மகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.

21 Oct 2019

கடந்த  ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம்  கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா  இடஒதுக்கீடு கோரிக்கை  ஆகியப் பிரச்சனைகளை  சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக,  சிவசேனா கூட்டணி அப்படியே தொடர்கிறது. காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணியும் தொடர்கிறது. 2018 தொடங்கிய பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தது. ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஒரு சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

 

அமித் ஷா தேர்தல் பரப்புரையில் பேசுகையில்  “இந்த தேர்தலே காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கு நீங்கள் அளிக்கப்போகும் பொது வாக்கெடுப்பு”. என்றார். மோடி பேசுகையில் தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் ’பாகிஸ்தானின் அடிவருடி’ என்றும் ’தேவேந்திர ஃபட்நவீஸ் அரசுக்கு வாக்களிப்பது என்பது இந்தியா ஜனநாயகத்தை அழகுபடுத்தும்’ என்றும் சொன்னார்.  பாசக –  சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் நரேந்திர மோடியின் பிம்பம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியது இதை சுற்றி தான் நகர்ந்தது.  குறிப்பாக, சிவசேனா கட்சியோ ’அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி’ என்று முழங்கி வருகிறது. மொத்தத்தில் வெளிப்படையானப் பெரும்பான்மை தேசியவாதம் மற்றும் மகாராஷ்டிரா தேர்தலை மகாராஷ்டிர மாநில நலனில் இருந்து அணுகாமல் போலி இந்திய தேசியவாதம் மூலம் அணுகியுள்ளது பாசக – சிவசேனா கூட்டணி.

 

மறுபுறம், இதுவரை பாசக பின்பற்றிய அணுகுமுறை என்பது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைப்பது ஆகும். இதன்மூலம் பாசக அமைப்புரீதியாக வலுப்பெற்றது மற்றும் தங்கள் வாக்கு சதவீதத்தையும் பெருக்கிக்கொண்டது. மராத்தா இடஒதுக்கீடு , தேசிய பெரும்பான்மைவாதம், வெளிப்படையான இந்துத்துவா கருத்துக்கள் மூலம் இதர மேலாதிக்க சாதிய சக்திகளையும் தங்கள் பக்கம் அணி சேர்த்துள்ளனர். காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் சமீபகாலமாக பாசகவில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பாசக தவிர மற்ற கட்சிகளுக்கு நிதி மூலதனப் பின்புலம், ஊடக வெளிச்சம் கொஞ்சமும் இல்லாத நிலைமை இருக்கிறது.

“ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வறட்சியற்ற மாநிலம், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் 50% பெண்களின் பங்கு, சாவர்க்கர்க்கு பாரதரத்னா விருது“  ஆகியவைதான் இந்த தேர்தலுக்கான பாசகவின் தேர்தல் வாக்குறுதிகள்

 

மஹாராஷ்டிர பொருளாதாரம் பிரதானமாக விவசாயம், தொழில் துறை, சிறு குறு தொழில் சார்ந்துதான் இருக்கிறது. பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழக்க நடவடிக்கை ஆகியவற்றின் விளைவாக சிறுகுறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன உற்பத்தி துறையில் வேலை நாட்கள் பாதியாக குறைந்துள்ளது. இதன் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லா சதவிகிதம்  4%  இல் இருந்து 5.7% ஆக உயர்ந்துள்ளது.

 

2014 தேர்தல் அறிக்கையில் பாசக மகாராஷ்டிரத்தில் விவசாய வளர்ச்சியை இரண்டு இலக்கு சதவீதமாக மாற்றுவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் நிலைமையோ 3.1% இருந்து 0.4 % ஆக சரிந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகில இந்தியா கிசான் சபா கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பழங்குடியினருடன் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டது. ஆனாலும் அவர்கள் கோரிக்கையான விவசாயக் கடன் தள்ளுபடி,  MSP  இன்றும் நிறைவேற்றப்படவில்லை. மேற்கு மகாராஷ்டிரத்தில் இயங்கிவரும் கரும்பு மற்றும் பருத்தி விவசாயம் வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரும்பு மற்றும் பருத்தி ஆலைகள் உற்பத்தி நாட்களை குறைத்துள்ளன, இது கண்டிப்பாக நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

 

கடந்த ஆட்சிக்காலத்தில் பாசக அரசு  கண்டுகொள்ளாமல் இருந்த விவசாயத் தற்கொலை, சிறுகுறு தொழில் முடக்கம், வறட்சி ஆகிய பிரச்சனைகளை முன்னெடுக்காமல் இருக்க மோடி- அமித்ஷா கும்பலின் தேசிய வெறிக் கூச்சல்கள் மக்கள் காதுகளில் ஓலமிட்டு கொண்டு இருக்கிறது. சாவர்க்கருக்கு  பாரத ரத்னா விருது வழங்க பாசக பரிந்துரைத்தது என்பது மிகப் பெரிய ஆச்சரியம் அல்ல, ஆனால் இந்த தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கவனத்தையும் நேரத்தையும் வீண் சண்டைகளில் செலவழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் இருந்தது.

 

ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு பொருளாதாரக் கொள்கை, ஒரு மதம் எனும் கொள்கைகளை பாசக வெளிப்படையாக செயல்படுத்த தொடங்கியுள்ளது. ஜனநாயகத்தின் மீதான இந்த அடிகள் சனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தை நோக்கி இழுத்து வந்திருக்க வேண்டும் ஆனால் ஆளும் வர்க்கமோ இந்த நெடுக்கடிகளின் ஊடாகவே தேசிய வெறியூட்டலின் மூலமாக மக்களைப் பாசிசம் நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரத் தேர்தல் பரப்புரையில் பாசக கையாண்ட உத்தி என்பது இந்திய தேசிய வெறியூட்டலின் வழியாக பொருளாதார மந்த நிலையில் சிக்குண்டிருக்கும் மக்களின் துயரத்தைவிட பாகிஸ்தான் எதிர்ப்பும், காஷ்மீர் 370 உம், பயங்கரவாத எதிர்ப்பும்தான் மேலானதென்று தேசிய வெறியூட்டலின் வழியாக மக்களைத் தன்பக்கம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறது. தேர்தல் களத்தில் நிற்கும் பாசகவை சந்திக்கும் எதிர்க்கட்சிகளோ இந்திய தேசியக் கொள்கையிலோ, இந்திய விரிவாதிக்கக் கொள்கையிலோ எவ்வித மாற்றும் தன்னகத்தே கொண்டிராததால் மதச்சார்பினமை என்பதை மட்டும் கிளிப் பிள்ளைப் போல் சொல்லிவருகின்றன. அது நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கைகொடுக்கவில்லை. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவும் மோடி-அமித் ஷா கும்பலி காவி-கார்ப்பரேட் ஆட்சிக்கு பச்சை விளக்கு காட்டிவிடும் என்றே மதிப்பிடுகின்றனர். தெருக்களில் பாசிச ஆற்றல்களை எதிர்கொள்வதற்கு மக்களை அணியமாக்குவதைத் தவிர வேறு குறுக்குவழிகள் எதுவும் இல்லை.

 

-சரவணன், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW