கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ – பகுதி 2
(சென்ற பகுதியில் உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்தும் ,பல்வேறு நாடுகள் மேற்கொண்ட கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பார்த்தோம்.மேலும் “எதுவும் செய்யாதிருத்தல்” எனும் முதல் வாய்ப்பை தேர்வு செய்தால் என்ன ஆகும் எனப் பார்த்தோம்.தற்போது நம்முன்னுள்ள அடுத்த இரு வாய்ப்புகள் குறித்தும் அதன் தொடர்ச்சியான விஷயங்களையும் இப்பகுதியில் பார்ப்போம்)
வாய்ப்பு –2 : நோயாற்றுகிற உக்தி(Mitigation strategy)
“தற்போது கொரோனா வைரஸ் பரவலை நம்மால் தடுக்கமுடியாது.போகிற வரையில் போகட்டும்.நமது பொது சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்தமுடிகிற அளவில் தொற்றுபரவல் வீத கோட்டை கொஞ்சமேனும் தட்டையானதாக்க முடியுமா என வேண்டுமானால் முயற்சிக்கலாம்” என்பதே கொரோனா பரவலுக்கு எதிரான நோயாற்றுகிற உக்தியாக உள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட படவிளக்கமானது,அண்மையில் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வுக் கட்டுரையேட்டில் பிரசுரிக்கப்பட்ட விளக்கமாகும்.இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்த பிறகு இங்கிலாந்து அமெரிக்கா அரசுகள், கொரோனா குறித்த தங்களது போக்கை மாற்றிக் கொள்வதற்கான நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
இதில் கருப்பு கோடானது “ஏதும் செய்யவில்லையென்றால்” என்ன விளைவு நேரிடம் எனக் காட்டுகிறது.மற்ற நிறக் கோடுகள்,எவ்வளவு தீவிரத்துடன் சமூக விலகல் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பொறுத்து எவ்வாறு விளைவுகளும் மாறுகின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது.நீல நிறக் கோடுதான் மிகவும் தீவிரமான சமூக விலகல் நடவடிக்கையின் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.
தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துதல்,பிறகு அவரது தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்துதல்,வயதானவர்களை தொற்றிலிருந்து காத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏற்படுகிற விளைவுகளை நீலக் கோடு காட்டுகிறது.தற்போது நீல நிறக் கோட்டைத்தான் கொரோனாவிற்கு எதிரான செயலுக்தியாக இங்கிலாந்து தற்போது கடைபிடிக்கின்றது.அதுவும் கட்டாயமென்றில்லாமல் பரிந்துரையாக அறிவிக்கின்றது.
படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்புக் கோடானது இங்கிலாந்தில் தற்போதுள்ள அவசர சிகிச்சை படுக்கையின் எண்ணிக்கையை காட்டுகின்றது.கொரோனா தொற்று பாதிப்புடைய மக்களின் எண்ணிக்கையானது சிவப்புக் கோட்டை தாண்டிய பகுதியில் வந்தால், அவசர சிகிச்சை பிரிவின் பற்றாக்குறை காரணமாக அவர்கள் இறக்க வேண்டியதுதான்.அவசர சிக்கிச்சை அமைப்பே நிலைகுலைவதோடு சேதங்களும் உயரும்.
நீங்கள் அதிர்ச்சியடையலாம்.நாங்கள் நோயாற்றுகிற முயற்சியில் ஈடுபடுகிறோம் என ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் சொல்வதன் உண்மையான பொருள் இதுதான்:
“அவசர சிகிச்சை அமைப்பின் நிலைகுலைவு சூழலை நாங்கள் தெரிந்தே உருவாக்குகின்றோம்.குறைந்தபட்சமாக மரண வீதத்தை பத்தின் பெருக்காக ஆக்குகின்றோம்”
இது எவ்வளவு மோசம் என கற்பனை செய்துபாருங்கள்.
”குழு தடுப்பாற்றல்” குறித்த அவதானிப்பே நோயாற்றுதலை செயலுக்தியாக தேர்வு செய்வதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
குழு தடுப்பாற்றலும் வைரசின் வகை மாற்றமும் (Herd Immunity and Virus Mutation)
கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் அனைவரும்,வைரசுக்கு எதிரான தடுப்பாற்றலுடையவர்களாக இருப்பார்கள் எனக் கருதுவதே இந்த உக்தியின் சாரமாகும்.
“இதோ பாருங்கள்,இது மிகவும் கடினமான காலம் என்பதை நானறிவேன்.ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் என்ன நடந்திருக்கும்?சில லட்சம் மக்கள் மரணமடைந்திருப்பார்கள்.இந்த வைரசை எதிர்கொண்டவர்கள் தடுப்பாற்றலுடையவர்களாக மீதமிருப்பார்கள்..ஆகவே இந்த வைரஸ் பரவலும் இதோடு நின்று விடும்.இந்த கொரோனா வைரசை பார்த்து கையாட்டி போகச் சொல்லிவிடலாம்.இப்படி செய்துவிட்டால்,கடினமான காலத்தை ஒருமுறை கடப்பதோடு போய்விடும்.இதற்கு மாற்றாக,ஒரு வருட காலத்திற்கு கடுமையான சமுதாய விலக்கு நடவடிக்கையில் ஈடுபட்டு வைரஸ் பரவலை தற்காலிகமாக கட்டுப்படுத்தினாலும் பின்னாளில் இது மீண்டும் வருவதற்கே நிறைய வாய்ப்புள்ளது”
மேற்கூறிய கருத்தாக்கமானது, கொரோனா வைரஸ் வகைமாற்றமடையாது என ஊகிக்கிறது.ஒருவேளை இந்த வைரஸ் வைகமாற்றமடையாதது என்றால் தடுப்பாற்றலால், இதை எதிர்கொள்ளலாம்.இந்தக் கொள்ளை நோய் தானாகவே செத்தொழிந்துவிடும்.
அப்படியானால்,இந்த வைரஸ் வகைமாற்றமடையுமா?
ஏற்கனவே ஆகிவிட்டது என்றே தெரிகிறது.
இந்த வைரசின் பலவேறு வகைமாற்றங்களை மேலே கொடுக்கப்பட்ட படம் காட்டுகிறது.முதலில் சீனாவில் இன்னல் கொடுத்து ஊதா நிறத்தில் தொடங்குகிற இந்த வைரஸானது பின்னர் பல்வேறு நாடுகளில் பரவுகிறது.
இப்போது இடது பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.ஒவ்வொருமுறையும் சிற்சில வைகைமாற்றதுடன் வெவ்வேறு கிளைகளாக பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதை காட்டுகின்றது.
இதில் ஆச்சர்யமொன்றுமில்லை.ஏனெனில் கொரோனா வைரசானது ப்ளூ வைரசைப் போன்றே R.N.A வை அடிப்படையாக கொண்டவை.அதனால் D.N.A வை அடிப்படையாக கொண்ட வைரசை விட நூறு மடங்கு வேகமாக வகைமாற்றமடையும்.அதேநேரம் கொரோனா வைரசானது,குளிர் ஜுர ப்ளூ வைரசைவிட மெதுவாக வகைமாற்றமாகிறது.
ஆக,இந்த வைரஸ் வகைமாற்றமடைவதற்கு பல லட்சம் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோயாற்றுதல் உக்தியானது லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு வித்திடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான குளிர் காய்ச்சல்கள் நம்மைத் தாக்குகின்றன.ஒவ்வொரு முறையும் புதிதாக வகைமாற்றமடைந்த வைரசானது மக்களுக்கு இன்னலைக் கொடுக்கின்றது.
நோயாற்றுதல் உக்தியானது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தை முன்னரிவிக்கின்றது.கொரோனா வைரசைப் பற்றி எதுவும் தெரியாமலேயே,இந்த வைரஸ் வகைமாற்றமடையாது என ஊகித்துக் கொண்டு லட்சகணக்கான மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகிறது.உண்மையிலேயே வைரஸ் வகைமாற்றமடைவற்கே இந்த உக்தி வழிவகை செய்கிறது.சில லட்சம் மக்கள் மரணமடைந்த பிறகு அடுத்தாண்டும் சில லட்சம் மக்கள் மரணமடைவதற்கு வாய்ப்பாகிறது.
ப்ளூ காய்ச்சல் போல கொரோனா வைரசும் நமது வாழ்கையுடனேயே தொடரப் போகிறது.ஆனால் ப்ளூ காய்ச்சலைப் போல பல மடங்கு ஆபத்துடன் தொடரப்போகிறது.
ஆக,எதுவுமே செய்யாதிருந்தாலும் ஆபத்துதான்,நோயாற்றுதல் உக்தியும் ஆபத்துதான்.பிறகு என்ன வழிதான் உள்ளது?வழி உள்ளது.அதனைக் “அடக்குதல் உக்தி” யென அழைக்கலாம்.
வாய்ப்பு -3 :அடக்குதல் உக்தி (Suppression Strategy)
நோயாற்றுதல் உக்தியானது கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வகையிலும் உதவவில்லை.அதேநேரம்,அடக்குதல் உக்தியின் வழியே விரைவாக மேற்கொள்ளப்படுகிற கடுமையான நடவடிக்கைகள்,கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டுவருகிறது.
- தற்போது கடுமையாக செயல்படுவது.தீவிரமான சமூக விலகல் நடவடிக்கைக்கு உத்தரவிடுவது.சூழ்நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது.
- பிறகு சமூக விலகல் உத்தரவை திரும்பப் பெறுவது.சுதந்திரம் மீண்டும் கிடைக்கப்பெற்ற மக்கள்,அன்றாட சமூகப் பொருளாதார வாழ்க்கைக்கு மெல்ல திரும்புவார்கள்.
இது எவ்வாறு இருக்கும்?
அடக்குதல் உக்தியில் நோய்த் தொற்றும் இறப்பு வீதமும்
அடக்குதல் உக்தியின்கீழ் மரணங்களை லட்சங்களில் உயரவிடாமல் சில ஆயிரங்களில் கட்டுப்படுத்தலாம்.
இதன் மூலமாக நோய்த் தொற்று பரவல் கோட்டை தட்டையாக்கலாம்.பொது சுகாதார அமைப்பு நிலைகுலையாததால்,இறப்பு வீதமும் குறையும். உதாரணமாக,தற்போது தென்கொரிய அரசு,அடக்குதல் உக்தியை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதால் ,இறப்பு வீதமானது 0.9 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிறகேன் (மற்ற நாட்டு அரசுகள்)மூளையில்லாதவர்கள் போல செயல்படுகிறார்கள்?தென்கொரியாவின் உக்தியை பிற நாடுகளும் கடைபிடிக்கலாமே?ஏன் மற்ற நாடுகள் தயக்கம் காட்டுகின்றன?
கீழ்வரும் மூன்று காரணங்களுக்காகத்தான் அச்சப்படுகிறார்கள்
- ஊரடங்கு பல மாதங்களுக்கு நீடிக்கலாம்.இதை மக்கள் விரும்பமாட்டார்கள்.
- மாதக்கணக்கிலான ஊரடங்கானது,பொருளாதாரத்தை அழித்துவிடலாம்.
- சமூக விலகல் போன்ற நடவடிக்கைகள் சிக்கலைத் தீர்க்காது. வேண்டுமானால் இந்தக் கொள்ளை நோயை தற்காலிகமாக தள்ளிப்போடலாம்.சமூக விலகல் நடவடிக்கைகளை திரும்பப் பெற்ற பின்னர்,மக்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டு பலர் இறக்கலாம்.
இம்பீரியல் கல்லூரியின் ஆய்வானது கீழ்வருமாறு அடக்குதல் உக்தியின் மாதிரியை உருவாக்கியுள்ளது.
பச்சைக் கோடும் மஞ்சள் கோடும் அடக்குதல் உக்தியால் ஏற்படும் வெவ்வேறு சாத்தியங்களை காட்டுகிறது.ஆனால் அப்போதும் கோடு இன்னும் உயரமாகவே உள்ளதே,இதற்காகவா இவ்வளவு சிரமப்படவேண்டும் என நினைக்கலாம்.
இந்தக் கேள்விக்குள் செல்வதற்கு முன்பாக,மிக முக்கியமான விஷயமொன்றை பார்க்கவேண்டும்.பெரும்பாலானவர்கள் இந்த அம்சத்தை விட்டு விடுகிறார்கள்.
நோயாற்றுகிற உக்தி மற்றும் அடக்குதல் உக்தி ஆகிய இரு முறைகளுமே நம்பிக்கையூட்டுகிறவிதமாக இல்லையே எனத் தோன்றலாம்.
(நோயாற்றுதல் உக்தியில்)தற்போது நிறைய மக்கள் மரணமடையலாம் ஆனால் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் நேரக் கூடாது அல்லது (அடக்குதல் உக்தியில்)பொருளாதாரம் தற்போது நசிந்தாலும் பரவாயில்லை,மக்களின் மரணத்தை தள்ளிப் போட்டால் போதுமானது.
இந்தக் இருக் கருத்துகளுமே முக்கிய அம்சமான “நேரத்தை” கவனத்தில் கொள்வதில்லை!
- நேரத்தின் முக்கியத்துவம்
தடுப்பு நடவடிகைகளை மேற்கொள்வதற்கு தாமதிக்கின்ற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திலும் தொற்றுப் பரவலின் ஆபத்து செங்குத்துக் கோடாக அதிரித்துச் செல்கிறது.அதேவேளையில்,ஒரே நாளில் தொற்றுப் பரவலின் எண்ணிக்கை 40 விழுக்காடிற்கு குறைந்ததையும் இறப்பு வீதம் குறைந்ததையும் கூட நாம் பார்த்தோம்.
ஆக,நேரமே அனைத்திற்கும் முதன்மையானதாகின்றது.
கடந்த காலத்தை விட தற்போதுதான் நமது சுகாதார அமைப்பு மிகப்பெரிய நெருக்கடி அலையை எதிர்கொள்ளப்போகிறது.நாம் இதற்கு முற்றிலும் தயாராகவே இல்லை.நமது எதிரியைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இப்போரை எதிர்கொள்கிறோம்.போர் முனையில் இது ஒரு மோசமான நிலையாகும்!
எதிரியை பற்றி கொஞ்சமாகவே அறிந்துள்ள நிலையில்,எப்படி அந்த மோசமான எதிராளியை எதிர்கொள்வீர்கள்?உங்களிடம் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.ஒன்று எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த எதிரியை எதிர்கொள்வது.இரண்டாவது.சற்று பின்வாங்கிக் கொண்டு,அந்நேரத்தை நம்மை ஆயத்தப்படுத்துக்கொள்ள பயன்படுத்துவது.இதில் எதை தேர்வு செய்வீர்கள்?
இதுதான் தற்போது நமக்கு தேவைப்படுவதாகும்.உலகம் விழித்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவலை தடுக்கிற பணியில்,நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள முடியும்.என்ன வகையிலெல்லாம் ஆயத்தப்படுத்துக் கொள்ளலாம்?அடுத்து பார்ப்போம்.
தொற்றுப்பரவலின் எண்ணிக்கையை குறைக்க முடியும்:
தீவிரமான அடக்குதல் உக்தியால் ஒரே நாளில் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.கடந்த வாரத்தில் சீனாவின் ஹூபெயில் இதைப் பார்த்தோம்.
ஹூபெயில் அடக்குதல் உக்தி
ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணத்தில் தற்போது ஒரு புதிய கொரொனோ வைரஸ் தொற்று கூட இல்லை.
தொற்று எண்ணிக்கை குறைந்ததால்,இறப்பு வீதமும் குறைந்தது.சுகாதார அமைப்பு நிலை குலையாததால் கொரோனா பாதிப்பில்லாத பிற நோயாளிகள் குறைவான எண்ணிக்கையிலேயே இறந்தார்கள்.ஆக,மாபெரும் சேதமும் குறைந்தது.
அடக்குதல் உக்தியால் கீழ்வரும் விளைவுகளைப் பெறலாம்;
- கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை குறைக்கலாம்
- பொது சுகாதார அமைப்பின் நிலைகுலைவை தவிர்க்கலாம்.
- இறப்பு வீதத்தை குறைக்கலாம்
- மாபெரும் சேதங்களை குறைக்கலாம்
- நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சுகாதாராப் பணியாளர்கள் பாதிப்பில்லாமல் மீண்டும் வழக்கமான பணிக்குத் திரும்பலாம்.இத்தாலியின் மொத்த தொற்று எண்ணிக்கையில் 8 விழுக்காட்டினர் மருத்துவப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான பிரச்சனையை புரிந்துகொள்வது:பரிசோதனையும் கண்டறிதலும் (Testing andTracing)
உண்மையென்னவென்றால்,தற்போது இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் தங்களது நாட்டின் உண்மையான தொற்று எண்ணிக்கையே தெரியாது.நமக்கும் இந்த எண்ணிக்கை தெரியவில்லை.அரசு கூறுகிற எண்ணிக்கையானது பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.உண்மை நிலவரம் ஆயிரக்கணக்கில் இருக்கும்.ஏனெனில் நாம் கொரொனோ பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை,கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறியவும் இல்லை!
- இன்னும் சில் வாரங்களில் பரிசோதனைத் திட்டங்களை முறைப்படுத்தினால்,அனைவரையும் பரிசோதனை செய்யலாம்.இந்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டு,சிக்கலின் முழுப் பரிமாணத்தை புரிந்துகொள்ள இயலும்.எந்த இடத்தில இன்னும் வேகமாக செயலாற்றலாம் என்பதை கண்டுணரமுடியும்.மேலும் ஊரடங்குகளை தளர்த்துவதற்கும் முடிவெடுக்க முடியும்.
- புதிய பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும்.பரிசோதனை செலவையும் குறைக்கவேண்டும்.
- சீனாவும் இதர கிழக்காசிய நாடுகளும் செய்ததைப் போல தொற்று ஏற்பட்டவர்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.பின்னாளில், சமூக விலகல் நடவடிக்கையை தளர்த்த இம்முயற்சி பலனளிக்கும்.வைரஸ் எங்குள்ளது எனக் கண்டறிந்தால்,அந்தப் பகுதியில் மட்டும் நமது கவனத்தைக் குவிக்கலாம்.இது ஒரு பெரிய ராக்கெட் அறிவியல் அல்ல:கிழக்காசிய நாடுகள் சமூக விலகல்கள் போன்ற கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலேயே தீவிரமான பரிசோதனை மற்றும் கண்டறிகிற உக்தியால் பெரும் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.இதர நாடுகளும் இம்முறையை பின்பற்றவேண்டும்.
சமூக விலகல்களை மேற்கொள்ளாமல்,பரிசோதனை மற்றும் கண்டறிகிற உக்தியை பயன்படுத்தியே தென்கொரிய அரசானது கொரோனா கொள்ளை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடக்கத்தது.
தாங்குதிறனை பலப்படுத்திக் கொள்வது(Build up capacity)
அமெரிக்கா அரசானது,ஆயுதமே இல்லாமல் போர்முனைக்குப் போகின்றது.
அமெரிக்காவிடம் குறைவான அளவிலேயே சுவாசக் கவசங்கள் உள்ளன;அவசர சிகிச்சை படுக்கை வசதிகள்,செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் யாவுமே போதுமானதாக இல்லை.இதனால்தான்,நோயாற்றுதல் உக்தியில் இறப்பு வீதம் மிகவும் அதிகமாக உள்ளது.
ஆனால் நமக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தால்,இதையெல்லாம்கூட மாற்றலாம்
- அடுத்த அலை வருவதற்குள் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நேரம் கிடைக்கும்
- சுவாசக் கவசம்,அவசர சிகிச்சை படுக்கைகள்,செயற்கை சுவாசக் கருவிகள் என இறப்பு வீதத்தை குறைக்கின்ற உயிர் காக்கும் கருவிகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்
இந்த ஆயுதங்களையெல்லாம் தயார்செய்து கொள்வதற்கு நமக்கு ஆண்டுக்கணக்கில் அவகாசமில்லை. சில வாரங்களே உள்ளன.நம்மால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்யலாம்.மக்கள் எப்போதுமே புதியதை கண்டறிகிறார்கள்.முப்பரிமான வரைபடத்தின் மூலமாக சில உயிர்காக்கும் சுவாசக் கருவிகளை உருவாக்குகிறார்கள்.நம்மால் செய்ய முடியும்.கொஞ்சம் நேரம்தான் வேண்டும்.சக்திமிக்க எதிரியை எதிர்கொள்வதற்கு முன்பாக ,சிறந்த ஆயுதங்களை தயார் செய்வதன் பொருட்டு சில வாரங்கள் தாமதித்தால்தான் என்ன?
மேற்கூறிய தாங்கு திறன் மட்டுமே போதாது.நமக்கு சுகாதாரப் பணியாளர்களும் விரைவாக தேவைப்படுகிறார்கள்.இவர்களை எப்படிப் பெறுவது?செவிலியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு நமக்கு மருத்துவர்கள் வேண்டும்,அதற்கு ஓய்வு பெற்ற மருத்தவர்களை உதவிக்கு அழைக்கலாம்.சில நாடுகள்,இம்முயற்சிகளை முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால்இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.
அனைத்தும் நிலைகுலைவதற்கு முன்பாக சில வாரங்களிலேயே இவற்றையெல்லாம் செய்யவேண்டும்.
பொதுமக்களின் தொற்றை குறைப்பது:
பொதுமக்கள் அச்சமுற்றுள்ளனர்.இந்த கொரோனா வைரஸ் புதியது.இந்த வைரஸ் குறித்து நிறைய விஷயம் நமக்குத் தெரியாது.கைகுலுக்குவதை எப்படி தவிர்ப்பதென மக்களுக்குத் தெரியவில்லை.தற்போதும் மக்கள் கட்டியனைக்கின்றனர்.
போதிய சுவாசக் கவசம் இருந்தால்,அதை மக்கள் பரவலாக பயன்படுத்துவார்கள்.சுகாதார அமைப்பிற்கு வெளியே மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு சுவாசக் கவசம் பற்றாக்குறையின்றி கிடைக்க வேண்டும்.இவை போக அன்றாடவாழ்க்கையில் மக்கள் சுவாசக் கவசத்தை பயன்படுத்துவதும் நல்லதுதான்.இதன் மூலமாக தொற்று பிறருக்கு பரவுவதை குறைக்கலாம்.
இதுபோன்ற விலைகுறைவான தடுப்பு நடவடிக்கைகளை மூலமாக தொற்றுப் பரவல் வீதத்தை கட்டுப்படுத்தலாம்.சில சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கலாம்.இதுகுறித்தெல்லாம் மக்களுக்கு போதிய விழுப்புணர்வு வழங்குவதற்கும் தயார்படுத்துவதற்கும் நமக்கு கொஞ்சம், கால அவகாசம் வேண்டும்.
வைரசை புரிந்துகொள்வது:
நமக்கு இந்த வைரசைப் பற்றி இதுவரை குறைவாகவே தெரியும்.ஆனால் ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டுள்ளது.
இந்த உலகம் இறுதியாக தனது பொது எதிரிக்கு எதிராக ஒன்றினைந்துள்ளது.உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.
இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
வைரஸ் தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
அறிகுறி தெரிந்திடாத தொற்றுள்ளவர்களின் வீதம் எவ்வளவு?
இதற்கு என்ன மருத்துவ முறைகள் உள்ளன?
இந்த வைரஸ் எவ்வாறு உயிர் வாழ்கிறது?எந்தெந்த பகுதியில் வாழ்கிறது?
சமூக விலகல் நடவடிக்கைகள் நோய்ப் பரவலை எந்த வீதத்தில் கட்டுப்படுத்துகின்றன?
நோய்த் தொற்றுடையவர்களை கண்டறிவதற்கான சிறந்த வழிமுறைகள் என்ன?
நமது நோய்த் தொற்றுப் பரிசோதனைகளின் உறுதித் தன்மையென்ன?
மேற்கூறிய கேள்விகளுக்கான சரியான பதில் கிடைக்கின்ற பட்சத்தில்,நமது சமூகப் பொருளாதார இழப்புகளை குறைக்க முடியும்.
மருத்துவ சிகிச்சையை கண்டுபிடிப்பது
அடுத்த சில வாரங்களிலேயே நமக்கு நல்ல மருத்துவ சிகிச்சை முறை கிடைத்துவிடலாம்.ஒவ்வொரு நாளும் அதை நெருங்கிக் கொண்டுள்ளோம். தற்போது Favipiravir, Chloroquine போன்றவை வரிசையில் உள்ளன.இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டால் எப்படியிருக்கும்?நோயாற்றுதல் உக்தியால் பல்லாயிரம் மக்கள் இறந்துவருகிற நிலையில்,இது எவ்வளவு முட்டாள்தனமானது எனக் கருதுவோம் இல்லையா?
லாப சேத விவரங்களை புரிந்துகொள்வது:
மேற்கூறிய காரணிகள் யாவுமே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பதற்கு உதவும்.ஆனால் கெடுவாய்ப்பாக,நமது அரசியல் தலைவர்கள் மக்களின் உயிரைப் பற்றி மட்டுமே யோசிப்பதில்லை.தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான சமூக விலகல் நடவடிக்கைகள்,ஒட்டும்மொத்த மக்கள் மீதும் என்னவித விளைவுகளை ஏற்படுத்துகின்றன என யோசிப்பார்கள்.தற்போதைய சமூக விலகல் நடவடிக்கைகள். எந்தளவிற்கு இந்த வைரசின் பரவலைத் தடுக்குமெனத் தெரியவில்லை.இந்த நடவடிக்கையின் சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்து முன்னறிய முடியவில்லை.
இந்த நடவடிக்கையால் லாபமா சேதமா எனத் தெரியாததால், நீண்ட கால நடைமுறை குறித்து முடிவெடுப்பது கடினமாகிறது.
தற்போது கிடைக்கின்ற சில வாரங்களானது,இதையெல்லாம் புரிந்துகொள்ள நிறைய நேரத்தை வழங்குகிறது.எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது,எதைப் பின்பற்றுவது என முடிவு செய்யலாம்.
எந்த உக்தியுமே இல்லாமல் கண்மூடித்தனமாக எதிரியுடன் சண்டையிடுவதற்கு மாறாக சிக்கலை புரிந்துகொண்டு,நம்மை தயார் செய்துகொண்டு,தாங்கு திறனை வளர்த்துக்கொண்டு,மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இந்த வைரசுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
- அடுத்த பகுதியோடு கட்டுரை நிறைவுறும்
தமிழில்: அருண் நெடுஞ்சழியன்