‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ – பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 3

07 Apr 2019

ஊழல் ஒழிப்புப் போராளியாக  தன்னை முன்னிறுத்திக் கொண்ட நரேந்திர மோடி இன்று “எங்கள் பிரதமர் ஒரு திருடர்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.ஆனால் மோடியோ தன்னைத்தானே நாட்டின் காவலாளியாக அறிவித்துக்கொள்கிறார். “ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று மோடி அரசு வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்ற முன்னாள் பிரான்சு அதிபர் ஓலந்தாவின்(.பிரான்சு அரசின் சார்பாக ஒப்பந்தத்தில் முதலில்  கையெழுத்திட்டவர்)  கூற்றானது நாட்டின் காவலாளி என பட்டம் சூட்டிக்கொண்டு ,பொதுவெளியில் மோடி உருவாக்கியிருந்த ஏழைகளின் நண்பன், பணக்காரர்களுக்கு எதிரி, ஊழலுக்கு எதிரான சமரசமற்ற போராளி போன்ற பிம்பங்கள் மீதான  துல்லிய தாக்குதலாக அமைந்தது.

ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நேரடியாக பதிலளிக்க மோடி மறுத்துவிட்டார். இதனால்,பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  பின்னால் மோடி ஒழிந்துகொண்டு தப்பிக்கப் பார்க்கிறார் என ராகுல்காந்தியால் கடுமையாக  விமர்சிக்கப்பட்டார். இதனிடையே ஒப்பந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது,ஒப்பந்தத்தை பொதுக் கணக்கு கமிட்டி ஆய்வுக்கு சமர்ப்பித்ததாகவும் அதன் பின்னரே விலை உறுதி செய்யப்பட்டதாகவும்  நீதிமன்றத்திடம் தவறான விளக்கத்தை மத்திய அரசு முன்வைத்தது. மத்திய அரசின் இப்பொய்யான விளக்கத்தின் அடிப்படையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தற்போது ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக கூறியது. ரபேல் தொடர்பான பா.ச.க. அரசின் தர்க்கங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

ரபேல் போர் விமான  ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு அரசாங்கதில்  முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஒப்பந்தமாகும்.அந்த ஒப்பந்தத்தில் கார்ப்பரேட் இலாபத்திற்காக மோடி அரசு மேற்கொண்ட ஊழல் முறைகேடுகள்  வருமாறு.

வ.எண் மன்மோகன் சிங் அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம்  மோடி அரசு மாற்றியமைத்த ரபேல் ஒப்பந்தம்
1 பிரான்சின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ஒரு விமானம்  வாங்குவற்கு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை சுமார் ரூ.526 கோடி ஒரு விமானத்திற்கு ஒப்பந்தத்தில்  விலை சுமார் ரூ. 1,670 கோடியாக மாற்றப்பட்டது.
2 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயார் நிலையில் வாங்கப்படும்.மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை தஸ்ஸோ நிறுவனம் வழங்கும். அனைத்து விமானங்களையும் பிரான்ஸில் தஸ்ஸோ நிறுவனம் தயாரிக்கும்.விமானத் தயாரிப்பில் பெரும் அனுபவம் கொண்ட ஹெச்ஏஎல் நிறுவனம் நீக்கப்பட்டு.விமான உற்பத்தி  அனுபவமே இல்லாத, ரூ.1.21 லட்சம் கோடி கடன் கொண்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
3 ஒப்பந்த நடைமுறையானது  நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட பல அடுக்கு முடிவுகளுக்குப் பின்பே இறுதி செய்யப்பட்டது. ஒப்பந்த மாற்றத்திற்கு எந்த வித குழுக்களின் பார்வைக்கு முன்பே மோடியால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது.

 

2015 ஆம் ஆண்டில்  பிரான்சுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் முதலாக, ரபேல் விமானங்கள் வாங்குவதாக மேற்கொண்ட அறிவிப்பு, அந்த பயணத்தில் உடன்சென்ற அனில் அம்பானி, இப்பயணத்திற்கு சில நாட்கள் முன்பு வெறும் 5 இலட்ச ரூபாய் முதலீட்டில் அம்பானி  தொடங்கிய ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனம் என அடுக்கடுக்கான மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு மீறல் நடவடிக்கைள் யாவும் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகிவருகிறது. நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் இரகசியம் காப்பதாக ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை காத்தது. மேக் இன் இந்தியா முழக்கமும் இதனால் கேலிக்குள்ளாகியுள்ளது

 

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் வெளியீடு ; தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW