ஸ்மார்ட் சிட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடமுண்டா?
133 ஆவது மே தின கூட்டம் -சோசலிச தொழிலாளர் மையம் (SWC) – தி.நகர் சாலையோர வியாபாரிகள் சங்கம்
தெருமுனைகூட்டம், 7/05/2019 மாலை 6மணி, முத்துரங்கன் சாலை, தி.நகர்
ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுறகூட்டம் – நாட்டில்
எக்காளம் போடுறகூட்டம்
மக்கள் எதிர்த்துக் கிட்டா எடுக்கணும் ஓட்டம்
இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு எழுதினார். இதை ஒவ்வொரு மே தினமும் நினைவுகூர வேண்டியுள்ளது. எக்காளம் போடுற கூட்டத்தை எதிர்த்துக்கிட்டுதான், தி.நகர் பேருந்து பணிமனைக்குள் சாலையோர வியாபாரிகளுக்கான சங்கத்தை அமைத்து காட்டியுள்ளோம். பூ, பழம், தின்பண்டங்களைகூட நிம்மதியாக விற்க அனுமதிக்காத காவல்துறையின் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன்நின்று உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். நகர விற்பனை குழு வழங்கும் உரிமத்தை வெற்றிகரமாக பெற்று வருகிறோம், இதில் வியாபாரிகள் எவரும் விடுபட்டு போகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்துவது போன்ற காவல்துறை அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து போராடிவருகிறோம். ’தூய்மை இந்தியா’ திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்துகிறதோ இல்லையோ, தி.நகர் பணிமனையில் நுகர்வாளர்கள் குப்பைப் போடுவதை வியாபாரிகள் நாம் தடுத்து வருகின்றோம்.
நம்மை அடுத்தடுத்த சவால்கள் தாக்கவுள்ளன. நமது ஒன்றுபட்ட செயல்பாடுகளின் தேவை கூடுகிறது. எந்த நேரத்தில் பொக்கலைன் வண்டிவரும் அல்லது லத்தியொடு காக்கிச்சட்டைகள் வரும் என்கிற அச்சம் சற்றே கழிய தொடங்கியது. இவ்வேளையில், நாம் உடனடியாக எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவாலுக்குப் பெயர்தான் ‘ஸ்மார்ட்சிட்டி’. ஏற்கனவே, சென்னை மாநகரில் வீடற்றவர்களின், சந்துபொந்துகளுக்குள் வீடுகள் கட்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை கார் கம்பெனிகாரர்களும் போன் கம்பெனிகாரர்கம் கேட்டால் உடனே 200 ஏக்கர் நிலம் கொடுத்து ஆதரித்து வந்தது அரசாங்கம். இது போதாதென்று,
அவர்கள் மட்டுமே ஏகபோகமாக வசிப்பதற்கான ‘ஸ்மார்ட்’ நகரமாகவும் சென்னை உருமாறப்போகிறது. இதில் தி.நகர் பகுதிதான் ஸ்மார்ட் சிட்டிக்கான மையப்புள்ளி. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ், விற்பனை தடை செய்யப்பட்ட மண்டலமாக தி.நகர் பகுதி அறிவிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இலாபப் பேராசையில் முழுக்கமுழுக்க சட்டவிரோதமாக கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் உம் சரவணாஸ்டோர்ஸ்உம் தீயில் கருகி சாம்பலானும்கூட மீண்டும் வியாபார உரிமத்தை வாங்கிவிடலாம், ஆனால் சட்டப்படி வயிற்றுப் பிழைப்பு நடத்தும் சாலையோர வியாபாரிகளுக்கு மட்டும் தடை என்பதுதான் ஸ்மார்ட்சிட்டியின் தர்மம்.
வடமாநிலங்களில் ஸ்மார்ட்சிட்டிக்கான தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீதிமன்றங்களின் ஆதரவுடன் அங்குள்ள சாலையோர வியாபாரிகளையும் குடிசைவாழ் மக்களையும் அப்புறப்படுத்தும் வேலைகள் வேகமாக நடக்கிறது.. வியாபாரிகளின் அற்பசொற்பப் பொருட்களைப் பொக்கலைன் இயந்திரங்கள் கொண்டு நாசம் செய்து லாரிகளில் ஏற்றும் அட்டூழியம் நடக்கிறது. சாலையோர வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் காவல்துறையினர் மிகக் கேவலமாகத் திட்டுகின்றனர். இவை குறித்து ஸ்மார்ட்சிட்டி மேலாளர்கள் துளியும் கவலைப்படுவதில்லை. எனவே, இச்சம்பவங்கள் நமக்கான எச்சரிக்கை மணியாக ஒலிக்கின்றன!
நமக்கான சட்டப்பாதுகாப்புகள் சொல்வது என்ன?
”கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு முயற்சிசெய்பவர்கள் சாலையோர சிறுவணிகர்கள். இவர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” எனப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சாலையோர சிறுவணிகர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக்கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
காவல்துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறுவணிகர்களைத் துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கிவீசி சேதப்படுத்துவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.
“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” இன்படி, சாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல; இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது. 2014 சட்டப்படி எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக்கூடாது (Non-Vending Zone) என்பதை நகர வணிகக் குழு (Town Vending Committee) தான் ஆய்வுசெய்ய வேண்டும்.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நமக்குரிய இடத்தை வென்றெடுப்போம்!
நகர விற்பனைக் குழு அமைக்க வாக்களிக்கும் போது, வெளிப்படையான தந்திரமான தேர்தலையும், எதற்கும் விலைபோகாத நேர்மைமிக்க பிரதிநிதிகளையும் உறுதிசெய்வோம்!
சாலையோர வியாபாரிகளுக்கான நலவாரியத்தை அமைத்து தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவோம்!
சோசலிச தொழிலாளர் மையம் (SWC) – தி.நகர் சாலையோர வியாபாரிகள் சங்கம்
9940963131, 9787430065