ஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்!
சனவரி 5 ஞாயிற்றுக் கிழமை மாலை அன்று மோடி-அமித் ஷா தலைமையிலான பா.ச.க. அரசு இந்நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. ”யார் வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எங்கு வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். ஓடி ஒளிவதற்கோ, விலகி நிற்பதற்கோ, காத்திருப்பதற்கோ இனி இங்கே இடமில்லை. மெளனம் அல்லது மரணம் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய சொல்லியிருக்கிறார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகம் என்று அவர்கள் கருதிப் பார்க்கவில்லை. வெறுங்கையோடு இருக்கும் சக மாணவ, மாணவியர் என்றோ பார்வையற்ற ஆய்வு மாணவர் என்றோ அவர்கள் விட்டுவைக்கவில்லை. கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று தயங்கி நிற்கவில்லை. வீட்டில் தனித்திருக்கும் பேராசிரியரின் மனைவி என்று கண்ணியம் காக்கவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஊடகவியலாளர்களையும் பொருத்துக் கொள்ளவில்லை. து.ராஜா, யோகேந்திர யாதவ் போன்ற நாடறிந்த தலைவர்களையும் தாக்குவதற்கு அஞ்சவில்லை. ஆனால், இத்தனையையும் செய்தது வழக்கமான காவல் துறையோ ரிசர்வ் படைகளோ அல்லது இராணுவமோ அல்ல, மாறாக ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்.
கடந்த ஆறாண்டுகளாக பொதுவெளியில் வைத்து ’ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொன்னபடியே எந்த கும்பல் இஸ்லாமியர்களை அடித்துக் கொலை செய்து கொண்டிருந்ததோ அவர்கள் இன்றைக்கு நாட்டின் தலைநகரத்தில், தலைசிறந்த பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து கொலை அச்சத்தை செய்தியாக அறிவித்துள்ளனர்.
சனவரி 4:
கடந்த 70 நாட்களுக்கு மேலாக ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிரானப் போராட்டம் நடந்து வருகிறது. நவம்பர் 19 அன்று ஜே.என்.யூ மாணவர்களும் பேராசிரியர்களும் இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாக சென்றபோது அமித் ஷாவின் காவல்துறையின் தாக்குதல்களால் அந்த மாணவர்களும் ஆசிரியர்களும் குருதி சிந்தினார்கள். ஆனால், போராட்டத்தில் இருந்து மாணவர்கள் பின் வாங்கவில்லை.
இந்நிலையில்தான், சனவரி 1 முதல் சனவரி 5 க்குள் குளிர்கால பருவத் தேர்வுக்கான பதிவை மேற்கொள்ளுமாறு பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது. விடுதிக் கட்டண உயர்வு ரத்து செய்யப்படாத நிலையில், ’தேர்வைப் புறக்கணிப்பது’ என்று ஜே.என்.யூ மாணவர் சங்கம்(JNUSU) முடிவுசெய்திருந்தது. சனவரி 1 அன்று பதிவு தொடங்கப்பட்ட நிலையில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷும் பிற மாணவர்களும் பதிவு செய்வதை தடுக்க முயன்று வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் பல்கலைக் கழக நிர்வாகம் இணைய வழியாக பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் சனவரி 4 அன்று பல்கலைக் கழக வைபை(wi-fi) இணைப்பைப் போராடும் மாணவர்கள் துண்டித்துள்ளனர். போராட்டத்தில் இருந்து விலகி நிற்கும் ஏபிவிபி (ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அணி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வைபை இணைப்பைக் செயல்பட வைக்க முனைந்துள்ளனர். இந்நேரத்தில் இதை தடுத்த ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஏபிவியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போதே கைத்தடிகளோடும் கட்டைகளோடும் ஏபிவிபி மாணவர்கள் போராடும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ், அருகில் உள்ள வசந்த குன்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் பின்னணியில், பொதுவாக மாணவர்கள் வளாகத்திற்குள் ஒன்றுகூடக் கூடாது என்று சனவரி 5 அன்று பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
சனவரி 5:
ஒருபுறம் போராடும் மாணவர்கள் மத்தியப் பள்ளிப் பகுதிக்கு அருகில் கூடுவதற்கு தடைவிதித்த நிர்வாகம் இன்னொருபுறம் ஏபிவிபி மாணவர்கள் நிர்வாக அலுவலகக் கட்டிடம் முன்புகூட அனுமதித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், பல்கலைக் கழகத்திற்குள் நிலவிக் கொண்டிருக்கும் பதட்டத்தைத் தணிக்கும் நோக்கில் ஜே.என்.யூ ஆசிரியர் சங்கம்(JNUTU) மாலை 4:30 மணி அளவில் அமைதி ஊர்வலத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. ஆசிரியர்கள் , மாணவர்களின் ஊர்வலம் நிறைவடையும் நிலையில் பெரியாறு விடுதிக்கு அருகில் வந்த பொழுது சுமார் 5 மணி அளவில் முகமூடி அணிந்த கும்பலொன்று விடுதி விடுதியாக சென்று மாணவர்களைத் தாக்குகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது.
ஆசிரியர்கள் கூற்று:
திடீரென்று அங்கு குழுமியிருந்த ஆசிரியர்களை நோக்கி முகமூடி அணிந்த கும்பல் வந்துள்ளது. ”அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் வரும்போது கற்களை வீசிக் கொண்டும், தடியால் அடித்துக் கொண்டும் மகிழுந்துகளையும் மரச்சாமான்களையும் உடைத்துக் கொண்டும் வந்துள்ளனர்.” என்று இதை நேரில் கண்ட கலை மற்றும் அழகியல் துறை பேராசிரியர் சுக்லா சாவந்த் சொல்கிறார். அப்போது பிராந்திய வளர்ச்சிக்கான ஆய்வுத் துறையின் பேராசிரியர் சுரசித்ரா சென் மீது வீசப்பட்ட கல் அவரது தலையை உடைத்துள்ளது. இதை நேரில் கண்ட சுக்லாவும் தாக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் வெளியில் இருந்து கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு கம்பிகள், தடிகள், சுத்தியல்கள் ஆகியவற்றைத் தாங்கிய மூகமூடி அணிந்த கும்பல் மேலும் அதிக எண்ணிக்கையில் நுழையத் தொடங்கியுள்ளது.
”முன்னதாக பெரியாறு விடுதி காப்பாளர் அலுவலகம் அருகில் ஒன்று திரண்ட முகமூடி கும்பல் சுமார் 6:30 மணி அளவில் சபர்மதி விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு, தப்தி, கொய்னா விடுதிகளை நோக்கிச் சென்றன. 9 மணி வரை வன்முறை குறைந்தபாடில்லை. பல்வேறு மாணவர் குழுக்களிடம் இருந்து அச்சம் நிறைந்த அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படியேனும் விடுதியில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று மாணவர்கள் எண்ணினர்” என்று வரலாறு கற்றல்களுக்கான மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மகாலட்சுமி சொல்கிறார். போராட்டங்களில் பங்குபெற்றிராத மாணவர்களும் தாக்கப்பட்டதாக அறிகிறோம். நூலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவரும் தாக்கப்பட்டார். இரு ஆசிரியர்கள் மோசமாக காயப்பட்டுள்ளனர்.” என்று ஜே.என்.யூ. வில் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர் ரோகித் ஆசாத் சொல்கிறார்.
சபர்மதி விடுதிக்கு முன்பு தாங்கள் அமைதியான கூட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்த போது பெரியாறு விடுதியில் இருந்து தடிகள், சுத்தியல்களுடன் ஒரு கும்பல் வந்தது. பெரியாறு விடுதியில் இருந்து ஒரு கும்பல் இவ்விடத்தை நோக்கி வருகிறது என்று அறிந்தவுடன் ஆசிரியர்கள் மனித சங்கிலியாக நின்றோம். ஆனால், அப்படி நின்றுகொண்டிருந்த ஆசிரியர்கள் கற்கள், தடிகளைக் கொண்டு அக்கும்பலால் தாக்கப்பட்டனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் ஓடினர். ஆறு ஆசிரியர்கள் காயம்பட்டனர். பிறகு அந்த கும்பல் வளாகம் முழுவதும் சுற்றியது. அங்கிருந்த நிலைமை முழுமையாக அச்சுறுத்தக்கூடியதாக இருந்தது” என்று ஜே.என்.யூ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டிகே லோபியல் சொன்னார். மேலும் இதை யார் செய்திருக்கக் கூடும் என்ற கேள்விக்கு அவர், “காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, நடத்தப்பட்ட இந்த வன்முறையை யார் செய்திருக்கக் கூடும் என்பதை எவர் வேண்டுமானாலும் எளிதாக அனுமானிக்க முடியும்” என்று சொன்னார்.
”சபர்மதி விடுதியில் தாக்குதல் நடந்து கொண்டிருந்த பொழுது, தாக்குதலுக்கு அஞ்சி விடுதி அறைகளில் ஒளிந்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் இருந்து எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. இடதுசாரிக் குழுக்களில் இருந்த அறியப்பட்ட மாணவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் இஸ்லாமிய மாணவர்களிடமிருந்தும் எனக்கு அழைப்புகள் வந்தன. நிலைமை சீராகும் வரை விடுதி அறையிலேயே இருக்குமாறு நான் ஆலோசனை வழங்கினேன்.
நிலைமை சீராவதற்கு பதிலாக இன்னொரு முனையில் இருந்து பிரச்சனை வந்தது. முனிர்கா, பெர் சராய் போன்ற சுற்றுப்புற ஊர்களில் இருந்து பஜ்ரங் தள்ளை ஒத்தக் குழுக்கள் அணி திரட்டப்பட்டு முதன்மை வாயில் வழியாக வந்து கொண்டிருந்தன. ஜே.என்.யூ. வில் வசிக்கின்ற எல்லோருக்கும் அச்சுறுத்தலாக அவர்கள் உள்ளே வந்துகொண்டிருந்தனர். ஆசிரியர் சங்கத்தில் இருந்து வந்த அழைப்பை ஒட்டி நாங்கள் முதன்மை வாயிலை நோக்கி விரைந்தோடிக் கொண்டிருந்தோம். நிலைமை அருவெறுப்பாக இருந்தது. ”சிறுசிறு குழுக்களை”, ’துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லு’, ’பாரத் மாதா கீ ஜே’ ஆகிய முழக்கங்கள் கேட்டபடி இருந்தன. பிரபலமான ஆசாதி முழக்கத்தை “நக்சல்வாதிகளிடம் இருந்து விடுதலை” என்று மாற்றியும் ’நக்சல்வாதிகளிடம் இருந்து வளாகத்தை விடுவி’ என்றும் முழங்கிக் கொண்டிருந்தனர். வாயிலில் நின்று கொண்டிருந்த போது, 2016 இல் ஜே.என்.யூ. வில் இருப்பதாக சொல்லப்பட்ட தேச விரோதிகள், தேச துரோகிகளுக்கு எதிராக ஆளுங் கட்சியோடு தொடர்புடைய அமைப்புகளால் பரப்பப்பட்ட பிரபலமான வெறுப்புக் காட்சிகளின் மறு ஒலிபரப்பாக அது காட்சியளித்தது.
முன்னாள் ஜே.என்.யூ மாணவர்களிடமும் தில்லி மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மற்றும் ஆசிரியர்களிடமும் உதவி கோரினோம். மெல்ல மெல்ல அவர்கள் எமது வளாகத்திற்கு வந்தார்கள். எங்களுடைய இரத்தம் குடிப்பதற்காக வளாகத்திற்குள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்கள் எங்களுக்கு ஆதரவாக வந்து சேர்ந்த பிறகுதான் நிலைமை சீராகத் தொடங்கியது.
ஆனால், என்னுடைய கணவர் சுமார் 6:30 மணி போல் வளாகத்திற்கு வந்த போது, அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் வாயிற்காப்பாளர்கள் எவரும் வாயிலில் இல்லை. காவல்துறையினர் முதன்மை வாயிலில் நின்றுகொண்டிருந்தனர்;
பல்கலைக் கழக நிர்வாகம் இதை தடுக்க தவறியது என்பதோடு இதற்கு துணைபோயுள்ளது என்பதை உணர முடிந்தது. பின்னிரவு நான் வீட்டுக்குச் செல்லும் போது என் நெற்றியில் விழுந்த கல்லால் ஏற்பட்ட காயத்தைவிடவும் ஒரு பெரிய கல் தங்கிவிட்டால் ஏற்படக்கூடிய கனத்த இதயத்துடன் இருந்தேன்.” என்று வரலாற்றுத் துறையின் பேராசிரியர் சுசேதா மகாஜன் எழுதியுள்ளார்.
இந்த தாக்குதலில் கட்டண உயர்வுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கு துணையாக இருக்கும் ஆசிரியர்களும் குறிவைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. “சுமார் ஏழு மணியளவில், 40-50 பேர் என் வீட்டுக்கு ( பழைய டிரான்சிட் குடியிருப்பு) வெளியே திரண்டிருந்தனர். என் கணவரை வெளியே வருமாறு சொல்லி கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர். நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து என் கணவர் வீட்டில் இல்லை, நான் வீட்டில் தனியாக இருக்கிறேன் ஆகையால் கதவைத் திறக்க முடியாதென்று சொன்னேன். கதவை உடைத்து விடுவோம் என்று சொல்லியபடி தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே இருந்தனர். கதவுக்குப் பின்னால் ஒரு மேசையை வைத்து அவர்கள் உள்ளே வருவதை நான் தடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களிடம் லத்திகளும் இரும்புக் கம்பிகளும் இருந்தன. அவர்கள் என்னை தாக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி நான் கதவைத் திறக்க மறுத்தேன். தாங்கள் மீண்டும் வருவோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர்கள் போய்விட்டனர். போகும்போது என் வீட்டுக்கு வெளியே இருந்த சூ வைக்கும் இரும்பு சட்டத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்.” என்று பொருளியல் துறை பேராசிரியர் தேபபிரட்டா பல் அவர்களின் மனைவி சரபோனி மொண்டல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து உள்ளார்.
மாணவர்கள் கூற்று:
’சபர்மதி விடுதிக்கு அருகில் உள்ள T-சந்திப்புக்கு அருகில் நாங்கள் தனியாக்கப்பட்டு 30 பேர் சூழ தாக்கப்பட்டேன். அவர்கள் கையில் சுத்தியல், இரும்பு கம்பிகள் இருந்தன’ என்று தலையில் பலத்த காயமடைந்த ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ் சொன்னார். அந்நேரத்தில் ஒரு கும்பல் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட ஆயிஷா, மாணவர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார் என்றும் அங்கு வந்த கும்பலின் முதல் இலக்கு ஆயிஷாவாகத் தான் இருந்தது என்றும் நேரில் கண்ட மாணவர் ஒருவர் சொன்னார். அவர்கள் இருவரும் மயக்கம் அடையும் வரை அந்தக் கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது.
பெரியாறு விடுதியை நோக்கி கட்டைகளுடன் ஒரு கும்பல் செல்கிறது என்று கேள்விப்பட்டவுடன் அதை நோக்கி நாங்களும் சென்றோம். நாங்கள் அங்கு சென்றவுடன் ஏபிவிபியினர் எங்களை நோக்கி கற்களை வீசினர். எங்கள் பக்கத்தில் இருந்து கற்கள் பதிலுக்கு வீசப்பட்டன. விடுதிச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நாங்களும் கற்களை வீசத் தொடங்கியப் பிறகுதான் காவல்துறை வருகை தந்தது. காவல்துறை வந்தவுடன் கூட்டம் அங்கிருந்து கலைந்தது” என்று ஆங்கிலத் துறை மாணவர் ஒருவர் பதிவு செய்கிறார்.
சபர்மதி விடுதியில் பெண்கள் பகுதியில் உள்ள எனது நண்பரின் அறையில் நான் இருந்தேன். காலடிச் சத்தமும் இரைச்சலும் சிலர் கத்துவதும் எங்களுக்கு கேட்டது. ’வெளியே வா’ என்று சொன்னபடி சிலர் கதவைத் தட்டினார்கள் என்று வரலாற்றுத் துறை மாணவர் ஒருவர் பதிவு செய்கிறார்.
”நாங்கள் சபர்மதி விடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தோம். முகமூடி அணிந்தவர்கள் வந்ததைக் கண்டவுடன் நாங்கள் எல்லோரும் இதை நோக்கி (தாபாவுக்கு வெளியே உள்ளே அழுக்கானப் பாதை) ஓடத் தொடங்கினோம். ஒரு பெண் கீழே விழுந்துவிட்டார் என்பதால் அவருக்கு உதவும் பொருட்டு நான் நின்றேன். அப்போது இரண்டு கார்களுக்கு இடையே நாங்கள் இருவரும் மாட்டிக் கொண்டோம். எங்களை விரட்டிவந்தவர்கள் எங்களை சூழ்ந்துவிட்டனர். அப்போது முகமூடி அணிந்தவர்களில் சிலர் ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் அடையாளம் காண முடிந்தது. அவர்கள் எங்களை அடிக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால், அவர்களோடு வந்திருந்த வெளியாட்கள் அதை தடுத்துவிட்டனர்.” என்று பிரெஞ்சு துறையைச் சேர்ந்த மாணவர் சிவானி சொல்கிறார்.
சபர்மதி விடுதிக்குள் நடந்த தாக்குதல்கள் குறி வைத்து நடத்தப்பட்டவை. சேதப்படுத்தப்பட்ட அறைகளில் பெரும்பாலானவை இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் தங்கும் அறைகள் ஆகும். ”காசுமீரி மாணவர் தங்கும் அறையை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற கும்பல் ‘பாபரின் மகனே’ என்று திட்டிக் கொண்டிருந்தது. எனவே, அந்த அறையில் யார் தங்குகிறார்கள் என்பது அந்த கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. அதாவது, அந்த முகமூடி அணிந்த கும்பலில் ஜே.என்.யூ வைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.” என அரசியல் துறையில் பயிலும் மாணவர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். ஆனால், ஏபிவிபி மாணவர்கள் தங்கும் அறைகள் எந்த சேதத்திற்கும் உள்ளாகாமல் இருந்ததை காண முடிந்தது என்று பல்வேறு ஊடகங்களும் பதிவு செய்துள்ளன.
”பல்கலைக் கழகத்தின் கிழக்கு வாயில் வழியாக முகமூடி அணிந்தவர்கள் வெளியேறுவதைக் காண முடிந்தது. சிலர் காரில் வெளியேறுவதையும் காண முடிந்தது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தும் கையில் தடி மற்றும் இரும்பு கம்பிகள் வைத்திருந்தும் அவர்களைக் காவல்துறையோ அல்லது வாயிற் காப்பாளர்களோ தடுக்கவில்லை“ என்று சர்வதேச உறவுகள் பற்றி பயிலும் மாணவர் ஒருவர் சொன்னார்.
சமற்கிருதம் பயிலும் மாணவர் சூரியபிரகாசு தனது அறையில் ஆதி சங்கரரின் பிரம்மசூத்திரத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. அவர்கள் சூரிய பிரகாசை அடிக்கத் தொடங்கியுள்ளனர். அந்தக் கும்பலில் பெண்களின் குரலையும் அவர் கேட்டுள்ளார். தனக்கு பார்வைக் குறைபாடு உள்ளது என்று சூரியபிரகாசு கத்தியுள்ளார். சில நிமிடங்களுக்கு அவர்கள் அடித்தார்கள். அவர்கள் தான் கூறியதை நம்பவில்லை” என்று பகிர்ந்து கொள்கிறார் சூரியபிரகாசு. சூரியபிரகாசு அறையின் கதவில் அம்பேத்கர் புகைப்படம் ஒட்டியிருந்தது அந்தக் கும்பல் உள்ளே புகுந்து தாக்கியதற்கு காரணமாக இருக்கலாம் என்று மாணவர்கள் சொல்கின்றனர். ஏனெனில் அத்தகைய படங்கள் கொண்ட அறைகள் எல்லாம் தாக்கப்பட்டுள்ளன. நடந்தவற்றை வெளியே சொல்லக் கூடாதென்று சூரியபிரகாசுக்கு ஓரிரு நாட்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகளும் வந்துள்ளன.
“முதலில் பெரியாறு விடுதிக்கு வந்தார்கள். நான் எனது அறையில் இருந்து ஓடிச் சென்று எனது நண்பன் இருக்கும் விடுதிக்குச் சென்றேன். பின்னர், சுமார் 7 – 7:30 மணி போல் முகமூடி அணிந்த இன்னொரு கும்பல் சபர்மதி விடுதிக்கு வந்து இன்னாரென்று பார்க்காமல் எல்லோரையும் தாக்கத் தொடங்கியது. எங்களில் பலர் விடுதி அறைகளுக்கு சென்றனர். சிலர் மரங்கள், புதர்களில் ஒளிந்து கொண்டனர். நான் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் புதர்களில் ஒளிந்து கொண்டிருந்தேன்” என்று பெயர் சொல்ல விரும்பாத மாணவர் பகிர்ந்துள்ளார்.
சுமார் 8 மணி வாக்கில் பல்கலைக் கழக மாணவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி வளாகத்தின் முதன்மை வாயிலைக் காவல் துறையினர் பூட்டிவிட்டனர். ஆனால், அதிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருக்கும் சரசுவதிபுரம் வாயில் வழியாக முகமூடி அணிந்த கும்பல் உள்ளே நுழைய அனுமதித்துக் கொண்டிருந்தனர். சுமார் 8:15 மணி அளவில் முன்ரிகாவில் இருந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு நான் திரும்பி வந்த பொழுது முதன்மை வாயிலில் நுழைய என்னைக் காவல்துறை அனுமதிக்கவில்லை. எனவே, சரசுவதிபுரம் வாயிலை நோக்கி நான் சென்றேன். அப்போது ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்லியபடி சில ஆண்கள் உள்ளே போய்க் கொண்டிருந்தார். ஆனால், எனது அடையாளங்களை சோதித்தப் பிறகே பல்கலைக் கழக பாதுகாவலர்கள் என்னை உள்ளே அனுமதித்தனர்.” என்று ஜோதி என்ற மாணவர் பகிர்ந்தார். காசுமீர் மாணவர்கள் தங்கக் கூடிய அறை எண் 156, 157 ஆகிய இரண்டும் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறையில் தங்கும் காசுமீர் மாணவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
”அந்த கும்பல் வெளியாட்கள், ஜே.என்.யூ. வைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் உள்ளே வருவதைக் கண்டவுடன் எங்கள் அறைக்குள் சென்று ஓடி ஒளிந்து கொண்டோம். எங்கள் அறையில் மட்டும் 8 பேர் இருந்தோம். நாங்கள் விளக்கை அணைத்துவிட்டோம். கதவுகளை தட்டுவதையும் வசைப்பாடுவதையும் எங்களால் கேட்க முடிந்தது. சுமார் 20 நிமிடத்திற்கு இது தொடர்ந்தது. சத்தம் குறைந்தப் பிறகுதான் மெல்ல நாங்கள் வெளியே வந்து பார்த்தோம்” என்று ஒரு மாணவி சொன்னார்.
ஊடகவியலாளர்கள் கூற்று:
ஒருபுறம் பல்கலைக் கழக வளாகத்திற்குள் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது முதன்மை வாயில் அருகே யாரையும் உள்ளே விடாமல் வாயிற்கதவை அடைத்துக் கொண்டு இந்த பயங்கர தாக்குதலை அனுமதித்துக் கொண்டிருந்தது காவல் துறை. முகமூடி அணிந்த கும்பலை ஆதரித்தபடி ஒரு பெருங்கூட்டம் வாயிலுக்கு வெளியே கூடி நின்று முழங்கிக் கொண்டிருந்தது. ஜே.என்.யூ வில் நடக்கும் வன்முறை வெளியே தெரிந்து அங்கு சென்ற ஊடகவியலாளர்களும் வாயிலுக்கு வெளியே இருந்த கும்பலால் காவல்துறை முன்னிலையிலேயே தாக்கப்பட்டனர்.
ஸ்க்ரால் ஊடகத்தின் ரோகன் வேங்கடராமகிருஷ்ணன் சுற்றி வளைக்கப்பட்டு தலையில் தாக்கப்பட்டுள்ளார். அவரை ’நக்சலைட்’ என்று அந்தக் கும்பல் சொல்லியுள்ளது. ஆஜ் தக் மற்றும் இந்தியா டுடேவைச் சேர்ந்த அசுதோஷ் மிஷ்ரா தனது டிவிட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “ ஜே.என்.யூ. வில் சட்டம் ஒழுங்கு நிலைமைப் பற்றி நான் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியவுடன் நானும் எனது புகைப்படக்காரரும் தாக்கப்பட்டு, மைக் உடைக்கப்பட்டதோடு என்னை நக்சலைட் என்றும் ஜிகாதிக்கள் என்றும் அங்கிருந்த கும்பல் வசை பாடியது.
அந்தக் கும்பலில் இருந்த ஒருவர், ‘என்.டி.டி.வி. க்காரர்களைப் பார்த்தால் அடியுங்கள்” என்று சொல்லக் கேட்டதாக ஸ்க்ரால் இணையதளத்தை சேர்ந்த கரினிகா கோலி சொல்கிறார். சுமார் 9:30 மணி அளவில் ஜே.என்.யூ. ஆசிரியர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிலும் அந்தக் கும்பல் இடையூறு செய்தது. ஏராளமான காவலர்கள் வேடிக்கைப் பார்க்க, முகமூடி அணிந்துகொண்டு கையில் தடி வைத்திருந்தவர்கள் வளாகத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்ததை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார் பத்திரிகையாளர் இராஜேஷ் மகாபத்ரா.
அங்கிருந்தபடி காவல்துறையின் செயலின்மையை விளக்கி நேரலையில் பேசிக் கொண்டிருந்த இந்தியா டுடே நிருபர், அங்கிருந்த கும்பலால் விரட்டியடிக்கப்பட்டு, தாக்கப்பட்டார். அப்போது அவரை நக்சல்வாதி என்றும் தேசதுரோகி என்றும் அந்த கும்பல் வசை பாடியது. நிருபரை விரட்டிச் செல்லும் கும்பலை விரட்டிக் கொண்டு ஒருவர் ஓடியபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களின் அடையாளம் கேட்கப்பட்டு அவர்களை ”பாரத் மாதா கீ ஜே என்று சொல்லு” என அந்தக் கும்பல் நிர்பந்தித்தது. நியூஸ்லாண்ட்ரி நிருபரும் தாக்கப்பட்டுள்ளார். ”நான் என் கடமையை செய்துக் கொண்டிருக்கும் போது என்னைத் தாக்கினார்கள். நான் ஓட முற்பட்டேன். என்னை விரட்டிக் கொண்டு வந்தார்கள். கடந்த காலத்தில் எங்கள் சேனல் ஜே.என்.யூ. , ஜாமியா செய்திகளை சேகரித்த போது நாங்கள் தாக்கப்பட்டதே கிடையாது” என்று இந்தியா டுடே நிருபர் சொல்லியுள்ளார்.
சுமார் 9-10 மணிக்கு இடையில் ஜே.என்.யூ. முதன்மை வாயிலுக்குள் ஜே.என்.யூ. மாணவர்களும் வாயிலுக்கு வெளியே காவல்துறையின் இந்துத்துவ குண்டர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டிருந்தவர்கள் இருந்தனர். ஜே.என்.யூ. பெண் மாணவர்கள் சிலர் வாயிலுக்கு வெளியே இருந்த ரவுடிகளை எதிர்த்துப் பேசிய பொழுது, அந்த ரவுடிகள், ”பாருங்கள், இந்தப் பெண்கள் எங்களைத் தாக்க முற்படுகின்றனர். நாங்கள் பதிலுக்கு வினையாற்றினால் என்ன நேரும் என்று உங்களுக்கு தெரியுமில்லையா?” என்று காவல்துறையினரிடம் சொன்னார்கள். காவலர்கள் ஜென் துறவிகள் போல் அமைதியாக இருந்தனர். ”தில்லி போலீஸ் வாழ்க” என்று அந்த கும்பல் முழங்கியது.
வாயிலுக்கு வெளியே:
”நாங்கள் ஜே.என்.யூ விற்கு அருகில் வாழ்கிறோம். மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கு எதிரான வன்முறை ஏபிவிபி குண்டர்களால் நடத்தப்படுகிறது என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் பல்கலைக் கழகத்திற்கு செல்ல முடிவுசெய்தோம். ஜே.என்.யூ விற்கு போகும் சாலையை காவல்துறை தடுத்து வைத்திருந்தது. மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என்று காவலர்கள் சொன்னார்கள். காரை அங்கேயே அருகில் நிறுத்திவிட்டு ஜே.என்.யூ வை நோக்கி நடந்து சென்றோம். வழியில் இரு காவல் வாகனம் நின்று கொண்டிருந்தது. உள்ளே நடக்கும் வன்முறையைத் தடுக்காமல் 50 – 70 காவலர்களும் காவல் உடை அணியாத மக்களும் வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
காவல்துறை எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எங்களை ஏன் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “மாணவர்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருக்கிறது” என்ற பதில் வந்தது. நீங்கள் உள்ளே சென்று தடுக்க வேண்டாமா?, முகமூடி அணிந்தவர்கள் லத்தியால் மாணவர்களை அடிக்கும் மற்றும் பொருட்களை சேதப்படுத்தும் வீடியோக்கள் வெளியே வந்துள்ளன என்றொரு காவலரிடம் சொன்னேன். ஆனால் அவர் என் பேச்சை அலட்சியப்படுத்தினார்.
நான் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்ததால் அங்கிருந்த ஒருவர், “நாங்கள் ஏபிவிபியை ஆதரிக்கிறோமா?” என்று கேட்டார். எந்த குழுவையும் ஆதரிக்கவில்லை என்றேன் நான். ”அவர்களை உள்ளே குச்சியால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பெருமையுடன் அவர் பதில் சொன்னார். காவல்துறை முன்னிலையிலேயே, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது சரியான பாடம்தான் என்று அவர் சொன்னபோது எவரும் எதுவும் பேசவில்லை. அவரைப் போன்ற குண்டர்கள் பலரும் என்னையும் என் கணவரையும் சுற்றி வட்டமிட தொடங்கினர். ”அவள் அவர்களின் ஆள்”, ”அவள் வீடியோ எடுக்கிறாள்” போன்றவற்றை சொல்லத் தொடங்கினர்.
நாங்கள் மிகவும் பாதுகாப்பின்றி உணர்ந்தோம். எங்களை அவர்கள் ஏதாவது செய்தால் காவல்துறை தடுத்திருக்காது. எனவே, எங்கள் காரை நோக்கிச் செல்ல தொடங்கினோம். அப்போது 100-150 பேர் குச்சிகள், லத்திகள், இன்ன பிற ஆயுதங்களோடு வளாகத்தில் இருந்து வெளியேறுவதைக் கண்டோம். அவர்கள் காவல்துறையை நோக்கி நடந்து சென்று அங்கிருந்த கும்பலோடு இணைந்து கொண்டனர்.
எவரும் கைது செய்யப்படவில்லை. எவரும் தடுத்து வைக்கப்படவில்லை. முழுக்க அரசால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை இது. அச்சுறுத்தலுக்குரியது” என்று இதை நேரில் பார்த்த ஒரு பெண் பதிவு செய்துள்ளார். எனவே, காவல்துறையும் ஏபிவிபி ஆதரவு குண்டர்கள் வாயில் கதவை அடைத்துக் கொண்டு ஜே.என்.யூ வுக்குள் நடக்கும் வன்முறை வெறியாட்டத்திற்கு பாதுகாவலாக நின்றுள்ளனர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
வாயிலுக்கு வெளியே இருந்த தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. வாயிலுக்கு வெளியே கூடியிருந்த குண்டர்கள் ’ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ’தேச விரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்றும் முழங்கிக் கொண்டிருந்தனர். வெளியில் நின்றிருந்தவர்கள் கிரிக்கெட் மட்டை மற்றும் குச்சிகளை வைத்திருந்தனர்.
”காயம்பட்டவர்களுக்கு முதலுதவிச் செய்யும் பொருட்டு உள்ளே நுழைந்த ஆம்புலன்சையும் அதில் சென்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் தடுத்து அந்த கும்பல் மிரட்டியுள்ளது. ஆம்புலன்சின் சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன” என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அரிஜித் சிங் பட்டி கூறியுள்ளார்.
செய்தி அறிந்து மாணவர்களை சந்திக்க சென்ற முன்னாள் ஜே.என்.யூ. மாணவரும் ’சுயாட்சி இந்தியா’ வின் அனைத்திந்திய தலைவருமான யோகேந்திர யாதவையும் அந்த கும்பல் தாக்கியது, திரும்பிச் செல்லுமாறு ஓலமிட்டது, ’பயங்கரவாதி’ என்று வசை பாடியது. அவர்களைக் கட்டுப்படுத்தாமல் காவல்துறை யோகேந்திர யாதவை வெளியே இழுத்துக் கொண்டு சென்றது
யோகேந்திர யாதவ் இன் கூற்றுப்படி, அன்றைக்கு மட்டும் மூன்று முறை அவர் தாக்கப்பட்டுள்ளார். சுமார் 9:30 அளவில் அவர் ஜே.என்.யூ. ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரை ஒரு காவல் ஆய்வாளர் இழுத்துச் சென்றுள்ளார். சமற்கிருத துறையைச் சேர்ந்த பேராசிரியர் மிஸ்ரா உள்ளிட்ட ஏபிவிபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் . அவரைத் தள்ளி, சால்வையைப் பிடித்து இழுத்துள்ளனர். பின்னர் இரவு 10:50 மணிப் போல், மாநிலங்களவை எம்.பி. து.ராஜாவுடன் அவர் நின்று கொண்டிருந்த போதும் 20-30 குண்டர்கள் சேர்ந்து அவரைத் தாக்கியதுடன் சாலை நடுவே உள்ள சாலைப் பிரிப்பானில் தள்ளியுள்ளனர். கீழே தடுமாறி விழுந்தவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துள்ளனர். காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளது. பின்னர், 12:30 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் காயங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்ற போது, இணை ஆணையர் முன்னிலையிலேயே யோகேந்திர யாதவின் உதவியாளர் ராஜாவும் அவருடைய ஓட்டுநரும் தாக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் காயம்பட்டவர்கள் சிகிச்சைப் பெறக்கூடிய அறை வரை சென்று வம்பிழுக்கும் வேலையை குண்டர்கள் செய்ததை மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையும் பதிவு செய்துள்ளது.
ஒருகட்டத்தில், வாயிலுக்கு உள்ளே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெளியில் நிற்பவர்களைவிட அதிகமான நிலையில் வெளியில் நின்று கொண்டிருந்த குண்டர்கள் மெல்ல களைந்து சென்றுள்ளனர். காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 1 மணி அளவில் கதவு திறக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து சென்ற ஊடகங்கள், முன்னாள் மாணவர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் அப்போதுதான் உள்ளே செல்ல முடிந்ததுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இயங்கும் காவல்துறை, மாநகராட்சி, ஜே.என்.யூ. பல்கலைக் கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமாரின் கீழ் இயங்கும் நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர்கள், ஏபிவிபி மாணவர்கள் மற்றும் ஜே.என்.யூ வெளியில் இருந்து திரட்டப்பட்ட ஏபிவிபி மாணவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் என எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டுச்சதியாக இது நடந்துள்ளது.
பத்து நாட்கள் கடந்த பின்னும் பிரதமர் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அரசு பாசிச வடிவமெடுப்பதன் தெளிவாக அடையாளம் இது. அரசின் ஆதரவுடன் களத்தில் தனது குண்டர்களை வைத்து எதிரிகளை இறங்கி அடிக்கத் தொடங்கியுள்ளனர். பல்கலைக் கழக வளாகங்களைத் தாண்டி இதற்குப் பெரிய எதிர்ப்பு வரவில்லை. ஏதோ ஒருவகையில் சமூக ஏற்பும் இருந்துகொண்டுள்ளது.
எங்கோ, தொலை தூரத்தில் இருக்கிறது பாசிசம் என்று இனியும் எவரும் கருதிவிட முடியாது. பாரத் மாதா கீ ஜே என்று சொல்லியபடி எந்நேரத்திலும் பாசிச ஆற்றல்கள் கதவைத் தட்டக் கூடும். உறுதியான எதிர்ப்பைக் காட்டும் அணியை உருவாக்க வேண்டியது உடனடி தேவையாக இருக்கிறது.
-செந்தில், இளந்தமிழகம்
சுட்டிகள்:
https://thewire.in/rights/jnu-attack-delhi-police-amit-shah
https://thewire.in/rights/jnu-violence-protests-abvp-students-teachers
https://scroll.in/article/948946/inside-jnu-hostel-a-masked-mob-selectively-attacked-rooms-based-on-posters
https://scroll.in/article/948940/jnu-how-a-visually-impaired-sanskrit-scholar-was-attacked-by-a-mob
https://scroll.in/article/948882/it-was-complete-mayhem-jnu-students-and-teachers-describe-brutal-attacks-on-sunday-evening
https://www.huffingtonpost.in/entry/jnu-violence_in_5e127ea3c5b6b5a713bc5666?ncid=other_huffpostre_pqylmel2bk8&utm_campaign=related_articles
https://www.newslaundry.com/2020/01/06/they-wanted-to-teach-a-lesson-in-terror-an-account-of-sunday-night-at-jnu
https://www.thehindu.com/news/cities/Delhi/jnu-violence-heavy-security-at-campus-after-attack-live-updates/article30491226.ece
https://thewire.in/rights/jnu-bloody-sunday-a-university-in-crisis