நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்
நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.5 கோடி கார்கள் விற்பனையாகிறது,3 கோடி மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் ஆனால் வெறும் 2,200 மக்கள்தான் ஒரு கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவதாக வரி கட்டுகிறார்கள்.நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தோர்களை எண்ணிப் பார்க்கவேண்டாமா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒழுங்காக வரி கட்டவேண்டாமா? என இரு தினங்களுக்கு முன்பாக டைம்ஸ் நவ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
எந்த நடுத்தர வர்க்கம் மோடியை வளர்ச்சியின் நாயகனாக நம்பி 2014 மற்றும் 2019 தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு துணை நின்றதோ,அவர்களை நோக்கி,ஒழுங்காக வரி கட்டுங்கள் வரி, செலுத்தாமால் ஏய்க்காதீர்கள் என நடுத்தர வர்க்கத்தை வரி ஏய்ப்பர்கள்(TAX FRAUD) போல பிரதமர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.மோடியின் இந்த தலைகீழ் மாற்றத்தை இந்தியாவின் நடுத்தர வர்க்கம் சற்றும் எதிர்ப்பார்த்திருக்காது என்பதைக் கூறத் தேவையில்லை!ஒரு வேலை தில்லியில் ஆம் ஆத்மிக்கு ஒட்டு போட்டதாலோ,பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களை திசை திருப்புவதற்காகவோ என்னவோ நகரப்புற நடத்தர வர்க்கத்தை “குற்ற உணர்வு” கொள்ள வைப்பதற்காக மோடியின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
இந்த சந்தர்ப்பத்திலேனும் மோடி மற்றும் மோடி அரசு குறித்து மாயைகளை நடுத்தர வர்க்கம் களைய வேண்டும்.ஓரளவிற்கு அரசியல் விழுப்புணர்வு கொண்ட நடுத்தர வர்க்க அணிக்கு கீழ்வரும் கேள்விகள் எழும்.
- ஒரே நாடு ஒரே வரி என பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட ஜி எஸ் டி வரி விதிப்பால்,வரி வருவாயை சுலபமாக்க இயலவில்லை.அதேநேரம் வரி வருவாயையும் பெருக்க இயலவில்லை.மேலும் பொருளாதார மந்த நேரத்தில் தெளிவில்லாமல் அவசர கதியில் அமலாக்கப்பட்ட ஜி எஸ் டி வரி விதிப்பு முறையானது,நாட்டின் சிறு குறு தொழில்துறையை நாசப்படுத்திவிட்டது.முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முதலாக தாராளமய பொருளாதார அறிவுஜீவிகள் பலரும் இதைக் கூறுகிறார்கள்.நடப்பு நிதியாண்டில், ஜி எஸ் டி வரி வருவாய் சுமார் 51,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் விமர்சிக்கிறார்.மேலும் மாநில அரசுகளின் பங்குகளையும் கூட மத்திய அரசால் கொடுக்க இயலவில்லை.இந்நிலையில் இந்த வரி விதிப்பு முறையை மீழாய்வு செய்வது குறித்து மோடி அரசிற்கு எந்த திட்டமும் இல்லை. ஜி எஸ் டி வரி விதிப்பின் தோல்வியை இதுவரை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
- கருப்பு பணத்தை மீட்பதற்காகவும்,கள்ளப் பணத்தை ஒழிப்பற்காக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட செல்லாக்காசு நடவடிக்கையால்,கருப்பு பணமும் வரவில்லை,டிஜிடல் பரிவர்த்தனையும பெருக வில்லை.மாறாக முறைசாரா பொருளாதாரம் மோசாமாக பாதிக்கப்பட்டது.நாட்டு மக்களை பெரும் குழப்பத்திலும் உயிர்ப்பலியிலும் இட்டுச் சென்ற மோடி அரசின் செல்லாக்காசு நடவடிக்கையானது,அதன் நோக்கமாக கூறப்பட்ட ஒன்றையுமே சாதிக்கவில்லை!
- 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் மொத்த உற்பத்தி 8 ஆக (GDP)சரிந்து வருகிற நிலையில்,மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும்,வேலை வாய்ப்பை பெருக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாமல்,கார்பரேட் முதலாளிகளுக்கு பெரும் கார்பரேட் வரி சலுகை அறிவிப்பை(30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டது) மோடி அரசு மேற்கொண்டது.இந்த வரிச் சலுகையால் முதலாளிகள் உற்சாகமடைந்து தொழில் முதலீட்டு நடவடிக்கையில் ஈடுபடவில்லை.நாட்டின் முதலாளிகள் பெரும் பண மலையின் மீது அமர்ந்துகொண்டு முதலீடு செய்யாமல் உள்ளார்கள் என பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்று இந்தியாவின் அபிஜித் விமர்சிக்கிறார்.அதேநேரம் மோடி அரசின் கார்பரேட் வரிச் சலுகையால், அரசிற்கு வரவேண்டிய கார்பரேட் வரி வருவாய் சுமார் 1.56 லட்சம் கோடி ரூபாய் வரவில்லை.இது குறித்து வாய் திறக்காத மோடி அரசு,இவர்களைத்தான் நாட்டின் வளத்தை உருவாக்குவோர்கள்(WEALTH CREATORS) என்கிறது.
- வாரக் கடனை அடைக்காமல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த ஏகபோக முதலாளிகளின் சொத்துக்களை கைப்பற்றாமல்,நாட்டின் நவரத்தினங்கள் என அழைக்கப்படுகிற அரசுப் பொது நிறுவனங்களை ஏலம் போட்டு இந்த அரசு விற்று வருகிறது.
ஒருபுறம் ஏர் இந்தியாவை விற்று விட்டு எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட ஏர் இந்தியா ஒன் என்ற பெயரில் விமானம் வாங்கப்படுகிறது.ரயில்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு ,இஷ்டம்போலே கட்டணம் வசூலிக்கிற உரிமை வழங்கப்படுகிறது.BPCL எண்ணெய் நிறுவனங்கள்,LIC காப்பீடு நிறுவனங்கள் விற்கப்படுகிறது. இதுதான் தேச பக்தி போலும்?
அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் வருவாய்க்கு, வரி விதிப்பு குறைக்கப்பட்டது என ஆரவாரமாக அறிவித்தார்கள்.ஆனால் வரிக் கழிவு கோராதவர்களுக்குத் தான் இந்த வரிச் சலுகை செல்லும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கி வரி செலுத்துவோர்களை குழப்பத்தில் நிறுத்தியது. இந்த அறிவிப்பு வெறும் ஏமாற்றுவேலை என நடுத்தர வர்க்கம் உணர்ந்துகொள்ளும் முன்னரே,நடுத்தர வர்க்கத்தை வரி ஏய்ப்பவர்களாக சித்தரித்து,குற்ற உணர்வு கொள்ள வைத்து தங்களது கருத்தியல் மேலாண்மையால் கார்பரேட் நலன் சார்ந்த பொருளாதார நடவடிக்கையும் மக்கள் விரோத கொள்கைகளையும் மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதே மோடியின் தற்போதைய விமர்சனத்திற்கு அடிப்படையாக உள்ளது.
வங்கிக் கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டு ஓடியவர்களும்,வரிச் சலுகை பெற்றுக்கொண்டு நமது நாட்டின் மண் வளம்,மனித வளம் மற்றும் நமது வரிப்பணத்தை சூறையாடுவர்கள் மோடியின் அகராதியில் வளத்தை உருவாக்குவோர்கள்(WEALTH CREATORS).மாறாக நடுத்தர வர்க்கமோ வரி ஏய்ப்பவர்கள்!
நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல் என்பது,அரசின் வர்க்கசார்ப்பு கொள்கை மீதான சிவில் சமூகத்தின் கோப ஆவேசத்தை அதன் மீதே திருப்புகிற ஒரு உக்தி.நாட்டின் பொருளாதர நெருக்கடிகளுக்கு பிரச்சனைகளுக்கு தனி மனிதர்களின் நேர்மையின்மை நடவடிக்கைதான் காரணம் என்ற புதிய பிரச்சாரத்தை மோடி அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.பொருளாதார நெருக்கடி வளர வளர இந்த திசை திருப்பல்கள் மிகையாகலாம்,வேறு சில பரிமாணங்களும் எடுக்கலாம்.
நாட்டு மக்களை மத ரீதியாக பாகுபடுத்தி, இந்து பெரும்பான்மை மக்களை இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக நிறுத்துவதற்கு முயற்சித்துவருகிற மோடி அரசானது,தற்போது மக்களையே ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்த முயற்சிக்கிறது.சிவில் சமூகம் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இதற்கு எவ்வாறு வினையாற்றப் போகிறது?இரையாகப் போகிறதோ எதிர்ப்பை தொடரப் போகிறதோ?
-அருண் நெடுஞ்சழியன்