இஸ்லாமியர்களுக்காக முதலில் போராடப் போகும் திரு ரஜினிகாந்துக்கு சில கேள்விகள்…
- சில கட்சிகளும் மதக் குருமார்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அதனால் பீதியடைந்து அவர்கள் போராடுவதாக சொல்கிறீர்கள். இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக வீதியில் இறங்கி போராடுகிறார்களே, அவர்கள் அறியாமையில் போராடுவதாகவா எண்ணுகிறீர்கள்? அப்படி அறியாமையால் போராடும் தன் சொந்த குடிமக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பி சுமார் 30 பேரை ஓர் அரசு சுட்டுக்கொன்றது சரியா?
- மாணவர்களைப் பார்த்து நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு போராடுமாறு சொல்கிறீர்களே, இந்த சட்டத் திருத்தம் வந்தவுடன் இதற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் சேர்ந்து பிரதரமருக்கு வேண்டுகோள் விடுத்தது தெரியுமா? இந்த சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பவர்களில் உங்கள் நண்பர் கமலஹாசனும் ஒருவர் தெரியுமா? அவரிடம் இது குறித்து பேசினீர்களா?
- கண்ணன் கோபிநாத், சசிகாந்த் செந்தில் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு நிற்கிறார்களே. அவர்கள் எல்லாம் சில கட்சிகளின் தூண்டுதலில் மயங்கிப்போகும் முட்டாள்களா?
- இச்சட்டம் இந்தியா கையெழுத்திட்ட இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்று ஐ.நா. அமைப்பொன்று கூறியுள்ளது தெரியுமா?
- போராடும் மாணவர்களை முட்டாள்களாக நினைத்து அறிவுரைக் கூறும் நீங்கள் அப்படி போராடிக் கொண்டிருக்கும் ஆயிஷா கோஷ் போன்ற மாணவர்களோடு நேருக்கு நேர் நின்று விவாதிக்கத் தயாரா?
- போராடும் மாணவர்களிடம் காவல்துறை வழக்குப் போடும் என்று அச்சுறுத்துகிறீர்களே, உலகில் எந்த அரசாவது தனக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு எதிராக வழக்குப் போடாமல் விட்டிருக்கிறதா? அப்படியென்றால், மாணவர்கள் போராடவே கூடாது என்பது தானே உங்கள் கொள்கை?
- இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு குடியுரிமைப் பறிப்பென்றால் முதலில் போராடுபவன் நானாகத் தான் இருப்பேன் என்கிறீர்களே, குடியுரிமையைப் பறித்தால் மட்டும்தான் போராட வருவீர்களா?
- மாட்டிறைச்சியின் பெயராலும் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லியும் அடித்துக் கொல்லப்படும் இஸ்லாமியர்களுக்காக ஏன் போராடவில்லை?
- பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டதற்கு எதிராக இத்தனை ஆண்டுகாலமாக திசம்பர் 6 அன்று இஸ்லாமியர்கள் நாடெங்கும் போராடி வருகிறார்கள். என்றாவது ஒரு நாள் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தது உண்டா? ஒருவேளை பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது உங்கள் திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சி என்று நினைத்து விட்டீர்களோ?
- மசூதிக்குள் இராமர் சிலையை வைத்தது தப்பு, மசூதியை இடித்தது தப்பு, ஆனால் அங்கே இராமர் கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். கடைசி ஆளாக கூட நீங்கள் போராடவில்லையே!
- ’இந்தியா எங்கள் தாய் நாடு, வாழ்வோ சாவோ இந்த மண்ணில் தான்’ என்று பிரிவினையின் போது முடிவெடுத்து இம்மண்ணில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தனை எத்தனை கலவரங்கள் இந்நாட்டில் நடத்தப்பட்டு விட்டன. குஜராத் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்தீர்களா? முசாபர் நகர் கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்தீர்களா?
- சச்சார் ஆணையம், ரங்கநாத் மிஷ்ரா ஆணையம் போன்ற ஆணையங்கள் ’மதச்சார்பற்ற’ இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலைப் பற்றி அம்பலப்படுத்தி முன் வைத்த கோரிக்கைகள் என்னவென்று தெரியுமா? அதற்காக என்றாவது ஒரு நாள் குரல் கொடுத்திருப்பீர்களா? அல்லது இனியாவது குரல் கொடுப்பீர்களா?
- சரி இஸ்லாமியரை விடுங்கள், வேறு யாருக்காவது முதலில் குரல் கொடுக்க வந்துள்ளீர்களா? காவிரிப் பிரச்சனையில் கூட திரைத்துறையோடு சேர்ந்து போராடாமல் தனி ஆவர்த்தனம் செய்தவர் தானே நீங்கள்? தலைவன் என்பவன் ஒரு சமுதாயத்தின் நலனுக்காக, ’நான் இருக்கிறேன்’ என்று சொன்னபடி முதல் ஆளாக நிற்பவன்… என்றாவது அப்படி ஒரு தலைமைப் பண்பை நீங்கள் வெளிப்படுத்தியது உண்டா?
- ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் இந்துத்துவ குண்டர்கள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய போது திரைப்பட நடிகை தீபிகா படுகோன் தாக்கப்பட்ட மாணவர்களுக்காக திரைத்துறையில் முதல் ஆளாகவும் தன்னந்தனி ஆளாகவும் பல்கலைக் கழகம் சென்றார். ஒரு வார்த்தைகூட பேசாமல் மெளனமாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றார். அப்படி ஒரு துணிவோ அல்லது பணிவோ தங்களிடம் உண்டா?
- சுத்தமான காற்றுக்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் பிணமான நிலையில், ’சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று முதல் ஆளாக ஊடகங்களிடம் பேசிய நீங்கள், அன்றாடம் தில்லியில் இந்துத்துவ வெறியர்கள் துப்பாக்கியோடு சென்று மிரட்டிக் கொண்டு இருக்கிறார்களே, அத்தகைய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?
- சோழர் காலத்தில் இருந்து இலங்கையில் தமிழர்கள் வாழ்வதாகச் சொன்னீர்களே, அது முற்காலச் சோழர்களா? பிற்காலச் சோழர்களா? அப்படியென்றால் அதற்கு முன்னால் அவர்கள் எங்கிருந்தார்கள்? இயக்கர், நாகர், வேடர் என்ற இனக்குழு காலந்தொட்டு இலங்கை தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலத்தொடர்பு அற்றுப்போனது. நிபுணர்கள் கேட்டு விட்டு மாணவர்களைப் போராடச் சொல்லும் நீங்கள் ஏதாவது வரலாற்று அறிஞரிடம் இதுகுறித்து கேட்டு அறிந்திருக்க வேண்டாமா?
- மதத் துன்புறுத்தல் காரணமாக மட்டும் அகதிகள் நாடுவிட்டு நாடு வருவதில்லை. பொருளாதார அகதிகள் என்றொரு வகை உண்டு. அதாவது பிழைப்புக்காக இடம்பெயர்பவர்கள்! அப்படி வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் வந்த ஏழை,எளிய மக்கள் இருக்கிறார்கள்.. இந்த சட்டத்திருத்தத்தின் படி அவர்களை ஒன்று அடித்து துரத்த வேண்டும் அல்லது தடுப்பு முகாம்களில் அடைக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்து ஒரு தலைமுறைக்கு மேலாக இங்கேயே வாழ்ந்த உங்களுக்கும் அதே லாஜிக்கைப் பொருத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஏனென்றால், நீங்களும்கூட பிழைப்புக்காக இடம்பெயர்ந்தவர் இல்லையா?
- பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்களுக்கு குடியுரிமை உண்டு, இஸ்லாமியர்களுக்கு கிடையாது என்பது பாரபட்சம் இல்லையா? ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை உண்டு, இந்துக்களுக்கு கிடையாது என்று சட்டத்தை திருத்தினால் என்ன? அதுதான் இந்தியாவில் உள்ள இந்துக்களைப் பாதிக்காதே!
- சிம்மாசனங்களின் கீழ் எத்தனையோ மூளைகள் நசிந்து கிடக்கின்றன, எத்தனையோ கலைஞர்கள் மன்னர்களின் கொள்ளைக்காரத்தனத்தைப் புகழ்ந்து பொற்கிழிகளை வாங்கிப் போயிருப்பார்கள். ஆனால், வரலாறு தனது பெட்டகத்தில் அவர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதில்லை. இன்றைக்கு மோடியைக் கூட இட்லரோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். இட்லருக்கு இணையான தலைமைப் பண்போ, ஆளுமையோ மோடிக்கு இல்லையென்றால் இட்லரைப் போன்றே இன அழிப்பு விருப்பங்கள் மோடிக்கு உண்டு. இட்லரைப் போலவே மோடியும் தன்னுடன் அமித் ஷா என்ற பொய் பேசும் கோயபல்சை வைத்துள்ளார். உன்னதமான படைப்புகளைத் தந்த கலைஞர் சார்லி சாப்ளின் இட்லரின் காலத்திலேயே அவருக்கு எதிராக ‘The Great Dictator’ படத்தை எடுத்ததற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.
அவர் திரையில் எல்லோரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர், வரலாற்றில் நாயகன். நீங்கள்?
– செந்தில், இளந்தமிழகம்