இந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா ?
-காவி-கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் நடைமுறை உத்திகள் – 1
ஆர்.எஸ்.எஸ்’ன் இந்துத்துவா கருத்தியலை எதிர்கொள்ள காங்கிரஸின் புதிய கருத்தியல் ஆயுதமாக மதச்சார்பின்மைக்கு மாற்றாக பன்மைத்துவ இந்துயிச அடையாளம் சசி தருரால் முன்வைக்கபடுகிறது. ‘இந்துயிசம் என்பது பன்மை அடையாளம், இந்துத்துவா ஒற்றை, மற்றதை நிராகரிக்கும் அடையாளம்’ என்பதாக விவாதம் கட்டமைக்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே, காலனிய அரசால் நவீன குடியுரிமை ஆவணபடுத்தபடும்பொழுதே, ஒவ்வொரு குடிமகனின் மீதும் நவீன சாதியும் நவீன இந்து என்ற மத அடையாளமும் முத்திரையாக பொறிக்கப்படும் பொழுதே, இந்து என்ற ஒற்றை அடையாளத்தை மறுத்து சைவம், வைணவம் என பல சமய அரசியல் முன்வைப்பு எழத்தான் செய்திருக்கின்றன. அதேபோல அயோத்திதாசர் தொடங்கி இன்றும் கூட இந்து அடையாளத்தை மறுத்து தமிழன் அடையாளம் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கூடுதலாக சொல்வதென்றால் சைவம், முருகவழிபாடு, ஆசீவகம், சமணம் ஆகிய வெவ்வேறு சமய நம்பிக்கையை தமிழர் அடையாளத்தோடு இணைத்து இந்து மறுப்பு அடையாளம் கூட முன்வைக்கப்படுகிறது.
இந்து-இந்துத்துவா என்று ஆர்எஸ்எஸ்’சுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தால் அரசு ஆவண ரீதியாக தன்னை இந்துவாக நம்புகிற அல்லது இத்தனை ஆண்டுகளில் பட்டியலில் இருப்பதுபோல் தன்னை இந்துவாக ஏற்றுக் கொண்டுவிட்ட மக்களில் பெரும்பான்மையினர் இடம் இந்துத்துவ சக்திகளை தனிமைப் படுத்த முடியாது என்ற காரணத்தைக் கூறி சமீபகாலங்களில் அம்பேத்கர் சிந்தனையாளர்களும் பெரியார் இயக்கங்களும் ஆர்எஸ்எஸ் சொல்கின்ற இந்துத்துவாவை மறுத்து அதை பார்ப்பனியதுவா-ஆரியதுவா என்று கூறி பெரும்பான்மை மக்களிடம் இருந்து ஆரியர்களின்-பார்ப்பனர்களின் இந்துத்துவ அரசியலை தனிமை படுத்தலாம் என்று கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இங்கு நடந்து கொண்டிருப்பதும் ஆர்எஸ்எஸ் நடத்திக் கொண்டிருப்பதும் முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள குறிப்பான ஒவ்வொரு சாதிகளை, அதன் தலைமைகளை கையாண்டுதான் அரசியல் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கிறது. இரண்டாவது இந்துத்துவாவை சமயம் சார்ந்ததாக மட்டும் அணுகாமல் அதை ஒரு கருவியாக கொண்டு முஸ்லிம்களை, பாகிஸ்தான் முஸ்லிம் அரசை, விரோதிகளாக பாவித்து இந்து ராஷ்டிரா’வின் அரசியல் தேசியமாக, பண்பாட்டு தேசியமாக பாவித்து வருகிறது. மூன்றாவது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு பிறகு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடைய கருத்து வேறு சில செய்திகளையும் சொல்கிறது.
அவர் சொல்கிறார் ‘சட்டத் திருத்தத்திற்கு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட இந்த புண்ணிய பூர்வ பூமியில் அனைவரும் இந்துக்கள்தான் யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை. இடையில் மதம் மாறியவர்கள்தான். அவர்களின் சமய நம்பிக்கையும் வழிமுறையும் வேறாக இருக்கலாம் ஆனால் அனைவரும் இந்துக்கள்தான்’ என்று அபாயகரமான கருத்தை கூறியிருக்கிறார். புதிய வகைபட்ட வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வழிமொழிந்து இருக்கிறார். “நீங்கள் சமயத்தால் முஸ்லீமாக இருக்கலாம் ஆனால் இந்த பூர்வ பூமியில் பிறந்ததால் நீங்கள் இந்து இன்னும் விரிவாக சொன்னால் நீங்கள் சைவனாக இருக்கலாம் ஆசீவகனாக இருக்கலாம் முஸ்லீமாக இருக்கலாம் கிறிஸ்தவனாக இருக்கலாம் புத்தனாக இருக்கலாம் ஆனாலும் நீங்கள் இந்து ! குடியுரிமையாலும் தேசத்தாலும் இந்து” என்ற நவீன மதத்தில் கட்டாய இணைப்புக்கு உள்ளாவீர்கள், இதுதான் ஆர்எஸ்எஸ் என்ற நவீன இந்து மடத்தின், நவீன இந்து ராஷ்டிரா.
காலனி ஆட்சி தனது ஆளுகை நலனுக்காக தங்கள் சொந்த நாட்டில் அமுல்படுத்திய முன்னேறிய தேசக் கோட்பாட்டை கைவிட்டு, மொழிவழி தேச இனத்தவன் என்ற குடியுரிமை கொள்கையை கையாளாமல்,தேசிய இனத்தவன் என்ற இடத்தில் இந்தியன் என்பதையும், பல்வேறு சமய நம்பிக்கைகளின் இடத்தில் இந்து என்பதையும் பட்டியல் படுத்தியதால் விளைந்த பெரும்பான்மையை கையில் எடுத்துக்கொண்டு ஒரு அடி முன்னேறி இந்தியன் என தேசிய இனத்தை குறிக்கின்ற இடத்திலும் இந்து என்று மாற்றிவிட்டால் இந்து ராஷ்டிரம் சாத்தியம் என்பதைத்தான் மோகன் பகவத்தின் கருத்து ஆருடமாக கூறுகிறது. அதனால்தான் குடியுரிமையை மதத்தோடு தொடர்பு படுத்தி, அதனூடாக மதத்தை அரசோடு தொடர்புபடுத்தி, இந்து என்பது மதம் அல்ல ‘விரிகின்ற பேரண்டம் போல’ என்ற ஒரு பொருள் விளக்கத்தை கொடுத்து, மதச்சார்பின்மைக்கு மாற்றான புதிய சிந்தனை போல உலகிற்கு சொல்ல முயல்கிறார்கள்.
இந்த இடத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவாவுக்கு மாற்றாக சசிதரூரின் இந்துயிச பன்மைத்துவ கொள்கை பெரும்பான்மை மக்களிடமிருந்து ஆர்எஸ்எஸ்’ஐ தனிமைப்படுத்த உதவுமா என்றால் முடியாது என்பதைத்தான் ஆர்எஸ்எஸ் இன் நடைமுறை தந்திரங்கள் காட்டுகின்றன.
An interesting, though incomplete, comparative table doing the rounds. #HinduismVsHindutva- சசிதரூர், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்.
– பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி