரணமென புகழாரம் சூட்டினார். அது குறித்து என்.பி.சி செய்தியிடம்  “தைவானின் மருத்துவ காப்பீடு அனைவரும் அச்சமின்றி மருத்துவமனைக்குச் செல்ல உதவுகிறது. கொரோனா வைரஸ் இருப்பதாக ஒருவர் சந்தேகித்தால், மருத்து செலவினை குறித்த அச்சமின்றி அவர் பரிசோதனை செய்ய வரலாம்” எனக் கூறினார்.

அண்மையில் கொரோனா பரிசோதனையை அனைவருக்கும் இலவசமாக்கி டிரம்ப் ஒரு சட்டமேற்றினார். கோவிட் 19 நிமோனியாவினால் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் சிகிச்சையை இலவசமாக்காமல் பரிசோதனையை மட்டும் இலவசமாக்குவது போதுமானதாகாது. அமெரிக்காவில் மூன்று கோடி பேர் காப்பீடுகள் இல்லாமல் இருக்கிறார்கள். நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மேலும் அதிகமானோர் கூட்டு காப்பீடே வைத்துள்ளனர்‌‌. அவர்களுக்கும் நிதி நெருக்கிடியினால் தங்கள் பங்கை செலுத்துவது கடினமாக அமையும்‌. இந்த இரு பிரிவினருக்கும் கோவிட் 19 தீவிர சிகிச்சைக்கான செலவென்பது பெரும் நெருக்கடியாகவே மாறும்.

 

இத்தகைய செலவுகளிலுருந்து மக்களை காப்பதற்கு மட்டுமல்லாமல் மருத்துவ கட்டமைப்பை சீரமைக்கவும் திட்டங்கள் தேவை. அண்மையில் அமெரிக்காவில் மருத்துவத்திற்காக கணிசமான நிதி ஒதிக்கிய போதும் அமெரிக்காவில்  மருத்துவ படுக்கைக்கான எண்ணிக்கை பிற வளர்ந்த நாடுகளை விட குறைவாகவே உள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள அதிகமான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகள் மூடுவதற்கான காரணம் மக்களுக்கு  தேவை குறைந்துவிட்டது என்பதில்லை அவை இலாபத்துடன் இயங்கவில்லை என்பதே. மேலும் பொது மருத்துமனை படுக்கைகள் குறைவாக இருக்கும் அதே சமயத்தில் தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை அமெரிக்காவிலே அதிகமாக உள்ளது. எனினும் ஒரு தீவிர நோய்த்தொற்றின் போது படுக்கைகள் தேவைப்படும் இடத்தில் அல்லாமல் தேவையற்ற இடத்தில் உபயோகமின்றி இருக்குமென 2010ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சங்கம் அதன் இதழுக்காக நடத்திய ஆய்வில் கண்டறிந்தது. மருத்துவ படுக்களுக்கான இந்த பகிர்மானம் மருத்துவ தேவையை பொறுத்தல்லாமல் சந்தை தேவைக்கேற்பவே அமைந்துள்ளது.

சுருக்காமாக, அமெரிக்காவில் பொது சுகாதார அமைப்பென்று ஒன்று இல்லவே இல்லை. ஏனெனில் வளர்ந்த நாடுகள் அதன் மக்களை தேசிய பாதுகாப்பை தவிர வேறு எந்த விதத்திலும் பாதுகாக்காது. கொரோனாவின் பின்னணியில் தற்போது விவாதிக்கபடும் அனைத்தும் தற்காலிகமானதே தவிர நிரந்திர தீர்வாகாது.

 டிரம்பின் அதிகார கொள்கைகள்:

கொரோனோவிற்கான டிரம்பின் எதிர்வினை என்பது வெறும் திறமையின்மை மட்டுமல்ல – அது ஒரு அரசியல் லாப கணக்கு. அவரது நிர்வாகம் திறம்பட செயல்படாத போதிலும், இந்த தொற்றுநோயை பொது மக்களின் உயிரின் அச்சுறுத்தலாக பார்க்காமல் முக்கியமாக சந்தை மற்றும் செல்வந்தர்களின் நலனின், அதனுடன் தொடர்புடைய தனது சொந்த அரசியல் எதிர்காலத்தின் அச்சுறுத்தலாகவே டிரம்ப் பார்க்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.

கொரோனா பரவலுக்கு வெகு முன்பாகவே டிரம்ப் நிர்வாகம் அதிகார வர்கத்தின் நலன்களை காக்கும் நோக்கில் பொது சுகாதார கட்டமைப்பின் நிதியை குறைத்தது. டிரம்பின் கொரோனா குறித்த நிலைப்பாட்டை இந்த தகவலுடன் இணைத்து பார்க்க வேண்டும். உதாரணமாக 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் வெளியிட்ட அரசாணையால் புதிதாக அரசு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்ததன் மூலம் நோய் கட்டுப்பாட்டு மையங்களில் 700 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உலகின் அதிபயங்கர பேக்டீரியா மற்றும் வைரஸை கையாளும், ஒரு மருத்துவ அவசரத்தின் போது  அதனை எதிர்த்து போராடும் நாட்டின் முக்கிய துறையில் இருக்கும் ஒவ்வொரு இடமும் முக்கியமானது என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சந்தைகளின் நிலமைகளை ஆராய்ந்து வர்தகம் செய்வதில் ஏற்படும் சிறு இடையூறையும் சரி செய்ய ஃபெடரல் ரிசர்வ் (மத்திய வங்கி) என்று ஒரு அமைப்புள்ளது. கடந்த வாரத்தின் பிற்பகுதியில் ஃபெடரல் ரிசர்வ் 1.5 ட்ரில்லியன் டாலரை சந்தையில் ஏற்பட்ட சரிவை சரி செய்ய வங்கிகளுக்கு அளித்துள்ளது. அது குறித்து யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை.

ஆனால் அமெரிக்காவில் மருத்துவமென்று வரும்போது இவ்வளவு நிதி கிடைப்பதில்லை. பொது மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் அதை நிர்வகிக்கவும் ஒரு மருத்துவ அவசரத்தின் போது பெரும் நிதியை ஒதுக்கவும் ஃபெடரல் வங்கிக்கு இணையான ஒரு அமைப்பு சுகாதாரத்துறையில் இல்லை‌.

கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய பின்னும் டிரம்ப் நிர்வாகம் தனது ஆட்சி அதிகாரத்திற்கான முன்னுரிமையை மறுபரிசீலனை செய்யவில்லை. கலிபோர்னியாவின் கடற்கரையில் சொகுசு கப்பலில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களை மீட்பதே சரியான முடிவென்ற போதும் டிரம்ப் அதை எதிர்த்தார் என தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டார். அது குறித்து டிரம்ப் கூறிய “ஒரு கப்பலால் கொரோனா எண்ணிக்கை இருமடங்காக அதிகமாவது தேவையற்றது. அந்த கப்பலில் ஏற்பட்ட தொற்றுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது” கருத்தையும் சுட்டி காட்டினார். மேலும் டைமண்ட், தேசிய வானொலியின் ஃபெரஷ் ஏர் என்ற நிகழ்சியில் “கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக வைத்திருப்பது அதிபருக்கு நல்லது. அது வரும் தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையும்” எனக் கூறினார்.

வெகு விரைவில் அறிவியலை ஏமாற்ற முடியாது என்பதை டிரம்ப் உணர்வார். கொரோனா வைரஸ், போலி அரசியல் பரப்புரைகளுக்கு அப்பாற்பட்டது. அவரது பேராசையும் விடவும் அதிகமாக கொரோனாவின் வளர்ச்சி இருக்கும். அதிகாரவர்கத்தின் தேவைக்காக மருத்துவத்திற்கான நிதியை குறைத்தது, பங்கு சந்தையை கருத்தில் கொண்டு கொரோனாவிற்கு எதிர்வினையாற்றியது போன்ற செயல்களால் பொது மக்களின் உயிரை விட தனது சொந்த அரசியல் நலனை பாதுகாத்துள்ளார் டிரம்ப்.

 

  • ‘தி கார்டியன் மின்னிதழில் வெளியான பல்வேறு கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது’

 

தமிழில்:  சர்ஜுன்

https://www.theguardian.com/news/datablog/2020/apr/06/coronavirus-american-reaction-economy-covid-19

https://www.theguardian.com/commentisfree/2020/mar/15/america-public-health-system-coronavirus-trump

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW