திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணு உலை எதிர்ப்பு! தவறி விழுந்த சொல்லா? தவறுணர்ந்த சொல்லா?
ஆகஸ்ட் 28 அன்று தஞ்சையில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுவண் அரசால் தமிழகத்தின் இராசயனத் தாகுதல் – கலாச்சாரத் தாக்குதல் நடத்தப்படுவதாகப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக பின்வரும் வரிகளை பேசியதாக செய்தி ஊடகங்களிலும் ஆகஸ்ட் 29 தேதியிட்ட முரசொலியில் வந்துள்ளது.
”மீத்தேன், ஹைட்ரோகார்பன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, சேலம்-எட்டுவழிச் சாலை – இவை அனைத்தும் தமிழகத்தின் மீது மத்திய அரசு நடத்துகின்ற ஒரு இராசயனத் தாக்குதல். இதை யாரும் நீங்கள் மறந்துவிடக் கூடாது!” ( பக்கம் 4)
ஆபத்தான ஆறு கட்சிகளில் ஒன்றாக திமுக!
இராசயனத் தாக்குதல் என்று பட்டியலிட்டதில் கூடங்குளம் அணு உலையையும் சேர்த்து சொல்லியுள்ளார் மு.க. ஸ்டாலின். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொழுது அப்போராட்டத்தை திமுக ஆதரிக்கவில்லை. ’ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு’ என்பதில் ஆபத்தான ஆறு என்ற பட்டியலில் தான் திமுக இருந்தது. போராட்டத்தின் போக்கில் 2012 மார்ச் 23 க்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு போராடியவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் போட்டு நூற்றுக்கணக்கானோரை சிறையில் அடைத்தப் போதுதான் திமுக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தது. அதுவும் மக்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொல்லி அணு உலையை ஏற்கச் செய்ய வைக்காமல் அடக்குமுறையை ஏவுவது தவறு என்ற அளவில்தான் திமுக தனது நிலைப்பாட்டை வைத்திருந்தது.
அப்போது அணு உலையை நிறுவுவதற்கு ஆதரவாக சொல்லப்பட்ட மின்சாரத் தேவை-வளர்ச்சி என்ற காரணத்தையும் அணு உலை கட்டி முடித்தப் பிறகு கடைசி நேரத்தில் போராடினால் எப்படி? என்ற காரணத்தையும் திமுக மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், போராட்டத்தையும் மீறி அணு உலையைக் நிறுவி இராசயனத் தாக்குதல் நடத்திய நடுவண் அரசில் ஆட்சியில் இருந்தது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியாகும். இராசயனத் தாக்குதல் நடந்த பொழுது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சர் பதவிகளோடு கூடிக் குலாவிக் கொண்டிருந்தது திமுக.
முதுகெலும்புள்ள நாராயணசாமியா?
ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் புதுவையில் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி நிராகரித்த புதுவை முதல்வர் நாராயணசாமியை ’முதுகெலும்புள்ளவர்’ என்று அதே உரையில் பாராட்டியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அதே நாராயணசாமிதான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது அதை கொச்சைப் படுத்தியும் ’விரையில் அணு உலை இயக்கத் தொடங்குவோம் என்று அலட்சியமாக ஒவ்வொருமுறையும் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். காங்கிரசு தரப்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பதில் சொல்லும் விதமாக நியமிட்டவர் போல் திரு நாராயண சாமி நடந்து கொண்டார். ஆனால், அன்றைக்கு அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக முதுகெலும்போடு நடந்து கொள்வதற்கு திமுகவிலும் அதிமுகவிலும் ஆள் இல்லை என்பதே மறந்துவிட முடியாத உண்மையாகும்.
அணு உலைப் பூங்காவை எதிர்த்ததா திமுக:?
ஒருவழியாக கூடங்குளம் அணு உலை போராட்டத்தின் மீது அடக்குமுறையை ஏவி அணு உலையை இயக்கத் தொடங்கியதற்குப் பிறகு மேலும் 2 அணு உலைகளை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016 பிப்ரவரியில் நடந்தது. இதற்கான ஒப்புதலை இந்திய அணுசக்திக் கழகத்திடம் இருந்து இந்திய அணுமின் கார்ப்பரேசன் லிமிடெட் 2017 ஜூனில் பெற்றது. அதன் பின்னர் அணு உலை 5,6 நிறுவப்பட இருப்பது தொடர்பான செய்திகள் வந்தன. மொத்தத்தில் கூடங்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்க இருப்பதை தமிழகம் தெரிந்து கொள்ள நேர்ந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் சொன்னது போல் அணு உலைப் பூங்கா அமைத்து ஓர் இராசயனத் தாக்குதலை தமிழகத்தின் மீது நடத்தும் முயற்சி தான் இது. ஆனால், கூடங்குளம் முதல் இரண்டு அணு உலைகள் நிறுவப்பட்டது தாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 2 ஆட்சியில் நடந்தது,
3,4 அணு உலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி சுற்றுச்சூழல் அமைச்சகதிடம் இருந்து பெறப்பட்டது 2008 செப்டம்பரில் ஆகும். 5,6 அணு உலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிப் பெறப்பட்டது திசம்பர் 2009 இல் ஆகும்.(ஆதாரம்: https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Updated_EIA_for_KKNPP_3_to_6_August_2011.pdf பக்கம் 25). பிறகு 2011 வாக்கில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இவ்விரு காலகட்டங்களிலும் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தது திமுக என்பதோடு முக்கியமான அமைச்சர் பதவியையும் பெற்று இருந்தது. இவையெல்லாவற்றையும்விட கடந்து 2016 காலகட்டங்களில் கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்கும் செய்தி தமிழக மக்களுக்கு தெரிய வந்த போது திமுக அணு உலை பூங்கா அமைப்பதற்கு எதிராக வாய்த்திறக்கவில்லை.
கழுதை வேண்டும், கழுதை விட்டை வேண்டாமா?
கூடங்குளத்தில் அணுக் கழிவைப் புதைப்பதற்கு எதிராக 2019 இல் திமுக வாய்த் திறந்துவிட்டது. கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலை நிறுவுவதற்கு மக்கள் போராடிக் கொண்டிருந்த போது நடுவண் அரசில் பதவி சுகங்களோடு பவனி வந்த திமுக, அணு உலைப் பூங்கா அமைக்கும் அறிவிப்புகள் வந்த போது அறிவாலயத்தில் தூங்கிக் கொண்டிருந்த திமுக அணு உலைக்கு அப்பால் அணுக் கழிவைப் புதைக்கும் அறிவிப்பு வந்த போது அதை எதிர்த்துப் பேசியுள்ளது. அணு உலை வேண்டும், அணுக்கழிவு வேண்டாமென்பது கழுதை வேண்டும், கழுதை விட்டை வேண்டாம் என்பது போன்றதாகும்.
அணு உலைக்கு அப்பால் அணுக்கழிவுக் கிடங்கு ( Away from reactor ) ஒன்றை கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அமைக்க இருப்பதாக அணுசக்திக் கழகம் அறிவித்துள்ளது. அணு உலை இயங்கினால் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிஞ்சும். அது தற்போது அணு உலைக்கருகிலேயே நீரிக்குளத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் வெகுகாலத்திற்கு அங்கேயே வைத்துப் பாதுகாக்க முடியாது. எப்படியேனும் அணு உலைக்கு அப்பால் பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும். அதுவும் நீண்ட காலத்திற்கு அங்கேயே வைத்திருக்க முடியாது. ஆழ்நிலக் கிடங்கில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு நிரந்தரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆனால், அப்படியான ஆழ்நிலக் கிடங்கு அமைப்பதற்கான இடத்தைக் கூட இந்திய அரசு தெரிவு செய்யவில்லை. அப்படி ஓரு பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்த பிறகு Deep Geological Repository என்ற ஆழ்நிலக் கிடங்கை அமைப்பதற்கு 35 இல் இருந்து 40 ஆண்டுகள் ஆகும்.
அணு உலை வேண்டும் ஆனால், பயன்படுத்தப் பட்ட எரிபொருளைப் பாதுகாக்க அணு உலைக் கப்பால் கிடங்கு வேண்டாம் என்று சொல்வது முரண்பாடானது.
அணு ஆயுத தயாரிப்பில் திமுகவின் நிலைப்பாடென்ன?
இந்தப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்து மீண்டும் மின்னாக்கத்திற்கே இரண்டு கட்டங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்பது ஹோமி பாபாவின் கனவு. அப்படி மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் தாராபூரிலும் கல்பாக்கத்திலும் இருக்கிறது. ஆனால், மறுசுழற்சி செய்யப்ப்பட்ட எரிபொருளைக் கொண்டு இரண்டாம் கட்ட மின்னாக்கத்தைத் தொடங்குவதற்கு Fast Breed Reactors வேண்டும். கல்பாக்கத்தில் அத்தகைய அணு உலையை அமைப்பதற்கு கடந்த 2004 இல் இருந்து அணு சக்தி கழகம் முயன்று வருகிறது. ஆனால், இன்றுவரை அதில் வெற்றிப் பெறவில்லை அணு சக்தி கழகம். 2020 இல் கூட அதை சாத்தியப்படுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை. பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் கொண்டு மூன்றாம் கட்ட மின்னாக்கம் செய்வதெல்லாம் இந்திய அணு தொழில்நுட்ப அறிவியல் துறையைப் பொருத்தவரை ஒரு பகல் கனவு என்றே சொல்ல வேண்டும். அப்படியென்றால் இந்த பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் கொண்டு மின்னாக்கம் செய்ய முடியாது அல்லது செய்யப் போவதில்லை அணு குண்டு தயாரிப்பதற்கு இந்த பயன்படுத்தப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
மனிதனின் இலட்சக்கணக்கான ஆண்டுகால வாழ்வில் முதன்முதலில் மனிதன் பூமியைச் சுட்டது இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசிய போதுதான். அணு குண்டுகள் பேரழிவு ஆயுதமாகும். உலகைப் பலமுறை அழிப்பதற்கு தேவையான அணு குண்டுகளை மனிதன் தயாரித்து வைத்திருக்கிறான். அணு ஆயுத எதிர்ப்பு என்பது உலக அளவில் சனநாயக ஆற்றல்கள் முன்னெடுத்து வரும் இயக்கமாகும். இதில் திமுகவின் நிலைப்பாடென்ன?
தஞ்சையில் ஆற்றிய உரையில் இந்திய வல்லரசு ஆக வேண்டும். அதற்காக மக்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார். பொதுவாக நமது இளைஞர்களிடையே வல்லரசு என்றால் அணு ஆயுதம் வைத்திருப்பது, அணு குண்டுகள் தயாரிப்பது என்பதாகவே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. உலக அளவில் வல்லரசுக்கு தரப்படும் விளக்கமும் தனது நாட்டெல்லையைக் கடந்து பிற நாடுகளை உருட்டி மிரட்டி அடி பணிய வைப்பது, கொள்ளையடிப்பது என்பதாகவே இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அணு உலை எதிர்ப்பு, அணுக் கழிவு எதிர்ப்பு என்று பேசி அணு ஆயுதம் தயாரிப்பதையும் வைத்திருப்பதையும் ஆதரிப்பது முரண்பாடானது.
மேலும், முன்பு மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சொன்னது போல், ‘அணு குண்டுகளை முதலில் நாங்கள் பயன்படுத்த மாடோம்’ என்ற கொள்கை நிலையானதில்லை என்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் சொல்லியுள்ளார். பாகிஸ்தானை அச்சுறுத்துவதுதான் இதன் நோக்கமாகும். அணு குண்டுகள் யார் மீது வீசினாலும் அது பேரழிவை ஏற்படுத்தி மாந்த நாகரிகத்தை வெட்கித் தலை குனியச் செய்யும். இஸ்லாமாபாத்தில் போட்டாலும் சென்னையில் போட்டாலும் பாகிஸ்தான் என்றோ தமிழ்நாடென்றோ வேறுபாடுன்றி இலட்சக்கணக்கானோரைக் கொல்லும். எனவே, முதலில் அணு குண்டுகளைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இருந்து பாசக தலைமையிலான இந்திய அரசு நழுவிச் செல்வது ஏற்புடையதன்று. ஆனால், ”அப்படியேதும் கொள்கை மாற்றம் இருந்தால் அதை தெரிவிக்கவும். அதே நேரத்தில், எந்த மாற்றமாக இருந்தாலும் அதை ஆதரித்து நிற்போம்” என்று பக்திப் பரவசமாக அறிக்கை தந்துவிட்டது காங்கிரசு. இதில் திமுகவின் நிலைப்பாடு என்னவோ?
மு.க. ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறாரா?
அணு உலை வேண்டும், ஆனால் அணுக் கழிவு வேண்டாம், வல்லரசாக வேண்டும், ஆனால் அணு உலைக்கு அப்பால் பயன்படுத்தப் பட்ட எரிபொருளைப் பாதுகாத்து மறுசுழற்சி செய்யக் கூடாது என்று ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலைப்பாடாகப் படுகிறது. தேர்தலின் போது முக ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை அள்ளி விட்டார் என்று முதல்வர் எடப்பாடி குற்றஞ்சாட்டினார். அவர் சொன்னதுபோல், அணு உலையை எதிர்த்துப் பேசியது தவறி வாயில் இருந்து வந்ததாக இருந்துவிடக் கூடாது என்றே நாம் விரும்புகிறோம். கடந்த காலத்தில் அணு உலைத் தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, திமுக தன் தவறை உணர்ந்து சொல்லப்பட்ட சொற்களாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு. அப்படி ஒரு கொள்கை மாற்றம் திமுகவிடம் ஏற்பட்டிருப்பின் அதை வரவேற்க வேண்டியது அணு உலை எதிர்ப்பார்களின் கடமையாகும்.
கொள்கையில் மாற்றம் என்றால் செய்ய வேண்டியது என்ன?
அணு உலைப் பூங்கா அமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும். படிப்படியாக முதல் இரண்டு அணு உலைகளின் செயல்பாட்டைக் குறைத்து முற்றாக நிறுத்த வேண்டும். கல்பாக்கம் அணு உலையின் செயல்பாட்டையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆனால், கடமை அத்துடன் முடியப் போவதில்லை.
பயன்படுத்தப்பட்ட எரிபொருள் அல்லது அணுக் கழிவை என்ன செய்வது? என்று உலகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அணு உலை தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி அணுக் கழிவை உருவாக்கிய நாடுகள் அணுக் கழிவை பாதுகாப்பாக மாற்றுவதற்கான அறிவியல் ஆய்வைக் கூட்டாக முன்னெடுக்க முன்வர வேண்டும். அணுக் கழிவு அபாயத்தில் இருந்து உலகைக் காக்க அந்நாடுகள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து அறிவியல் ஆய்வை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கிப் பாடுபட வேண்டும்.
எனவே, தமிழகத்தின் மீது கூடங்குளம் அணு உலை வாயிலாக இராசயனத் தாக்குதல் நடத்தப்படுவதாக கருத்துச் சொல்லியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அணு உலை, அணு உலைப் பூங்கா, பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள், கல்பாக்கம் அணு உலை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் மறுசுழற்சி, அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுதப் பயன்பாடு ஆகியவைக் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தமது கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் ஒரு மாநிலக் கட்சி இந்த கொள்கைகளைப் பற்றியெல்லாம் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்றுச் சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் சொல்வார்கள். ஆனால், இது குறித்து எல்லாம் ஒரு சரியான கொள்கை ஒவ்வொரு கட்சிக்கும் இருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இந்தியாவில் உள்ள அண்டை நாடுகளுக்கும் மானுட அமைதிக்கும் வலு சேர்ப்பதாக அமைய்ம்.
-செந்தில், இளந்தமிழகம்