மேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்
நேற்று திசம்பர் 2 அதிகாலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் கிராமத்தில் கடும்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்துப்போயினர். நான்கு வீடுகள் மீது இச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இறந்தவர்களில் 2 குழந்தைகள், 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவர். இரண்டு குடும்பத்தை சேர்ந்த அனைவருமே இறந்துவிட்டனர். இறந்துபோனவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 ஆண்டுகாலமாக அங்கு இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 230 வீடுகள் அங்கு உள்ளன.
சுமார் 80 அடி நீளத்திற்கு 20 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ள இச்சுவர் ஆறு மாதத்திற்கு முன்பு இந்தளவுக்கு உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. துணி வியாபாரி சிவசுப்பிரமணியன் என்பவரின் வீட்டைச் சுற்றி அவரால் இச்சுவர் உயர்த்தி எழுப்பப்பட்டுள்ளது. இச்சுவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்கள் கோ-ஆப்ரேட்டிவ் காலனிக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மேலும் இக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் இச்சுவர் தீண்டாமை நோக்கம் கொண்டது என்று ஏற்கெனவெ புகார் எழுப்பியுள்ளனர். இச்சுவர் மிகவும் பலவீனமாக இருக்கிறது, எந்நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்பதையும் நகராட்சியில் புகாராக தெரிவித்துள்ளனர். நகராட்சியின் அலட்சியத்திற்கும் இத்தகைய சுவர் எழுப்பப்பட்டதற்கும் பின்னால் பட்டியல் சாதியைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள் என்ற சமூகப் பொருளாதார யதார்த்தம் இருப்பதை மறுக்கவியலாது.
தமிழக அரசு சிவசுப்பிரமணியன் மீது குற்றப்பிரிவு 304 ( அஜாத்திரதையாக இருந்து விபத்து ஏற்படுத்துவது) கீழ் வழக்குப் பதிந்துள்ளது. மேலும் இறந்தவர்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சொந்த உறவுகளை இழந்து பெரும் அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாகியிருந்த இப்பகுதிவாழ் மக்கள் இச்சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். தமிழக அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல, தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியனைக் கைது செய்தால்தான் மருத்துவமனையில் இருக்கும் உடல்களைத் பெறுவோம் என்று கோரி மக்கள் போராடினர். இப்போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சியின் நிறுவனர் வெண்மணி, தோழர் கார்கி உள்ளிட்ட தலைவர்கள் பங்குபெற்றிருந்தனர். மக்கள் உடல்களை வாங்க மறுத்த நிலையில் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தலைவர்களைத் தாக்கி, மக்கள் மீது தடியடியும் நடத்தியது. இழப்புகளை சந்தித்து நீதி கோரியவர்கள் மீதே காவல்துறை தாக்குதல் நடத்தியதில் சாதிரீதியான வன்மம் மிக அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. தமிழக அரசு குற்றஞ்சாட்டப்பட்ட மேல்சாதியினரைப் பாதுகாத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக் கிள்ளிக் கீரையாக நினைத்து நடத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஒருபுறம் போராடியவர்களைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இறந்துபோனவர்களின் உடல்களை எரியூட்டியிருக்கிறது தமிழக அரசு. அரசு மருத்துவமனையில் பிணவறையில் இடமில்லை என்று சொல்லி மழையில் உடல்களை நனையவிட்டு அவமரியாதை செய்த தமிழக அரசு இறந்தோரின் உறவினர்களைக் கைது செய்துவிட்டு உடல்களை எரியூட்டி விலங்குத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு மனிதனின் உரிமை என்பது அவன் வாழ்வில் மட்டுமல்ல, அவன் சாவிலும் மதிக்கப்பட வேண்டும். ஒரு மனிதன் இறந்த பின்பும் அந்த உடல்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமையின் பகுதியாகும்.. உயிரற்ற உடலிலும் கூட மனித உரிமையைக் கடைபிடிக்கும் நாகரிகத்தை மனிதன் எட்டியுள்ளான். உண்மையில் மனிதன் இறப்பின் வழியாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்வதன் வழியாகவும் அவர்களது நினைவுகளைப் பாதுகாப்பதன் வழியாகவும் கண்ணீர் விட்டு அழுது மனிதத் தன்மைப் பெற்று நாகரிகம் அடைந்து வந்துள்ளான். ஆனால், சமுதாயத்தில் நிலவும் சாதியாதிக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரசு வெட்கித்தலைக் குனியும் வகையில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக இருக்கும் இம்மக்களை, கூலித் தொழிலாளர்களை வாழ்விலும் சாவிலும் இயன்றவரை இழிவுப்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களின் முதல்வராக நடந்துகொள்ள வேண்டுமே ஒழிய கொங்குநாட்டு மேல் சாதியினரின் பிரதிநிதியாக நடந்துக் கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வார்ப்பாட்டத்தின் வழியாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்டோர் எளிய மக்களென்று ஏளனம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலை முன்பு
நாள்: திசம்பர் 3, 2019 , மாலை 3:30
ஒருங்கிணைப்பு: திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
கோரிக்கைகள்:
தமிழக அரசே!
- இடிந்துவிழுந்த சுவரின் உரிமையாளரைப் பாதுகாக்காதே! உடனடியாக எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்!
- எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உயிரிழந்தோரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை, அரசுப் பணி, புதிய வீடுகள் ஆகியவற்றை வழங்கிடு!
- நீதிகோரி போராடிய தலைவர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்கி உள்ளிட்டோர் மீது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மற்றும் ஆணையிட்ட உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பணியிடை நீக்கம் செய்!
- சிறைப்படுத்தப்பட்டுள்ள 26 தோழர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்!
- தமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதற்கான ஆணையத்தை அமைத்திடு!
இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், SDPI, மே17, OPDR, எஸ்.டி.பி.ஐ., தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், சாதி ஒழிப்பு முன்னணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசலிச மையம் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி : செந்தில் 9941931499
திராவிடர் விடுதலைக் கழகம்: இரா. உமாபதி 7299230363