திமுக அரசே!  அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!

06 Aug 2023

    தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநில அமைப்பாளர் சந்தோசம், மாநிலக் குழு உறுப்பினர் சாலமன் உள்ளிட்ட நரசிங்கபுர கிராம மக்கள் கடந்த 13-7-2023 அன்று அந்நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 11 பேருக்கு உடனடியாக பிணை கிடைத்தது. ஆனால், தோழர் சாலமனுக்கு மட்டும் பிணை மறுக்கப்பட்டது. திருவள்ளூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் தோழர் சாலமன் மீது கடந்த 30-7-2023 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது. இதுபோன்ற கறுப்பு சட்டங்களை அடியோடு நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில் ஓர் அரசியல் இயக்கத்தின் நிர்வாகியான தோழர் சாலமன் மீது திமுக அரசு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

அந்நிய மூலதனம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கை என்ற அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு சலுகைகளை வழங்குவதோடு அவர்களது சட்டவிரோத செயல்களுக்கும் அரசு துணைபோவதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும். நரசிங்கபுரம் கிராம மக்கள் கிராம சபையில் மணற் கொள்ளைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதோடு கட்டுமானப் பணிகளில் மிஞ்சும் மணலை கிராமத் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த அடிப்படையிலேயே அந்த கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு அப்பகுதியில் முன்னணி செயற்பாட்டாளராக இருந்து மக்கள் பிரச்சனைகளில் போராட்டக் களம் காணும் தோழர் சாலமன் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி இருப்பது அரசின் கார்ப்பரேட் சார்பையும் மக்கள் விரோத தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

போராட்ட அரசியலில் இருப்போரைக் கொச்சைப் படுத்தும் வகையில் 110 சட்டப் பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் பட்டியலில் சேர்ப்பதை தமிழ்நாடு காவல் துறை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதை மீறியும் ஊக்கமுடன் செயல்படும் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் வாடிக்கையாக தொடர்ந்து வருகிறது. அதில் தலித் சமூகப் பின்புலம் கொண்ட செயற்பாட்டாளர்கள் என்றால் அரச இயந்திரத்தின் சாதிய வன்மமும் இதில் இணைந்து கொள்கிறது.

பாசிச அபாயத்தில் நாடே சிக்கிக் கொண்டிருக்கும் காலப் பகுதியில் பாசிசத்தை எதிர்த்து நிற்பதாக சொல்லிக் கொள்ளும் திமுக அரசு ஓர் ஒடுக்குமுறை அரசாக செயல்படுவது அநீதியானது. அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை திமுக அரசு மதிக்க வேண்டும்.

எனவே, தோழர் சாலமன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
மீ.த. பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தொடர்புக்கு: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW