தூத்துக்குடி; தேர்தல் ஆணையத்தை மீறும் காவல்துறை மிரட்டல்; வேதாந்தா – ஸ்டெர்லைட் பின்னணியில் மாவட்டக் காவல்துறையின் நெருக்கடி!

08 Apr 2019

#தூத்துக்குடி_தேர்தல்_ஆணையத்தை_மீறும்_காவல்துறை_மிரட்டல்
06-04-2019 அன்று மாலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க வேட்பாளர் அண்டோ ஹிலரி
‘ தலைக் கவசம் ‘ சின்னத்தில் வாக்கு கேட்டு தூத்துக்குடி நகரில் செல்லும் போது திடீரென்று குறுக்கே வந்து நின்றது தேர்தல் ஆணைய வண்டி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் சென்று விபரம் கேண்டார். வண்டியின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைககள் அச்சிட்டது எங்கே? எனக் கேட்டனர் அதிகாரிகள். ரஞ்சன் அச்சகம் எனச் சொன்னோம்.

வண்டி மேலிருந்த எங்களுக்கு குழப்பம். ஏற்கெனவே தேர்தல் அலுவலக வாயிலிலிருந்த விளம்பரப் பலகையில் மே22 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்கள் இருப்பது சட்டம் & ஒழுங்கு சீர்கெடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே தெரியாமல் அறிவிப்பின்றி அறுத்தெடுத்துச் சென்றது காவல்துறை. தேர்தல் பார்வையாளர் சீமா ஜெயின் மன்னிப்புக் கோரினார். முன்னெச்சரிக்கையாக வண்டியின் ஒருபுறம் அதே போல் தியாகிகளின் படங்கள் இருந்த பலகையை மாற்றியிருந்தோம். பிறகென்ன?

விளம்பரப் பலகையில் அச்சகப் பெயர் இல்லை எனச் சுட்டிக் காட்டினர். உடனே சரி செய்கிறோம் என உறுதியளித்து விட்டு தேசிய பகுஜன் கூட்டணித் தோழர் லூயிஸ் அவர்களை அச்சகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதற்குள் காவல்துறை சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் அச்சகத்திற்குச் சென்று விட்டனர்.
கணிணி, செல்போன் உள்ளிட்டு உரிமையாளர் பிரபுவை அழைத்துச் சென்றனர். ரிமாண்ட் செய்யப் போவதாக மிரட்டிப் பணம் பறித்து விட்டு நடு இரவு அனுப்பியுள்ளனர். அச்சகப் பெயர் போடாததற்கு கணிணி பறிப்பு! சிறைக்கா? அதிர்ச்சி! இது யாரை அச்சுறுத்த.
07-04-2019 காலை பரப்புரை தொடங்க வேன் கிளம்பத் தயாரானது. திடீரென சார்பு ஆய்வாளர் வண்டி முன் வந்து நின்றார். உங்க வண்டியைக் கைப்பற்றப் போகிறோம்! என்று கூற கணிணியை, கணிணி வடிவமைப்பாளரை கொண்டு போய் இரவு முழுவதும் தெற்குக் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டீர்கள். காலையில்தான் ஏற்பாடு செய்து அச்சகப் பெயரை ஒட்ட வேண்டும் எனப் பதிலளித்தோம்.
மிரட்டல்! மிரட்டல்! வண்டியை பத்திரமாக அலுவலகத்திற்குள் நிறுத்தி, பதாகைகளை கழற்றி வைத்து விட்டுப் பரப்புரைக்குச் செல்லாமல் முடக்கப்பட்டோம்! தேர்தல் காலத்திலும் இடம் மாற்றப்படாத அதே மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர். 11 மாதங்களாக நீடித்து வரும் அதே அடக்குமுறை…
அச்சுறுத்தல்…மிரட்டல்…

தேர்தல் பார்வையாளர் திருமிகு சீமா ஜெயின் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தோம். சுற்றுலா மாளிகையில் மதியம் 1 மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. வேட்பாளருடன் சென்று சந்தித்துச் சூழலை விளக்கினோம். உடன் தேர்தல் ஆணையம் சார்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும், உதவியாளர்களாக மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகக் காவலர் ஒருவரும் உடனிருந்தார். அச்சக உரிமையாளர் அச்சகப் பெயரைப் போடாததற்கான நடவடிக்கை இது. வேட்பாளர் மீதான நடவடிக்கை இல்லையென விளக்கம் கொடுத்தனர். கைது, சிறை மிரட்டல், பணம் பறிப்பு, கணிணி கைப்பற்றல், பரப்பபுரை வண்டியைக் கைப்பற்ற மிரட்டல் எதற்காக? எனக் கேள்வி எழுப்பியவுடன் அதிர்ந்து போய் உடனடியாக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருடன் பேசினர். கைது, வண்டி கைப்பற்றல் இருக்காது, கணிணியை ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தனர்.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
தமிழ்த்தேச மக்கள் முன்னணி,
தேசிய பகுஜன் கூட்டணி ஆதரவு பெற்ற

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க வேட்பாளர்
தோழர் அண்டோ ஹிலரியின் தேர்தல் பணி காவல்துறை நெருக்கடி, நிதி நெருக்கடிக்கிடையில் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மக்களைச் சந்தித்து வருகிறது.

வேதாந்தா – ஸ்டெர்லைட் பின்னணியில் மாவட்டக் காவல்துறையின் நெருக்கடி!

வேதாந்தாவின் செல்லப்பிள்ளைகள்
பாசக, திமுக போட்டியிடும் தொகுதி!

துணிச்சலுடன் போட்டியிட்டுள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் வேட்பாளருக்குத்
தோள் கொடுப்பீர் தோழர்களே!

வாக்களிப்பீர்! தூத்துக்குடித் தொகுதி வாக்காளர்களே தலைக் கவசம் சின்னத்திற்கு!

பேச அனுமதிக்கப்படாத ஸ்டெர்லைட் நிரந்தர மூடல், மே 22 திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு,
சாகர் மாலா சதித் திட்டம் குறித்து முதன்மையாகப் பரப்புரை செய்து மக்கள் அச்சத்தைப் போக்கும் அரசியல் கடமையைத் தொடரும் மக்கள் அரசியலாளர்கள் எங்களுக்கு ஆதரவு தாரீர்!

மக்கள் இயக்கங்கள் மீதான நெருக்கடியைக் கண்டிப்பது புரட்சிகர, இடதுசாரி – சனநாயக,
மாற்று அரசியலுக்கான மக்கள் இயக்கங்களின் கடமையாகும்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW