14 வது நிதி ஆணையப் பரிந்துரை ஏற்பும் தமிழகத்தின் வருவாய் இழப்பும்..
பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 9
கடந்த 2015 ஆம் ஆண்டில் மோடி அரசு 14வது நிதி ஆணையப் பரிந்துரையை ஏற்றுகொண்டது. ஆணையத்தின் பரிந்துரைகள் புதிய நடைமுறைகளின்படி மாநிலங்களின் பகிர்வு 32 விழுக்காட்டிலிருந்து இருந்து 42 விழுக்காட்டிற்கு உயர்த்தி வழங்கப்பட்டதாக பா.ச.க. அரசால் பொய்க்கருத்து உருவாக்கப்பட்டது. சமச்சீரற்ற பிராந்திய வளர்ச்சி நிலைமைகளைக் கொண்ட இந்தியாவில், இப்புதிய நடைமுறையின் கருதுகோள்கள் தமிழகம்,கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பெரும் நிதி இழப்பையும் வடமாநிலங்களுக்கு கூடுதல் நிதியையும் வழங்குகின்றன. 14வது நிதிக்குழு ஆணையத்தின் பரிந்துரைகள் நிதிக் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவில்லை மாறாக அது தென்மாநிலங்களின் நிதிவருவாயைப் பலவீனப் படுத்துகிறது.
நிதி ஆணையம்:
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நிதி உறவுகளை நிர்வகிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் நிதிக்குழு ஆணையம்(Finance commission). இந்தியாவில் ஐந்தாண்டு திட்ட உருவாக்கம் மற்றும் நடைமுறையில் திட்டக்குழுவே(Planning Commission) முக்கியப் பங்காற்றியதால் நிதிக்குழு திட்டக்குழுவின் கீழ்பட்டிருந்தது. மோடி ஆட்சியில் திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயாக் உருவக்கப்பட்ட பின்னர் நிதிக்குழுவின் முக்கியத்துவம் முன்னுக்கு வந்தது.
மாநிலங்களுக்கான வரி வருவாய் ஒதுக்கும் தகவை நிதி ஆணையம் நிர்ணயக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுப் புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார். அவ்வகையில் 14 வது நிதிக்குழு ஆணையத்தின் பதவிக்காலம் 2019-20-ம் ஆண்டில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018 நவம்பர் மாதம் 15 வது நிதிக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆணையம் தனது பரிந்துரையை 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் 14 வது நிதிக்குழு ஆணையத்தின் குறைபாடுகளைக் களையவேண்டும் எனவும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனவும் 14-வது நிதி ஆணையப் பரிந்துரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆணையத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில் 14 வது நிதி ஆணையப் பரிந்துரை எவ்வாறு தமிழகத்தை வஞ்சித்துள்ளது, அதன் பரிந்துரை ஏன் திருத்தியமைக்கப்படவேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.
14 வது நிதி ஆணையப் பரிந்துரையால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு
13 வது நிதி ஆணையமானது நான்கு காரணிகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டுப் பரிந்துரையை முன்வைத்தது. ஆனால் 14 வது நிதி ஆணையமோ பழையப் பரிந்துரையின் கருதுகோள்களைக் கீழ்வருமாறு மாற்றியமைத்தது.:
(காரணி) Factors | 13 வது நிதிக் குழு பரிந்துரை | 14 வது நிதிக் குழு பரிந்துரை |
மக்கள் தொகை 1971 அடிப்படையில் | 25 | 17.5 |
மக்கள் தொகை 2011 அடிப்படையில் | 0 | 10 |
வருவாய் | 47.5 | 50 |
நிலப்பரப்பு | 10 | 15 |
வனப்பரப்பு | 0 | 7.5 |
பற்றாக்குறை | 17.5 | 0 |
மொத்தம் | 100 | 100 |
புதியப் பரிந்துரையில் 1971 அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கீட்டை 7.5 புள்ளியாக குறைத்து, 2011 மக்கள் தொகை அடிப்படையில் 10 புள்ளி சேர்த்திருப்பது தமிழகத்திற்கு பாதக விளைவை ஏற்படுத்தியது.
- கடந்த நாற்பது ஆண்டுகளில் தென் மாநிலங்களின் மக்கள்தொகை பெருக்கம் மெதுவான விதத்திலேயே அதிகரித்து வருகிறது. கல்வியறிவு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பான மாநிலங்களாக செயல்பட்டுவருகிற தமிழகம் மற்றும் கேரளம் போன்ற தென் மாநிலங்களுக்கு 2011 கணக்கெடுப்பின் படியான நிதி ஒதுக்கீடு இழப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில் 1971-2011 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் இருமடங்கு மக்கள்தொகை உயர்ந்துள்ளதால், இம்மாநிலங்களுக்கு அதிக நிதி போய்சேர்கிறது.
- இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகி வருகிற தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. காட்டின் பரப்பளவு 17 விழுக்காடு இருக்கவேண்டும் என்பதை நாம் இங்கே வரவேற்கிறோம். ஆனால் எந்த மாநிலத்தாலும் ஒரே நாளில் காட்டின் பரப்பை அதிகரிக்கச் செய்யவியலாது. திடுமென நிதிப் பங்கீட்டு கருதுகோள்களில் காட்டின் பரப்பளவைப் புதிய காரணியாக சேர்த்துள்ளது. இதனால் வனங்களை அதிகமாகக் கொண்ட ஜார்கண்ட்,சட்டீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும்.
- போலவே மாநிலத்தின் தனிநபர் வருமான(GSDP)காரணியை 50 விழுக்காடாக உயர்ந்தியுள்ளதும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கே சாதகமாக உள்ளது.
- அடுத்ததாகப் பற்றாக்குறை என்ற காரணி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மாற்றங்களால், இந்தியாவிலேயே மோசமாக நிதி இழப்பைச் சந்திக்கிற மாநிலமாக தமிழகம் ஒரே இரவில் மாறிவிட்டது. இம்மாற்றங்களால் தமிழகம் தோராயமாக சுமார் 6,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கிறது. மேலும் மத்திய திட்டங்களுக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுப் பங்கை அதிகரித்தது, பேரிடர் நிவாரண நிதிச்சுமையை மாநில அரசின் மீது சுமத்துவது போன்ற காரணங்களால் தமிழகம் நிதிப் பாற்றாக்குறையுடைய மாநிலமாக மாறிவிட்டது.
- இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தனிநபர் வருமானம் பீகாரைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மத்திய அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
- தற்போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளது. 2012-13 ல் தமிழக அரசிடம் ரூ.1,760 கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15 ல் 258 விழுக்காடும், 2015-16-ல் 48 விழுக்காடும், 2016-17 ல் 67 விழுக்காடும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன.
- இந்த பற்றாக்குறை சுமைகளை எதிர்கொள்ள தமிழக அரசு டாஸ்மாக் பெருக்கத்தின் மூலமாக சரிக் கட்டுவது, அரசு ஊழியர்களின் செலவை வெட்டுவது என அப்பட்டமான மக்கள் விரோத செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
- இந்நிலையில்தான் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை முற்றிலும் கைவிட்டு முழுவதுமாக 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அளவு கோலாக்கும் விதமாக 15வது நிதிக்குழு ஆணையம் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற தமிழகத்திற்கு இது மேலும் பேரிழப்பை ஏற்படுத்தும்.
– அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம் (SWC)