சனநாயகத்திற்கு குட்பை சொல்லு! சிறுகும்பலாட்சிக்கு சல்யூட் அடி! நிர்மலா சீதாராமனின் வெளிப்படையானப் பேச்சு! ஏன்? எப்படி?

18 Oct 2019

அக்டோபர் 12 அன்று வட அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம்ராஜன் ஆற்றிய உரையில் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுறித்து கவலை தெரிவித்திருந்தார். வெகுசனப் பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால், அது இந்தியாவை இருளுக்கும் நிலையற்றப் பாதைக்கும் இட்டுச்செல்கிறதென்று சாடினார். மேலும், நடுவண் அரசில் அதிகாரம் குவிக்கப்படுவதோடு அதற்குள்ளும் பிரதமர் அலுவலகத்திற்குள் அதிகாரம் குவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து செயல்படுத்தும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சிறியதல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று முன்தினம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”மிகவும் சனநாயகமான தலைமை ஏராளமான ஊழலுக்கு வழிவகுத்துவிட்டது, மிகவும் சனநாயகமான தலைமை” என்று நக்கலாக சொன்னார். ”அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பிரதமர் முதலாமவர், அவ்வளவே” என்றும் சொன்னார். ஆனால், அதை தொடர்ந்து இந்தியா போன்ற பன்மைத்துவம் கொண்ட ஒரு நாட்டில் மிகவும் சனநாயகமான தலைமை என்பது ஏராளமான தாராளவாதிகளின் ஒப்புதலைப் பெறுவதற்கு வழிவகுத்துவிடும். அது ஏற்படுத்தும் மோசமான நாற்றமெடுக்கும் ஊழலை எண்ணி நான் அஞ்சுகிறேன். நாங்கள் முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற அத்தகைய நிலைமையை இன்றுவரை சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம்’ என்ற பொருளில் பேசியுள்ளார். அதாவது மாநிலங்களை செல்லாக் காசாக்கி அதிகாரத்தை மையத்தில் குவிப்பதோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்குள் மேலும் மையப்படுத்துவதோ ஒரு பிரச்சனையே அல்ல, மாறாக சனநாயகமான தலைமை – சனநாயகம் என்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று சொல்கிறார். அதுவும் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இப்படி பேசியுள்ளார்.

”பிரதமர் தன் பேச்சைத் தட்டாத தலையாட்டிகளைத்தான் அமைச்சரவையில் வைத்துக்கொண்டிருக்கிறார்” என்று பொருளாதாரம் தொடர்பான ஒரு விமர்சனத்தின்போது சுப்பிரமணிய சுவாமியும் சொன்னார். எனவே, இப்போது நிர்மலாவின் வாய்மொழியாகவே சிறுகும்பல் சர்வாதிகாரப்  பூனை வெளிவந்துவிட்டது. மோடி – அமித் ஷா – அஜித் தோவல் உள்ளிட்ட ஒரு சிறுகும்பலின் கைக்குள் இந்த பரந்து விரிந்த நாட்டின் அதிகாரம் குவிந்து கொண்டிருக்கிறது.

இது ஏன் நடக்க வேண்டும்? வங்கிகள் இணைப்பின் வழியாக நிதி மூலதனத்தை ஒன்று திரட்டி வருகிறது அரசு. பொதுத்துறைகளை விற்றல், திவால் சட்டம் வழியாக ஏகபோகங்களை கோலோச்ச செய்தல், செல்லாக் காசு அறிவிப்பு என எல்லா சாலைகளும் ரோமாபுரிக்கு போவது போல் எல்லா சீர்திருத்தங்களும் நிதிமூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. நிதி மூலதனத்தைக் கொண்டுள்ள சிறுகும்பலுக்கு ஆட்சி ஆதிகாரத்திற்கு இருக்கும் சிறுகும்பல் தொண்டாற்றுகிறது. நிதி மூலதனம் திடப்படுத்தலும் ஒன்றுகுவித்தலுமே சிறுகும்பலாட்சிக்கு வழிவகுத்துள்ளது.

இதை யாரால் செய்ய முடியும்? மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சனநாயகம் என்றெல்லாம் கேட்டாலே முகத்தை சுளிப்பவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். எடுத்துக்காட்டாக, ஆர்.எஸ்.எஸ். முன்னோடி கோல்வால்கர் 1940 இல் நாக்பூரில் ஆயிரத்திற்கும் மேலான ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் முன்பு ஆற்றிய உரையில் , ”ஒரே கொடி, ஒரே தலைமை, ஒரே சித்தாந்தம் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த மாபெரும் நாட்டின் ஒவ்வொரு மூளையில் இந்துத்துவ நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார்.  இந்த முழக்கம் இட்லர் மற்றும் முசோலினியிடம் இருந்து பெறப்பட்டதாகும்!

 

1961 இல் கோல்வால்கர் ஆற்றுமொரு உரையில் இந்தியக் கூட்டாட்சி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும். இது பிரிவினை உணர்வை வளர்ப்பதுடன் ஒரே தேசம் என்பதே ஏற்க மறுத்து அந்த தேசத்தை சிதைக்கிரது. ஒற்றையாட்சியைக் கொண்டுவர வேண்டும்.” என்று பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைமைகளில் ஒருவரான சாவர்க்கர் ( காந்தி கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய இவர்  இன்னும் சில காலத்தில் பாரத ரத்னா விருதுப் பெறப்போகிறவர்!) தனது புகழ்ப்பெற்ற ’சிந்தனைக் தொகுப்பு’(bunch of thoughts) என்ற நூலில் ஒற்றையாட்சி அரசு வேண்டும் என்ற தலைப்பின்கீழ் ‘ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே நிர்வாகம்’ என்று சொல்வதோடு வட்டார, மொழி, பிரிவினையான பெருமை உணர்ச்சி ஏற்படுத்தக் கூடிய எந்த துண்டுதுண்டான அம்சங்களும் தடயம்கூட இன்றி நீக்கப்பட வேண்டும் என்ற பொருளில் எழுதுகிறார்.

அதிகாரக் குவிப்பையும் ஒற்றையாட்சியையும் தனது இலட்சியங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., நிதி மூலதன சக்திகளுக்கு இன்று தேவைப்படும் சிறுகும்பலாட்சியை நிறுவும் வேலையை செய்வதற்கானப் பொருத்தமான வரலாற்று சக்தியாக இருக்கிறது.

காவியும் கார்ப்பரேட்டும் இணைந்த கூட்டு தனது சர்வாதிகார ஆட்சியை மிக வெளிப்படையாகவே நியாயப்படுத்தி பேசத் தொடங்கிவிட்டது.

சரி, இதைப் பேசி என்ன ஆகப்போகிறதென்று கேட்கிறீர்களா? அவர்களின் இந்த வாதத்தை வெகுமக்களும் ஏற்றுக்கொண்டு விட்டால் பாசிச ஆற்றல்களின் கைகளில் இருக்கும் இந்த அரசு பாசிச வடிவெடுப்பதற்கு வெற்றிலைப் பாக்கு வைத்துவிட்டதாகப் பொருள். எனவே, அவர்கள் இந்த வாதத்தை முறியடித்தாக வேண்டும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கிணங்க பாசிசத்தின் வருகைக்கான மணியோசைப் போல் நிர்மலா சீதாரமன் சிறுகும்பலாட்சிக்கு சாமரம் வீசியுள்ளார்.

நெருங்கும் பாசிசத்தை தடுத்தாக வேண்டுமென்றால் மையத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை தடுத்தாகவே வேண்டும்! ஒற்றையாட்சிக்கு எதிராக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமுமென்று போராடியாக வேண்டும்!

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW