புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள் – நூல் அறிமுகம்

02 Feb 2020

ஐந்திணைகளில் ஒன்றான கடலும் கடல்சார்ந்து வாழும் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கைக் குறித்து சமகாலத்தில் வெளிவரும் நூல்கள் மிகக் குறைவு. இத்தகையப் பின்புலத்தில், “புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்“ என்கிற தலைப்பில் ஒக்கிப்புயலின்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பெருந்துயரம் குறித்து தோழர் லிங்கன் எழுதி வெளிவந்திருக்கும் நூல் அதிகம் கவனம்பெறத் தக்கது.

 

கடந்த 2017 நவம்பர் இறுதியில் நிகழ்ந்த ஒக்கிப்புயல் பேரிடரால் 400க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் இறந்துபோயினர். 2000க்கும் அதிகமான மீனவ மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இறப்பு இயற்கைச் சீற்றத்தால் விளைந்த மரணமில்லை மாறாக, அரசின் மெத்தனப்போக்கால் விளைந்த திட்டமிட்ட கொலை. ஒக்கிப் புயல் பேரிடர் ஏற்படுத்திய பெருந்துயரத்தை சமூகம் மறந்திட முடியாது. அரசிடம் தேசிய பேரிடர் மீட்புப் படை, வலுவான கடற்படை, ஏவுகணை தொழில்நுட்பம் எனப் பலவும் இருந்தும் என்ன பயன்? என்கிற கேள்வியை ஒக்கிப்புயல் உரத்து எழுப்பியது. நம்மைக் காக்க கடற்படை, விமானப்படை வரும் என நடுக்கடலில் தத்தளித்து நாட்கணக்கில் மீனவர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு மீனவப் பெண்களின் விழிகளும் தன் குடும்ப ஆண்கள் உயிரோடு கரைவந்து சேர்ந்துவிட வேண்டும் என கண்ணீருடன் காத்திருந்தன. கடற்படையோ சிறிது தூரம் கடலுக்குள் சென்றுதிரும்பிவிட்டு மீனவர்களைத் தேடியதாக ஒரு நாடகத்தை நடத்தியது. அரசு ஒரு மீனவரைக்கூட மீட்டுவரவில்லை. இறுதியில் மாண்டுபோன மீனவர்களின் உடலை மீனவ இளைஞர்களே கடலுக்குள் சென்று மீட்டுவந்தனர். உயிருக்குப் போராடி துடித்துக்கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்ற பொறுப்பேற்காத இதே மத்திய அரசுதான் அண்மையில் அமைச்சர் ஓபிஎஸ் இன் உறவினரைக் காக்க வேகமாக விமானத்தை அனுப்பிவைத்தது. ஆக, கடற்கரை வாழ் மீனவர்கள் என்பதும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் என்பதும் பாசக வின் வாக்குவங்கி அல்லாத கத்தோலிக்க கிறித்தவர்கள் என்ற அனைத்தும்தான் இந்த அலட்சியத்திற்குக் காரணம் என்பதை யாராலும் எளிதில் மறுத்துவிட முடியாது.

 

தமிழக மீனவர்கள், மீன்பிடித்தொழில்

 

தமிழகத்தில் சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்கிறார்கள். மீனவர்களின் வாழ்க்கை முறையானது வேட்டைச்சமூகத் தன்மையைக்கொண்டது. மீனவர்களிடம் ஒருவகையான கூட்டுச்சமூக வாழ்க்கைமுறையுண்டு. கடலையும் கடல் வளங்களையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தற்சார்புப் பொருளாதாரத்தோடு வாழ்பவர்கள் மீனவர்கள்தான் என்பது தனிச்சிறப்பு. மீனவர்களிடம் கூலிமுறைக்கு மாறாக கடலில் பிடித்துவரும் மீன்களைப் பகிர்ந்துகொள்ளும் கம்யூன் வடிவிலான வாழ்க்கைமுறை இன்றுவரை தொடரக் காண்கிறோம். இத்தகைய தனிச்சிறப்பான பண்பாட்டைக் கொண்டிருக்கும் மீனவர்கள் தம் வாழ்க்கைமுறையிலேயே போர்க்குணம்கொண்ட சமூகப் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நவீன வரலாற்றில் 1935லேயே தமது வாழ்வாதாரம் காக்கப் போராடி வீரமரணம் அடைந்த தியாக வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். 1996ல் ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்திக்காக தாதுப் பொருட்களைத் தாங்கி வந்த கப்பலை கடல் நடுவே சென்று ஓடஓட விரட்டியவர்கள். அரசின் துப்பாக்கிச்சூட்டினை சந்திக்காத மீனவக் குப்பங்கள் அல்லது மீனவ கிராமங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆளும் வர்க்கமும் கண்டு அஞ்சும் அளவிற்கு தம் உறுதியை நிலைநாட்டுபவர்கள் இந்த உழைக்கும்வர்க்க மக்கள். அண்மையில் நடந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் மீனவ மக்களின் பங்களிப்பை முன்னுதாரணமாகக் கூறலாம்.,

தமிழகத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க உற்பத்தி துறைகளில் கடல்சார் உற்பத்தி, மீன்பிடித்தொழில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் மொத்த ஜி.டி.பி. யில் 1 சதவீதம் மீன்வளத்துறை மூலம் கிடைக்கிறது. மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 60.000 கோடி அன்னிய செலாவணி மூலம் வருவாய் ஈட்டித்தருபவர்கள் மீனவர்கள். அதேபோல், தமிழகத்திற்கு அன்னிய செலாவணி மூலம் மீனவர்கள் ஆண்டொன்றுக்கு ஈட்டித்தரும் வருவாய் 3200 கோடி ரூபாயாகும். ஆனால், மீன்வளத்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியோ 700கோடிதான். இத்தகைய வருவாய்ப் பெற்றுத்தரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கும் மாற்று திட்டங்களை அரசு முன்னெடுக்காததால் இம்மீன்பிடித்தொழில் படிப்படியாக சரிந்துவருகிறது.

 

இராமேஸ்வரம் பகுதியை ஓட்டிய மீனவர்கள் அன்றாடம் இலங்கை இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாவதாலும் கடலுக்குள் மீன்வளம் குறைந்துவிட்டதாலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் படகை வழங்குமாறு  தொடர்ந்து அரசிடம் வலியிறுத்தி வந்தனர். இதன் விளைவாக கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தது இத்திட்டத்தின்மூலம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘டுனா‘ என்கிற படகை வழங்குவதாக அறிவித்தது. நடைமுறையில் 80 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து எத்தனை மீனவர்கள் படகை வாங்க முடியும்? இத்திட்டத்தால் மீனவர்கள் எவ்வித பயனும் பெறமுடியவில்லை. மீனவர்கள் படகிற்கான நிதியை அரசே வழங்க  வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதுபோன்று  தங்கள் வாழ்வாதாரம் காத்திட பல்வேறு கோரிக்கைகளை மீனவ சமூகமும் அமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. அரசு இதுவரை செவிசாய்த்ததாக தெரியவில்லை. இதனால் மீன்பிடித்தொழிலைத் தொடரமுடியாமல் மீனவ மக்களில் கணிசமானோர் வேறொரு தொழிலுக்கு மாறிவருகின்றனர். மீனவர்களுக்கு நிதி ஒதுக்கிட தயங்கும் மோடி அரசுதான் கடல்சார் இயற்கைவளத்தை சூறையாடும் பெரும் முதலாளிகளுக்கான திட்டத்திற்கு கோடிகளை ஒதுக்குகிறது.

 

கடல்வளத்தை அழிக்கும் வகையில் 2,427 கோடி ரூபாயில் சேதுசமுத்திரத் திட்டத்தை விடாப்பிடியாக நடைமுறைப்படுத்த துடிக்கும் மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வைப் பற்றி அக்கறை காட்டுமா என்ன? தற்போது “சாகர்மாலா“  கடல்மாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த துணிந்திருக்கிறது. மத்திய அரசு. இதன் மூலம் கடற்கரையோரம் வாழும் இலட்சணக்கனான மீனவர்கள் அப்பறப்படுத்தப்பட்டு அங்கு நவீன கார்ப்பரேட் மீன் உற்பத்தி நிறுவனங்களை நிறுவக் காத்தருக்கிறது. கிராமப்புற விவசாயத்தை எரிவாயுத் திட்டத்தால் அழிப்பது போல், கடலில் இருந்தும் ஹைட்ரொகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம் உரிமம் பெற்றிருக்கிறது.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாழாவதோடு கடல்புறங்களும் பாதிப்புக்குள்ளாக இருப்பது அதிகம் கவனம் பெறவில்லை என்பது கவலைக்குரியது. கார்ப்பரேட்களின் கொள்ளை இலாபத்திற்காக காடுகளில் இருந்து பழங்குடிகளும் விளைநிலங்களில் இருந்து விவசாயிகளும் நகர்ப்புறங்களில் இருந்து பூர்வகுடி உழைப்பாளிகளும் வெளியேற்றப்படுவது போல் கடல்புறங்களில் இருந்து மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இத்தகைய சூழலில், கடல்வளம், மீனவர் நலன் ஆகியவற்றைக் காத்திட கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.

 

மீனவர்களுக்கான கோரிக்கைகள்

  1. மண்டல் கமிசன் அறிவுறுத்தலின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும்.
  2. மீன்வளத்துறையிலும் மீன்வளக் கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  3. மீனவர்களின் படகு, வலை, வள்ளம் ஆகியவற்றிற்கு வங்கிகள் கடன் தர வேண்டும். விவசாயத்திற்கு நிலவள வங்கி இருப்பதுபோல், மீனவர்களுக்கும் மீன்வள வங்கி  அமைத்து தரவேண்டும்.
  4. மீன்பிடித் தொழிலுக்கு என மத்திய அரசில் தனி அமைச்சகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
  5. கடலை, காற்றின் திசையை, வானிலையை அறிந்த மீனவர்களை அத்துறையில் வேலைக்கு அமர்த்த வேண்டும்.
  6. கடலில் தொலைதூரத்திற்கு செல்லும் மீனவர்களைக் கண்டறியவும் தொடர்பு கொள்ளவும்  தொலைத்தொடர்பு கருவி கொடுக்கவேண்டும்.
  7. மீனவர்களுக்கென தனியான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்.

சமூகத்தில் ஒவ்வொரு மக்கள் பிரிவினருக்கான கோரிக்கைகள் பேசுபொருளாவது போல், மீனவ மக்களின் இத்தகைய கோரிக்கைகள் பேசுபொருளாவதில்லை. எப்பொழுது இயற்கை பேரிடர், கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறதோ, மீனவர்கள் காணவில்லையோ அல்லது மீனவர் கொல்லப்படுகிறார்களோ அப்பொழுது மட்டுமே நம் எல்லோரது மனதையும் அசைக்கும் செய்தியாக மீனவர்கள் வந்துபோகிறார்கள். காரணம், கடல்சார் மீனவ மக்கள் என்றாலே வேறொரு சமூகம்போல் பார்க்கும், ஒதுக்கும் பார்வை சமவெளிப்பகுதி மக்களிடையே நிலவுவதால் இம்மக்கள் பாதிக்கப்படும்போது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் மௌனம் நிலவுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளையும் ஒக்கிப் புயல் பேரிடரைவிட கொடியதாக இருந்த அரசின் அலட்சியத்தை, தோல்வியையும் சமவெளிச் சமூகத்திடம் பேசுபொருளாக்குவதற்கான முக்கியமான நூலாக இது அமையும்.

 

‘ஓக்கிப்புயல் விவாதங்கள்’ என்கிற நூல் தமிழகம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். நெய்தல் வாழ் மீனவ மக்களின் கோரிக்கைகளை உரையாடலாக்க இத்தகைய நூல்கள் வெளிவருவது அவசியமானது. கடலோடி மீனவர்களின் சிக்கலை மீனவர்கள் மட்டுமே பேசிவந்ததை உடைத்து சமவெளிச் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு இந்நூலை எழுதியுள்ள தோழர் லிங்கன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

  • ரமணி (aruvi1967@gmail.com)
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW