தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3!
நாள்: மார்ச் 3, 2019, காலை 10 மணி, இடம்: ராம்லீலா திடலில் இருந்து பாராளுமன்றம் நோக்கி
தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அண்மையில் ஒன்பது நாட்கள் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் போராட்டத்தின் ஒன்பது கோரிக்கைகளில் ஒன்றைக்கூட அரசு ஏற்கவில்லை. ஓரகடத்தில் MSI, ராயல் என்பீல்ட், யமஹா ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்வாரியத் தொழிலாளர்களின் போராட்டங்களும் வெடித்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை,பணி நிரந்தரம்,குறைந்தபட்ச ஊதியம் என பல்வேறு தொழிலாளர் பாதுகாப்பு கோரிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே நடைபெற்ற வர்க்கப் போராட்டத்தின் விளைவாக, பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல், பொருளியல் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போதைய பாஜக மோடி அரசு பறித்து வருகிறது.இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள குறைந்தபட்ச தொழிலாளர் நல சட்டப் பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக தொழிலாளர் நலச் சட்டங்களில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்த கால வேலைவாய்ப்பு(Fixed Term Employment – FTE), பயிற்சியாளர் ஊக்குவிப்பு (NEEM) போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.மேலும்,1948 தொழிற்சாலை சட்டம்,.அப்ரண்டீஸ் சட்டம் 1961, 1988 சட்டங்களை ஏற்கனவே லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் தாக்கல் செய்துவிட்டது. இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்த பின்னணியில், தொழிலாளர் மீதான தொடர் ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் தரப்பிலான நலனை நிலைநாட்டிக் கொள்வதற்கும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் நாடுதழுவிய தொழிலாளர் போராட்ட இயக்கத்திற்கான கோரிக்கைகளை தற்போது வலுவாகவும், தொடர்ச்சியாகவும் வலியிறுத்தவேண்டியுள்ளது.
ஆக,
- நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாதாந்திரக் கூலியான ரூபாய் 25000 ஐ (1.2016 இன் அடிப்படையில்) அமல்படுத்து!
- ”சம வேலைக்கு ஏற்ற ஊதிய கொள்கையை” அமல்படுத்து! பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்த்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கு!
- அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு! தொழிலாளர் சட்டங்களை மீறுகிற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடு!
- பல துறைகளில் நிரந்தர வகையிலான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்களையும் பிற தற்காலிக தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கு!ஒப்பந்தத் தொழிலாளர்கள், பழகுதொழிலாளர்கள்(Apprentice) மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வகை செய்கிற சட்டங்களை இயற்றிடு!
- உற்பத்தித் துறையில் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் அனைத்து வித தற்காலிக தொழிலாளர்களையும் அங்கீகரிக்கும் விதமாக அனைத்துத் தொழிலாளர் சட்டங்களிலும் ‘தொழிலாளர்’/ ‘பணியாளர் என்பதற்கான சர்வதேச வரையறையை உருவாக்கு.
- தொழிலாளர்களிடம் இருந்து தொழிற் சங்கப் பதிவிற்கான விண்ணப்பத்தைப் பெற்ற 45 நாட்களுக்குள்ளாக சங்கத்தை பதிவு செய்யவேண்டும் என சட்டமியற்று.தொழிற்சங்கத்தை முன்மொழிகிற அனைத்து சங்க பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களையும் ‘பாதுகாக்கப்பட்ட பணியாளர்’ என்று அறிவித்திடு. இதை தொழிற் சங்கப் பதிவிற்காக சமர்ப்பிக்கப்பட்ட நாளன்றே செய்திடு! தொழிற்சங்க பதிவிற்கான விண்ணப்பம் பெற்ற 15 நாட்களில் தொழிற் சங்கமாக பதிவு செய்வதை சட்டப்பூர்வமாக்கு. நிறுவனத்தில் உள்ள ஒட்டுமொத்த பணியாளர்களில் 15% அல்லது அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கம் உருவானால் அதைக் கட்டாயமாக அங்கீகரி!
- ஆலை வாயில் அருகாமையில், அமைதி வழியிலான தொழிலாளர் போராட்ட உரிமைகளை அங்கீகரி.இது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள தொழிற்சங்க அடிப்படை உரிமையாகும். கவன ஈர்ப்பு போராட்டம்,வேலை நிறுத்தப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொள்வது தொழிலாளர்களின் சட்டப் பூர்வ உரிமையாகும்.இவ்வகையான தொழிலாளர் போராட்டங்களின் போலீஸ் – நிர்வாகம் – நீதிமன்றம் ஆகியவற்றின் அனைத்துவிதமான தலையீடுகளையும் தடுத்து நிறுத்து!
- எட்டு மணிநேர வேலை நேரத்தை அமல்படுத்து. கட்டாய வேலை நேர நீட்டிப்பை சட்டப்படி தண்டனைக்குரியதாக்கு!
- அமைப்புசாரா/முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு முறையான ESI, PF, ஓய்வூதியத் திட்டங்களை அமல்படுத்து!(விவசாயம், வீட்டு வேலை, கட்டுமானம், MNREGA பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர்). முறைசாராத்துறை பணியாளர்களின் அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய சட்டம் இயற்று!
- பலன்வீத வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய சட்டம் இயற்று!
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வருகிற புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்திடு! அவர்களின் தங்குமிடம்,பாதுகாப்பு உள்ளிட்ட அவசிய தேவைகளை உறுதிப்படுத்த தனி சட்டம் இயற்று!
- ஒவ்வொரு துறையிலும் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள், பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்திடு. பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, மகப்பேறுக்கால நலன்கள் மற்றும் பிற வசதிகளை வழங்கிட சட்டம் இயற்றி அமல்படுத்து! ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஒரே விதத்தில் நடத்தப்படுவதையும் ஒரே வித பணிச்சூழல் கிடைப்பதையும் சம ஊதியம் கிடைப்பதையும் உறுதி செய்திடு!
- மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சியாக,ஆலைகளை அரசே கைப்பற்றி ஏற்று நடத்தவேண்டும்!
- கடைசியில் பெறப்பட்ட சம்பளத்தின் அடிப்படையிலோ மூன்றில் இரண்டு பங்கு குறைந்த கூலியையோ ஓய்வூதியமாக வழங்கும் திட்டத்தை அமலாக்கு!
- ‘வேலை இல்லாதோர்’ என்பதற்கான தெளிவான வரையறையை உருவாக்கு. பணிபுரியும் விருப்பமும் திறனும் உள்ள வேலை இல்லாதோருக்கு ஒவ்வொரு மாதமும் ‘வேலை இல்லாதோருக்கான படி’ ஆக ரூ. 15,000 வழங்கிடு!
- அரிசி, பருப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் பொது விநியோக அமைப்பின் கீழ் வழங்கிடு.
- மாருதி, ப்ரிக்கால், கிரஸியனோ ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்கள், சிறையில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்திடு. ‘தொழிலாளர் விரோத செயல்கள்’ எனக் காரணம் காட்டி நிறுவனத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் உடனே பணியில் சேர்த்துக் கொள்!
துண்டறிக்கை பதிவிறக்கம் செய்யவும் : march3
சோசலிச தொழிலாளர் மையம் – MASA (Mazdur Adhikar Sangharsh Abhiyan)
9940963131, 9994094700.