கார்ப்பரேட் இந்தியா Vs புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தியா…….. கொரோனா தடுப்பில் மோடி யாருக்கு பிரதமர்?

01 Apr 2020

மோடி அரசின் மிக மோசமான அரசியல் முடிவுகளையும்,இந்தியாவின் மிகக் கொரோமானசமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் கொரோனா கொள்ளை நோய் தற்போது உலகுக்கு அப்பட்டமாக வெளிப்படுத்திவருகிறது.ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் டெல்லி – உத்தர பிரதேச எல்லையில்  தவித்த ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது கிராமங்களுக்கு கால்நடையாக செல்லத் தொடங்கியுள்ள படங்கள் தற்போது சமூக ஊடகங்களிலும் சர்வதேச பத்திரிக்கைகளிலும் வைரலாகிவருகிறது.

இந்தியாவின் புலம் பெயர் தொழிலாளர்களின் மாபெரும் இடப்பெயர்வு நிகழ்வானது,இந்திய ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தையும்,விளிம்பு நிலை மக்களின் கையறு நிலையையும் உள்ளது  உள்ளபடியே நாட்டு மக்களுக்கும் உணர்த்திவிட்டது.

சட்டைப்பையில் வெறும் மூன்று ரூபாயுடன் நொய்டாவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்கு மனைவி குழந்தைகளுடன்  கிளம்பிய கட்டுமானத் தொழிலாளி நந்தா கிஷோரின் கதை,டில்லியிலிருந்து தனது மூன்று குழந்தைகள்,மனைவி,துணி மணிகளுடன் கிளம்பி இருநூறு கிலோமீட்டர் நடந்தே ஆக்ராவிற்கு வந்து,மேற்கொண்டு நடக்கவியலாமல் மரணமடைந்த ரன்வீர் சிங்கின் கதை,எங்களுக்கு ஒன்றும் வேண்டாம், எங்களை விட்டு விடுங்கள் எனக் “பேருந்து வரும்வரை” மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பீகாரி தொழிலாளியின் கதை இன்னும் வெளிவராத புலம்பெயர் தொழிலாளிகளின் நூற்றக்கணக்கான சொல்லப்படாத துயர்மிகு நடைபயண கதையனைத்தும் இதயமற்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் ஆன்மாவைவும் அதன் இரக்கமற்ற சட்டபூர்வ வன்முறை வடிவத்தின் உண்மையான பண்பை திரை விலக்கி காட்டிவிட்டது.

இறுதியின் இறுதியாக ரேபரேலி பேருந்து நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குழுவாக தரையில் அமரவைத்து ஆபத்தான வேதியியல்   மருந்தடித்த புகைப்படமானது,நாகரிக மனித கூட்டமென்று சொல்வதற்கு சற்றும் தகுதியற்ற ஆளும் வர்க்கத்தால் எவ்வாறு நாங்கள் ஆளப்பட்டோம் என அடுத்த தலைமுறைகளுக்கு அறிவிக்கின்ற அருவெறுப்பான ஆவணமாகிவிட்டது. புலம்பெயர் தொழிலாளிகள் வந்தால் சுட்டுக் கொல்வோம் என்கிற முதல்வர் ஆளுகிற மாநிலமானது, பாராளுமன்ற ஜனநாயக வடிவத்திலான,மத்திய கால கொடுங்கோன்மை  ஆட்சிமுறைக்கு விசித்திர உதாரணமாக மாறியுள்ளது.

ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தால் கைவிடப்பட விளிம்பு நிலை மக்களின் மாபெரும் நடைபயணக் கதைகள் சாமானியர்களின் மனதை  உருக்குலைய வைக்கின்ற நிலையில் தாமதமாக விழித்துக் கொண்ட உச்ச நீதிமன்றமோ “கொரோனாவை விட அச்சமும் குழப்பமும் நிறைந்த சிக்கல் இதுவென,புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு குறித்து கருத்து கூறிவிட்டு தனது பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது.

தில்லியிலிருந்து மத்திய பிரதேசத்திற்கும் உத்திர பிரதேசத்திற்கும் ராஜஸ்தானிற்கும் புலம் பெயர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களின் இடப்பெயர்வை நிறுத்தவேண்டும்.இல்லாவிட்டால் கொரோனா தொற்று பாதிப்பு கிராமங்களுக்கு பரவிடும். இவர்களின் பாதுகாப்பு குறித்து மாநிலங்கள் முடிவு செய்யவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவிக்கின்றார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் மாபெரும் நடைபயண  பிரச்சனையானது ஊரடங்கு நடவடிக்கையை சிக்கலானதாக மாற்றிவிட்டது. ஊரடங்கை நீடிக்க வேண்டுமென ஆலோசனைகள் கிளம்பிவிட்டன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிற நோக்கில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு,முற்றிலும் அதன் நோக்கத்திற்கு எதிரான திசைபோக்கில் செல்கிறது.

எந்தவொரு முன் யோசனையும் மாற்று திட்டமும் இல்லாமல் விளிம்பு நிலை  மக்களை நட்டாற்றில் விடுவதொன்றும் மோடி அரசுக்கு புதிதல்ல. முன்னதாக  செல்லாக் காசு அறிவிப்பின்போதும்  இதேபோன்றே எந்தவித மாற்றுத் திட்டமும் இல்லாமல்,தங்களது பணத்தை எடுக்க இயலாமல் வரிசையில் நின்றே மக்கள் உயிர் விட்டார்கள். இறுதியில்,கருப்பு பணமும் மீட்கப்படவில்லை, கள்ளப் பணமும் ஒழிக்கப்படவில்லை.

தற்போது சமூக விலகல் நடவடிக்கைகளை  அமல்படுதுவதன் பெயரில், மக்களிடம் பேரச்சத்தையும் பெருங்குழப்பதையும் விளைவித்து உணவு கிடைக்காமலும் நீண்ட நடைபயணத்தாலும் இதுவரை சுமார் 22 மக்கள் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் இந்தியாவில் பலியான எண்ணிக்கையைவிட இந்த நடைபயண மரணங்கள் அதிகரித்தாலும் வியப்பதற்கில்லை.

இப்பிரச்சனைக்கு  அடிப்படைக் காரணம்தான் என்ன?சுருக்கமாக பார்ப்போம்.

1

புலம்பெயர் அமைப்புசார தொழிலாளர்களும் மத்திய அரசும்

இப்பிரச்சனையை மத்திய மாநில அரசுகள் முன்னறியாதது தற்செயலானதா?அதாவது ஊரடங்கு அமலாக்கதின் நிர்வாக கோளாறாக கொள்ளலாமா?எதிர்கட்சியும் ஏனைய சமூக ஜனநாயக குரல்களும் இச்சிக்கலை இவ்வாறுதான் பார்கின்றன.இது மத்திய அரசின் நிர்வாகக் கோளாறு என்பதோடு உலகமய சகாப்தத்தில்,இந்திய அரசின் பொருளாதார கொள்கை ஒட்டாண்டிதனத்தின் விளைபொருளான புலம்பெயர் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிற்கு எந்தவித அறிவும் அக்கறையும் இல்லாததே இப்பிரச்சனைக்கு  அடிப்படையான காரணமாக உள்ளது.

உலகமய காலத்தில் இந்திய சமுதாயத்தின் வர்க்க முரண்பாடுகள் குறித்து ஆளும்வர்க்கதிற்கோ அரசிற்கோ எந்தவித கொள்கையோ கண்ணோட்டமோ இல்லாதிருப்பதன் எதார்த்த வெளிப்பாடாகும்.

 

 

 

 

இப்படமானது இந்தியாவிற்குள்,மாநிலங்களுக்கு இடையிலான அமைப்புசாராதொழிலாளர்களின் இடப்பெயர்வு வரைபடத்தை(2001 ஆம் ஆண்டின் நிலைமை) காட்டுகிறது.

 • 2016-17 ஆம் ஆண்டின் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக பத்துகோடிக்கு மேலிருக்கலாம் என்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் பொருட்டு இயங்குகிற aajeevika என்கிற தன்னார்வ அமைப்பானது இந்த எண்ணிக்கை சுமார் 12 கோடி இருக்கலாம் என்கிறது,
 • இந்திய கிராமங்களில் இருந்து கிளம்புகிற இத்தொழிலாளர்கள் இந்தியாவின் பிரதான நகரங்களின் கட்டுமான வேலைகளுக்கும் தொழில்துறை வேலைகளுக்கும் வேளாண் மாநிலங்களின் விவசாயக் கூலி வேலைகளுக்கும் செல்கின்றனர்.

கட்டுமான துறை -4 கோடி

ஜவுளித் துறை –1.1கோடி

செங்கல் சூளை-1கோடி

தொழில்துறை,குவாரி,போக்குவரத்து,விவசாயம்,ஹோட்டல் உள்ளிட்ட இதரப் பணிகளுக்கு மீதமுள்ள தொழிலாளர்கள் செல்கிறார்கள்.

 • ஓடிஸா,பீகார்,உத்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்திலிருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் புலம்பெயர்வதை இப்படம் காட்டுகிறது.
 • சொந்த மாநிலத்தில் வறுமை,வேலையில்லா நெருக்கடி போன்ற பொருளாதார அழிவிலிருந்து மீள்வதற்கு வேறு மாநிலங்களுக்கு கிளம்புகிறார்கள்.
 • உயிர் வாழ்க்கையில் நிலைத்திருப்பதன் பொருட்டு மனிதனின் இயல்பூக்கத்தினால் உந்தப்பட்ட தொழிலாளர்  இடப்பெயர்வுகள், இந்தியாவின் வறுமையையும் ஏற்றத் தாழ்வுகளையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. உலகமய சகாப்தத்தில் நகரத்திற்கும் கிராமத்திற்குமான முரண்பாடானது, இந்த நெருக்கடியை மேலதிகப்படுதியது.
 • கடந்த 2006 ஆண்டுகால அர்ஜுன் சென்குப்தா ஆணையத்தின் அறிக்கையின்படி,
  • இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை -54 கோடி பேர்
  • இதில் அமைப்புசாரா பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை(கிராமப்புர ஏழை விவசாயிகளை சேர்க்காமல்)– 47 கோடி பேர்
  • அமைப்பாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை – 7 கோடி பேர்

மேற்கூறப்பட்ட புள்ளி விவரங்களில் அமைப்புசாரா தொழிலாளிகளில் நான்கில் ஒரு பங்கு மக்கள் புலம்பெயர் தொழிலாளிகளாக உள்ளனர்.

 • சொந்த மாநிலத்தில் பட்டினியால் சாவதை விட குறைவான கூலி,சுகாதார கேடான இருப்பிடம்,ஆபத்தான தொழில்துறை வேலைகளை இவர்கள் தேர்ந்துகொள்ள நிர்பந்ததிக்கப்படுகிறார்கள்.
 • தனியார் ஏஜென்ட்கள் மூலம் வேலைக்கு அனுப்பப்படுகிற இத்தொழிலாளர்களுக்கு எந்தவித பணியிடப் பாதுகாப்போ,உணவு,இருப்பிட வசதிகளோடு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை.
 • இடம்பெயர்கிற மாநிலங்களின் தொழிலாளர் பாதுகாப்பு சட்ட வரைமுறைகளுக்குள்ளும் இவர்கள் வருவதில்லை.மேலும் பணியிடங்கள்,தங்குமிடங்களில் நடைபெறுகிற குற்றச் செயல்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக சிக்க வைக்கப்படுகிறார்கள்.
 • இப்படியான நிலைமைகளில் ஒப்பந்ததாரர்கள் கைகழுவி விட்டால் தொழிலாளர்களின் வாழ்வானது மொழியறியாத மாநிலங்களில் சூறையாடப்படுகிறது.
 • ஆணாதிக்கம் நிறைந்த புலம் பெயர் தொழில் அமைப்பு முறையில்,பெண் தொழிலாளர்கள் பாலியில் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

வேளாண் துறையில் முறைசாரா தொழிலாளர்கள்:

 

மேற்கூறிய படமானது, ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்புசாரா தொழிலாளர்களில் சுமார் 14 விழுக்காட்டினர் விவசாயக் கூலி வேலைக்கு இடப்பெயர்வதை சுட்டிக் காட்டுகிறது.

 • பஞ்சாப்,தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் விவசாயக் கூலி வேலைக்கு உத்திரப்பிரதேசம், பீகார, ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து விவசாய வேலை செய்வதற்காக அறுவடை காலங்களில் புலம்பெயர்கிறார்கள்.
 • தானியங்களை அறுவடை செய்வது,உற்பத்தி பொருளை கொள்முதல் நிலையங்களுக்கு ஏற்றிவிடுவது உள்ளிட்ட வேலைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
 • தற்போது கொரோனா போக்குவரத்து தடை காலத்தில்,அறுவடை நெருங்கி வருகிற நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் இது குறித்து அக்கறை கொள்ளத் தொடங்கியுள்ளார்.தங்கள் மாநில அறுவடைக் காலமானது,புலம் பெயர் தொழிலாளர் பற்றாகுறையால் நிலைகுலைவை எதிர்கொள்ளக் கூடாது என்ற நோக்கில் பீகார் மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த ஊரடங்கு காலத்தில்,இது குறித்தெல்லாம் மத்திய அரசிற்கு எந்தவித அறிவும் திட்டமும் இல்லை என்பது கண்கூடு.

2

உலகமயமும் அமைப்புசாரா தொழிலாளர்களும்:

இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டுகால தாராளமயக் கொள்கை நடைமுறையில் ஏற்பட்ட மிகப்பெரிய உற்பத்தி உறவு மாற்றமாக

 • கிராமப் பொருளாதாரம் சரிவுற்று, நகரங்களுக்கு பாட்டாளியாக புலம் பெயர்கிற மக்கள் திரளினரின் எண்ணிக்கை அதிகரித்தது.
 • பெருந் தொழிற்துறையில் பெருவீத உற்பத்தி முறைக்கு(Fordist Assembly Line) மாறாக,சிறு தொழிற்கூடங்களாக உற்பத்தி முறையானது அளவு மாற்றமடைந்தது.
 • மேற்குறிப்பிட்ட மாற்றத்தால் பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஆதாரமாகியது.

அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிற சேமப்படை பட்டாளமாக ஆளும்வர்க்கத்தின் நலன்களுக்காக அமைப்புசாரா  தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒப்பீட்டு அளவில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான வேலை நேரத்தில் உழைப்பை செலவிட்டாலும், நிரந்தர தொழிலாளர்கள் பெறுகிற ஊதியமும்,பணியிடப் பாதுகாப்பும் இவர்களுக்கு உறுதிசெய்யப்படுவதில்லை.

3

திட்டமிடல் இல்லாத மோடி அரசு

அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து குறைந்தபட்சம் அறிவுடைய அரசானது என்ன செய்திருக்கும்?ரயில் சேவை ரத்து,கடையடைப்பு,தொழில் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டபோது,ஒவ்வொரு மாநில அரசுக்கும் முறைசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிற சுற்றறிக்கை அளித்திருக்க வேண்டும்.

மாறாக என்ன நடந்தது?அலையலையாக ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கிளம்புகிற போதுதான் செய்வதறியாது திகைத்தும் முழித்தும் பார்க்கிறது மோடி அரசு. பிறகு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உத்தரவாதப் படுத்த வேண்டும் என சுமையை தோள் மாற்றியது.

அதாவது,ஊரடங்கு காலகட்டத்தில்,புலம்பெயர் அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மீது மத்திய அரசு சுமத்த,மாநில அரசுகளோ  தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துகிற ஒப்பந்ததாரர்கள் மீது சுமத்தின. குறிப்பாக கட்டுமானத்துறை பணியில் ஈடுபட்ட வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக  சுகாதார இருப்பிடம் வழங்கவேண்டும், மருத்துவ செலவு  மற்றும் போக்குவரத்திற்கான செலவுகளை ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும் என தமிழக அரசு தற்போது ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு செய்யத் தவறிய இரு முக்கிய அம்சங்கள்  வருமாறு

 1. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பணிக்காக குடிப்பெயர்ந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பேரிடர் கால உதவித் தொகையை அறிவித்திருக்க வேண்டும்.
 2. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள மாநிலங்களிலேயே உணவு, தங்குமிடம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

காலம் கடந்த செய்கையால் பதட்டமும் உயரிழப்புகளையும் ஏற்படுத்துவது இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது!

4

நடுத்தர வர்க்கமும் தொழிலாளர்களும்:

21 நாள் ஊரடங்கு காலத்தில் ஆரோக்கியமாக உடலை வைப்பதெப்படி? குழந்தைகளைவீட்டில் பாரமரிப்தெப்படி?எந்த புத்தகங்களை படிக்கலாம்?என்ன சினிமாவை,நெட்பிலிக்சில் பார்க்கலாம்?என்ன இசை கேட்கலாம்? என நடுத்தரவர்க்கத்தை மையமிட்ட விவாதங்கள் சமூக ஊடகங்களிலும் மீடியாவிலும் வலம்வந்துகொண்டிருந்த நிலையில்தான் புலம்  பெயர் தொழிலாளர்களின் நடைபயண படங்களும் மரண செய்திகளும் சமூக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின.

ஒரே நாட்டில் வாழ்கின்ற வெவ்வேறு முரண்பட்ட சமுதாய வர்க்கப் பிரிவினரின் இரு வேறுபட்ட வாழ்நிலைமைகளை கொரோனா என்ற ஒரு கொள்ளை நோய் ஒரே புள்ளியில்  வெளிப்படுத்தியுள்ளது.

இவர்கள் ஏன் சொந்த ஊருக்கு திரும்ப முனைகிறார்கள்?மாநில அரசுகள்தான் இவர்களுக்கு தங்கும்  இடத்தை வழங்குகிறதே?பிறகேன் நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும்?இவர்களால் கிராமங்களுக்கு கொரோனா தொற்று பரவிடாதா?போன்ற கேள்விகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தால் முன்வைக்கப்படுகின்றன.

மத்திய மாநில அரசுகளின் காலம் கடந்த செயல்பாடுகள் குறித்து கள்ள மௌனம் காக்கின்றவர்கள்தான் இக்கேள்விகளை கேட்கின்றனர். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை, புலம்பெயர் தொழிலாளிகள் கிராமத்திற்கு கொரோனாவை பரப்பக் கூடிய சோம்பிக்க்கள்.

இம்மக்கள் உருவாக்கிய உழைப்பை அப்புறப்படுத்தினால்,இந்தியாவில் புதிய நகரமே  எழுந்திருக்காது, நாட்டை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கின்ற சாலைகளும் பாலங்களும் வந்திருக்காது என நகர்ப்புற நடுத்தர வர்க்கம் உணர மறுக்கின்றன.

நாம் வசிக்கின்ற நகரத்தை உருவாக்கிய இந்த தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாடுகள் என்ன?ஒரே இரவில் ரயில்,பேருந்து உள்ளிட்ட அனைத்தையும் மூடிவிட்டு, வேலை கொடுத்த முதலாளிகளால் துரத்தப்பட்ட பின்னர், உணவுக்குகூட காசின்றி தவிக்கின்ற மக்கள் எங்கு போவார்கள்?ஊடகங்களில் செய்தி வருகிற வரையில்,மத்திய அரசும் மாநில அரசும் உறங்கிக் கொண்டிருந்ததே? என்பன போன்ற கேள்விகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கு எழுவது இல்லை.

சமுதாயம் ஒரு படித்தானதாக இல்லை என்றோ,சமூகத் ஏற்றத் தாழ்வுகளையோ அறிவதற்கு அதன் சொந்த வர்க்க நிலைமையே தடையாக உள்ளது!

மேலும், உலகமய சகாப்தத்தில், மானுட வாழ்வின் அவசியமான இயல்பூக்கத்தை நடுத்தர வர்க்கம் இழந்துவிட்டதையும் விளிம்பு நிலை மக்களிடம் அது மட்டுமே மிச்சமிருப்பதையும் இக்கொரோனா காலம் காட்டிவிட்டது!

முடிவாக:

கிழக்கு கடற்கரை மாநிலமான ஓடிஷாவிலிருந்து மேற்கில் குஜராத்திற்கு செல்கிற பூரி-ஒக்கா விரைவு ரயிலும் தமிழகத்திற்கு வருகிற கோரமண்டல், நவஜீவன் விரைவு ரயில்கள் மட்டுமே புலம் பெயர் தொழிலாளர்களின் துயர்மிகு வாழ்வறியும்.

 • இம்மக்கள் புறப்படுகிற சொந்த மாநிலங்களும் சரி வந்திறங்குகிற மாநிலங்களும் சரி,இரு மாநிலங்களுமே இவர்களை கை கழுவிடுகிறது.இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் இவர்களுக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் வழங்கவில்லை.
 • இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் இவர்களின், குறை கூலி,உணவு தங்குமிடம், பணியிடப் பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்துகிற கண்காணிப்பு பொறியமைப்பை உருவாக்கவில்லை. அது பற்றிய யோசனையோ கொள்கையோ கூட இல்லை..
 • மத்திய மாநில அரசுகள் உருவாக்குகின்ற வேளாண் பொருளாதார கொள்கையிலோ, தொழில்துறை கொள்கையிலோ நாட்டின் பத்து கோடி புலம்பெயர் தொழிலாளர்களை முற்றிலும் கவனத்தில் கொள்வதில்லை.

 

கோரிக்கைகள்:

 1. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வருகிற புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்திடு! அவர்களின் தங்குமிடம்,பாதுகாப்பு உள்ளிட்ட அவசியத் தேவைகளை உறுதிப்படுத்த தனி சட்டம் இயற்று!
 2. நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாதாந்திரக் கூலியான ரூபாய் 22,000 ஐ (1.1.2016 இன் அடிப்படையில்) அமல்படுத்து!
 3. சம வேலைக்கு சம ஊதியக் கொள்கையைஅமல்படுத்து! பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்த்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கு!
 4. அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெறு! தொழிலாளர் சட்டங்களை மீறுகிற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடு!
 5. உற்பத்தித் துறையில் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் அனைத்து வித தற்காலிக தொழிலாளர்களையும் அங்கீகரிக்கும் விதமாக அனைத்துத் தொழிலாளர் சட்டங்களிலும் ‘தொழிலாளர்’/ ‘பணியாளர் என்பதற்கான சர்வதேச வரையறையை உருவாக்கு!

 

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/coronavirus-supreme-court-seeks-status-report-from-centre-on-steps-taken-to-prevent-migration-of-workers/articleshow/74885965.cms

https://www.indiatoday.in/news-analysis/story/coronavirus-makes-india-wake-up-to-its-migrant-labourers-1661454-2020-03-30

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW