செப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும்! தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும்! ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை

15 Sep 2019

 

தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் எதிர்வரும் செப்டம்பர் 16 என்று நடக்கவிருக்கும் எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் என ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துகிறேன்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டன. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணியவர்கள் ஏமாந்து போயினர். சாட்சிகளற்ற போரை நடத்தி முடித்ததாக இருமாந்து இருந்த சிங்கள பெளத்த பேரினவாதிகள் குபுகுபுவென உலகை உலுக்கிய சாட்சிகளால் திக்குமுக்காடிப் போயினர். ஐ.நா.வில் பாராட்டு பத்திரம் வாசிக்கக் கண்டவர்கள் பொறுப்புக்கூறலுக்காகப் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆயினும் அரசு என்ற அடிப்படை வலிமையோடு தமது நீண்ட நெடிய இராஜதந்திர முதிர்ச்சியோடு உலக மன்றத்தில் நீதியைத் தள்ளிப் போடுவதன் மூலமாகவே நீதியின் மூச்சை நிறுத்திவிடலாம் என்று எண்ணி இருக்கின்றனர்.. கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகம், பேச்சளவில் அரசியல் தீர்வு வாக்குறுதிகள், நல்லாட்சி, நல்லரசாங்கம், நல்லிணக்கம் என வண்ண வண்ணப் பூச்சுகளெல்லாம் கரைந்தோடக் காண்கிறோம்.

பேரினவாதத்தின் வீரநாயகர்களான இராசபக்சே குடும்பம் பெரும்சக்தியாக எழுந்துவரக் கண்டது உலகம். பிராந்திய வல்லரசும் உலக வல்லரசுகளும் ஏற்படுத்திய ரணில்-சிறிசேனா கூட்டணி பேரினவாதச் சூட்டில் நொறுங்கி போனது. ஆட்சிக் கவழ்ப்பு, பிரதமர் மாற்றம் என அதிரடிகள் அரங்கேறி உலக சட்டங்கள் மட்டுமல்ல உள்ளூர் சட்டங்களையே மதிக்காதவர்கள் என்று தம்மைத் தாம் அம்பலப்படுத்திக் கொண்டது சிங்கள பெளத்த பேரினவாதம். ’ஐ.நா.விடம் பொறுப்புக்கூற வேண்டியதில்லை, எங்கள் வழியில் நாங்கள் செய்துக் கொள்வோம்’ என்று வெளிப்படையாக அறிவித்தார் அதிபர் சிறிசேனா.  ஐ.நா.வின் கண்களில் மண்ணைத் தூவி தமது படையினரை ஐ.நா. அமைதிக் காப்புப் பணிக்கு அனுப்பி வைத்துப் பாதுகாத்தோமென  தமது உத்தியைச் சொல்லி சிங்களர்களிடம் பெருமை அடித்துக் கொண்டார் பிரதமர் ரணில். எல்லாவற்றிற்கும் உச்சமாய் எந்த 58 ஆவது படைப் பிரிவால் கோரத் தாண்டவம் போல் கொலைப் படலம் நடத்தப்பட்டதோ உறவுகள் ஒப்படைக்கப்பட்டு காணாமலடிக்கப்பட்டனரோ அந்தப் படைப் பிரிவின் தலைவர் சவேந்திர சில்வா இலங்கை அரசப் படைகளின் தலைவராய் மணிமகுடம் சூட்டப்பட்டுள்ளார். தமிழினப் படுகொலைக்கு பரிசு தந்தாற் போல் சிறப்பு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இனவழிப்பு என்பது பரிசில் பெறத் தக்க, பதவி உயர்வுப் பெறத் தக்க செயல் என சிங்களத் தலைவர்களால் இனப்படுகொலைப் பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பிற நாடுகளோடு இணைந்து கொண்டுவந்த தீர்மானங்களைக் காலில் போட்டு மிதிப்பதற்கு ஒப்பான செயல் இது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆணையர் மிசேல் பச்செலட்டும் இதன் பொருட்டு கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான், யார் பெரிய சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் என்பதற்கான அதிபர் தேர்தலுக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறது இலங்கை தீவு.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தமிழர் மீண்டும் இரத்தம் சிந்தினர். தமிழ் முஸ்லிம்கள் மீது பெளத்தப் பேரினவாதம் நிகழ்த்தி வந்த ஒடுக்குமுறைக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது போல் பேரினவாதம் பேயாட்டம் போடத் தொடங்கியது. தமிழர் தம் குருதியைக் கொண்டு தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனகொலைக் குற்றத்தின் தடயங்களை அழிக்க முற்பட்டு வருகிறது சிங்கள அரசு. ’போர்க்குற்ற விசாரணை என்று கேட்டது தான் இராணுவத்தின் உளவியலைப் பாதித்துவிட்டது’ என ஈஸ்டர் குண்டு வெடிப்பு சத்தத்திற்கு இடையிலும் இனக்கொலைக்கு நீதி கோருவதைக்  குற்றமாக்கப் பார்த்தார் அதிபர்.

ஆயிரமாயிரமாய் போராளிகள் மாண்டனர். ஆயிரமாயிரமாய் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், முதியர்கள் என ஒருவரும் விட்டுவைக்கப்படவில்லை. ஆயிரமாயிரமாய் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். வடக்கும் கிழக்கும் நிலத் தொடர்சி அற்று பிரிக்கப்பட்டுவிட்டது. வடக்கில் ஒரு கிராமத்தில் ஒரு சிங்களவர் இருந்தால் கூட அது தமிழ்-சிங்கள கிராமமென முத்திரையிடப்படுகிறது. பெளத்த விகாரைகள் ஊரெங்கும் நிறுவப்படுகின்றன. வளர்த்தித் திட்டமென்ற பெயரால் நிலப்பறிப்பும் சிங்களக் குடியேற்றமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

பிராந்தியமெங்கும் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒற்றையாட்சி என ஆளும் வர்க்கத்தாரின் ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எழுந்து நின்றால் வாழ்வு, இல்லையேல் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போக வேண்டும் என்ற அச்சம் மேலோங்கியிருக்கின்றது. ஆனால், வேலியே பயிரை மேய்ந்தார் போல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாளாவிருக்கின்றனர். வாளாவிருந்தால்கூட பரவாயில்லை, எதிரியின் காலடியில் சரணம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எதிரிக்கு வால் பிடித்து வாழ்வு தேடிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பிராந்திய அரசுகளையும் வல்லரசுகளையும் துணைக் கொண்டு இன அழிப்பு வேலைகளை முடுக்கி முன்னேறும் சிங்களப் பெளத்த பேரினவாதத்திற்கு எதிராய் தமிழர் ஒன்றுபட்டாக வேண்டிய தருணமிது. ஒன்றுபட மறுத்தால் அது இறுதியான பொருளில் எதிரிக்கு சேவை செய்வதென அறிந்தும் அறியாமலும் ஒற்றுமைக்கு உலை வைத்துக் கொண்டும் உள்ளனர் சிலர். இத்தனைக்கும் இடையில்தான் நம்பிக்கையை விதைக்கப் போகும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடக்கவிருக்கின்றது.

சீனப் பேரரசுக்கு எதிராய் ஹாங்காங் மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தின் வெற்றி –  வரலாறு காட்டி நிற்கும் அண்மைய எடுத்துக்காட்டு. அலைகடல் என மக்கள் எழுந்துவிட்டால், பேரரசுகளும்கூட பின் வாங்கியே  தீர வேண்டும். அடங்க மறுத்த மக்கள் கூட்டம் நீதிக்காக நிமிர்ந்து விட்டால், சிறுதுளி கடலாவது போல் சிதறிக் கிடக்கும் மக்கள்  திரண்டுவிட்டால், ஆழிப் பேரலையாய் எழுந்துவிட்டால் ஆளும் அரசுகளை ஆணி வேரோடு பிடுங்கி எறியலாம். அந்த அரசுகளுக்கு முட்டுக்கொடுக்கும் துரோக சக்திகள் தீயில் விழுந்து தூசியாய் எரிந்து போவார்கள்.

எழுக தமிழ் பேரணியின் மக்கள் திரட்சியும் அது எழுப்பவிருக்கும் முழக்கமும் நடந்து செல்லும் போது கிளம்பும் புழுதியும் இந்தியப் பெருங்கடலை வட்டமிடும் வல்லரசுகளின் அவ்வல்லரசுகளுக்கிடையில் வாழ்வுநடத்தும் சிங்களப் பெளத்தப் பேரினவாதத்தின் தூக்கம் கெடுக்கட்டும்; உடனிருந்து கொண்டே ஊறு செய்வோருக்கு மக்களின் வேணவாக்கள் எவையென்று உணர்த்தட்டும்.

வாழ்வுக்கு சாவுக்குமான இடைவெளியாய், இருப்புக்கும் அழிவுக்குமான இடைவெளியாய் இன மீட்சிக்கும் இன அழிப்புக்குமான இடைவெளியாய் எழுக தமிழ் பேரணி அமையவிருக்கின்றது.

வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! அது சொல்லட்டும் உலகுக்கு தமிழர் தாகம் தமிழீழமென்று!

 

 

தோழமையுடன்,

கொளத்தூர் தா.செ.மணி

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

ஒருங்கிணைப்பாளர்,

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW