21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை

28 Nov 2019

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் எழுச்சியும்:

உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரம் பெற்று வருகின்றன.போராட்டங்களும் தீவிரமாகி வருகின்றன. முதலாளித்துவ அமைப்பின் இந்த பொருளாதார நெருக்கடிகள், அரசு மீது மக்களை அதிருப்தி கொள்ளச் செய்கிறது. அரசுக்கு எதிராக போராடுகிற அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு உணரச் செய்கிறது.

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள்  உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அழிக்கிறது.இந்த நெருக்கடிகளுக்கு அரசின் முதலாளிய வர்க்க சார்புக் கொள்கைகளும்,அதன் விளைவாலேயே நாம் சுரண்டப்பட்டு நிற்கதிக்கு  தள்ளப்பட்டுள்ளோம் என  உடனடியாக பெரும்பாண்மை மக்கள் உணர்ந்துகொள்வதில்லை.  ஆளும் அரசோ தனது பொய் பிரச்சாரங்கள் மூலமாக சிக்கலின் காரணத்தை வேறு வகைகளில் மடைமாற்றி மக்களை குழப்பச்செய்யும்.மத, இன ரீதியான பாகுபாடுகளை வளர்த்து மக்கள் திரள்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கி,முதலாளியம் எனும் மையப் பகையாளியை மக்களிடம் இருந்து காத்துப்பேணும்.

மொழி, இன, கலாச்சார தேசிய உணர்வை, தேசிய வெறியாக, வெறியூட்டல் தேசியவாதமாக உருமாற்றும். இவ்வாறாக முதலாம் உலகப் போர் முடிவுற்ற சில ஆண்டுகளில் 1930 களில் உருவான பெரும் பொருளாதார மந்த கட்டத்தில் ஜெர்மனியில் நாசிசமும் ,இத்தாலியில் பாசிசமும் வளர்ந்தது. பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளை கண்டுகொண்டு, ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முனைகிற  உழைக்கும் மக்களின் புரட்சிகர உணர்வை பாசிசம், முனைமழுங்கச் செய்கிறது. அதாவது முதலாளிகளின் பிரதிநிதியாக சமூகத்தை மேலாண்மை செய்துவருகிற அரசு அமைப்பானது, அதன் சொந்த நெருக்கடியால், முரண்பாட்டால்  பலவீனமடைகிற நிலையில் பாசிசமானது  முதலாளியத்தின் மீட்பராக முன்னுக்கு வருகிறது.முதலாளித்துவமோ பாசிச கூட்டுக்குள்ளாக ஒளிந்துகொள்கிறது. பாசிசத்தை ஆதரிக்கிறது. தன்னை பலப்படுதிக்கொள்கிற இடைவெளிக் கட்டமாக பாசிசத்தை பயன்படுத்திக் கொள்கிறது.

இதைத்தான் “முதலாளிய பிற்போக்கின் புத்தெழுச்சிக்கான ஆயத்தக் கட்டமாக” பாசிசத்தை வரையறை செய்கிறார் கிராம்சி.முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக புரட்சிகர உணர்வெழுச்சியுடன் போராட முனைகிற உழைக்கும் மக்களை நசுக்குகிற எதிர்ப் புரட்சிகர சக்திதான் பாசிசம்.அதனால்தான் பாசிசத்தை முதலாளித்துவம் வரவேற்கிறது. ஆளும் வர்க்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்களின் பக்கம் உழைக்கும் மக்கள் அணிதிரண்டிடக் கூடாது என்பதால் பாசிசத்தை  முதலாளித்துவம் போற்றுகிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான அதிகார மேலாண்மையை கட்டுப்பாட்டை முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில்,முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவில் தீர்க்க இயலாத சூழலில் பாசிசத்தை ஆதரித்து நிற்பதைத் தவிர முதலாளித்துவ சமூகத்திற்கு வேறு போக்கிடமில்லை. முதலாளித்துவ ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிக் கட்சிகளின் மீதான உழைக்கும் மக்களின் மயக்கங்கள் உடைபடுகிற நிலையில் ஒற்றை சர்வாதிகார தலைமையின் கீழான ஒற்றை பாசிச கட்சியிடன்   முதலாளித்துவம் அடைக்கலம் கோருகிறது. முதலாளிய வன்முறையின் சட்டத்துக்கு புறம்பான வடிவமாக  பாசிசம் செயலாற்றுகிறது,அரசை பலமிக்கதாக மாற்றுவதற்கு இந்த வன்முறையை பாசிசம் சட்டரீதியானதாக்குகிறது.அதற்கு பாராளுமன்ற ஜனநாயகத்தையும் பயன்படுத்திக் கொண்டுகி

2

மரபான பாசிசத்தின் பண்புகள்:

இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கட்சியும்,ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிசக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் சாசன வழியில் சட்டப்பூர்வமாக முதலாளித்துவ நாடளுமான்ற ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவை. பின்னர் முதலாளித்துவ ஜனநாயகத்தை மீறிச் சென்றவை. உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த கட்டத்தில்,ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன்,பெரும் முதலாளிகளின் நம்பிக்கை பெற்றவர்களாக,குட்டி முதலாளி வர்க்கத்தின் பெரும் ஆரவாரக் கூச்சலுடன்  வெறியூட்டல் பிற்போக்கு தேசிய வாத பிரச்சார உத்தியின் மூலமாக வலுவான ஒற்றைக் கட்சியாக வலுவான தேச அரசை கட்டுகிற முயற்சியில் ஈடுபட்டவர்கள்.சமூக ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்க வாதிகள் இவர்களின் பொதுவான எதிரிககளாக ஒழிக்கப்பட்டார்கள்.நாசிக்களின் பட்டியில் யூதர்கள்,ஓரினச் சேர்க்கையாளர்கள் என ஒழிக்கப்பட வேண்டிய பட்டியில் இன்னும் நீளும்.

3

21 ஆம் நூற்றாண்டின் பாசிசத்தின் மீள் வருகையும் அதன் குறித்த பண்புகளும்:

இரண்டாம் உலகப் போரின் முடிவில்  பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் சோவியத் ஒன்றிய கம்யூனிச அரசு ராணுவ ரீதியில் முடிவு கட்டியது.உலகப் போரில் ஈடுபட்ட ஏகாதிபத்திய சக்திகளின் பெருமளவில் இழப்புகளை எதிர்கொண்டு பலமிழந்து போயின.இந்த நெருக்கடிகள்  காரணமாக இங்கிலாந்து,பிரான்சு  ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்க பிடியில் இருந்து பல ஆசிய,ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் விடுதலைப் பெற்றன.காலனியாதிக்க நாடுகளின் சில நாடுகள் முதலாளித்துவ தலைமையிடம் சென்றன. சீனா ,வியத்னாம்  போன்ற நாடுகளில்  மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்தி கம்யூனிஸ்ட்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்ற வடிவத்தில் இந்தியா,இலங்கை,நைஜீரியா,தென் கொரியா  போன்ற நாடுகளில் முதலாளித்துவ சக்திகள் ஆட்சிக்கு வந்தன.இந்நாடுகள், அப்போதைய சர்வதேச சூழலில் நிலவிய புதிய நிலைகள் காரணமாக அரசின் வசம் அரசியல் பொருளாதார கட்டுப்பாடுகள் அதிகமாக குவிக்கப்பட்டன.சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்-விவசாயிகள் காங்கிரஸ் தலைமையிலான சோவியத் ஆட்சியில் புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டது.

மற்ற முதலாளித்தவ நாடுகளில், பொருளாதார அறிஞர் கீன்ஸ்சின்  கோட்ப்பாட்டின் வழி,நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை, கொள்கைகளை, மருத்துவம்,கல்வி போன்ற அடிப்படை ஜனநாயக அம்சங்களில்  அரசின் தலையீட்டை வற்புறுத்துகிற,அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக குவிக்கப்பட்ட “சேம நல அரசு “என்ற புதிய வடிவில் முதலாளித்துவ சக்திகள் பெரும் சமரசத்துடன் முதலாளித்துவ ஜனநாயக வடிவில், ஆட்சி செலுத்தினர். சிலர் இப்பாணியிலான ஆட்சியையே சோசலிசம் என்றே கூறினார்.பிரிட்டீஷ் காலநியாதிகத்தில் இருந்து  அரசியல் சுதந்திரம் பெற்ற இந்தியா,இந்த சேம நல அரசு பாணியிலான பொருளாதார கொள்கைகளை அடிப்படியாகக் கொண்ட   ஐந்தாண்டு திட்டங்களை வகுத்துக்கொண்டது.

இக்கட்டமும் (கீனீசியம்)எண்பதுகளின் இறுதியில் தகர்ந்தன.உலகமயம் தாராளமயம் பெயரில் ஏகாதிபத்திய மூலதன பரவல் மூன்றாம் நாடுகளில் உழைப்பையும் நிலத்தையும் சுரண்டி கொழுத்தது.இக்கட்டமும் 2000 ஆம் முதல் பத்தாண்டுகளின் இறுதியில் தகர்ந்தன.

நவதாராளவாத சந்தைப் பொருளாதாரத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான போராட்ட அலையானது கடந்த பத்து ஆண்டுகளின் உலகின் பல பகுதிகளில்  சிறியதும் பெரியதுமாக சுழன்றடித்துவருகிறது.குறிப்பாக (2008 ஆம் ஆண்டுகளில்)கிரீஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடிகள் வேலைவாய்ப்பின்மை,கல்வி மற்றும் சுகாதார அரங்குகளில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியது. இந்நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தது.தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி  கட்டத்தில் சிலி,கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் மாணவர்,தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

21 ஆம் நூற்றாண்டில் தாராளமய பொருளாதாரத்தின்  நெருக்கடி நிலையில்தான் ,பாசிசத்தின் மீள் வருகை  தற்போது நடைபெறுகிறது. முதலாளித்துவ தாராள ஜனநயாக கட்சிகள், அதீத தேசியவாத கட்சிகள் போன்ற கட்சிகள் சமகால நெருக்கடி நிலைமைகளை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருவதன் பொருட்டு, பழைய பாசிச பண்புகளை  உள்வாங்கி வளரத் தொடங்கியது. அல்லது பழைய தாராளமய சமூக ஜனனநாயக கட்சிகளில் வலது பிற்போக்குவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியது.அமெரிக்காவிலும்,மேற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும்  இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இப்போக்கு உலகளாவியதாக   தீவரம் பெற்று வளர்கிறது.

முதலாளித்துவ அமைப்பின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் சுமையை  மீண்டும் உழைக்கும் மக்களின் தோள் மீதே சுமத்தப்பட்டது.புலம் பெயர் அகதிகளும் இஸ்லாமியர்களுமே அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்றது. புலம் பெயர் மக்களால்  சொந்த நாட்டு மொழியும் கலாச்சாரமும் பொருளாதாரமும் தேசியப் பாதுகாப்பும் பாதிப்பிற்குள்ளாவதாக  சுத்தவாத தேசியத்தை முன்வைத்தது.

அமெரிக்காவிலும் இதைப் பார்க்கிறோம்.அமெரிக்க மக்களின் கழுத்தை இறுக்கியுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமா?புலம் பெயர்ந்துள்ள அகதிகள்தான்.இஸ்லாமியர்கள்தான் எனகூறி அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க ராணுவப் பெரிமித பேச்சு,தேசிய வாதத்தோடு இணைத்தவிதம் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் பொதுபுத்தியை ஊடுருவியது.நிக்சனுக்கு பின்பாக ஒரு கவர்ச்சிமிக்க அதிபராக டிரம்ப் அடையாளப் படுகிறார்.இந்த கவர்ச்சிவாதம்,அமைப்பின் சிக்கலுக்கு தன்னிடத்தில் தீர்வுள்ளது என பெரும்பான்மை மக்களை நம்பச்சொல்கிறது.ஏகபோகமாக்கப்பட்ட கார்பரேட் மீடியா இதை உசுப்பிவிடுகிற பெரும் சக்தியாக உள்ளது.

பிரான்சில் தேசிய முன்னணிக் கட்சி,டென்மார்க்கில் டென்மார்க் மக்கள் கட்சி,ஆஸ்த்திரியாவில் சுதந்திரக் கட்சி,இத்தாலியில் போர்சா இத்தாலியக் கட்சி  பிரேசிலின் சமூக ஜனநாயக கட்சி அமெரிக்காவின் குடியரசுக்  கட்சிஇந்தியாவில் பாஜக போன்ற கட்சிகள், இவ்வாறான நவீன பாசிச பண்புகளை உள்வாங்கிய கட்சிகளாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகிறது.இக்கட்சிகள் சில உதாரணமாக பாஜக மற்றும் பிரேசிலின் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவை நாடாளுமன்ற வடிவத்திலேயே தங்களது வலது பாசிச அரசியலை சட்டப்பூர்வமாக முன்னேடுக்கிறது.

பழைய நாசிசத்திற்கும் புதிய நாசிசத்திற்கும் பெரிய வேறுபாடொன்றுமில்லை.1930 களில் நாசிகளும் பாசிஸ்டுகளும் கையாண்ட உத்திகளையே நவீன வடிவில் 2016-17 இல் அமெரிக்க குடியரசுக் கட்சியும் பிரான்சு தேசிய முன்னணிக் கட்சிகளும் மேற்கொள்கின்றன.

  • சமூகத்தின் அனைத்தும் தழுவியுள்ள சிக்கலுக்கு பொது எதிரியை கட்டமைப்பது.உடனடியாக கவர்ச்சிவாத தீர்வை முன்வைப்பது.
  • அயல் இன,அயல் மொழி வெறுப்பின் பாற்பட்ட பிற்போக்கு தேசியவாதத்தை கட்டமைப்பது
  • சிக்கலுக்கு தீர்வாக தனது கவர்ச்சிவாத தனிநபர் ஆளுமையை நிறுவுவது
  • ஏகபோக ஊடக ஆதரவோடு,பொய் பித்தலாட்ட வலது அடிப்படைவாத கருத்தியலை,சமூகத்தின் பொது புத்தியில் ஏற்கச் செய்வது.
  • குட்டி முதலாளிகள்,நிதி மூலதன கும்பல்,பெரு முதலாளிய கும்பலில் ஒரு பிரிவினர்,லும்பன் அறிவுஜீவிகள்,நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர்,சேமைப்படை உழைக்கும் வர்க்கம் ஆகிய வர்க்க சக்திகளை தனக்கு ஆதரவாக திரட்டுவது.

பழைய பாசிசத்திற்கும் நவீன பாசிசத்திற்கும் இதில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக பழைய பாசிசம், ஒரு கட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்தை மீறிச் செல்லும். முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தை அகற்றி ஒற்றை கட்சியின் தலைமையிலான, ஒற்றை தலைவரின் கீழான சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டின் ஒட்டுமொத சமுதாய சக்திகளையும் கீழ்படுத்தும்.

இன்றுள்ள வலது கட்சிகள்,முதலாளித்துவ ஜனநாயக எல்லைகளில் இருந்து மீறிச் செல்கிற கட்டத்திற்கு இன்னும் வளர்ச்சியடைந்து செல்லவில்லை .நாடாளுமன்ற சட்டத் திருத்தங்கள் மூலமாக முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்திற்குள்ளாக தனது அதிகார மேலாண்மையை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

அதேநேரம் வலது சக்திகள், தனது மேலாதிக்கத்திற்கு  எதிரான போராட்டங்கள் தீவிரம் பெறும்போதோ  அல்லது தனது வலது பாசிச கருத்தியலை சிவில் சமூகத்திடம் மேலும் மூர்கமாக திணிப்பதன் பொருட்டோ அல்லது எதிர்க்கட்சிகளையும் நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை ஒழிப்பதன் பொருட்டோ எதிர்காலத்தில் முதலாளித்துவ நாடாளுமன்ற குடியரசு வடிவத்தை தகர்த்து முன்னேருவதற்கும்  தயங்கப் போவதில்லை!பாசிசம், நாடாளுமன்ற வடிவத்திற்குட்பட்டு, சட்டபூர்வமாக தனது நிகழ்ச்சி நிரலை நடத்த உள்ளதா அல்லது நாடாளுமன்றத்தை மீறி நடத்துமா என்பதை இப்போதே நாம் தீர்மானகரமாக உறுதியாக கூற இயலாது. அதேநேரம் நாடாளுமன்ற குடியரசு ஆட்சி முறையை எப்போது வேண்டுமாலும் மீறுவார்கள் என்கிற கடந்த கால வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் அதன் அபாயத்தை நாம் முன்னுணர  வேண்டும்.

1930 களில் பாசிஸ்ட்களுக்கும், நாசிக்களுக்கும் ஆதரவளித்த அந்நாடுகளின் நிதி மூலதன கும்பல், பெரு முதலாளித்துவ சக்திகளின் மூலதன விரிவாக்கத்திற்காக  இரண்டாம் உலகப் போர் மூண்டது. உலகம் மீண்டும் ஏகாதிபத்திய நாடுகளால் மறு பங்கீடு செய்யப்பட்டது. இன்று மீண்டும் உலகளாவிய அளவில்  பொருளாதார மந்த நிலைமைகள் 1930 களின் மறுபதிப்பாக நம்முன் தோன்றியுள்ளது.

அதன் மூலதன விரிவாக்கத்தேவையின் பொருட்டும் சந்தைக்காகாவும் கச்சாப் பொருட்களுக்காகவும் உலகை மீள் பங்கீடு செய்துகொள்வதற்கான போர் வாய்ப்புகள் இன்று குறைவாகவே உள்ளது. ஏனெனில் உலகமயமாக்கல் கட்டத்தில் நிதி மூலதனத்தின் பரவலாக்கம் சர்வதேசியத் தன்மை பெற்றுள்ளது. முதலாளித்துவ நாடுகளின் தேச எல்லைகளை கடந்து அனைத்து நாடுகளிலும் மூலதன ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றுவருகிறது. அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு  ஆயுத தயாரிப்புகளும் பெரும் நாசம் விளைவுக்கும் என்பதை ஏகாதிபத்திய நாடுகள் அறிந்தே உள்ளன. ஏகாதிபத்தியத்திய யுகத்தின்  இம்முரண்பாடுகளை ஆழமாக பகுத்தால், இந்த உண்மையானது ஐயத்திற்கு இடமற்ற வகையில் தெரியவரும்.

உள்நாட்டில் பெரு முதலாளிகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் அணிசேர்க்கையை போராட்டத்தை மழுங்கடிக்க போர் அபாய சங்கை ஊதியபடியே இருக்கும்.எதிரி நாட்டின் மீதான அச்சத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.அதேவேளையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நாடாளுமன்ற வடிவில் வேறோரு பண்பு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருகிறது.

முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும்,பாசிச சர்வாதிகாரத்திற்கும் இடைப்பட்ட “எதேச்சாதிகார ஜனநாயக” வடிவில் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. அரசியல்,பொருளாதாரம், கலை, காலாச்சாரம், ஊடகம், தொழிற்சங்கம் என அனைத்து தளங்களிலும் முதலாளியத்தின் எதேச்சியதிகார ஜனநாயகம் செல்வாக்கு செலுத்துகிறது.

 

-அருண் நெடுஞ்சழியன்

 

மோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW