மே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

16 May 2019

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட   15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை

ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. அப்போராட்டத்தில்  15 பேர் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்டார்கள்.  நஞ்சாகிப் போன நிலம், நீர், காற்றைத் தூய்மையாக்க தங்கள் மூச்சு காற்றைத் தந்தார்கள். வாழும் தலைமுறையும் வரப்போகும் தலைமுறைகளும் வாழ்வதற்காக இவர்களது வாழ்க்கை முடிந்து போனது.  உலகம் உள்ளளவும் தமிழ்மண் உள்ளளவும் மக்கள் மனங்களில் மரணமிலாப் பெருவாழ்வுப் பெற்றுவிட்டனர். இவர்களின் நினைவேந்தலுக்கு 250 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. புதைக்கப்பட்டவர்களைக் கண்டு ஏன் இவ்வளவு அச்சம்?

இலண்டனில் குடியேறிய அனில் அகர்வால் என்ற பெருமுதலாளி. அவரது வேதாந்தா குழுமத்தின் கிளைதான் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை. முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்க மராட்டியத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. உழவர்களின் போராட்டத்தால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. அந்த ஆலைக்குதான் இங்கே பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட 1996 இல் பொருளாக்கத்திற்கு  அனுமதி தந்தார் கருணாநிதி, ஆலை செயல்படத் தொடங்கியது.

ஆலை அமைக்கக் கூடாதென தமிழகத்திலும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. பொதுக்கூட்டம், பேரணி, பட்டினிப் போராட்டம், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், சட்டப் போராட்டம் எனப் பற்பலப் போராட்டங்கள் நடந்தன. அதன் உச்சமாய் 1996 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கான தாதுப் பொருட்களைக் கொண்டு வந்த கப்பல்கள் மீனவர்களின் முற்றுகைப் போராட்டத்தால் இருமுறை விரட்டியடிக்கப்பட்டன. மக்கள் போராட்டங்களால் எரிச்சல் அடைந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் சாதித் தீயை மூட்டிவிட்டது, சாதி மோதல் வெடித்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மும்முரமாய் இருந்த நான்கு பேரைக் காவல்துறை குறிவைத்து சுட்டுக் கொன்றது.

அடிக்கடி ஆலையில் இருந்து கசிந்த நச்சுக் காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சாதிப் பார்த்தா நச்சுக் காற்று ஆளைக் கொல்லும்?. தோல் நோய்கள், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு நோய்கள், குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல் என தூத்துக்குடி மக்களின் வாழ்வு சிதைந்தது; நோய் நொடிகள் பெருகின. புற்றுநோயால் கருப்பை அகற்றப்பட்ட இளம்பெண்கள் ஏராளம். கருச்சிதைவுகள் பெருகின. நிலத்தடி நீர் மாசானது, காற்று நஞ்சானது, இறால், நண்டுகூட கிடைக்காமல் முத்துக் குளித்த கடல்கூட வளம் குன்றிப்போனது.

வேதாந்தா குழுமத்திற்கு ஸ்டெர்லைட்டால் ஆண்டொன்றுக்கு கிடைத்த ஈட்டம் மட்டும் 1000 கோடி ரூபாயை எட்டும். வேதாந்தாவின் மூலமூதல் பெருகபெருக தூத்துக்குடியின் வாழ்வாதாரம் சிதைந்து மக்களுக்கு நோய்நொடிகளும் பெருகிக் கொண்டிருந்தன. வேதாந்தாவுக்கு இலாபமா? தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான காற்றும் நீருமா? செம்புப் பொருளாக்கமா? மாந்த மறு ஆக்கமா?  வேதாந்தாவின் பண பலமும், சாதித் தூண்டலும் போராட்டதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்டெர்லைட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகமிக அதிகம்.

70,000 டன் பொருளாக்கம் செய்யவே அனுமதி பெற்றிருந்தது ஸ்டெர்லைட். ஆனால், அது பொருளாக்கம் செய்ததோ 1,70,000 டன். மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில்தான் ஆலை நிறுவ வேண்டும்,  250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்க வேண்டும் போன்ற நெறிகள் பலவற்றையும் வேதாந்தா காலில் போட்டு மிதித்தது நெறிகளை மீறி, தடைகளைத் தகர்த்து வேதாந்தாவின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருந்தார். இந்நேரத்தில்தான், ஆலை விரிவாக்கம் என்று 2018 இல் வந்த செய்தி கனன்று கொண்டிருந்த மக்கள் நெஞ்சைப் பற்றி எரிய வைத்தது.

கையெழுத்து இயக்கம், பல்லாயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டம், நூறு நாள் தொடர் போராட்டம் என எதற்கும் செவிசாய்க்கவில்லை அடிமை எடப்பாடி அரசு. மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அலைஅலையாய் மக்கள் நடந்தனர். குழந்தை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாய் போயினர். உணவுப் பொட்டலங்களோடு போயினர்.

வேதாந்தாவுக்கு முட்டுக்கொடுக்க துப்பாக்கிகளோடு காத்திருந்தது காவல்துறை. சுட்டுக் கொன்றும், அடித்து முடமாக்கியும் அது பேயாட்டம் போட்டது. ’சமூக விரோதிகள்’ எனப் போராட்டக்காரர்கள் மீது முத்திரைக் குத்தி தப்பிக்கப் பார்த்து தமிழக அரசு. ஆனால், செத்து விழுந்தோருக்கென செந்தமிழ்நாடு மட்டுமல்ல உலகத் தமிழினமே கலங்கி நின்றது. தமிழக அரசு வேறு வழியின்றி ஆலையை மூடியது.

அனில் அகர்வாலின் மூலமுதலைப் பெருக்கிய ஆலை, மக்களின் மூச்சைத் திணறடித்த ஆலை ஓராண்டாய் மூடிக் கிடக்கிறது. இந்த 22 ஆண்டுகளில் நீதிமன்ற ஆணையால், மாசுக் கட்டுபாட்டு வாரியத்தால், தமிழக அரசால் என அவ்வப்போது ஓரிரு மாதங்கள் மூடிக் கிடந்த ஆலை, ஒரேடியாக ஓராண்டு மூடிக் கிடப்பது இதுவே முதல்முறை இதுதான் மே 22 போராட்டத்தில் கொல்லப்பட்ட ஈகியர் மீது எடப்பாடிகளுக்கும் மோடிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் நட்டமென கண்ணீர் விடுகிறது ஸ்டெர்லைட். காற்றில் கலந்திருந்த நச்சுக்களான சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவை வெகுவாக குறைந்துவிட்டது என தமிழக அரசின் அறிக்கை சொல்கின்றது. ஒருபுறம் ஆலையை மூடிவிட்டு இன்னொருபுறம் போராடியவர்கள் மீது பொய் வழக்குகள், தேசப் பாதுகாப்புச் சட்டம், கைதுகள், சிறை, தடியடி, சித்திரவதை, மிரட்டல், உருட்டல் என இந்நாள் வரை  அடக்குமுறைகள் தொடர்கின்றன. மக்கள் ஒன்றுகூட, பொதுக்கூட்டம் நடத்த, போராட,  கருப்புக் கொடியேற்ற, கண்ணீர் விட்டழ என எல்லாவற்றுக்கும் தடை!

ஆலையைத் திறப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது வேதாந்தா. ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அதில் தமிழர்கள் பங்குபெறக் கூடாதென வாதாடியது வேதாந்தா. பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரோ ஏ.கே.கோயல் என்ற ஆர்.எஸ்.எஸ். பேர்வழி. அவரால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரோ தருண் அகர்வால் என்னும் ஊழல் பேர்வழி. எழுதிவைத்த நாடகம் போல் ஆய்வு முடிய, ஸ்டெர்லைட்டுக்கு கருணை காட்டச் சொன்னது ஆய்வுக் குழு! ஆலையைத் திறக்க ஆணையிட்டது பசுமைத் தீர்ப்பாயம்!

மேல்முறையீட்டுக்குப் போனது தமிழக அரசு. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கப் பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றது. குறுக்குவழியில் வாழ்வுதேடும் அச்சுஅசல் கார்ப்பரேட் புத்தி வேதாந்தாவுக்குப் புதிதல்ல. 2013 இல் ஆலை மூடப்பட்ட போதும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகித்தான் ஆலையை மீண்டும் திறக்க வைத்தது அது. அந்த ஆணையையும் இப்போது நீக்கிவிட்டது உச்சநீதிமன்றம். பந்து இப்போது உயர்நீதிமன்றத்திற்கு வந்துவிட்டது. ஸ்டெர்லைட் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு நடந்துவருகிறது.

அருணா ஜெதீசனின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மூலம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கிறோம் என்றது தமிழக அரசு. சட்டப் போராட்டத்தின் வழி வழக்கு நடுவண் புலனாய்வுக் கழகத்திற்கு(சிபிஐ, நபுக) மாற்றப்பட்டுவிட்டது. நபுக. தனது முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை மீது வழக்குப் பதியவில்லை. பிரதமர் அலுவலகத்தின் சொல்லைத் தட்டாத செல்ல நாய்க்குட்டியே நபுக என இதுவும் மெய்ப்பித்துவிட்டது. அனில் அகர்வால் – மோடி – எடப்பாடி கூட்டணியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அம்பலப்படுத்தி ஆவணப்படம் வெளியிட்ட தோழர் முகிலனை 90 நாட்களாய் காணவில்லை.

தாமிர உருக்காலைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என கொள்கை முடிவெடுக்க மறுக்கிறது தமிழக அரசு. ஆலை பராமரிக்கப்படாவிட்டால் பெருங்கேடு ஏற்படும் என்று அச்சுறுத்துகிறது வேதாந்தா. ஆலையைத் திறக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கு முழு உரிமை, ஆலையை மூட நினைக்கும் தூத்துக்குடி மக்களுக்கு வாய்ப்பூட்டு, வழக்கு, அடக்குமுறை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சேலத்தில் மால்கோ எனப்  பாழ்செய்தது போதாதென விழுப்புரம், நாகை, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வட்டமிடுகிறது வேதாந்தா. நாலாப்புறமாய் படையெடுக்கும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராய் தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் வழிகாட்டிய  நாள் தான் மே 22.

இதில் களப்பலியான இம்மாவீரர்களே வரலாற்றின் நாயகர்கள். செவ்வணக்கம் செலுத்தி வட்டமிடும் வேதாந்தாக்களை ஓடஓட விரட்டியடிக்க சூளுரைப்போம்!

தமிழக அரசே!

கொள்கை முடிவெடுத்து ஆலையை நிரந்தரமாக மூடு! ஆலையை அப்புறப்படுத்தி தூத்துக்குடியைத் துப்பரப்படுத்து! துப்பாக்கிச் சூடு நடத்திய, ஆணையிட்ட காவல்துறையினர் மீது வழக்குப் பதிவுசெய்! வேதாந்தாவிடம் தண்டம் பெற்று தூத்துக்குடியை சீர்திருத்து!

முத்துநகர் ஈகியர்களை நெஞ்சில் ஏந்துவோம்! முத்தமிழ்நாடு காக்கத் துணிவோம்!

#தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW