அவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை?

20 May 2019
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் உமையாள்புரம் கிராமத்தில் கெயில் எரிவாயு நிறுவனத்திற்காக குழாய்களை பதிக்கும் தனியார் நிறுவனமான ‘ருதானி’ காவல்துறை ஒத்துழைப்போடு நடப்பட்ட நெல்வயல்களை அழித்து குழாய்களை பதித்து வருகிறது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற அடாவடி செயல்களை செய்து வருகிறார்கள். 

கடந்த ஐந்து நாட்களாக மேற்குறிப்பிட்ட முடிகண்டநல்லூர் உமையாள்புரம் கிராமங்களில் விளை நிலங்களை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலை விவசாயிகள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட நிறுவன அதிகாரிகளும் அவர்களிடம் கையூட்டு பெற்று  காவல்துறை அதிகாரிகள் மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, செம்பனார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் உளவுத்துறையின் சதிச்செயல்களோடு விவசாயிகளின் எதிர்ப்பை அச்சுறுத்தி நசிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக 16 ஆம் தேதி அன்று தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்,   தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நாகை மாவட்ட செயலாளருமான  இரணியன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்  பாலன், தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் நாகை  மாவட்ட செயலாளர்  விஷ்ணுகுமார்  உள்ளிட்ட கிராம விவசாயிகள் ஐவரையும் சேர்த்து 8 பேர் மீது கெயில் நிறுவனத்திற்காக பணியாற்றும் திருவேங்கடத்தை கொலை மிரட்டல் விடுத்ததாக IPC 143, 147, 341, 506(1) கீழ் பொய்வழக்குப் புனைந்து தோழர் இரணியனை பதினெட்டாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

 

இப்பொழுது மற்ற தோழர்களையும்,  விவசாயிகளை கைது செய்வதற்கும் அவர்கள் மீது வீண் பழி சுமத்தி அச்சுறுத்துவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளே கெயில் நிறுவன வாகனங்களை கொளுத்திவிட்டு அதை மக்கள் மீதும், தோழர்கள் மீதும் பழி போடுவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்தியை திட்டமிட்டு அவர்களே ஊர் மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

தினசரி பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களும் அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் அவ்விடத்திற்கு வந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, அவர்களுக்கு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வாங்கிய பணத்திற்கு வேலை செய்ய முடியவில்லையே, தனியார் நிறுவன ஒப்பந்ததாரருக்கு பதில் சொல்ல முடியவில்லையே, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி குழாய்களை பதிக்க முடியவில்லையே என்ற கோபத்தில் வழக்கமான ஐந்தாம் படை வேளையில் காவல்துறை இறங்கியுள்ளது.

 

எனவே காவிரி படுகை’காக போராட்ட களத்தில் நிற்கும் அனைத்து தோழமை சக்திகளும் இதை கவனத்தில் எடுக்குமாறும் இச்சதி செயலை முறியடித்து விவசாயிகளின் எதிர்ப்புக்கு உறுதுணையாக நிற்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், கெயில் குழாய் பதிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். உண்மை அதுவன்று, மாதானத்தில் எடுக்கப்படுகின்ற ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை அவர்கள் மே மாத்தூர்’க்கு எடுத்துச்சென்று அதன் பின்னர் அதை நரி மனதிற்கும், பிள்ளை பெருமாள் நல்லூருக்கும் எடுத்துச் செல்வதற்காக திட்ட அறிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆனால் இதை குழப்பி, இது ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லை என்று புரளிகளை கிளப்பி வருகிறார்கள். ஆழ்துளை கிணறு பாசனத்தால் முப்போகம் விளைகின்ற தரங்கம்பாடி தாலுக்காவின் விளைநிலங்கள் ஊடாக இந்தக் குழாய்கள் செல்கின்றன.

 

தற்பொழுது குறுவை சாகுபடி தீவிரமாக தொடங்கி பயிர் நடவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பச்சை வயல்களில் தான் ஈரக் குலையை அருப்பது போன்று கனரக வாகனங்களை இறக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நெஞ்சம் பதறும் விவசாயிகளும், வயலில் நடவு செய்து கொண்டிருக்கிற பெண்களும், அநீதி கண்டு பொறுக்கமுடியாமல் சேற்று வயல்களில் இறக்கப்படும் வாகனங்களை மரித்து திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றி  எந்த கவலையும் இல்லாத காவல்துறையும் அரசும் இந்த திட்டத்திற்கு கூலி வேலை பார்க்கின்ற ஓய்வுபெற்ற முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகளும் எப்படியாவது, எதைச் செய்தாவது குழாயை தேர்தல் முடிவுக்கு முன்பாக பதித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆகவே மக்களின் பால் அக்கறை கொண்ட அனைத்து தோழமை சக்திகளும் களமிறங்கி இந்த அநீதியை முறியடிக்குமாறு மக்களின் சார்பாகவும் போராட்ட கிராமங்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்

 

 

பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தொடர்புக்கு: அருண்சோரி: 7299999168

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW