நமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்!

21 Feb 2020

இன்றோடு எட்டாவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-NRC-NPR க்கு எதிராக பெண்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் போராட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் துச்சமாக மதித்து விவாதிக்கவே மறுத்தனர். சட்டமன்றக் கூட்டத் தொடரே முடிந்துவிட்டது. மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் போராட்டத்தை ஆதரிக்கக் கூடிய நம்மைப் போன்றோர் செயலளவில் அவ்வாதரவை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

போராட்டம் வலிமிகுந்ததே. போராட்டங்களில் இழப்புகள் உண்டு. ஒரு வேலை நாளின் சம்பளத்தை இழப்பது தொடங்கி பல்வேறு படிநிலைகளைக் கொண்டதே. ஆனால், இவ்விழப்புகள் வரவிருக்கும் பேரிழப்பைத் தடுப்பதற்காக வலியோடு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த கண்ணுக்குப் புலப்படக் கூடிய இலாபநட்டக் கணக்குகளோடு போராட்டத்தில் பங்கேற்பதில் இன்னொரு முக்கிய அம்சமும் இருக்கிறது. அது பொதுநலனுக்காக உழைப்பதில் கிடைக்கும் மன நிறைவு. இப்படி போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம் உண்மையிலேயே எந்தளவுக்கு நம்முடைய குறுகிய தன்னலனில் இருந்து விடுபடுகிறோம் என்ற அளவுகோலும் இருக்கிறது. இரத்த உறவுகள் அல்லாத சக மாந்தர்களோடு கூட்டாய் சேர்ந்து செய்யும் போராட்ட நடவடிக்கையின் மூலம் மாந்தர் தம்முடைய சமூகத்தன்மைக்கு புத்துயிர் ஊட்டிக் கொள்கின்றனர். வாழ்வாலும் மொழியாலும் உணர்வாலும்  தமிழர்களாக பிணைக்கப்பட்ட நாம் அதை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இதுதான். போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம் தனிநலன்கள் பற்றிய இடையறாத வெறியூட்டலால் மாசடைந்த  மனத்தை மக்கள் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். போராட்டத்தினால் பெறக்கூடிய நீண்ட கால நலன்களோடு சேர்த்து உடனடியாகப் பெறக்கூடிய மனநிறைவும் கிடைக்கிறது.

இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உயர்த்தி இருக்கும் போர்க்கொடி எல்லோரையும் ஊக்கப்படுத்துவதுதான். ஆனால், ஒருநாள் விடுப்பு எடுத்துவிட்டு போராட்டங்களில் பங்குபெறுவதற்கே ஆயிரம் தடைகள் பலருக்கும் இருக்கும் போது நாட்கணக்கில் இப்படி போராட்டத்தில் பங்குபெறுவதற்குப் பின்னால் இருக்கும் இழப்புகளை சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு பேர் வேலைக்குப் போவதை தவிர்த்து இருப்பார்கள். எவ்வளவு பேர் கடை, கண்ணிகளை மூடியிருப்பார்கள். எவ்வளவு பேர் நல்லது கெட்டதை தள்ளிப் போட்டிருப்பார்கள். எவ்வளவு பேர் போராட்டத்திற்கு பணத்தைக் கொடுத்திருப்பார்கள். இந்த இரு மாதப் போராட்டத்தினால் நாடு முழுவதும் எத்தனை நூறு கோடி ரூபாய் இழப்புகளை மக்கள் சந்தித்திருப்பார்கள். இதன் பாதிப்புகள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவர்தம் வாழ்வில் நீடிக்கும்.

இவ்வளவு வலியும் இழப்புகளும் நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை முட்டாளாக சித்திரிக்கிறது அதிமுக அடிமைக் கூட்டம். வெட்ட வெயிலும் பட்டப் பகலிலும் ஆண்களும் பெண்களுமாக சிறுவர்களும் முதியவர்களும் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் வீதியில் இறங்கி வேறெந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அச்சத்தோடு இப்படிப் பேரணி போனதை  தமிழ்நாட்டில் இதுவரை கண்டதுண்டா? ஒருவேளை அப்படி பேரணி போனவர்கள் யாரேனும் இந்தியக் கொடியை ஏந்தி தம் தேசப் பற்றை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்களா? இதற்கு ஆர்.எஸ்.எஸ். யையும் மோடியையும் அமித் ஷாவையும் குறைசொல்வது ஒருபுறம் இருந்தாலும் இப்படியொரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் இந்திய தேசியக் கொடியை ஏந்தி தன் தேசப் பற்றைக் காட்ட வேண்டும் என்ற புற அழுத்தம் இந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவமானம் இல்லையா? இதுகுறித்து ஒட்டுமொத்த சமூகமும் வெட்க்கப்பட வேண்டாமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அன்னியர் என்றும் ஊடுருவல்காரர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் ’சந்தேகத்திற்கு இடமான குடிமக்கள்’ மீண்டும் மீண்டும் முத்திரையிடக் கூடிய சிலரை சகித்துக் கொண்டிருப்பது நம்முடைய கீழான பண்பாட்டு மட்டத்தைக் காட்டுகிறதல்லவா? கற்பை சோதிப்பதற்கு ராமன் சீதையை நெருப்பில் இறங்கச் சொன்னது எவ்வளவு அருவெறுக்கத்தக்கதோ அது போன்றதுதான் இன்றைக்கு இஸ்லாமியர்கள் தேசியக் கொடி ஏந்திவர நிர்பந்திக்கப் பட்டிருக்கும் இந்தியாவின் அரசியல் சூழலாகும்.

இந்திய தேசிய கொடியோ வருங்காலத்தில் பட்டொளி வீசப்போகும் தமிழ்த்தேசிய கொடியோ, இந்திய தேசிய கீதமோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தோ இவையாவும் தோற்றப்பாடுகளும் குறியீடுகளுமே. இவற்றை எவர் மீதும் அல்லது எந்தவொரு சமூக, அரசியல் பிரிவினர் மீதும் கட்டாயப்படுத்துவது, திணிப்பது சனநாயகத்திற்கு எதிரானது. பொதுவில் தேசப் பற்று என்பது ஒருவர் அந்த தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் அரசியல், பொருளியல், பண்பாட்டு  உரிமைகளைப் புனிதமானதாகப் போற்றுவதில்தான் இருக்கிறது.  மாந்த நிகர்மையை அறிந்தேற்பதில்தான் இருக்கிறது. தேசியம் பற்றி இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தமைவுகளைக் கேள்விக்குள்ளாக வேண்டிய தருணம் இது. மாந்த நாகரிகத்திற்கு பங்களிக்கக் கூடிய வகையிலான தேசியம் பற்றிய மாற்று உரையாடல் தான் மோடி, அமித் ஷா போன்ற இந்துத்துவ தேசிய வெறியர்களை முறியடிக்க உதவும். அவர்கள் முன்வைக்கும் பொறிக்குள் நாம் சிக்கிக் கொண்டால், புதிய விதிகளை, புதிய கட்டளைகளை, புதிய கட்டுத்திட்டங்களை அவர்கள் நம்மீது மென்மேலும் சுமத்துவதற்கு வழிவகுக்கக் கூடும்.

இப்போதைய உடனடிப் பிரச்சனைக்கு வருவோம். ஆர்.எஸ்.எஸ். , பாசகவைக் கடந்து இந்திய அரசு இயந்திரமே இந்துத்துவத் தன்மை கொண்டதுதான். இந்தியாவில் உள்ள  நீதித்துறை, காவல்துறை, ஊடகம், அரசு உயர் அதிகாரிகள் என அத்தனையும் இஸ்லாமியர்களின் எழுச்சியை உறுத்தலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த எழுச்சியைக் கொண்டே இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முடியும் என்று கணக்குப் போடுகின்றன. அவர்களின் தீய நோக்கத்தை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அந்த வகையில்தான் தமிழ்நாடெங்கும் முக்கிய நகரங்களில் நடந்து கொண்டிருக்கும் தொடர் போராட்டங்களில் தமது நேரடி பங்களிப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை சனநாயகத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும்  அனைத்து அரசியல்  நீரோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உண்டு. மேலும் நடந்துகொண்டிருக்கும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்கானப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் சுமையை தமிழ்ச் சமூகத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதியான இஸ்லாமியர்கள் தன் தோளில் சுமந்துக் கொண்டுள்ளனர். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான ஈட்டிமுனையாக அவர்கள் போர்க்களத்தில் நின்றுகொண்டுள்ளனர். இதையும் மனத்தில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

 

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW