எதேச்சதிகாரத்தால் கொரோனாவை வெல்ல முடியாது! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திறந்த மடல்

25 Mar 2020

காலம் நம்மை எங்கே நிறுத்தி இருக்கிறதோ, அங்கிருந்தே நாம் முன்னேறியாக வேண்டும். கையிருப்பு என்னவோ அதிலிருந்தே செயல்பட்டாக வேண்டும். இருக்கும் வளங்களை ஒருங்கு திரட்டித்தான் இதை எதிர்கொண்டாக வேண்டும். எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. நிலைமையை சமாளிப்பதில் ஆளுங்கட்சியின் அக்கறையெல்லாம் எதிர்க்கட்சிக்கு வாய்ப்புத் தந்துவிடக் கூடாது என்பதில் இருக்கும். எதிர்க்கட்சிக்கோ எவ்வளவுக்கு ஆளுங்கட்சி தவறிழைக்கிறதோ அவ்வளவுக்கு அது தனக்கு உதவும், எவ்வளவுக்கு தோல்வி ஏற்படுகிறதோ அவ்வளவுக்கு அதை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதும். இத்தனை ஆண்டுகாலமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் இப்படித்தான் நம் நாட்டில் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், இம்முறை அப்படிப்பட்ட கண்ணோட்டமும் அணுகுமுறையும் அரசியல் கலாச்சாரமும் மக்களுக்கு பேரழிவைத் தந்துவிடும். இழப்புகளுக்கு ஒருவர் மற்றொருவர் மீது பழி போடுவது என்பது வாடிக்கை. இம்முறையும் வல்லரசுகளாலேயே முடியவில்லை, மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை, நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று சொல்லிக் கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது பழிபாடுவதற்கு ’தலைவிதிக் கோட்பாடு’! ஆட்சியாளர்கள் தப்பிப்பதற்கு வழியில்லாமல் இல்லை. எனவே, எப்படி தப்பித்துக் கொள்வது என்பதைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு எப்படி மக்களைக் காப்பது என்பதைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதுமானது.

 1. ஊரடங்கை வெற்றிகரமாக அமலாக்குவதற்கு காவல்துறையின் வழியாக வழக்கு, தடியடி, உருட்டல் மிரட்டல் போன்றவற்றை பல்வேறு மாநில அரசுகளும் பயன்படுத்தி வருகின்றன. ஒரு மாநில முதல்வர் துப்பாக்கியால் சுடுவதற்குக் கூட ஆணைப் பிறப்பிப்பேன் என்று சொல்கிறார். இவையெல்லாம் மக்களை அரசிடம் இருந்து மேலும் அயன்மைப்படுத்தும். இந்நேரத்தில் மக்களிடம் மிகப் பொறுமையாக மீண்டும்மீண்டும் எடுத்துச் சொல்லி உடன்பட வைக்கும் அணுகுமுறை தேவை. ஏனென்றால் இது சமூகத் தொற்று என்ற நிலையை எட்டியிருப்பதால் சமூகம்தான் எதிர்த்துப் போராடி வெற்றிக் கொள்ள முடியும்.
 2. ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் ( மருத்துவர் ஜி. சந்திரசேகர்) தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் முகக்கவசம் கேட்டதாகவும் அதனால்தான்  அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் டிவிட்டர் பதிவுகளைக் காண முடிகின்றது. இது கெடுவாய்ப்பானதும் வெட்கக் கேடானதும். கொரோனாவுக்கு எதிரானப் போரில் உயிரைப் பணயம் வைத்து முன்னணிப் படையாக இருப்பது மருத்துவர்கள்தான். அடுத்தடுத்து மருத்துவப் பணியாளர்களில் சிலர் உயிரிழக்கவும் வாய்ப்புண்டு. இத்தாலியிலும் சீனாவிலும் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மருத்துவம் உயிர்காக்கும் பணி. அந்தப் பணியை அடக்குமுறையைக் கொண்டு அச்சத்தை ஏற்படுத்தி செய்துவிட முடியாது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையின் இறுதியான கேட்டை நோயுற்றோர் அனுபவிக்க நேரும். இந்த பணியிட மாற்ற ஆணையைத் திரும்பப்பெறுங்கள். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பே சமூகத்தின் பாதுகாப்பு. அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். அவர்கள் ஓரடி பின் வாங்கினால்கூட மருத்துவம் பார்க்க இயலாமல் நோயாளிகளை சாகக் கொடுக்கக் கூடிய பெருங்கொடுமை நிகழக் கூடும்!
 3. ஊடகங்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்று அச்சுறுத்தப்படுவதையும் கேள்விப்பட முடிகிறது. இந்நேரத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை அறுந்துவிடாமல் காப்பதில் ஊடகங்கள்தான் பங்காற்றிவருகின்றன. மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்.மக்களிடம் உள்ள கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். அவர்களின் மனங்களில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதும் கொரோனா எதிர்ப்புக்கு உதவப் போவதில்லை.
 4. இணையத்தில் ’அரசை விமர்சித்தார்கள்’ என்ற பெயரில் மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகின்றது. இரு நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி வந்தது. அரசை விமர்சிக்கிறார்கள், அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்ற வழக்கமானப் பாணி அணுகுமுறையைக் கைவிடவும். இன்றிருக்கும் ஒரே தகவல் பரிமாற்ற வழி இணையம்தான். இந்த அவசர கால நிலையில் எத்தகைய இடைவெளி இருக்கிறது என்பதை இணையம் வழியாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். இணைய சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டாலும் அது கொரோனா எதிர்ப்புக்குப் பயனளிக்காது. இணையப் பதிவுகளுக்கும் வாட்ஸ் அப் செய்திகளுக்காகவும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது ஆகியவற்றை உடனடியாக கைவிடுங்கள்.
 5. 21 நாட்கள் முடக்கம்!  தமிழகத்தில் 93% விழுக்காட்டினர் அமைச்சார தொழிலாளர்கள் தான். இதில் நலவாரியங்களில் பதிவு செய்யாதவர்களும் ஏராளமாக உண்டு. நீங்கள் அறிவித்திருக்கும் வாழ்வாதார உதவிகள் சிறிதும் போதாது. போதிய உணவின்றி அரை வயிறு நிரம்பியும் பட்டினியுடனும் இருப்பது நோய் எதிர்ப்புக்கு உதவாது. கொரோனாவை எதிர்கொள்வதில் நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியமானது. காய்கறி கடைகள், பால், தண்ணீர், இன்றியமையாதப் பொருட்கள் கிடைக்கும் என்பது சரிதான். அதை வாங்குவதற்கு 1000 ரூ போதுமா? அன்றாடங் காய்ச்சிகளிடம் ஏது சேமிப்பு? உலகில் எந்த நாடாவது தன் சொந்த மக்களை இந்நேரத்தில் பட்டினியில் தள்ளியுள்ளதா? மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லி பட்டினி கிடக்க வைப்பது மறைமுகமாக கொரோனாவுக்கு இலக்காக்குவதுதான். உடனடியாக, போதிய நிதி அறிவுப்புகளை தந்திடுங்கள். சிறிய மாநிலம் கேரளா 20000 கோடி ரூபாய்க்கு அறிவிப்புகள் தந்துள்ளதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
 6. சட்டசபைக் கூடினால்தான் கொரோனா நிலவரம் பற்றி விவாதிக்க முடியும் என்று வழக்கம் போல் சட்டசபையை நடத்தியதும் கடைசி இரண்டு நாட்கள் எதிர்க்கட்சி சட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணித்ததையும் கண்டோம். இவ்வேளையில் கூட ஆளூங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த சிறு விசயத்தில்கூட இணக்கம் காண முடியவில்லை என்பது எவ்வளவு அவலமானது!
 7. இவ்வேளையில் நமக்குள்ள பெரும்பலம் நம்முடைய நலவாழ்வுக் கட்டமைப்பு! மாவட்டந் தோறும் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய உயர்நிலை மருத்துவமனைகள், குக்கிராமம் வரை இணைக்கக் கூடிய பொதுவிநியோக கட்டமைப்பு, மக்கள் நலப்பணியாளர்கள் போன்ற அரசு இயந்திரம் சார்ந்த கட்டமைப்பு இருக்கிறது. இந்த வளங்களை மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. பிற மாநிலங்களோடு மேலோட்டமாக ஒப்பிட்டு நாம் ஆறுதல் அடைந்து கொள்ள முடியாது. வாள் கொண்டு சண்டையிடும் வீரனைவிட இயந்திர துப்பாக்கி கொண்டு சண்டையிடும் வீரனின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் பன்மடங்காக இருக்க வேண்டும். இப்போது உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது இயந்திர துப்பாக்கி. நீங்கள் உத்தரபிரதேசத்தோடோ அல்லது பீகாரோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது.
 8. நம்முடைய நலவாழ்வுக் கட்டமைப்பு மட்டும் நம்முடைய பலமல்ல. இந்த எழுபது ஆண்டுகாலத்தில் இந்த கட்டமைப்பின் ஊடாக நாம் பெற்றிருக்கும் பட்டறிவும் நம்மிடம் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் சமகால நலவாழ்வு அமைச்சர் மட்டுமின்றி கடந்த காலத்தில் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர்கள் குறிப்பாக அனைத்திந்திய அளவில் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்த மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ஆகியோரைக் கொண்ட அமைச்சர்கள் அளவிலான செயலணியை உருவாக்க வேண்டும். அதே போல் நலவாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அளவில் ஓய்வுப்பெற்ற அதிகாரிகளின் அனுபவத்தைப் பயன்படுத்தும்படியான செயலணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 9. நலவாழ்வு கட்டமைப்பு போலவே நம்முடைய சமுதாய நிறுவனங்கள் – கட்சிகள், தேர்தலில் பங்குபெறாத இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள் என அடிமட்டம் வரை வேர்விட்டுள்ள கட்டமைப்புகள் நமக்கு உண்டு. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி மாநகராட்சி முதல் பஞ்சாயத்து வரையான அரசு இயந்திரத்தின் வழியாகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்திருந்தாலும் இது போதுமானதல்ல, இன்னும் அடிமட்டம் வரை உள்ளூர்வரை போதிய அளவு விழிப்புணர்வு கொண்டு சேர்க்கப்படவில்லை. சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்திருந்தாலும் இது விசயத்தில் வெகுமுன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருக்க வேண்டும். இப்போதும் நேரம் தப்பிப்போகவில்லை. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி கீழ்மட்ட அளவில் கிராம அளவில், வார்டு அளவில் இருக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய சிறுசிறு குழுக்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளை, தகவல்களை, கட்டளைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும், எங்கே பரிசோதனை செய்ய முடியும்? எங்கே மருத்துவமனையில் சேர்க்க முடியும்? புதிய தடுப்பு உத்திகள் என்ன இருக்கிறது? எது புரளி, எது உண்மை? போன்ற பல்வேறு விசயங்களை மக்களுக்கு உடனுக்கு உடன் கொண்டு சேர்க்க வேண்டிவரும். அச்சு ஊடக, காட்சி ஊடக செய்தி வாசிப்புகளை எல்லாம் ஒருமுறை படித்தவுடனோ, கேட்டவுடனோ சரியானப் பொருளில் உள்வாங்கக் கூடியவர்களின் எண்ணிக்கை நம் சமூகத்தில் குறைவானது. அந்தந்த தெருவில் தமக்கு தெரிந்தவர்கள், தமக்கு புரிந்த மொழிநடையில் எடுத்துச் சொல்லும்போது மட்டுமே மக்கள் ஏற்றுக்கொண்டு அதை செயல்படுத்துகின்றனர். பல்வேறு கட்டங்களாக செல்லக்கூடிய இந்த போராட்டப் பயணத்தில் இப்படியான வலைப்பின்னல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். சமூக இடைவெளியைப் பேணுவதற்கு இது ஊறு செய்துவிடாது. மேலிருந்து தெளிவான கட்டளை அனுப்பப்பட்டால் கீழ்மட்டத்தில் வாட்ஸ் அப் மூலமே குழுக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை கருதிப் பாருங்கள்.
 10. கொரோனாவை வெற்றிக் கொள்ள நிதி வேண்டும். பணப்பெட்டியோ மத்திய அரசிடம் இருக்கிறது. தமிழகத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருக்கும் நிதியோ 987 கோடி ரூபாய். இது கொஞ்சமும் போதுமானதல்ல. உடனடியாக கூடுதல் நிதி ஒதுக்குமாறு போர்க்குரல் எழுப்புங்கள். எல்லா மாநிலங்களும் எழுப்பினால் இவ்வேளையில் மத்திய அரசு புறந்தள்ள முடியாது. புதிய நாடாளுமன்றத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது மத்திய அரசு! இன்றைக்கு உள்ள முதல்பெரும் கேள்வி எது இன்றியமையாதது? வழிபாட்டுத்தலங்களும் கேளிக்கைகளும் இன்றியாதததல்ல என்று அறிவிக்கப்பட்டாயிற்று. புதிய நாடாளுமன்றத்தைவிட நாட்டு மக்களைக் காப்பதும் அவர்களுக்கு உணவும் மருத்துவமும்தான் இன்றியமையாதது என்பதை உரக்கப் பேசுங்கள். அடிமை மெளனம் நமக்குப் பேரழிவைத் தந்துவிடும்.
 11. மழை,வெள்ளம், புயல் போன்ற பேரிடர் என்றால் பசித்திருப்போருக்கு மக்களே உணவளித்து காத்திடுவர். ஆனால், இது தொற்றுநோய் விளைவித்தப் பேரிடர். மக்கள் நேரிடையாக உதவ வழியில்லை. எனவே மருத்துவ உபகரணங்களுக்காகவும் உணவளிப்பதற்கும் நிதி உதவி செய்வதற்கும் உதவுமாறு மக்களிடமே ’கொரோனா தடுப்பு நிதி’ கோருங்கள். புதுச்சேரியில் ஒரு மாத ஊதியத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். பணம் படைத்தோர், அரசு அலுவலர்கள், மாத சம்பளம் பெறுவோர் என எல்லோரும் உதவ முன்வந்தால் இந்த நிலைமையை எதிர்கொள்ள நமக்கு சிறிதளவு நிதி கிடைக்கும். காலதாமதம் செய்யாமல் உடனே அறிவிப்புக் கொடுங்கள். உலகமெங்கும் உள்ள தமிழர்களையும் உதவ முன்வருமாறு அறிவிப்புக் கொடுங்கள். (ஈழத்திலும் இத்தகைய முன்னெடுப்புத் தேவை.) உலககெங்கும் உள்ள தமிழர்கள் கரம் கோர்த்து உதவ முன்வந்தால் பட்டினித் துயரத்தையும் கொரோனாச் சாவுகளையும் நம்மால் ஒரளவுக்கேனும் தடுக்க முடியும்.
 12. ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர கொரோனா சிகிச்சையைவிடவும் பரிசோதனை செய்வதற்கான திறன் மிக முக்கியம். குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10,000 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டின் திறனை உயர்த்தியாக வேண்டும். இன்றைக்கு(25-மார்ச்) நம்முடைய திறன் வெறும் 800 தான். மத்திய அரசும் பரிசோதனை கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பதில் தாமதம் செய்து வருகிறது. எப்படியானாலும் உள்நாட்டு உற்பத்தி நடந்து கருவிகள் வருவதற்கு அதிகபட்சம் 3 வாரம் ஆகிவிடும். இன்னொருபுறம் சீனா நமக்கு உதவ முன் வருகிறது. தென்கொரியாவிலும் உள்நாட்டு உற்பத்திக்கு திறன் உள்ளது. 6 மணி நேரத்தை விட விரைவாக பரிசோதனை செய்து முடிவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது தென் கொரியா. இந்தியாவோ தனது அமெரிக்க சார்பு காரணமாக சீனாவின் உதவியைப் பெறத் தயங்குகிறது. அதற்குள் உலகத் தலைமைக்கான அமெரிக்கா-சீனப் போட்டிப் பற்றி பேச்சுக்கள் வேறு தொடங்கிவிட்டன. நம்முடைய ஒரே அளவுகோல் – எங்கே நமக்கு விலை குறைவாக, விரைவானப் பரிசோதனைக்கான கருவி கிடைக்கும் என்பதுதான். பரிசோதனைக் கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது! அமெரிக்காவும் ஐரோப்பாவும் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், ஹாங்கான் போன்ற ஆசிய நாடுகளின் உதவியைப் பெற முனைய வேண்டும்.
 13. தமிழகத்தில் அமைக்கவிருக்கும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிலவற்றை மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில்   அமைக்க வேண்டும். கொரோனா நெருக்கடியில் இருந்து நாம் ஒப்பீட்டளவில் விரைவில் மீண்டுவிட முடியும் என்று நான் நம்புகிறேன். அதற்குரிய மருத்துவக் கட்டமைப்பு, மக்கள் ஒத்துழைப்பு நமக்குண்டு. நாம் நெருக்கடியில் இருந்து மீண்டு அண்டை மாநிலங்கள் ஏதேனும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பின், மாநில எல்லைகளில் அமைக்கும் சிறப்பு மருத்துவமனைகளை அண்டை மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்த முடியும்.

ஊரடங்கு முடிவுக்கு வந்து இயல்வு வாழ்க்கை திரும்பும் வரை மக்கள் மட்டுமல்ல அரசுகளும் ஆட்சியாளர்களும் தமது வழக்கமான சிந்தனை முறை, செயல்பாட்டு முறை ஆகியவற்றை மாற்றிக் கொண்டாக வேண்டும். குறுகிய தேசியவாதம், சந்தைப் போட்டி, குறுகிய குழு நலன், பதவிப் போட்டி அரசியல், இலாப வெறி, அரச அடக்குமுறை இவையெல்லாம் கொரோனாவின் சிறந்த நண்பனாக செயல்பட முடியுமே ஒழிய எவ்விதத்திலும் கொரோனாப் பேரிடரில் இருந்து மாந்த முலம் மீண்டுவர உதவாது.

 • செந்தில் இளந்தமிழகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW