பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்!

02 Sep 2019

கடந்த ஆகஸ்ட் 30 அன்று, நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்து வங்கிகளை 4 வங்கிகளின் குடையின்கீழ் கொண்டுவருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலமாக  27-ஆக இருந்த நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையானது 12-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐந்து வங்கிகள் எஸ்.பி.ஐ வங்கிகளுடனும்,தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு தற்போதைய சுற்றில் கூடுதல் வங்கி இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்துள்ள பாஜக அரசின் வங்கி சீர்திருத்த அறிவிப்பென்பது இந்தியாவின் வங்கித் தொழிலை ஏகபோகமாக மாற்றுவதை இலக்காக கொண்டதாகும். சிறிய வங்கிகளை பெரிய வங்கிகள் விழுங்கியும், சிறிய வங்கிகளின் மூலதன இருப்பை பெரிய வங்கிகள் அபகரித்தும், வங்கிகள் பெரும் நிதி ஆதிக்க ஏகபோகமாக நிறுவனமாக உருவெடுக்கிறது.

பாஜக மோடி அரசு மேற்கொண்டு வருகிற வங்கி சீர்திருத்தம் என்பது வங்கிகளை பண பரிமாற்ற இடைத்தரக நிலையில் இருந்து நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தங்கு தடையின்றி கடன் வசதிகளை வழங்குகிற சக்திவாய்ந்த ஏகபோக நிறுவனமாக மாற்றுகிற நிகழ்வுப் போக்கின் வெளிப்பாடாகும்.

பல வங்கிககளில், சிதரண்டுள்ள சிறிய நடுத்தர வணிகர்களின் மூலதனம், சிறு தொழில் முனைவோர்களின் மூலதனம், அரசுப் பணியாளர்களின் மூலதனம் மற்றும், சாமானிய மக்களின் சேமிப்பு பண  மூலதனங்களை மொத்தமாக சில வங்கிகளில் ஒன்றுதிரட்டுவது, வங்கி இணைப்புகளின் முதல் இலக்காகும். இதன் மூலமாக பரவலாகியுள்ள பண மூலதனத்தை ஒன்றுதிரட்டுவதன் வழியே சமூகத்தின் சக்தி வாய்ந்த ஏகபோக நிறுவனமாக வங்கிகள் உருவெடுக்கிறது. இவ்வாறு ஒன்று திரட்டப்படுகிற மூலதனத்தை நாட்டின் சில ஏகபோக தொழில் அதிபர்களான அதானி மற்றும் அம்பானி போன்ற பெரு முதலாளிகள் கைகளில் மொத்தமாக வங்கிகள் ஒப்படைப்படைக்கின்றது.

 

சிறிய வங்கிகளின் மூலதன அபகரிப்பு

நாம் மேற்கூறியவாறு “வங்கி சீர்திருத்தம்”என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொள்கிற வங்கிகள் இணைப்பு நடவடிக்கையானது சிறிய வங்கிகளின் மூலதன இருப்பை மொத்தமாக அபகரிப்பதாகும்.

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பதன் மூலமாக அலகாபாத் வங்கியின் மொத்த வைப்பான 2,14,335 கோடி ரூபாய் இந்தியன் வங்கியின் கைக்குள் போகிறது.

தீனா வங்கி மற்றும் விஜயா வங்கியை பாங்க ஆஃப் பரோடாவுடன் இணைக்கிற அறிவிப்பானது, பாஜக அரசின் முந்தைய வங்கி இணைப்பு அறிவிப்பாகும். இந்த அறிவிப்பு மார்ச் -2019 முதலாக அமலக்கு வந்தது. இதன் மூலமாக தீனா வங்கியின் 103020 கோடி ரூபாய் இருப்பும் விஜயா வங்கியின் 157,325 கோடி ரூபாய் இருப்பும் பாங் ஆஃப் பரோடாவின் கைக்குள் சென்றது.

கார்பரேசன் வங்கியின் மூலதன இருப்பையும் ஆந்திர வங்கியின் மூலதன இருப்பையும் யூனியன் வங்கியுடன் ஒன்று குவித்து 8,20,304 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இதைப்போலவே சிண்டிகேட் வங்கியின் மொத்த வைப்பு கனரா வங்கியின் கைக்குள் சென்றது.

போலவே,யுனைடெட் பாங்க ஆஃப் இந்தியாவைவும்  ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்சையும் பஞ்சாப் நேஷனல்  வங்கியுடன் இணைத்தபின்னர்,பஞ்சாப்   வங்கியின் மொத்த இருப்பு 10,43,659 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய அறிவிப்புகளின் மூலமாக “இணைக்கப்பட்ட வங்கிகளின்” மொத்த மூலதன மதிப்பு  பல மடங்கு அதிகரித்துள்ளதை பார்க்கிறோம்.பெரிய வங்கிகள் சிறிய வங்கிகளை விழுங்கி,இணைக்கப்பட்ட வங்கிகளின் மொத்த கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் மூலதனத்தை ஒன்றுதிரட்டி சொந்தப்படுத்திகொள்கிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இணைப்பு அறிவிப்பு மற்றும் பாங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு ஆகிய முதல்  சுற்று வங்கி இணைப்பு அறிவிப்பு மற்றும் தற்போதைய இரண்டாம் சுற்று அறிவிப்பு ஆகிய இவ்விரு வங்கி இணைப்பு அறிவிப்புகளுக்கு பிறகு வங்கிகளின் மூலதன வைப்பு இருப்பு வருமாறு

  • பஞ்சாப் வங்கியின் –17.94 லட்சம் கோடி
  • கனரா வங்கியின்- 15.20  லட்சம் கோடி
  • யூனியன் பாங்க ஆப் இந்தியா- 14.59 லட்சம் கோடி
  • இந்தியன் வங்கி- 8.08 லட்சம் கோடி
  • ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா- 52.05 லட்சம் கோடி
  • பாங்க ஆப் இந்தியா-16.13 லட்சம் கோடி

இந்த அறிவிப்புகளின் மூலமாக பல்வேறு வங்கிகளில் சிதறுண்டிருந்த மூலதனம், ஆறு வங்கிகளில் 123.99  லட்சம் கொடியாக  மொத்தமாக குவிக்கப்பட்டுள்ளது.

 

 

ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்

நாம் மேற்கூறியவாறு, இந்த வங்கி இணைப்பு என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள பண மூலதனத்தை ஒரு சில வங்கிகளில் ஒன்றுகுவித்து முதலாளித்துவ நலனுக்கு சேவை செய்வதை இலக்காக கொண்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட இந்த மூலதன ஒன்றுகுவிப்பு, நாட்டின் பெரு முதலாளித்துவ ஏகபோக சக்திகளுக்கு கடன் வசதிகளை துரிதமாக கிடைக்கச் செய்கிறது.

கடன் வசதிகளை பெருக்க, வங்கி சீர்திருத்தம் அவசியம் என்ற நிதி அமைச்சரின் விளக்கத்தை இந்த பின்புலத்தில் இருந்து புரிந்துகொள்ளவேண்டும். போலவே, வங்கிகள் இணைப்பு, தொழிற்கடன்  மற்றும் விவசாயக் கடன் வழங்குவதற்கும் நிர்வாகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என ASSOCHAM தலைவர் கோயங்கா கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பொருளாதார மந்தப் போக்கு ஏற்படுகிற சூழலில், பெரு முதலாளிகளுக்கு கடன் வசதிகளை முனைப்பாக விரைவாக அளித்திட “வங்கி சீர்திருத்தம்”ஆளும் வர்க்கத்திற்கு முன் தேவையாகிறது!

இவ்வாறு ஏகபோகமாக உருவாக்கப்படுகிற வங்கித் தொழில்கள், பெரு முதலாளிகளின் திவாலாகாமல் தப்பித்து பெரும் கோடீஸ்வரர்களாக தொடர்வதற்கும், வருவாய்களை உத்தரவாதப் படுத்துவதற்கும் உறுதுணையாக நிற்கின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில்124.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2016-ஜனவரியில் 4.63  பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு டிசம்பரில்-2017 இல்  10.4  பில்லியன் டாலராக உயர்ந்தது.

போலவே ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் கடத்த 2017 ஆம் ஆண்டில் 77 விழுக்காடாக அதிகரித்ததும் குறிப்பிடத்தக்ககது. (https://www.timesnownews.com/business-economy/companies/article/gautam-adanis-wealth-grew-125-per-cent-last-year-surpasses-mukesh-ambani-damani/186662)

வங்கி சீர்திருத்தம் பற்றிய லிபரல் பொருளாதார  அறிவு ஜீவிகளின் விளக்கம் என்னவாக இருக்கிறது? நாட்டு மக்களின் சேமிப்பையும், பல்வேறு மக்களின் சிறு மூலதனத்தையும் சில ஏகபோக நிறுவனங்களை சூறையாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுதான் இது என்ற  ஏகபோத்தின் சூழ்ச்சிகளை “நிர்வாக மேலாண்மைக்கான” சீர்திருத்தம் என பூசி மெழுகுவார்கள்.

வங்கிகள் ஏகபோக வடிவமெடுக்கிற பொழுது, நாட்டின் ஏகபோக முதலாளிகள், வங்கி உயர் அதிகாரி வர்க்கம் மற்றும்  ஆளும் அரசு இயந்திரம் ஆகியவற்றிக்கு இடையே நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. வங்கிகளின் ஒன்றுகுவிப்பு பெரு முதலாளிகளின் கடன் வசதிகளை பெருக்குவதால், முதலாளித்துவ சக்திகளுக்கும் வங்கி அதிகாரி வர்க்கதிற்குமான உறவு நெருக்கமாகிறது.தொழில் உலகம் நிதி உலகத்தோடு ஒன்று கலக்கிறது.

ஏகபோக நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகப் போட்டி காரணமாகவோ அல்லது வேறு சில தகராறுகளாலோ வங்கி அதிகாரி வர்க்கத்திற்கும் தொழில்துறை முதலாளிகளுக்குமான  நிதி உலக ஊழல்கள் அவ்வப்போது வெளி உலகுக்கு தெரிய வருகிறது. வீடியோக்கான் குழுமத்திற்கு முறைகேடாக சுமார் 3,250 கோடி ரூபாய் கடன் வசதி செய்துகொடுத்த குற்றச்சாட்டுக்காக முன்னாள் ஐ.சி.ஐ.சி வங்கி இயக்குனர் கொச்சார் மீது இந்திய புலானாய்வு துறை வழக்குத் தொடுத்ததை உதரணமாக கூறலாம். 2018-19  நிதியாண்டில் மட்டுமே நூறு கோடி ரூபாய்க்கு மேலான வங்கி மோசடியால் மட்டுமே சுமார் 52,000 கோடி ருபாய் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் 90 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளின் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பெரிய ஏகபோக நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்குமான கடன் வசதி உறவை, முதலீட்டு வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கான  வளர்ச்சி என நியாயப்படுத்தப்படுகிறது. வங்கி பெரிய ஏகபோகமாக மாறுகிறபோது சில தேர்ந்தெடுத்த தொழில் அதிபர்களுடன் நெருக்கமாகிறது. ஆளும் கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு நன்கொடை அளிப்பது மற்றும் “தேச வளர்ச்சிக்கு” முதலீடு செய்வது என்ற வகையில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெரும் முதலாளிகள் ஆளும் அரசுக்கு/கட்சிக்கு  நெருக்கமாகின்றனர். அரசின் துணையோடு, வங்கிகளில் அளப்பரிய கடன் வசதிகளை பெறுகிற ஏகபோக நிறுவனங்கள் நாட்டில் வளங்களை தங்கு தடையின்றி சூறையாடுகின்றனர்.

பெரும் அரசு ஒப்பந்தங்கள், நில அபரிப்புகள், வரி ஏய்ப்புகள்  போன்ற பல்வேறு  சட்டத்திற்கு உட்பட்ட/உட்படாத சலுகைகளை பெற்ற முதலாளித்துவ வர்க்கம் மக்களின் பணத்தையும் வங்கியின் மூலமாக சூறையாடுகிறது.

கார்பரேட் நிறுவனங்களால் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வாராக்கடன் 8.65 லட்சம் கோடியிலிருந்து 7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வங்கி கடன் பெற்ற பெரு நிறுவனங்களின் பட்டியலை இன்று வரை அரசு வெளியிடவில்லை என்பதையும் பார்க்கிறோம்.

வாராக் கடனை வசூலிப்பதற்கான  நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, ஆளும் அரசோ கடனை தள்ளுபடி மட்டுமே செய்வது, வங்கிகள் திவால் ஆகாமல் தடுப்பதற்கு மறு மூலதனம் வழங்குவது, ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1.75 லட்சம் கோடி உபரியை அபகரிப்பது என ஏகபோக தொழில் அதிபர்களின் சூறையாடும் முதலாளித்துவத்தின் நேரடி சேவகனாக மாறியுள்ளது கண்கூடாக தெரிகிறது.

சாமானிய மக்கள் வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவது, கல்விக் கடன் பெறுவது, பெரும் சவாலாக இருக்கிற நிலையில், இந்தியப் பெரு முதலாளிகளுக்கு மட்டும் எந்த வரைமுறையும் கண்காணிப்பும் இன்றி கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. கடன் கொடுக்கப்பட்டபின்னர் அந்த கடன் சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா, வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதை யார் கண்காணிக்கிறார்கள்? விடை இல்லை!

ஒட்டுமொத்தமாக பார்த்தால் நேரடியாக அம்பானிக்கும், அதானிக்கும், ஜெபி குழுமத்திற்கும், எஸ்ஸார் குழுமத்திற்கும் வழங்கிய கடன்களை பெறுவதற்கு மாறாக மேற்கொண்டு பல லட்சம் கோடி கடன் வசதிகளை உத்தரவாதப் படுத்தும் நோக்கத்தோடு  நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பண மூலதனத்தையும் உறுஞ்சிக் குடிக்கிற அரசு-வங்கிகள்-ஏகபோக சூறையாடும் முதலாளிகளின் கூட்டுப் பகல் கொள்ளையே இந்த வங்கிகள்  இணைப்பு அறிவிப்பின் இலக்காகும்.

 

– அருண் நெடுஞ்சழியன்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW