“எங்களை யார் பாதுகாப்பார்கள்?”: தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்

26 Mar 2020

ஒரு பொதுசுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைப் பற்றி புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (23 மார்ச் 2020) மாலை, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

”தமிழக அரசு மருத்துவமனைகளில் கையுரை, முகமூடிகள், பி.பி.ஈ உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை இருப்பதாக பொய் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வரும் நாட்களுக்குத் தேவையான அளவு தமிழக அரசிடம் இருப்பு உள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்”, என ட்வீட் தெரிவித்தார்.

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கெனவே சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் பல்வேறு தமிழக அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் சமூக வலைதளங்களில், பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைப் பற்றி எழுப்பிய பல்வேறு புகார்களையொட்டி வெளிவந்தது.

அந்த ட்வீட் வெளிவந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே தி நீயூஸ் மினிட்டை தொடர்பு கொண்ட பல மருத்துவர்கள், மருத்துவர்களது குரலை ஒடுக்க அரசின் வெளிப்படையான முயற்சி என குற்றம் சாட்டினர். தமிழக அரசு மருத்துவமனைகளிலுள்ள பலரும் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாட்டை – குறிப்பாக, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வேலை செய்வோருக்கன்றி வேறு யாருக்கும் கொடுக்கப்படாத என்.95 முகமூடிகள் பற்றாக்குறையை உறுதிபடுத்தியுள்ளனர்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக வலைத்தளத்தில், என்.95 முகமூடி என்பது, ”முகத்தை ஒட்டி இருக்கும் வகையிலும், சிறப்பாக காற்றில் மிதந்து வரும் நுண்துகள்களை வடிகட்டும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள” பாதுகாப்பு கருவியாகும். மத்திய நோய் கட்டுப்பாட்டுக் கழகம் கூட மருத்துவர்களுக்கு, என்.95 முகமூடி சிறந்த பாதுகாப்புக் கருவி என்று குறிப்பிட்டுள்ளது. சரியாக மாட்டி உபயோகப்படுத்தும்போது, மிகக்குறைந்த கசிவைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுவாசிக்கும் காற்று முழுவதும் வடிகட்டி மூலமாகவே அனுப்பப்படும்.

”உதாரணத்திற்கு, சென்னையில் கொவிட்-19 நோய்க்குரிய அனைத்து அறிகுறிகளும் உடைய ஒரு நோயாளியை எடுத்துக்கொள்வோம். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார். அவர் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அல்லது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். அவர் உள்ளே நுழைந்ததும் முதலில் சந்திப்பது வெளிநோயாளிகளுக்கான மருத்துவரைத் தான். அந்த மருத்துவர்களுக்கு என்.95 முகமூடிகள் வழங்கப்படுவதில்லை”, என்று விளக்குகிறார் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்.

சாதாரண் சளி நோயாளிகள் கூட மருத்துவ பரிசோதனைகள் தவறு என உறுதிப்படுத்தும் வரையில் கொவிட்-19 நோயாளிகளாகத் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். “இப்படிப்பட்ட நிலையில், இந்த மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டுமல்லவா? பாதுகாப்பு உடையாகட்டும், முகமூடியாகட்டும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இது தான் நிலைமை. நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினாலும், சரியான காரணம் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் 300 நோயாளிகளை வெளிநோயாளிகளுக்கான மருத்துவர்கள் எதிர்கொள்கின்றனர்.”, எனக் கூறுகிறார்.

பாதுகாப்பு உபகரணங்கள் கோரிய பின்னரும், வைரஸை எந்தவிதத்திலும் தடுக்காத துணி முகமூடிகள் மட்டுமே மருத்துவப் பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த வேறு ஒரு மருத்துவர், “நாங்கள் மிகுந்த பயத்துடன் இருக்கிறோம்”, என்கிறார். அவர் தினமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நேரடியாஅக சிகிச்சை அளிக்கவில்லையெனினும், எங்களைச் சந்திக்க வரும் நோயாளிகளில் யார் வைரஸைச் சுமந்து வருகிறார் என்பது தெரியாது. இப்படி பயந்து கொண்டு எவ்வாறு நாங்கள் வேலை செய்வது?”, என்று வினவுகிறார்.

வெளிப்படையாகத் தெரியும் பற்றாக்குறையின் அறிகுறிகள்

”செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், ’முகமூடிகள் அரசு விநியோகிக்காததால், அனைவரும் தங்கள் சொந்த முகமூடிகளை அணிந்து கொள்ள வேண்டும்” என அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது”, என சமூக நீதிக்கான மருத்துவர்கள் குழுவின் செயலாளர், மருத்துவர் சாந்தி கூறுகிறார்.

 

 

மேலும் அவர், எக்மோரிலுள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் (Gynaecology) துறையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் அனுப்பிய குறிப்பொன்றையும் பகிர்ந்தார். அது, முதுகலை மருத்துவ மாணவர்களை “தனித்த பாதுகாப்பு உபகரணங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்துகிறது.

ஆனால், இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, அம்மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவமனையில் போதுமான அளவு உபகரணங்கள் இருப்பதாகக் கூறி, கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

”சரியான பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், நோய் தொற்றிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பொறுப்பை மருத்துவர்களிடமே விட்டுவிட்டனர்.”, என்கிறார் மருத்துவர் சாந்தி. மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்த பொதுவான வலைதளம் ஒன்று இருக்க வேண்டும். அத்தகைய மன்றம் அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்க அனுமதிக்க வேண்டும். இரண்டாவதாக, குறைந்தபட்சம் எங்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும், அவற்றை வாங்கும் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.”, எனவும் கூறுகிறார்.

அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் புகைப்படம் ஒன்றினைஅமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்திருந்தார் என மருத்துவர்கள் சுட்டிக் காட்டினர்.

அந்தப் படத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் என்.95 முகமூடி அணிந்து காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றின் வெளியில் மருத்துவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் மருத்துவர் துணியிலான முகமூடி அணிந்திருக்கிறார். அவருக்கு பின்னாலிருப்பவர்கள் 2 அல்லது 3 இதழ்களுடைய முகமூடி அணிந்திருக்கின்றனர். ”உண்மை நிலையை இந்தப் படம் விளக்கவில்லை எனில் வேறு எது விளக்கும்?”, என்று வினவுகிறார்கள்.

தெலங்கானாவிலும் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மருத்துவர்கள் அவ்வாறு கூறவில்லை.

செவிழியர்கள் பாதுகாக்கப்படவில்லை

ஹைதராபாத் எர்ரகட்டாவில் உள்ள செஸ்டு மருத்துவமனையில் செவிழியராகப் பணிபுரிவது எளிமையான காரியமில்லை. கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உள்ள 52 மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. மருத்துவர் மதியம் 2 மணி வரைதான் இருப்பார். அதன் பிறகு அழைபேசி முலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அதன் பின்னர், கொவிட்-19 நோயாளிகளை செவிழியர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். வார்டு பணியாளர்களும், துப்பரவு பணியாளர்களும் கொவிட்-19 நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதில்லை. வெளிநோயாளிகள் பகுதியில் வேலை செய்பவர்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் எந்த ஒரு நெறிமுறையும் வகுக்கப்படவில்லை. அனைத்து நோயாளிகளும் வெளிநோயாளிகள் பகுதிக்கு தான் முதலில் வருகிறார்கள்.”, என பெயர் வெளியிட விரும்பாத பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்ட 19 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தகைய குறைகள் சுட்டிக்காட்டப்பட்டபோது, மருத்துவக் கண்காணிப்பாளர் “இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என பணியாளர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கின்றனர்.

மார்ச் 21 அன்று, தனிமைப்படுத்தப்பட்ட கொவிட்-19 வார்டுகளில் தாங்கள் சந்திக்கும் இன்னல்களைக் குறிப்பிட்டு 20 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை செஸ்டு மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் கண்காணிப்பாளருக்கு அனுப்பினர். அதன் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய கண்காணிப்பாளர், கடிதத்தின் உள்ளடக்கத்தினை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

செவிழியர்களும் தங்கள் அதிகாரகளுக்கு, வெளிநோயாளிகள் பராமரிப்பு, சந்தேகத்திற்கிடமான நோயாளிகள், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – என கொவிட்-19 வார்டுகளின் பல்வேறு கட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு உரிய நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். மேலும் அவர்கள் டோனிங் மற்றும் டோஃபிங் (donning & doffing) முறைகளுக்கு செயல் விளக்கம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“செவிழியர்கள் தவிர்த்து கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் பிற  பணியாளர்கள் இந்த பயிற்சி எடுத்ததில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைப்பதைப் போன்ற, பணியாளர்களுக்கு பொருந்துகிற ஜிப் வைத்த, செருப்பு உள்ளடக்கிய முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கோருகிறோம். நோய் தொற்று உள்ளவர் முதலில் வெளிநோயாளி வார்டுக்குதான் வருகிறார். அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் செவிழியர்களுமாகிய நாங்கள்தான் முதலில் எதிர்கொள்கிறோம்”, எனத் தெரிவிக்கிறார்.

அவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் சரியான நேரத்தில், முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவர்கள் டிம்பேனிக் தெர்மோமீட்டர்கள் மற்றும் ஆபத்து நிறைந்த உயிரியல் குப்பைகளுக்கான குப்பை தொட்டிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். நோயாளிகள் அடிப்படையாக சோப், பல்துலக்கும் பிரஷ் மற்றும் இணையதள வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். உணவு, தண்ணீர் மற்றும் மின்சார வசதி தடைபட்டாலோ அல்லது, அவர்களுக்கு உணவு வழங்க பணியாளர்கள் இல்லை என்றாலோ, நோயாளிகள் பீதி அடைகின்றனர் என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோய் தொற்றை தடுக்கும் வழிமுறைகள் உள்நோயாளிகளுக்கும் நான்காம் நிலை ஊழியர்களான தினக் கூலிகளிக்கும் சொல்லித் தரப்படுவதில்லை. பணியிலிருக்கும் செவிழியர்கள் மேலும் அதிக செவிழியர்களை பணியிலமர்த்தக் கோருகின்றனர். தற்போதைய நிலையில் கைமுட்டி முறையை (elbow tap) பயன்படுத்தி கைகழுவ வழி இல்லை என்கிறார்கள் கொவிட்-19 வார்டில் பணியாற்றும் செவிழியர்கள்.

செஸ்டு மருத்துவமனையில் பணியாளர்கள் எண்ணிக்கை கூடினால், போதிய அளவு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) உள்ளனவா என விசாரித்தபோது, மருத்துவமனை கண்காணிப்பாளார் மருத்துவர் மகபூப் கான், “எங்களிடம் போதிய பி.பி.ஈ (PPE) உள்ளது. 500 முதல்நிலை உபகரணங்களும், 150 இரண்டாம் நிலை (என்.95) உபகரணங்களும் மருத்துவமனையில் உள்ளன. இவை போதுமானவை. இவை இரண்டுமே கொவிட்-19க்கு எதிராக பயன்படுத்தமுடியும். சந்தேகத்திற்கிடமான தொற்றுக்கு முதல் நிலை உபகரணத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கு இரண்டாம் நிலை உபகரணத்தையும் உபயோகிக்கலாம்.”, எனக் கூறினார். அந்தக் கடிதம் ஊடகங்கள் கைக்கு சென்றதால் அவர் கோபத்துடனே இருந்தார்.

மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிழியர்கள் கொவிட்-19 வார்டுகளில் நிலவும் குறைபாடுகளை வெளிக்காட்டியதற்காக தங்கள் ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் பாதிக்கப்படுமோ என்று பயந்தாலும், உதவி கோருவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

 

தமிழில்: பாலாஜி

https://www.thenewsminute.com/article/who-will-protect-us-doctors-and-nurses-tn-telangana-allege-lack-safety-gear-121135

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW