காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு! எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா?
அகவை எழுபதைக் கடந்த முதியவர் ஐயா விசுவநாதன் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கூட்டுச் சதி செய்ததாகவும், சாட்சிகளைக் கலைத்ததாகவும் குற்றவாளியைப் பாதுகாத்ததாகும் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பிறந்த கரூர் மண்ணில் தனது 74 வது அகவையில் அங்குள்ள சப் ஜெயிலில் தாம் அடைக்கப்படுவோம் என்று என்றேனும் ஒருநாள் அவர் கற்பனை செய்திருப்பாரா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அப்படி ஏதேனும் ஒன்று நடக்கவே நடக்காது என்று அவர் உளப்பூர்வமாக நம்பியிருக்க வாய்ப்பில்லை. மணற் கொள்ளையர்களும் கல்வி வியாபாரிகளும் கொலை வெறி கொண்ட மதவெறியர்களும் கார்ப்பரேட் கொள்ளையர்களும் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் விசுவநாதன்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியர்கள்தான், ஏன் கொல்லக் கூட தகுதியானவ. அதுவும் இந்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரம் இனாம்புலியூரைச் சேர்ந்த வீரமலை அவர் மகன் நல்லதம்பி ஏரியைப் பாதுகாக்க முயன்றக் குற்றத்திற்காக வெட்டிக் கொல்லப்பட்டதைப் பார்த்தோம். எனவே, விசுவநாதன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவருக்கு கொடுக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனைதான்.
விசுவநாதன் கூட்டுச் சதி செய்தாரா? குற்றவாளியைப் பாதுகாத்தாரா? ஆம். அவர் கூட்டுச் சதி செய்தார். குற்றவாளியைப் பாதுகாத்தார். எல்லையற்றக் கருணையோடு பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் இருமருங்கும் ஆற்று மணலை கொள்ளையடித்து கொழுத்தவர்களுக்கு எதிராக கூட்டுச் சதி செய்தார். முகிலனும் அவரும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக கூட்டுச் சதி செய்தார்கள். அந்த கூட்டுச் சதியில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் அந்த பகுதிவாழ் விவசாயிகளுக்கும் இன்று முகிலனின் மீது புகார் கொடுத்துள்ள இராஜேஸ்வரிக்கும் பங்கு உண்டு. முகிலன் காணாமற்போன நாளில் இருந்து அவர் திரும்பி வரும்வரை நெஞ்சமெல்லாம் துயரத்தை தாங்கியபடி கரூருக்கும் சென்னைக்கும் ஓடி திரிந்து, தலைவர்கள் பலரை சந்தித்து இயக்கங்களோடு கலந்து பேசி ஆர்ப்பாட்டங்களை நடத்த முயன்றார். இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிய முகிலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார். இந்தக் குற்றங்களைச் செய்ததற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டுமா? என்றால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மணற் கொள்ளையடிபவர்களும் தாது மணலைக் கொள்ளையடித்தவர்களும் சாராய ஆலை நடத்துபவர்களும் கல்வி வியாபாரம் செய்பவர்களும்தான் அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு முதல்வர் துணை முதல்வராய் இருப்பவர்கள், இனி அந்தப் பதவிகளைப் பெறப் போகிறவர்கள். இங்கே கொள்ளையடிப்பதுதான் தர்மம். அந்த கொள்ளையைத் தட்டிக் கேட்பவர்கள், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்பவர்கள் குற்றவாளிகள். அந்தக் குற்றத்தை செய்பவர்கள் தலை நரைத்தவர்களென்றாலும் முதியவர்கள் என்றாலும் அகவை 70 ஐ கடந்தவர்கள் என்றாலும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்தான்.
காணாமற் போன முகிலன் உயிருடன் திரும்பி வந்ததும் எல்லோரும் பெருமூச்சு விட்டனர். ஆனால், சத்தியம் தவறாத நமது காவல்துறை முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சியிலே நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் ஆளுங் கட்சி பிரமுகர்களே தொடர்பில் இருந்த போது உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்காமல் குற்றவாளிகளைப் பாதுகாத்த காவல் துறைதான் முகிலனுக்கு எப்படியேனும் தண்டனைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது. முகிலனுக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு விசுவநாதனை மிரட்டுகிறது, உருட்டுகிறது, தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் வற்புறுத்தலுக்கு இணங்கவில்லை என்றவுடன் பாலியல் குற்ற வழக்கில் முகிலனோடு கூட்டுச் சதி செய்ததாக விசுவநாதனை சிறையில் அடைத்திருக்கிறது. எத்தனை வக்கிரம், எவ்வளவு வன்மம்!
எலும்புத் துண்டுக்கு அழையும் நாய்களைப் போல் அதிகாரம் இருக்கும் இடத்தில் காலைத் தழுவி காலந்தள்ளும் கழிசடைகள் தான் இன்றைய ஆட்சியாளர்கள். ஜெயலலிதா இருக்கும் வரை அவர் காலில் விழுந்து கிடந்தனர். அவர் மறைந்த பின் குறுகிய காலம் சசிகலாவின் காலைக் கழுவினர். இப்போது மோடியின் காலில் விழுந்து கிடக்கின்றனர். முதுகு தண்டு ரப்பரால் ஆனவர்கள். அது எப்போதும் அதிகாரத்தை நோக்கி வளைந்தே பழகியது. தேர்தல் வரும்போதுமட்டும் மக்களிடம் வளைந்து வாக்குகளை சேகரிக்கும். இத்தகைய மாண்புமிகுக்களின் கையில் தான் ஆட்சி இருக்கிறது. தன்மானத்தை அடகுவைக்க தயங்காத இவர்களா தமிழ்நாட்டை அடகுவைப்பதற்கு தயங்கப் போகிறார்கள்? தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் தான் முதல்வர். மக்கள் தேர்தலில் வாக்கு அளித்து முடிந்தவுடன் எட்டுவழிச் சாலையை கொண்டுவந்தே தீருவேன் என்று சொன்னவர் அவர். ஒருபுறம் எரிவாயு எடுத்துச் செல்வதற்கு கெயில் குழாய்ப் பதிக்கப்படும் போதே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதியில்லை என்று சட்டசபையில் சத்தியம் செய்தவர். நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை என்று சொல்லிக் கொண்டே நடுவண் அரசோடு சேர்ந்து கூட்டுச் சதி செய்து நீட் தேர்வை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர். பொய்களையும் பித்தலாட்டங்களையும் அன்றாட செயலுத்திகளாக கொண்டவர். ஆயிரங் கோடிக்கு சொந்தக்காரனுக்கும்கூட ஆறடி மண் தான் என்ற சின்னஞ்சிறு மெய்யியலைக் கூட அறியாதவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள். இவர்களின் ஆட்சியில் விசுவநாதன்கள் சிறையில் அடைக்கப்படாமல் இருந்தால் தான் வியக்க வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்? மறைந்துவிட்டாலும் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்றவர் தானே. அவர் வரலாற்றில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். மறைந்துவிட்டாலும் தமிழினம் உள்ளவரை முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்கத் தவறிய குற்றவாளியாக வரலாற்றின் பக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கிறார் கலைஞர். வரலாற்றைப் பொருத்தவரை இந்தியாவின் அரசியலை அடியோடு புரட்டிப் போட்டு பாசிசத்தைக் கொண்டு வரும் மோடி-அமித் ஷா கூட்டணியிடம் முழுச் சரணடைந்த எட்டப்பன்கள் தான் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்.. எனவே, வரலாறு தமிழக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இருந்து எழுதப்பட போவதில்லை. அது மக்களின் மனங்களில் இருந்துதான் எழுதப்படும். ஒரு மனிதன் தன் வாழ்வின் மூலம் மக்களின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை செலுத்தினான் என்பதில் இருந்துதான் அது எழுதப்படும். பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் மணற்கொள்ளையர்களாகவும் மக்கள் சொத்தில் கமிசன் அடித்தவர்களாகவும் தான் அறியப்படுவார்கள். விசுவநாதன்கள் காவிரி ஆற்றைப் பாதுகாப்பதற்காக அரும்பாடுபட்டு அடக்குமுறைக்கு ஆளானவர்கள் என்றுதான் அறியப்படுவார்கள்.
விசுவநாதன் விலை கொடுப்பதற்கு அஞ்சியதில்லை. ஒவ்வொன்றாய் தன் வாழ்க்கையில் இழந்துவந்த போதும் அவர் கால்கள் ஓடுவதில் இருந்து நின்றதே கிடையாது. அவர் இழப்புகளைப் பட்டியிலிட்டு எங்கும் பெருமை தேடிக் கொண்டவரில்லை. எனவே, அவர் சிறையில் இருக்கும் தருணத்தில் அவர் மனம் அறிந்தவனாகையால் அதை நான் பட்டியலிடுவதை தவிர்க்கிறேன். அவர் கால்கள் ஈழத் தமிழர்களுக்காக நடையாய் நடந்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அவர் சந்திக்காத தலைவர்கள் எவரும் தமிழ்நாட்டில் இல்லை. ஆம் அவர் சந்திக்காத தலைவர் யாரும் இல்லை!
ஈழத் தமிழர்களுக்கு ஓடிய கால்கள் ஓய்வைத் தேடிதான் சொந்த ஊருக்குப் போகின்றன என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், சிகாகோ விசுவநாதனாக சென்னையில் இருந்து புறப்பட்டு கரூருக்குப் போனவர் புகழூர் விசுவநாதனாக புது அவதாரம் எடுத்தார். காவிரி ஆற்றின் அவலநிலை கண்டவர் ஓர் இளைஞனைப் போல் களப்பணியைத் தொடங்கினார். கிடுகிடுவென சில ஆண்டுகளில் ஆற்றுமணல் பிரச்சனையில் முக்கியமான அமைப்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை அறிய வைத்தார். அவரது இழப்புகள் அவரை அச்சுறுத்தவில்லை. வாழ்க்கையின் பெரும்பேறு என அவர் தனது அடிமனத்தில் வளர்த்துக் கொண்ட மெய்யியல் அவரை இயக்கிக் கொண்டே இருந்தது. அவர் வேலைகளை வாரி எடுத்து தோளில் போட்டுக் கொண்டார். அடக்குமுறைகள் தன்னை நோக்கி வருவதற்கான கதவுகளைத் திறந்துவைத்துக் கொண்டார். மணற் கொள்ளையர்கள் ஒருபுறம், அவர்களைக் காவல் காக்கும் காவல்துறை இன்னொருபுறம். ஆனாலும் பிடிவாதம் பிடித்த அந்தக் கிழவன் அஞ்சிவிட வில்லை.
முகிலன் காணாமற் போன நிலையில் முகிலனை மீட்கும் இயக்கத்திற்காக ஓடினார். எந்தவொரு இயக்கத்தையும் சேர்ந்திராத முகிலன் காணாமற் போன நிலையில், ஒருவேளை விசுவநாதன் இல்லையென்றால் ஓர் அரசியல் அனாதையாகக் கூட ஆகியிருக்கக் கூடும். முகிலனின் மனைவியை ஆற்றுப்படுத்தினார். முகிலனுக்காக எல்லோரையும் அணுகினார். இப்போதும் முகிலனுடன் கொண்ட நட்புக்காக அவர் சிறைபுகவும் துணிந்து நின்றார் .இப்போது சிறைக்கும் சென்றுவிட்டார். மக்களின் நலனுக்காக வாழ்வதில் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்று உணர்ந்தவர்கள் எந்த தடைகளையும் இழப்புகளையும் பொருட்படுத்துவதில்லை என்பதற்கு ஓர் வாழும் சாட்சியாக விசுவநாதன் விளங்குகிறார். அவர் செய்த பணிகளுக்காக அவர் அடையாளம் தேடியது கிடையாது.. ஊடக வெளிச்சத்தில் மிதந்தது கிடையாது. ஆனால், ஏதோ ஓர் எரிபொருள் அவரை இடைவிடாது இயக்கிக் கொண்டே இருக்கிறது. இதுவரை விசுவநாதனின் ஓட்டத்தை எதுவும் சிறைப்படுத்தியதில்லை!
முகிலன் மீதான இந்த வழக்கைப் பயன்படுத்தி ஒரு தொடர் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது அரசு என்பது புகழூர் விசுவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தெரிய வருகிறது. நேற்றுவரை பிரச்சனை முகிலனுக்கும் இராஜேஸ்வரிக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனை என்று நாம் கருதியிருக்கலாம். ஆனால், இவ்விசயத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளைத் தூரத்தில் இருந்து இனியும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க முடியாது.
எந்த ஒரு நாகரிக சமூகமும் குழந்தைகளையும் முதியவர்களையும் பேணிப் பாதுகாக்கும். ஆனால், மக்களின் எதிரிகளாக இருக்கும் நடுவண் அரசும் மாநில அரசும் எந்த விதிவிலக்குகளையும் தர்மத்தையும் வைத்துக் கொள்வதில்லை. பதினைந்து வயது சிறுவன் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காகவும் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல மறுத்ததற்காகவும் எரித்து கொல்லப்பட்டான். சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். கருவில் இருக்கும் குழந்தையைக்கூட கொல்லும் கொடியவர்களின் ஆட்சி இது. அவர்கள் விசுவநாதன்கள் என்றோ நல்லக்கண்ணுகள் என்றோ கருதிப் பார்க்கப் போவதில்லை. தம்மை எதிர்ப்பவர்களுக்காகத் தான் அவர்கள் என்.ஐ.ஏ. , ஊபா சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதற்கு புகழூர் விசுவநாதனை சிறையில் அடைத்திருப்பதும் ஓர் சான்று. சமூக அக்கறை இருந்துவிட்டால் முதியவர்கள் என்றும் பாராமல் அடக்கி ஒடுக்குபவர்கள், துளியளவும் வெட்கமில்லாதவர்கள்தான் நமது ஆட்சியாளர்கள். அவர்கள் சிறையில் வைத்து அடைப்பதற்கு மிகக் குறைவாகவே நம்மிடம் முதியவர்கள் இருக்கிறார்கள்!
ஆகவே, களத்தை நிரப்புவதற்கு ஆயிரமாய் ஆயிரமாய் இளந்தலைமுறையினர் வர வேண்டும். சிறைக் கொட்டடிகள் நமக்காக காத்திருக்கின்றன. நமது எதிரிகள் நம் வீட்டுக் குழந்தைகளையும் முதியவர்களையும் அடக்கி ஒடுக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது. நமது முதியவர்களும் குழந்தைகளும் கொடியவர்களின் ஆட்சியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,
செந்தில், இளந்தமிழகம்