படைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு!

20 Aug 2019

“எங்களிடம் தேசபக்தி உண்டு, காங்கிரசிடம் ஒட்டு பக்தி மட்டுமே உண்டு” என்றவர்கள்தான் தற்போது நாட்டு பாதுகாப்புதுறையின் அடித்தளமாக உள்ள படைக்கல தொழிற்சாலைகளை(Ordinance factories) அம்பானியிடம் அதானியிடம் தாரை வார்க்கத் தயாராகிவிட்டார்கள். கடந்த காலத்தில் பி.எஸ.என்.எல் நிறுவனத்தை கார்பரேஷனாக மாற்றி திவாலாக்கியது போல 41 படைக்கல தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்ற முடிவுசெய்துள்ளது மத்திய பாஜக அரசு. முன்னதாக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவருகிற HAL, MDL போன்ற 9 பொதுத்துறை (கப்பல் மற்றும் விமான கட்டும் நிறுவனங்கள்) நிறுவனங்களை தனியார்மயப்படுத்த முனைந்துவருகிற  அரசு 41 படைக்கல தொழிற்சாலைகளையும் தனியார்மயப்படுத்துவன் முதல்கட்டமாக தற்போது  கார்பரேஷனாக்க முயற்சிக்கிறது.

“தேச பக்த“ பாஜக அரசின் இத்தேச விரோத கார்ப்பரேட் நல முடிவுக்கு எதிராக புனேவில் 7000  தொழிலாளர்கள் தொடர் முப்பது நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். தமிழகத்தில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, சென்னை ஆவடியில் பீரங்கி மற்றும் ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலைகளிலும்  தொடர் முப்பது நாள் வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.

படைக்கல தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவும் உற்பத்தி திறனை வளர்க்கவும்தான் கார்பரேஷனாக மாற்றுகிறோம், தனியார்மயப்படுத்தும் நோக்கம் இல்லை என கூறிய பாதுகாப்பு துறையின் பொய் விளக்கத்தை  தொழிலாளர் சங்கத் தலைவர்கள் நிரகாரித்தனர். அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தை  தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ராணுவப் போர் விமானங்களை தயாரிக்கிற ஹிந்துஸ்தான் (HAL)நிறுவனத்திடம் ரபேல் விமான தயாரிப்பதற்கு போட்ட ஒப்பந்தந்தை அம்பானியின் ரிலைன்ஸ் டிபென்ஸ்  நிறுவனத்திற்கு  கைமாற்றிய பாஜக, தற்போது நாட்டிலுள்ள படைக்கல தொழிற்சாலைகளை  மொத்தமாக அம்பானியிடமும் அதானியிடம் அடகு வைக்கப்போகிறது

படைக்கல தொழிற்சாலைகள்(Ordinance factories):

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நாடெங்கிலும் 41 படைக்கல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இந்திய ராணுவம்,துணை ராணுவம் மற்றும் மாநில போலிசுக்குத் தேவையான துப்பாக்கிகள், பீரங்கிகள்,வெடிபொருட்கள், பாராசூட் மற்றும் சிப்பாய் உடைகளை இத்தொழிற்சாலைகள் தயாரிக்கின்றன.இப்படைகல தொழிற்சாலைகளில் சுமார் 82,000 தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்.

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு:

2014 ஆம் ஆண்டில்  பாஜக பதவியேற்ற நாள் முதலாக “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்புத் துறைகளில்(ஆராய்ச்சி உட்பட) 100% அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கிற கார்பரேட்ட நலன்  சார் கொள்கையில் தீவிரம் காட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாட்டிலுள்ள படைக்கல தொழிற்சாலைகளில்  இனி மத்திய அரசு முதலீடு செய்யப்போவதில்லை எனவும்இந்நிறுவனங்கள் யாவுமே மத்திய அரசின் துணையில்லாமல் சுயமாக மூலதனத்தை ஈட்டி இயங்கிக்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கிறது.

முன்னதாக அரசுத்துறை பிஎஸ்என்எல்  நிறுவனத்தை கார்ப்ரேஷனாக மாற்றிய மத்திய அரசு, தனியார்களுக்கு வழங்கிய 4G அலைகற்றையைக்கூட வழங்க மறுத்தும்,வங்கிக் கடன்களை மறுத்தும் அந்நிறுவனத்தை திட்டமிட்டே திவாலாக்கியது.ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் ஊழியர்களின் எதிர்காலத்தை அம்பானியின் ஜியோவிற்காக  சூறையாடியது.

தற்போது அதே அம்பானிக்காக சுமார் 15 லட்சம் கோடி மதிப்புள்ள நாட்டின் பாதுகாப்புத் துறையையும் சூறையாடக் கிளம்பிவிட்டார்கள்.

கார்பரேஷனாக மாற்றுவதில் உள்ள ஆபத்துகள்

  • சேவை நோக்கில் மட்டுமே இயங்கி வந்த படைக்கல தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்றி அரசு முதலீடு குறைத்தால்,தொழிற்சாலைகள் நலிவடையும்.
  • பின்னர் நலிவடைந்த தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கப்படும்.
  • இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாக வேலையிழக்க நேரிடும்.தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
  • நாட்டின் பாதுகாப்பு நலனை கவனத்தில் கொண்டு செயல்படுகிற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வணிக நலனை பிரதானமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் பாரதூரமான வேறுபாடு உண்டு.

பாகாப்புத்துறை தனியார்மயமானால்,ஆயுத விற்பனைக்கு உள்நாட்டுக் கலவரங்களையும் போர் வெறியையும் தனியார் முதலாளிகள் ஊக்குவிப்பார்கள்.நாட்டு நலன் கேள்விக்குறியாகிவிடும்

நாட்டின் பாதுகாப்பு நாடகம் போடும் மோடி அரசே, பாதுகாப்பு துறையை தனியார்மயம்ஆக்காதே!

பெருமுதலாளிகளின் லாபம் கொழிக்க நாட்டின் பாதுகாப்பை தாரை வார்க்காத!

82,000 தொழிலாளர்களின் வாழ்வாதார போராட்டம்! இது நாட்டைக் காக்கும் போராட்டம்!

 

-அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம் 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW