பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 May 2019

 

நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம் பகுதிகளில் குறுவை சாகுபடி நடந்திருக்கும் பச்சை வயல்வெளிகளில் கனரக இயந்திரங்களை இறக்கி குழாய்ப் பதிக்கும் கல்நெஞ்சக்கார வேலையை கெயில் நிறுவனம் செய்துவருகின்றது. தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கமும் தமித்த்தேச மக்கள் முன்னணியும் மக்களோடு களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. நேற்று டி.எஸ்.பி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள், கெயில் நிறுவன அதிகாரிகள் முடிகண்டநல்லூரில் . அப்பகுதி விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, பின்வழியாக கெயில் நிறுவனம் வண்டியை இறக்கப் பார்த்தது. அப்போது வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் வண்டியை விரட்டியடித்தார்கள். நேற்று அப்பகுதி வருவாய்த் துறை கோட்டாட்சியர் திருமதி கண்மணியிடம் கெயில் குழாய்ப் பதிப்பை நிறுத்தக் கோரி அக்கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இன்று அதிகாலை திருட்டுத்தனமாக வண்டியை வயல்வெளியில் இறக்கும் வேலையை செய்தது கெயில் நிறுவனம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் எட்டு விவசாயிகள் மீதும் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன, விஷ்ணுக் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது காவல் துறை (IPC 143, 147, 341, 506(1)). நான்கு நாட்களாக போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதால் காவிரிப் படுகைக்கு வெளியே இப்போராட்டங்கள் கவனம் பெற்று வந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சியினர் கெயில் நிறுவனத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் நிலையில் இன்று உமையாள்புரத்தில் இருந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துவிட்டது காவல் துறை. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலனையும் தோழர் விஷ்ணுவையும் கைது செய்யும் முயற்சியில் இருக்கிறது.

 

ஆளும் அதிமுக தொடங்கி எதிர்க்கட்சிகள் அனைவரும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வருவதற்குள் இந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்களின் விரலில் மை காயும் முன்பே காவிரிப் படுகையை பாலைவனமாக்குவதற்கு அணியமாகி வருகிறது கார்ப்பரேட் அரசு.

உழுது, விதைப்போட்டு பயிராக்கிய உழவர் கூட்டம் பயிர்க்கொலை செய்துவரும் கெயில் நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவது குற்றமா? தமிழக அரசு  காவல் துறையையும் கெயில் நிறுவன அதிகாரிகளையும் கொண்டு இதைக் கையாள்வதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விளைநிலங்களில் குழாய்ப் பதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், கொதித்துப் போயுள்ள கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், உழவர்கள் மீது தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று தமித்தேச மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தொடர்புக்கு: அருண்சோரி: 7299999168

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW