கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் – ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

20 Apr 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பத்துவதில் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அதே நேரத்தில், செய்திகளைக் கொடுப்பதில் கொரோனாவுக்கு முன்பான ’பிரேக்கிங் நியூஸ்’ பாணியிலான செய்திப் பகிர்வு தொடர்ந்துவருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கையைச் சொல்லும்போது அதற்கு உணர்ச்சியூட்டப்படுகிறது. இன்றளவில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அளவுக்கு அதிகமான அச்சமும் பீதியுமே நிலவிக் கொண்டிருக்கிறது. இது தேவையற்றது, கூடவே எதிர்மறை விளைவுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நேற்று ( 19-4-2020) தமிழகத்தில் மொத்த நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை 105. கடந்த நான்கைந்து நாட்களாக இந்த எண்ணிக்கை ஐம்பதை ஒட்டி இருந்து வந்த நிலையில், நேற்று 105 என்ற அதிகரிப்பு கவலையளிக்கும் செய்தியாக ஊடகங்களால் மக்களுக்குப் பகிரப்பட்டது. கடந்த 18 நாட்களாகவே நோய்த் தொற்றியவரின் தொடர்புகள்தான் பெருமளவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நோய்த் தொற்றியவர்களின் தொடர்புகள் அல்லாமல் முதல்நிலைத் தொற்றாளராக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்து வந்துள்ளது.

நாளொன்றுக்கு எத்தனைப் பேர் புதிய நோய்த் தொற்றாளர்கள் என்று பார்ப்பதுடன் எத்தனை முதல்நிலைத் தொற்றாளர்கள்(primary) மற்றும் நோயின் மூலம்( source – அதாவது அவர்களுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது) அறியப்படாதவர்கள் என்ற எண்ணிக்கையைப் பார்ப்பதும் அவசியமாகும். ஏற்கெனவே கண்டறியப்பட்ட நோய்த் தொற்றாளரின் தொடர்புக்கு அதாவது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நண்பர்களுக்கு இருப்பின் அது ஒப்பீட்டளவில் கவலைக்குரியதல்ல. எடுத்துக்காட்டாக, அரசின் செய்தி அறிக்கையில் (stopcorona.tn.gov.in) கொடுக்கப்பட்டுள்ள கடந்த ஏழு நாட்களின் விவரங்களைப் பார்ப்போம்.

 

 

நாள் எண்ணிக்கை முதல்நிலை(primary) தொடர்புகள்
ஏப்ரல் 19 105 13 92
ஏப்ரல் 18 49 0 49
ஏப்ரல் 17 56 15 41
ஏப்ரல் 16 25 6 19
ஏப்ரல் 15 38 16 22
ஏப்ரல் 14 31 1 30
ஏப்ரல் 13 98 9 89

 

நேற்று 13 பேர் முதல்நிலைத் தொற்றாளர்கள். சென்னையில் கண்டறியப்பட்ட 50 பேரில் 10 பேர் முதல்நிலைத் தொற்றாளர்கள். அதி\ல் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள்(2), துணை ஆய்வாளர் ஒருவர். பத்திரிகையாளர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிப்பவர், மருத்துவர் கொரோனாப் பிரிவில் சிகிச்சை அளித்தவர். மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை ஒட்டி பணியாற்றக் கூடியவர்களுக்கு நோய்த் தொற்றக் கூடும் என்பது எதிர்பாராத ஒன்றல்ல என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஏப்ரல் 17, 15 ஆகிய நாட்களில் மொத்த எண்ணிக்கை முறையே, 56, 28 என்றாலும் முதல்நிலைத் தொற்றாளர் எண்ணிக்கை 15, 16 ஆகும். அது, நேற்றைய முதல்நிலைத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். ஆகவே, ஏப்ரல் 19 இன் எண்ணிக்கையைவிட ஏப்ரல் 17, 15 இன் எண்ணிக்கை கூடுதல் அக்கறைக்குரியது.

ஏப்ரல் 18 அன்று மொத்தம் 49 பேர் கண்டறியப்பட்டிருந்தாலும் ஒருவர்கூட முதல்நிலைத் தொற்றாளர் இல்லை. அதே நேரத்தில், ஏப்ரல் 16 அன்று, மொத்தம் 25 பேர் தான் கண்டறியப்படிருந்தனர் என்றாலும் முதல் நிலைத் தொற்றாளர்கள் 6 பேர். ஏப்ரல் 18 இன் எண்ணிக்கையைவிட ஏப்ரல் 16 இன் எண்ணிக்கை  குறைவே என்றாலும் முதல்நிலை தொற்றாளர் எண்ணிக்கையின் காரணத்தால் கூடுதல் அக்கறைக்குரியது. ஒரு நோய் மூலத்தில் இருந்து – பினீக்ஸ் மால், ஒரு கேட்டட் அபார்ட்மெண்ட், ஒரு ஐடி அலுவலகம், ஒரு மாநாட்டு – அது ஒரு தொகுதியாக (cluster) ஆக அமையும் பட்சத்தில் அதில் கொரோனா நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும். ஆனால், நலவாழ்வுத் துறையின் மதிப்பீட்டின்படி அது ஒரு தொகுதி என்றே பாவிக்கப்படும். அவர்களையும் அவர்களது தொடர்புகளையும்கூட ஒரு தொகுதியாக கருத்தில் கொண்டு பரிசோதனை, தனிமைப்படுத்தல், தொடர்பு கண்டறிதல், நோய்த் தீர்த்தல் ஆகியவை அடுத்தடுத்து செய்யப்படும். ( சான்று – நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு மருத்துவ இயக்குநர் குழந்தைசாமி தந்துள்ள பேட்டி – கீழே சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது).

எனவே, எண்ணிக்கை அதிகம், குறைவு என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் உணர்ச்சியூட்டி செய்தி கொடுத்தால் அத பீதியையோ அல்லது நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது என்ற மயக்கத்தையோ மக்களிடம் ஏற்படுத்திவிடும்.

நலவாழ்வுத் துறை அதிகாரிகள் கொடுக்கும் விவரங்களை, அப்படியே அவர்கள் வெளிப்படுத்தும அதே உணர்ச்சியுடன் செய்தியாக தரலாம். அல்லது தொற்றியல் ஆய்வுடன் தொடர்புடைய மருத்துவரின் துணைகொண்டு அவர் வெளிப்படுத்தும் கருத்தாக கூட செய்தியைக் கொடுக்கலாம். மாறாக செய்தி வாசிப்பவர், செய்தி சேகரிப்பவர் தமது புரிதலில் இருந்து எண்ணிக்கை கூடுதல், குறைவு என்ற உணர்ச்சியைத் தருவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் போராட்டம் மனிதனுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றங்களைக் கோருகிறது. சமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் வடிவமைத்துள்ள இலாப நோக்கத்தின் அடிப்படையிலான விதிகள், சிந்தனைகள், விழுமியங்கள் ஆகியவற்றின அடிப்பையிலேயே செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களுக்கும் இது பொருந்தும். ஆனால், அவையாவும் கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் மனித குலம் முன்னேறிச் செல்ல உதவாது என்பதால் ஊடகங்கள் கொரோனா பொருட்டு செய்தி வழங்கும் முறையிலும் மாற்றம் தேவை.

 

-செந்தில்

 

சுட்டி: https://www.youtube.com/watch?v=ySyXaHaoH4E&feature=youtu.be

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW