ஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் !
ஏப்ரல் 30 வரை தமிழகம் தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என நேற்று ஏப்ரல் 13 அன்று முதல்வர் அறிவித்தார். மே 3 வரை இந்திய அளவிலான ஊரடங்கு என்று ஏப்ரல் 14 அன்று பிரதமர் அறிவித்தார். ஏப்ரல் 20 க்குப் பின் எந்தெந்த துறைகள் செயல்பட முடியும் என்று ஏப்ரல் 15 அன்று ஊரடங்கு தளர்வு பற்றிய அறிவிப்பு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எதன் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தளர்த்தப்படுகின்றது, தீவிரப்படுத்தப்படுகின்றது என்பது குறித்த மருத்துவக் கொள்கையை தமிழக அரசோ மத்திய அரசோ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கேரள அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்துள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் இதுகுறித்த தமது மருத்துவக் கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.
போதிய பரிசோதனைகள் நடக்காததால் நோய்த் தொற்றுப் பரவல் குறித்து மதிப்பிட முடியவில்லை, அதனால் நோய்த் தொற்று வெடிக்கும் அபாயம் இருக்கலாம், ஆகவே ஊரடங்கை நீட்டிப்பது என்ற போக்கை அரசு கடைபிடித்துவருகிறது. இப்போதாவது பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு எத்தகைய திட்டமிடல் இருக்கிறது என்பதை மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஊரடங்கு, பகுதியளவிலான ஊரடங்கு, ஊரடங்கு தவிர்த்த நடவடிக்கைகள் என மூன்று முக்கிய மாதிரிகளை உலக நாடுகள் கடைபிடிக்கின்றன. டென்மார்க்கில் ஏப்ரல் 15 இல் இருந்து கல்வி நிலையங்கள் செயல்படத் தொடங்குகின்றன. தென்கொரியா முழு ஊரடங்கை தெரிவு செய்யவே இல்லை. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை தெரிவு செய்ய வேண்டி நிலையில் இருந்தன. இந்த முன்மாதிரிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கொரோனா நோய்த் தடுப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும், ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியைப் போக்குவதற்கான துயர்தணிப்பு அறிவிப்புகளே இல்லாமல் ஊரடங்கை நீட்டிப்பது பட்டினிச் சாவுகளுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. தில்லி யமுனை நதிக்கரை, சூரத், மும்பை என ஆங்காங்கே புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் அதை காவல்துறையின் கொடுங்கரங்களைக் கொண்டு அரசு ஒடுக்குவதும் நடந்து கொண்டிருக்கின்றன. பெருந்திரளான உழைக்கும் மக்களின் நிலைமையைப் பற்றி அக்கறையில்லாத இந்தப் போக்கு தொடர்ந்தால், ஊரடங்கை உடைத்துக் கொண்டு மக்கள் வீதிக்கு வருவதை தடுக்க முடியாது. உடனடியாக மக்களின் துயர்தணிக்க, பசி போக்க குறைந்தபட்சம் 5000 ரூ பணத்தையாவது கொடுக்க வேண்டும், மத்திய உணவுக் கிடங்கில் இருக்கும் உணவுப் பொருட்களை அடுத்த ஆறு மாதங்களுக்கு விலையின்றி வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு கோரியிருக்கும் நிதியையும் ஜி.எஸ்.டி. வரி பாக்கியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக அரசும் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தன்னுடைய மருத்துவக் கொள்கையை வெளிப்படையாக அறிவிப்பதுடன் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு துணைசெய்யும் வகையில் நிதியுதவியை உடனடியாக செய்ய வேண்டும். மேலும் இந்த ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளியல் தாக்கத்தை துல்லியமாக கண்டறிந்து மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட வேண்டும். வேலை இழப்புகள், சிறுகுறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகள், பெரு நிறுவனங்கள் அடைந்துள்ள இழப்புகள் ஆகியவற்றை அந்த மதிப்பிட்டு அறிக்கை வெளிப்படுத்த வேண்டும். அந்த மதிப்பீட்டில் இருந்து பெருந் தொழில்துறையையும் அவற்றை சார்ந்தியங்கும் சிறுகுறு தொழில்களையும், விவசாயத்தையும் மீட்கும் பொருளியல் துண்டலுக்கு பெருமளவிலான தொகையை அரசுகள் வழங்க வேண்டியிருக்கும். இந்த திட்டமிடலுக்கு எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொதுக்கருத்தை வந்தடைந்தால் எல்லோரும் ஓரணியில் நின்று தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்துப் போராடிப் பெற முடியும். ஆனால், தமிழக அரசோ தொடக்கம் முதலே இந்த கட்டான எதிர்க்கட்சிகளின் பங்களிப்புக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சி கூட்ட மறுத்துக் கொண்டிருப்பதுடன் எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முயன்றதையும் தடுத்துள்ளது. கட்சி, இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வந்து துயர்தணிப்பு நடவடிக்கைகளுக்கு தடைபோடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவையாவும் கொரோனா பேரிடலும் ஆளும் அதிமுக அரசு பதவி அரசியலை செய்து கொண்டிருப்பது தமிழக மக்களின் நலனைப் பலியிடுவதாகும். அதிமுக அரசு இப்போகை உடனடியாக மாற்றிக்கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.
மாபெரும் பொருளியல் மந்தநிலையில் உலகமே மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா பேரிடரையும் கொரோனாவுக்குப் பின்னான வாழ்க்கையையும் எதிர்கொண்டு இழப்புகளையும் அழிவுகளையும் குறைத்துக் கொண்டு முன்னேற சரியான கொள்கையை வகுத்துக் கொள்வதுடன் துல்லியமான திட்டமிடலும் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் வேண்டும் என்பதை மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக வலியுறுத்துகிறேன்.
-பாலன்,
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி