உணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு! தொழிலாளர் துறையே தலையிடு!
அதிக வேகத்தில் வண்டியை ஓட்டினார்கள், மற்ற வாகன ஓட்டுனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டியை ஓட்டினார்கள் என்ற பெயரில் 616 உணவு வினியோக ஊழியர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
உணவு வினியோக சேவைத் துறை என்பது வினியோக ஊழியர்களை அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் உணவு வினியோகம் செய்யப்படுகிறது. இத்துறை நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிக்க குறிப்பிட்ட நேரத்தில் உணவை வினியோகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்து ஆர்டர்களை பிடித்து சந்தையை கைப்பற்றுவதோடு நிறுத்திக் கொள்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் என்பது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களின் அன்றாட போக்குவரத்து நெரிசலை, உணவகங்களில் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அந்த சுமையை வினியோக ஊழியர்கள் தலையில் கட்டி விடுகின்றன.
ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு வினியோகம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மாத வருமானம் என்ற நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் என்பது ஊழியர்களின் மாத வருமானத்தை தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கிறது. 4 கி.மீ / ரூ.35, 8 கி.மீ/ரூ.120 என இருந்த கூலியானது முறையே ரூ.15, ரூ.80 என சமீபத்தில் குறைக்கப்பட்டதானது அவர்களின் போதிய மாத வருமானத்தை அடைய மேலும் அதிக கி.மீ ஓட வேண்டிய, அதிக முறை உணவு வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.
எனவே சென்னை சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வண்டியை ஓட்டியவர்கள் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்றவர்கள் அல்ல, அவர்கள் உணவு வினியோக சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். வாழ்வாதாரத்திற்க்கான இந்த ஓட்டத்தில் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகி சாலையில் செல்லும் மற்ற பொது மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாவதற்கு காரணம் லாப நோக்கத்தில் நகர போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை கணக்கில் கொள்ளாமல் வினியோக நேரத்தையும் அதற்கான கூலியையும் நிர்ணயிக்கும் நிறுவனங்களே! ‘பங்குதாரர்கள்’ என்ற பெயரில் தொழிலாளர் உறவை மறைத்து அவர்களின் உரிமையை பறிக்கின்ற நிறுவனங்களே!
எனவே, இந்த உண்மைகள் அனைத்தையும் அறிந்தும் ஆயிரக்கணக்கான வினியோக ஊழியர்களின் பொது மக்களின் உயிர் பாதுகாப்பை பற்றி எந்த கவலையின்றி குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு வினியோக ஊழியர்களின் மோசமான வேலை நிலைமைகளை தீர்மானிக்கின்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையையும் இதை கண்டும் காணாமல் இருக்கின்ற தொழிலாளர் துறையையும் தமிழக அரசையும் சோசலிச தொழிலாளர் மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
உணவு வினியோக தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க கீழ் கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது.
- உடனடியாக தொழிலாளர் துறை தலையிட்டு உணவு வினியோக சேவையில் உள்ளவர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து குறைந்த பட்ச கூலி, பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட வேலை நிலைமைகளை சரி செய்ய வேண்டும்.
- சென்னை காவல்துறை உணவு வினியோக ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று, தொழிலாளர் துறை, நிறுவனம், தொழிலாளர் பிரதிநிதிகளோடு சேர்ந்து சாலைப் பாதுகாப்பை உறுதி படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிமளா, சோசலிச தொழிலாளர் மையம்