முகிலன் உயிருடன் இருக்கிறாரா? பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்!
’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்!
இப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊடகத்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி. மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா? இல்லையா? என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது.
அணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது.
பொதுத்தேர்தலின் பரப்புரை இரைச்சல்களில், ’முகிலன் எங்கே?’ என்ற கேள்வி அமுங்கிப் போன நிலையில், ’நம்மோடு வாழ்ந்த மனிதன் நூறு நாட்களாக காணவில்லை’ என்று நினைவுப்படுத்தும் நோக்கில், ஜூன் 01 சனிக்கிழமை அன்று ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் முயற்சி நடந்துக்கொண்டிருக்கும்போது, மே 29 அன்று இந்து நாளிதழ் ’பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முகிலன்’ என்ற தலைப்பிலொரு செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முகிலன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த நாளும் கவனத்திற்குரியது. மார்ச் 31 அன்று ’முகிலன் நிலை குறித்து அடுத்து என்ன செய்யலாம்?’ என்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்த நேரத்தில், அன்று காலை ‘குளித்தலையில் முகிலன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடியது. அதற்கு ஒருநாள் முன்பு பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெண் செயற்பாட்டாளர் முகிலன் மீது புகார் தந்துள்ளார். குளித்தலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கை சாக்கிட்டு உளவுத்துறையும் ஊடகமும் அவரை ’பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்’ என்று முத்திரை யிடுகிறது. சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக முகிலன் மீது எத்தனை எத்தனை வழக்குகள் இருக்கின்றன? அந்த அடையாளங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இப்படி ஓர் அடையாளத்தை அவர் மீது சுமத்துவதன் நோக்கம் என்ன? குளித்தலையில் கொடுக்கப்பட்ட ஒரு புகார் உடனடியாக ஊடகங்களில் செய்தி ஆனது எப்படி? இவையெல்லாம் தற்செயலாக நடப்பது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழக அரசின் உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் இதில் உள்நோக்கம் இல்லையா? என்ற கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. ஒரு முகிலனைக் கண்டுபிடிக்கச் சொல்லும் இயக்கத்தில் அசைவு ஏற்படும் போதெல்லாம் முகிலன் மீதான அவதூறு பரப்பல் தமிழக அரசால் தீவிரப்படுத்தப் படுகிறது.
பிப்ரவரி 17 அன்று முகிலனின் மகன் கார்முகில் தன் தந்தையைக் காணவில்லை என்று சென்னிமலையில் புகார் தந்துள்ளார். முகிலன் காணவில்லை என்று எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் அதே நாளில் புகார் கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 18 அன்று முகிலனைக் கொண்டுவரக்கேட்டு ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. விசாரணை உரிய வேகத்தில் இல்லை என்று கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், ’தனிநபருக்கெல்லாம் அரசு பொறுப்பாக முடியுமா?’ என்று முதல்வர் எகத்தாளமாய் ஊடகங்களில் பேசினார். பிப்ரவரி 25 அன்று ’முகிலன் எங்கே?’ என்று அவசர ஆலோசனைக் கூட்டமொன்று தோழர் நல்லக்கண்ணு தலைமையில் நடக்க, கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதில் பங்குபெற்றனர். உடனே அதே நாளில் அவசர அவசரமாக சிபிசிஐடிக்கு விசாரணையை மாற்றியது தமிழக அரசு. ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணையின் போது தேடுதல் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சிபிசிஐடி முன்வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது மார்ச் 30 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாக சிபிசிஐடி அதிகாரி சொல்கிறார். சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட்ட அரசாணையில் இதுவா குறிப்பிடப்பட்டுள்ளது? திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பரஸ்பர உடன்பாட்டுடன் உறவுக்குள் நுழைவது பாலியல் வன்புணர்வு வகைப்பட்டதா? இல்லை ஏமாற்று, மோசடி என்ற குற்றச்சாட்டின் வகைப்பட்டதா?
இந்நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இஷ்ரத் ஜகான் கொலைக் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளானவர். நாடாளுமன்ற உறுப்பினர் பிராக்யா சிங் மசூதிகளில் குண்டுவைத்த பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அவர்களை இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்றுதான் ஊடகங்கள் வெளியிடுகின்றனவா? ராம ஜெயத்தின் கொலையிலும் வழக்கறிஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ் கொலையிலும் சிபிசிஐடி கிழித்து தள்ளியதை நாடே அறியும். நூறு நாட்கள் ஆன பின்பும் பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஒருவருக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க துப்பில்லாத சிபிசிஐடி, இனி பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தேடுகிறதாம்! பாலியல் கொடூரம் என்ற வகையில் பொள்ளாச்சியில் நடந்த அட்டூழியங்களில் காவல்துறை கிழித்த இலட்சணத்தை நாடே பார்த்திருக்க, எந்த வெட்கமுமின்றி ஊடகத்திற்கு இப்படி செய்தி கொடுக்கிறார் ஒரு சிபிசிஐடி அதிகாரி. இதற்குப் பிறகும் சிபிசிஐடி முகிலனைத் தேடிக் கண்டுபிடிக்கும் என்று நம்ப முடியவில்லை.
முகிலன் உயிருடன் இருப்பார் என்று அரசியல் வட்டத்தில் நம்புபவர்கள் அரிதாகிக் கொண்டே போகின்றனர். விசயமும் முகிலனைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்கள் அலைஅலையாய் எழுந்துவரும் நிலையில் இப்போராட்டங்களில் ஈடுபடும் முன்னணியாளர்களை இழிவுபடுத்துவது முகிலனைக் கடந்த நோக்கமாக தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகையோர் மீதான மதிப்பைக் குலைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அதன் அறவலிமையை இழக்கச் செய்ய முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது போலும். இதை நாம் ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
முகிலனை முதலில் கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள். பின்னர் அவர் மீதான வழக்கை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். அதற்கு முன்பே அவர் மீதான பரப்புரைகளைத் தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முகிலனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுப்பது என்ற நிலையில் இருந்து முகிலனைப் போன்றதொரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரின் மீது தமிழக அரசு தொடுத்துவரும் பிம்பத் தாக்குதலை முறியடித்தாக வேண்டும் என்ற இடத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அனில் அகர்வால்களும் வைகுண்ட ராஜன்களும் அவர்களின் அடிவருடி வாழ்வுநடத்தும் பழனிச்சாமிகளும் பன்னீர்செல்வங்களும் ஒருபக்கம் நிற்கிறார்கள். இன்னொருபுறம் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடியவர்கள் நிற்கிறார்கள். முகிலனின் பெயரால் இந்த இரு தரப்புக்கும் இடையிலானப் சண்டை தொடர்கிறது. சண்டைக்கு அணியமாவோம்.
முகிலனைப் பற்றிய கிசுகிசு செய்திகளை நாட்டிற்கு சொல்வதற்கு முன்னால் முகிலன் உயிருடன் இருக்கிறாரா? என்பதை முதலில் சொல் என்று தமிழக அரசை நோக்கிக் குரல் எழுப்புவோம். நாளை காலை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம்!
முகிலன்களை உங்களால் கொல்ல முடியும். ஆனால் அவர்களின் போராட்ட வாழ்வின் தடங்களை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உரக்கச் சொல்வோம்.
-செந்தில், இளந்தமிழகம்