அறிவியல் எதிர்ப்பும், முற்போக்காளர்கள் படுகொலைகளும்…

15 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 11

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, யானை முகமும் மனித உடலும் கொண்ட விநாயகக் கடவுளின் தோற்றமானது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின்  தாயகமாக பழங்காலத்தில் இந்தியா திகழ்ந்ததற்கான ஆதாரம் என்றார். அறிவியல் யுகத்தில் அறிவியலுக்கு எதிரானப் பிரதமரின் இந்த உரையானது அறிவியல் உலகின் மீது அடிப்படைவாத தாக்குதலை நிகழ்த்தியது. அறிவியலுக்கு எதிரான இந்துத்துவ அடிப்படைவாத கண்ணோட்டத்தை  நாடெங்கிலும் பரப்புவதன் பகுதியாக அமைந்தது. இந்தியாவின் கல்வி,அறிவியல் தொழிநுட்பம்,தொலைத்தொடர்பு என சகல துறைககளிலும் பாசக – ஆர் எஸ் எஸ் பரப்பியுள்ள  அடிப்படைவாத அறிவியலற்ற  போக்கின் வெளிப்பாடானது  மோடியின் உரையிலும் வெளிப்பட்டது.

பா.ச.க. அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள், பிரதமர் என இந்துத்துவ அடிப்படைவாத முகாமைச் சார்ந்த பெரும்பாலான  பிரதிநிதிகளும்  மூடநம்பிக்கை மற்றும் அறிவியலுக்கு எதிரானப்  பிரச்சாரத்தை பரப்பினார்கள். இந்தக் கும்பலால் நடத்தப்பட்ட இந்திய அறிவியல் காங்கிரஸ் கேலிக்கூத்தாக்கப்பட்டது. சம்ஸ்கிருதவழி பண்டைய  அறிவியல் என்ற தலைப்பிற்கு அறிவியல் காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு அமர்வு  முழுவதும் ஒதுக்கப்பட்டது. பண்டைய இந்தியாவில் இணையம் பயன்படுத்தப்பட்டது, பண்டைய இந்தியாவில்தான் பிதாகரஸ் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற டார்வின் கோட்பாட்டை யாரும் கண்டவரில்லை என பா.ச.க.வின் அமைச்சர்கள், முதல்வர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

நாடெங்கிலும் பிற்போக்கு கருத்துக்களைக் கொண்டு சேர்க்கிற இந்துத்துவ வகுப்புவாத கும்பல்களால்  பகுத்தறிவுவாதிகளும்  முற்போக்காளர்களும் கொலை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இந்துத்துவத்தை அம்பலப்படுத்துவோர்களை கருத்தியியல் ரீதியாக எதிர்க்க துணிவற்ற கும்பல்கள் நாடெங்கிலும் உள்ள முற்போக்காளர்களைக் கொலை செய்யத் தொடங்கினார்கள்.

  • மோடி ஆட்சிக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு மருத்துவரும், மாயஜால மந்திர தந்திர சடங்கிற்கு எதிராக தொடர்ச்சியாக இயங்கிய நரேந்திர தபோல்கர் (68), 08.2013 அன்று புனேவில் இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் இந்துத்துவ அடிப்படைவாத சடங்குகள் மற்றும் அதன் பொய் புனைவு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக  ‘மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்க’த்தை உருவாக்கி சமூகத்தை சீரழிக்கின்ற  போலிச் சாமியார்களையும் இந்துத்துவ அமைப்புகளையும் அம்பலப்படுத்தினார். ‘சாதனா’ என்ற பத்திரிகையின் ஊடாக அறிவியல் பூர்வமான  முற்போக்குக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார். இதன் விளைவாக  மகாராஷ்டிரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு வித்திட்டார். இவரது செயல்பாடுகளால் ஆத்திரம் அடைந்த சனாதன் சன்ஸ்தா என்னும் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்,தபோல்கரை படுகொலை செய்தனர். இவரது மரணத்தை  பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
  • அடுத்து கோவிந்த் பன்சாரே. இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே சிவசேனா, பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். கோட்சேவுக்கு சிவசேனா சிலை வைக்க முயன்றதைத் தடுத்து நிறுத்தினார். ‘சிவாஜி யார்?’ என்ற நூலில், சிவாஜி எப்படி இந்துத்துவ அரசியல் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். மராத்திய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த கோவிந்த் பன்சாரே 16.02.2015 அன்று கோலாப்பூரில் சனாதன் சன்ஸ்தா என்னும் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த கொலையாளிகளால் கொல்லப்பட்டார்.
  • இந்துத்துவ அடிப்படைவாத அரசியலுக்கு எதிரானவர்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு அடுத்து பலியானவர் கல்புர்கி. கன்னட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான கல்புர்கி, தீவிர முற்போக்கு எழுத்தாளராக மந்திர சடங்குகளை அம்பலப்படுத்தி வந்தார். சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தவர். இவர் கடந்த 2015 ஆகஸ்ட் 30 அன்று கல்யாண் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கியைத் தொடர்ந்து 05.09.2017 அன்று பெங்களூருவில் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • கெளரியின் தந்தை நடத்தி வந்த ‘லங்கேஷ்’ என்ற முற்போக்கு பத்திரிகையை அவருக்கு பிறகு கெளரி தொடர்ந்து நடத்திவந்தார். இந்து தர்மா என்ற பெயரில் பாஜக மேற்கொண்டுவந்த வகுப்புவாத அரசியலைக் கடுமையாக விமர்சித்து இயங்கிவந்தவர். இதனால் இந்துத்துவப் பயங்கரவாத கும்பலால் பலமுறை கொலை மிரட்டலுக்கு உள்ளானார். ஆனாலும் தனது செயல்பாடுகளை கெளரி நிறுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக அவரது வீட்டருகே வைத்து இந்துத்துவ அடிப்படைவாதிகளால் கெளரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டார்.
  • கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக கர்நாடக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் அளித்த வாக்குமூலத்தில், “துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடிந்ததும் இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணைக் கொலைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

 

முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் ஈடுப்பட்டவர்கள் சனாதன் சன்ஸ்தா, ஸ்ரீ ராம் சேனா,பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளை சேர்த்தவர்கள்  என்பது கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது. ஆனால் இந்த அமைப்புகள் யாவும் தடைசெய்யப் படாமல் பா.ச.க. அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது, முற்போக்காளர்களைக் கொலை செய்ய மேலும் ஊக்குவிக்கப்படுகிறது.

 

அருண் நெடுஞ்சழியன், சோசலிச  தொழிலாளர் மையம்  (SWC)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW