பெருந்தொற்றும் சமூக பாகுபாடும் – 26 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட ‘டைபாய்டு மேரி’

11 Apr 2020

நியூயார்க் மாநகரில் 1900 களின் தொடக்கத்தில், மேட்டுக்குடி இடமான லாங் தீவில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. லாங் தீவின் குடிமக்கள் பலருக்கு மர்மமான முறையில் டைபாய்டு நோயினால் பாதிக்கப்பட்டனர். வறுமையோடும் அசுத்தத்தோடும் தொடர்புபடுத்தி பார்க்கப்படும் நோயான டைபாய்டு, லாங் தீவு போன்ற மேட்டுக்குடியினர் வாழும் பகுதியில் பரவியது நகரத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்களை மிகவும் கலக்கமடையச் செய்தது.

ஜார்ஜ் சாபர் என்னும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு பொறியாளரை இந்த நோய் பரவலைக் குறித்து விசாரிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜார்ஜ் நடத்திய புலனாய்வில் மேரி மல்லோன் என்ற நடுத்தர வயது ஐயர்லாந்து பெண்மணி டைபாய்டினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தது 8 வீடுகளிலாவது சமையல் வேலை செய்து வருவது தெரிய வந்தது. நல்ல ஆரோக்கியமான பெண்மணியான மல்லோன், தான் வேலை பார்க்கும் வீட்டில் டைபாய்டு நோய் தாக்கும் போதெல்லாம் அந்த வீட்டில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு அடுத்த வீட்டுக்கு வேலைக்கு செல்வார். சாபர் தனது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார். மேரி மல்லோனை பின்தொடர்ந்து அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தார். இறுதியில் டைபாய்டு நோயினை பரப்பியதாக அவரைக் குற்றம்சாட்டி எதிர்கொண்டார். மல்லோன் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த போது ,அவரைக் கைது  செய்ய காவல்துறையினரை சம்மதிக்க வைத்தார்.

முழுக்க அனுமானத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மல்லோனின் இரத்தம், சிறுநீர், மல மாதிரிகள் அவருடைய விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் உடலில் Salmonella typhi என்ற டைபாய்டுக்கு  காரணமான பாக்டீரியா அவர் உடலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பொது மக்களின் கோபம் அவரது கழுத்தைச் சுற்றி இறுக்கியது.

தங்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி நோய்க்கிருமிகளை சுமந்து சென்று பரப்புகிறவர்களின் இருப்பு குறித்து  நிறுவியதற்காக சாபர் மக்களால் கொண்டாடப்பட்டார். மல்லோனோ மக்களால் இழிவுபடுத்தப்பட்டு, வரலாற்றில் டைபாய்டு மேரி என்று நினைவு கூறப்பட்டார்.

 “டைபாய்டு மேரி  என்ற சொல்லாடல் பல தசாப்தங்களாக, ஒரு படிக்காத ஏழை  புலம்பெயர்ந்த பெண்ணின், ஒரு உணர்வுபூர்வமான பரிசளிக்கப்பட்ட சமையல்காரரின் மீதான வன்முறையையும் இழிவுபடுத்துதலையும் இயல்பாக்கியது. மல்லோன் மருத்துவர்களாலும் ஊடகத்தாலும் பெரும் கொலைகாரியை போன்று சித்தரிக்கப்பட்டார். மல்லோன் மூலம் 51 நபர்களுக்கு நோய் பரவியதாகவும் அதில் மூவர் இறந்ததாக கூறப்பட்டாலும் அறுதியாக எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நிறுவ முடியவில்லை.

 

 

எதிரியை கண்டடைதல்

மல்லோன் 26 ஆண்டுகள் நார்த் ப்ரதர் தீவில் உள்ள ரிவ்வர் சைடு மருத்துவமனைக்கு அருகில் தனிமைப் படுத்தப்பட்டார். 1938 ஆம் ஆண்டு அங்கேயே இறந்தும் போனார். அவர் மீதான கலங்கத்திலிருந்து  63 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பாராத திசையில் இருந்து விடுதலை கிடைத்தது. டைபாய்டு மேரி: ஒரு நகர்புற வரலாறு(Typhoid Mary: An Urban Historical (2001) என்ற நூலில், அந்தோணி போர்டேன் என்பவர் இவ்வாறு எழுதினார் “சமையல்காரர்கள் உடல்நலம் குன்றி இருந்தாலும் வேலை செய்வார்கள். எப்போதுமே அவர்கள் அவ்வாறு வேலை செய்துள்ளார்கள். அநேக பணிகளில், நீங்கள் வேலை செய்யாவிட்டால், ஊதியம் இல்லை. நீங்கள் காலை எழும் போது ஒழுகிய மூக்குடனும் கரகர தொடையுடனும் எழுகின்றீர்களா? அப்போதும் நீங்கள் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில்  உள்ளீர்கள். பல மணி நேரம் நீங்கள் வேலை செய்வீர்கள். கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, உங்களால் இயன்ற வரை வேலை செய்வீர்கள். உடல்நலக் குறைவுடன்  வலியைத் தாங்கிக் கொண்டு  வேலை செய்வது ஒரு பெருமையாகும்

டைபாய்டு தொற்று பரவுவது நியூ யார்க் நகருக்கு புதிதல்ல. ஆனால் மல்லோன் தனி ஒரு பொது எதிரியாக கட்டமைக்கப்பட்டார் . இது நோயை விடக் கொடியதாகும். அவருடைய உண்மையான குற்றம் என்பது, நோய்க்கிருமிகள் லாங் தீவுக்கும் பிரான்க்சுக்கும்  உள்ள வர்க்க பிரிவினையை சட்டை செய்வதில்லை என்பதை பணக்காரர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நினைவுபடுத்தியது மட்டும் தான்.

***

மனிதர்களுக்கும் நோய் கிருமிகளுக்கும் உண்டான தொடர்பென்பது பரிணமித்துக் கொண்டிருக்கும் ஒரு சிக்கலான திருமண உறவு போன்றது. நோய்க் கிருமிகள் தழைத்து வாழ விரும்புகிறது. தான் குடியிருக்கும் மனிதர்களைக் கொல்வது என்பது தன்னைத் தானே கொல்வது போன்றது. எனவே இரு தரப்பினரும் – தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு முயல்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இருவரும் ஒரு சிக்கலான போர் நிறுத்தம் நடந்ததை போன்று , மனிதர்கள் நோய்க் கிருமிகளுடன் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். இது பல முறை நடந்துள்ளது, கோரோனா வைரஸ் தொற்றுக்கும் இது போன்று நடக்கும்

ஒரு தொற்றுநோய் பரவலுக்கு பின்னர் வெளிப்படும் உயிரியல் சகவாழ்வுக்கும்  அதன் சமூக விளைவுகளுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. நோய்கள் எதுவும் சமூக பாகுபாடு பார்ப்பதில்லை. அவைகளுக்கு மத, இன, வர்க்க, பாலின என்று எந்த அடையாளத்தையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. ஆனால், வரலாறோ ஒவ்வொரு முறையும் ஒரு பெரும்தொற்று நோய் பரவிய பின்னர், சமூகத்தில் வேரூன்றியுள்ள சமூக தப்பெண்ணங்கள்  மீண்டும் உயிர் பெறுவதாக கூறுகிறது.

1348 இல் ஐரோப்பாவில் நடந்த பெரிய புபோனிக் பிளேக்கின் போது, கத்தோலிக்க திருச்சபை கறுப்பு மரணம் கிறிஸ்தவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் யூத சதி என்று உறுதியாக நம்பியது. யூதர்கள் மீது கிணறுகளில் விஷத்தை கலந்ததாக குற்றம் சாட்டி  அவர்களை கொடுஞ் சித்திரவதை செய்து , அவர்களிடமிருந்து பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியது. வெகு விரைவில் ஆயிரக்கணக்கான யூதர்கள் எரிந்து சாம்பலாகும் வாசம் ஸ்ட்ராஸ்போர்க், கொலோன், பாசல் மற்றும் மேஞ்ச் ஆகிய நகரங்களில் வீசியது.

ஐரோப்பாவின் ரோமாக்களும் இதே போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.ஜியோர்ஜியோ வியாகியோ என்பவர் “Storia Degli Zingari” என்னும் நூலில் 1493 முதல் 1785 வரை இத்தாலியில் சிங்காரிஸ் (Zingaris) என்ற இழிச்சொல் கொண்டு அழைக்கப்பட்ட ரோமாக்களின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்தும் வகையில் இயற்றபட்ட 121 சட்டங்களை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சட்டங்கள் அனைத்தும் ரோமக்களினால் தான் தொற்று நோய் பரவுகிறது என்ற தவறான முன்முடிவுகளால் இயற்றப்பட்டது.

இடைக்கால ஐரோப்பாவில், பிளேக் போன்ற தொற்று நோய்கள் ,மரபு மருத்துவத்தை பின்பற்றுபவர்களால் பரவுகிறது என்று குற்றம்சாட்டினர்.அவர்கள் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ஐரோப்பாவில் ஏறத்தாழ 90 ஆயிரம் மக்கள் சூனியம் வைத்தாக குற்றம்சாட்டபட்டு தண்டிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் பிரையன் லெவாக் கூறுகிறார். சரியான எண்ணிக்கை இல்லாவிடினும், அதிகமாக பெண்கள் தான் தண்டிக்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

***

இடைக்காலத்தில் நிலவிய நம்பிக்கையான பிளேக் மக்களால் பரப்பப்படுகிறது என்ற நம்பிக்கை கிருமிக் கோட்பாட்டின் வருகைக்கு பின்னர் களையப்பட்டது. நோய்கள் மக்களால் பரப்பப்படுவதில்லை, மாறாக நுண்ணுயிரிகளாலும் நோய்க்கிருமிகளாலும் பரவுகிறது. அது காற்று வழியாகவோ, தண்ணீர் வழியாகவோ அல்லது மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடுகையினாலோ பரவுகிறது. சமூக வகைப்படுத்தல்களில் கிருமிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை நாம் அறிந்தோம். எந்த அரசியலுக்கும்  அறநெறிகளுக்கும் அப்பாற்பட்ட கிருமிகள் பற்றிய இந்த கண்டுபிடிப்பானது பெருந்தொற்று நோய்களை தப்பெண்ணங்களால் பூசப்பட்ட கண்ணாடி வழியே பாராமல் தெளிவான நுண்ணோக்கி வழியே பார்க்க இட்டு செல்லும் என நினைத்தோம்.

ஆனால் நுண்ணோக்கி கண்டுபிடிப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல; அது பேரரசின் ஒரு கருவியாக இருந்தது. வெப்பமண்டலங்கள் யாவும் ஆங்கிலோ-ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தன. காலனிய மக்களை  விட அதிக கிளர்ச்சியாளர்களாக கொசுக்கள் இருப்பதாக தோன்றியது. நுண்ணோக்கி தான் “வெப்பமண்டல நோய்” பற்றிய காலனித்துவ புரிதலை வடிவமைத்தது. 1817 ஆம் ஆண்டில் “ஆசியக் காலரா” என்னும் தொற்று நோய் வேகமாக பரவியது. ஆசியாவில் குறிப்பாக இந்தியாவின் கங்கைப் பகுதியில் இந்நோய் பரவியதால் “ஆசியக் காலரா” என்று பெயரிடப்பட்டது. ஆனால் இது வேகமாக ஐரோப்பாவுக்கும் பரவி காலனி நாடுகளில் உருவாகும் நோய்களின் படையெடுப்பு என்றதொரு  அச்சத்தை உருவாக்கியது.

இது தீவிரமான அறிவியல் விசாரணையைத் தூண்டியது. நோய்களை உள்ளூர்மயமாக்க 19 ஆம் நூற்றாண்டின் மருத்துவ விஞ்ஞானத்தின் முயற்சி குறித்த தனது நுணுக்கமான பதிவில் வரலாற்றாசிரியர் பிரதிக் சக்ரவர்த்தி 2010 இல் ராபர்ட் கோச் விப்ரியோ கண்டுபிடித்த – கமா வடிவ காலரா நோய்க்கிருமி ( comma shaped cholera pathogen) – எப்படி வெப்பமண்டல சூழலுக்கும் உடலுக்கும் பொருத்தப்பட்டது என்பது குறித்து எழுதுகிறார். குறிப்பாக,காலனிய நாடுகளில் உள்ள மக்களின்  குடல் மற்றும் பித்தநீர் பாதை.

பின்னர் தொழுநோய் எந்த அளவுக்கு களங்கப்படுத்தப்பட்டது என்றால், “தொழுநோயாளி” என்ற சொல் சமூக ஒதுக்குதலுக்கு ஆளானவர்களுக்கு இணையாக பார்க்கப்பட்டது. மனு ஸ்மிரிதியோ தொழுநோயாளிகளை பாவிகள் என்று கூறி சமூக விலக்கம் செய்ய கட்டளையிட்டது. 1891 ஆம் ஆண்டில் தொழுநோய் ஆணையத்தின் அறிக்கை “தொழுநோயில் தொற்றின் அளவு மிகவும் சிறியது, அது புறக்கணிக்கப்படலாம்” என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்ட  பின்னரும் கூட , இந்திய மற்றும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கத்தினர் தொழு நோயாளர்களை பொதுவெளியில் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தனர், ஏனெனில் அவர்கள் கண்ணில் தென்படுவது அவர்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1898ல் தொழுநோய் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி காலனிய மேட்டுக்குடியினரின் அழகியல் உணர்வுகளை திருப்திப்படுத்த தொழுநோயாளர்களாக கண்டறியப்பட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தடை செய்தது.

காலனித்துவ அறிவியல் தொற்றுநோய்களை வெப்பமண்டலங்களோடு தொடர்பு படுத்தினால், இலக்கியங்களோ அதை இன்னும் உறுதிபடுத்தும் வேலைகளில் இறங்கியது. தாமஸ் மான் எழுதிய “டெத் இன் வெனிஸ்”(Death in Venice) என்னும் நாவலில் காலரா பெருந்தொற்றை ‘இந்திய காலரா’ என்று விவரித்து, “…வெப்பம் மிகுந்த கங்கை டெல்டாவின் சதுப்பு நிலங்களில் பிறந்து, பயன்படுத்த தகுதியற்ற அந்த தரிசு நிலத்தின் துர்நாற்றத்தில் அதிகமாகி, அந்த வனப்பகுதி மனிதர்களால் தவிர்க்கப்பட்டு…” என்று குறிப்பிடுகிறார்.

 (தொற்று நோய் கீழத்தேயவியல் ) Epidemic orientalism

2018 ஆண்டில் அலெக்சாண்டர் ஒயிட் என்னும் ஆய்வாளர் காலனியத்தால் கட்டமைக்கப்பட்ட இது போன்ற சம்பவங்களை தொற்று நோய் கீழத்தேயவியல் என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். இது நோய்களுக்கு எவ்வாறு பெயரிடப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்தது. உதாரணமாக ஆசியாடிக் காலரா (1826), ஆசிய பிளேக் (1846), ஆசிய காய்ச்சல் (1956), பிளவு பள்ளத்தாக்கு காய்ச்சல் (1900 கள்), மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (2012), ஹாங்காங் காய்ச்சல் (1968) என சில நோய்களை மேற்கோள் காட்டலாம். தற்போது தோற்று நோய்களுக்கு நடுநிலையான, பொதுவான பெயர்களை இட வேண்டும் என அறிவுரைகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.

இருப்பினும், இன்றும் சமூகத்தில், தொற்றுநோய்கள் மற்றும் நோய்கள் இனம், பாலினம், பாலியல் விருப்பம் மற்றும் புவியியல் ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன . டிரம்ப் நிர்வாகம் பலமுறை கோவிட் -19 ஐ ‘சீன வைரஸ்’ என்றும்,மற்றும்  சிலர் இதை ‘குங் காய்ச்சல்’(Kung Flu) என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெயரிடுதல் தப்பெண்ணத்தை வலுப்படுத்துகிறது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் முதலில் ஓரின சேர்க்கையாளர்கள் தொடர்பான நோய் எதிர்ப்பு குறைபாடு (GRID – Gay Related Immunodeficiency) என்று  தான்  முதலில் அழைக்கபட்டது . குறுகிய காலமாக இருந்தாலும், 80 களில் அமெரிக்க தொலைகாட்சிகளில் மதப் பிரச்சாரகர்கள் எய்ட்ஸ் நோயை ஓரின சேர்க்கை – பிளேக் என்றும் இது பாலியல் விலகலுக்கான தெய்வீக தண்டனை என பரப்புரை செய்ததற்கு வலுசேர்ப்பதாக இருந்தது. ஓரினச் சேர்க்கையாளர்களை எச்.ஐ.வி / எய்ட்ஸ் அதிகம் தாக்கும் என்னும் நம்பிக்கையினால் இப்போதும் பல்வேறு நாடுகளில் ஆண்களுடன் (எம்.எஸ்.எம்) உடலுறவு கொள்ளும் ஆண்கள் இரத்தம் அல்லது உறுப்புகளை தானம் செய்வதைத் தடை செய்யும் சட்டம் உள்ளது.

***

வரலாறு நமக்கு சொல்வது இதை தான் வேரூன்றியுள்ள தப்பெண்ணங்களை விட நோய்களை-நோய்க் கிருமிகளை சிறந்த முறையில் கையாள நாம் தெரிந்து கொண்டுள்ளோம். தொற்று நோய்கள் வெறுப்பை உண்டாக்குவதில்லை, ஆனால் அதை பெருக்குவதில் பெருமளவு பங்கு வகிக்கிறது.

சீன அரசாங்கத்தின் தவறான நோய்த்தொற்று மேலாண்மையும்  கொரோனா  பரவலை மூடி மறைக்க முயற்சித்ததும் அமெரிக்காவை நிலைகுலையச் செய்ய சீன அரசாங்கம் செய்த சதி என்று தான் டிரம்ப் நிர்வாகம் நம்ப விரும்புகிறது. இது கிருத்துவத்தை நாசப்படுத்த யூதர்கள் முயற்சிப்பதாக கத்தோலிக்க திருச்சபை குற்றம் சாட்ட தொற்று நோய் பரவல்(pestis manufacta) ஒன்றை காரணம் காட்டியதை நினைவுபடுத்துகிறது. அதே போன்று ஐரோப்பிய அரசியல்வாதிகளான லீ பெண் மற்றும் சால்வினி இன்று புலம்பெயர்ந்து வருபவர்களையும் அகதிகளையும் கொரோனா நோய் பரப்புகிறவர்கள் என்று இன வெறியோடு பேசுவது ட்ரம்பின் பிரச்சாரத்தோடு ஒத்துப்போகிறது. நான்கு வருடத்திற்கு முந்தைய தனது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது எல்லை தாண்டி வரும் மெக்சிகோ நாட்டினர் பெருமளவில் தொற்று நோய்களை கொண்டு வருகின்றனர் என்று இடைக்கால ஐரோப்பாவில் நிலவிய பிளாக் பரப்புபவர்கள் என்ற கருத்துக்கு மீண்டும் உயிர்ப்பூட்டினார். ஆனால் இன்றோ மெக்சிக்கோ  கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான அமெரிக்கர்கள் எல்லை தாண்டி விடக்கூடாது என்று தன் எல்லையை பாதுகாத்து வருகிறது.

இந்தியாவிலும் மறைமகமாக இருந்த தப்பெண்ணங்கள் கொரோனா தொற்றுக்குப் பின்னர் அதிக அளவில் வெளியே தெரிய வருகிறது. பிளாட் உரிமையாளர்கள் பலர் மருத்துவ பணியாளர்களை அவர்களின் வீட்டுக்குள் வருவதையே தடை செய்துள்ளனர்.  சமூக விலகலையும் சாதி, தீண்டாமை போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவது போல பேசுகின்றனர்.. வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இனவெறி கருத்துக்களையும் தங்குமிடங்களில் இருந்து வெளியேற்றப்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை பத்திரமாக திருப்பி கொண்டு வர விமானங்களை அனுப்பிய அதே அரசாங்கம் அதன் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களையோ அல்லது பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பவோ தவறிவிட்டது. தற்போதைய ஊரடங்கு உத்தரவினால் பெரும்திரளாய் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் வீட்டுக்கு செல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்துக் கொண்டிருக்கின்றனர். செல்லும் வழியில் தெருக்களில் தூங்கிக் கொண்டும் சரியாக உணவு தண்ணீர் கிடைக்காது பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஏறத்தாழ 20 பேர் இதுவரை இறந்துள்ளனர்.இந்தக் கட்டுரை பதிப்பிற்கு செல்லும் சமயத்தில்,நகரத்திலயே தங்க முடிவெடுத்துள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண முகாம் அமைக்கவும் ,வீடு திரும்ப முடிவெடுத்துள்ள தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்க போராடிக்கொண்டு இருக்கிறது. அதுவும் உத்திர பிரதேசத்தில் தரையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் இரசாயானத்தைக் கொண்டு வீடு திரும்பும் தொழிலாளர்களை நோய்க் கிருமிகளைப் போல சுத்திகரித்துள்ளனர். இது போக நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மாநாட்டைக்  கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வகுப்புவாத தப்பெண்ணங்களை பரப்பி வருகின்றனர்.

***

அறிவியலின் நோக்கமே மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து, நோய்க் கிருமிகள் எந்த மதம், ஊர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை, அவைகளுக்கு தேவை நல்ல ஆரோக்கியமான, வெதுவெதுப்பான உடல் தான் என்ற அறிவை கொடுப்பது தான்.  ஆனால் , துரதிர்ஷ்டவசமாக, கிருமித்தொற்று சுமந்த மனிதர்கள்(hosts, vectors, carriers) பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களைக் கூட  சமூக தப்பெண்ணங்கள் தன்வசப்படுத்திக் கொள்கிறது.

ஒரு தொற்று நோயின் பின்னணியில் உற்பத்தி செய்யப்படும் களங்கம் நீண்ட நாள் நீடித்திருக்கும். இதை மேரி மல்லோனை விட சரியாகப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. தனது வாழ்நாளின் நான்கில் ஒரு பகுதியை தனிமையில் கழித்தாலும் அவர் பெயர் இன்றும் அந்த நோயோடு தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.

நோய் தொற்று உள்ளவர்களை அதி தீவிரத்துடன் வேட்டையாடுவது இன்றும் தொடர்கிறது.நோய் தொற்று  உள்ளவர்களை தனிமைப்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக அரசாங்கங்கள் நோயாளிகளின் பெயர்களையும் அவர்களின் வீட்டு முகவரியை பிரசுரித்தும் ,கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டியும், கைகளில் அழியா மையினைக் கொண்டு முத்திரை குத்தியும் வருகிறது. இவை அனைத்தும் மருத்துவ நெறிமுறைகளை மீறுவதாகவும் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு வழிவகுப்பதாகவும் உள்ளன.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு ஏழை, புலம்பெயர்ந்த பெண் சமுதாயத்திடம் கேட்ட அதே கேள்வியை எதிர்கொள்கிறோம். மனித உயிரைக் காப்பாற்ற மனித நேயத்தைக்  கைவிடுவது சரியா?

  • அமித்அங்ஸு

தமிழில்:  லீனஸ்

Pandemics and prejudice: When there is an epidemic, social prejudices resurface

https://www.thehindu.com/society/pandemics-and-prejudice-when-there-is-an-epidemic-social-prejudices-resurface/article31246102.ece

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW