பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்!
‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன அழிப்புப் போருக்கு அரசியல் தலைமை தாங்கிய அப்போதைய அதிபருமான மகிந்த இராசபக்சே ’இந்திய இலங்கை உறவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார். பிப்ரவரி 10 அன்று குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர். நிகழ்வு நடக்கும் இடம் ஐ.டி.சி. கார்டனியா, பெங்களூரு
இலங்கை தொடர்பாக இன்னொரு செய்தி மாந்த உரிமைகளில் அக்கறை கொண்டோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 1990 களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாந்தப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறியதில்லை. இப்போது வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழியில் இதுவரை சுமார் 300 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளன. அதில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையவை. உடல்கள் வரிசையாக புதைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவை குவிக்கப்பட்டுள்ளன. இந்த புதைக்குழிக்கு மிக அருகில் இலங்கை இராணுவ முகாம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த மண்ணில் இருந்து அதிர்ச்சி தரும் சான்றுகள் வெளிவந்த வண்ணம் இருக்க, அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இந்திய ஆளும்வர்க்க ஆற்றல்கள் பாதுகாக்கப்படுவது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான், பெங்களூரு ‘the huddle’ நிகழ்வுக்கு மகிந்த இராசபக்சே அழைக்கப்பட்டிருப்பதாகும்.
இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றும் அதற்கு தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு காண ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசு இதுநாள் வரை இதை ஏற்கவில்லை. இனவழிப்புப் போரின் போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் தந்து, ஆலோசனை கொடுத்துப் பக்கபலமாய் நின்றது. அதன்பிறகு இனக்கொலைக் குற்றத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது. இன அழிப்புக்கு துணை போனது காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு என்றால் இன அழிப்புக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையை செய்வது பா.ச.க. தலைமையிலான இந்திய அரசு ஆகும்.
பன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புப் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, தானே முன்மொழிந்து ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வரசுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இவ்வாண்டு ஏப்ரலுடன் முடிகிறது. வருகிற மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இது குறித்து விவாதம் நடக்கவிருக்கிறது. மார்ச் 20, 21 ஆம் நாட்களில் அறிக்கை முன்வைத்து அடுத்தக் கட்ட முடிவு மார்ச் 22 ஆம் நாள் அன்று எடுக்கப்படவுள்ளது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்து ஐ.நா. பொதுப்பேரவைக்கு இவ்விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை மன்றம் அனுப்ப வேண்டும். இதுவே தமிழர்கள் எதிர்பார்க்கும் அடுத்தக் கட்ட முன்னேற்றமாகும்.
கடந்த ஆண்டு மைத்ரி-இராசபக்சே கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தி குறுக்கு வழியில் பிரதமர் பதவியில் அமர முயன்றதை உலகமே கண்டது. ஆனாலும் அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டு அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் இராசபக்சே.
இந்திய-சிங்கள இனக்கொலை கூட்டணியை முறிப்பதே ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தின் துல்லியமான இலக்காகும். அவ்வகையில் இலங்கை அரசுடான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நாம் போராடி வருகிறோம். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் நிலையெடுத்துள்ளது. அரசியல் உறவைத் துண்டிப்பதே இதில் முதன்மையானதாகும். அவ்வகையில் இராசபக்சேவோ, ரணிலோ, மைத்ரியோ யாராகினும் அவர்களது வருகையை எதிர்ப்பதன் மூலம் இலங்கை அரசின் இன அழிப்பையும் இந்திய-சிங்களக் கூட்டணியையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீது கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்க நலனில் இருந்து மட்டுமே விவாதிப்பதும் அதற்கு துணைசெய்வதும் இது போன்ற சிந்தனை குழாம் நிகழ்வுகளின் நோக்கமாகும். முகமது நசீது இந்திய ஆதரவாளர். அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் சீன ஆதரவாளர். இந்தியாவின் வெளியுறவு அணுகுமுறை என்பது நேருக்கு நேராக முறுக்கிக் கொள்ளாமல் திரைமறைவு வேலைகளின் மூலமாக தனக்கு சாதகமான நிகழ்வுகளை அந்தந்த நாட்டில் அரங்கேறச் செய்வதாகும். கடந்த ஆண்டு மாலத்தீவு விசயத்தில் அதிபர் அப்துல்லா யாமீனைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்வதில் இந்தியா வெற்றியடைந்தது. தேர்தலில் இந்திய ஆதரவு இப்ராகிம் முகமது சோலிஹ் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பின்னான 10 நாட்களில் முகமது நசீதுக்கு வழங்கப்பட்டிருந்த 13 ஆண்டு சிறைத் தண்டனை தவறு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் முகமது நசீது பங்குபெற்றபோது அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் மாலத்தீவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்களின் மீதே தமது புவிசார் அரசியல் நலனைப் பாதுகாப்பதற்கு உலக வல்லரசுகள் காய்நகர்த்தி வருகின்றன. அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் ’அடிக்கிற கையாகவும்’ அதன் தெற்காசிய கூட்டாளியான இந்தியா ’அணைக்கிற கையாகவும்’ காய்களை நகர்த்தி வருகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ’அடிப்பதற்கோ’ அல்லது ’அடிப்பது போல் கை ஓங்குவதற்கோ’ அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தயாராகிறதா? என்று நமக்கு தெரியாது. ஆனால், அணைப்பதற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் பெங்களூருவில் இந்திய இலங்கை உறவுப் பற்றி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இராசபக்சே பேச இருப்பது காட்டுகிறது.
கருத்துரிமை, பேச்சுரிமை, மதசார்பின்மை என்பதற்கு எல்லாம் கம்பு சுற்றும் இந்துக் குழுமமும் அதன் தலைவர் என்.ராமும் இலங்கை அரசு செய்த போர்க் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தவில்லை என்பதோடு அதை எல்லாம் மறைத்து இன அழிப்புப் போர் நடந்துக் கொண்டிருந்த வேளையில் ‘zero casualities’ என்று பொய்ச் செய்தி சொன்னது.
கடந்த பத்து ஆண்டுகளாக அரசற்ற தமிழினம் தன்னுடைய இடையறாப் போராட்டத்தினால் பன்னாட்டு மன்றத்தில் இலங்கையின் அட்டூழியங்களைப் பேசு பொருள் ஆக்கியிருக்கிறது. இந்த பத்தாண்டுகளில், கால அவகாசங்களைப் பெற்று போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதோடு மட்டுமின்றி எஞ்சியிருக்கும் தமிழர்களையும் கட்டமைப்புரீதியான இன அழிப்பு செய்து வருகிறது சிங்கள பெளத்தப் பேரினவாதம். நீதியின் கதவுகளை எப்படியேனும் திறந்திட வேண்டும் என்று இனக்கொலைக்கு ஆளாகிய மக்கள் கூட்டம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இனக்கொலைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் முகமாக அவர் மீதான கறையைப் போக்கும் நோக்கத்தில் இப்படியான விவாத அரங்குக்கு அழைக்கும் வேலையை என்.ராம் செய்கிறார். இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்ட வகையிலேயே மாந்த உரிமைகள் அனைத்தையும் இந்துக் குழுமம் உயர்த்திப் பிடிக்கும் என்பதை இந்நிகழ்வுக்கு இராசபக்சேவை அழைத்ததன் மூலம் அது மீண்டுமொருமுறை வெளிக்காட்டி உள்ளது.
கோத்தபய இராசபக்சேவையும் மைத்ரிபால சிறிசேனாவையும் இந்திய உளவுத்துறை கொல்ல முயன்றது என்ற செய்தியின் பெயரால் சிங்கள ஆளும்வர்க்கத்திற்குள் நடந்த முட்டல் மோதல்களில் இராகபக்சே குடும்பத்திற்கும் இந்திய அரசுக்குமான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ச.க. காரரான சுப்பிரமணிய சுவாமி, இராசபக்சேவை அழைத்துவந்து இந்திய அரசுடனான உறவைப் புதுப்பிக்க முயன்றார். அதற்குப்பின் இராசபக்சேவால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இராசபக்சே எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை நாடாளுமன்றத்தில் அமர நேரிட்டது. மைத்ரி- இராசபக்சேவின் முயற்சியை முறியடித்ததில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் பங்கு முதன்மையானது. அவ்வேளையில் வெளிப்படையாக கருத்துக் கூறாமல் அதே நேரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களையும் மலையகத் தமிழர்களின் தலைவர்களையும் தன் கைப்பிடியில் வைத்திருந்த இந்திய அரசு மைத்ரி-இராசபக்சே முயற்சியை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்தது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு தலைமை தாங்கும் இராசபக்சேவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுநிலையை சீர்செய்யும் வேலையைத்தான் இப்போது என்.ராம் செய்கிறார். இலங்கையுடனான இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்து தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இருக்கும் நிலைப்பாட்டிற்கு நேரெதிரான திசையில் செயல்படுவதற்கு என்.ராம் என்பவர் யார்? இந்நாட்டின் கொள்கை வகுப்பாளரா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரா? இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா? இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா? இந்தியாவின் வெளிநாட்டு தூதரா? மக்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு கட்சியின் தலைவரா?
130 கோடி மக்கள் தொகையுடன் 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டின் சட்டமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளாலும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாலும் கேளிக்கை விடுதிகளிலும் விருது வழங்கும் விழாக்களிலும் ஐ.டி.சி. கார்டன்களிலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.
இராசபக்சே இலண்டனுக்குள் நுழையும் போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து இலண்டன் வாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் போராடியுள்ளனர். 2010, 2012 இல் இலண்டனில் இராசபக்சே தான் பங்குபெறவிருந்த நிகழ்வை ரத்து செய்துகொண்டு ஓடியதுகூட நடந்தது. 2012 இல் சர்வதேச புத்த விழாவுக்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு இராசபக்சே அழைக்கப்பட்டிருந்த பொழுது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1000 தமிழர்களுடன் 41 பேருந்தில் மத்திய பிரதேசத்திற்கே சென்றுப் போராடினார். 2014 ஆம் ஆண்டு மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இராசபக்சே வந்த போது திரு வைகோ தில்லியில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார். இவையெல்லாம் இனக்கொலையாளி இராசபக்சேவின் வருகைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு சிற்சில எடுத்துக்காட்டுகளாகும்.
இராசபக்சேவை இந்துக் குழுமம் அழைத்திருப்பது மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காக கொண்டே ஆகும். இராசபக்சேவின் வருகையைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டியதும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காகக் கொண்டே ஆகும்.
எனவே, இராசபக்சேவை அழைத்ததைக் கண்டித்து அதை தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது வருகிற ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை ஓட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.
இனக்கொலையாளி இராசபக்சேவே! எங்கள் நாட்டுக்குள் வராதே! #GobackGenocidalRajapakse
செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499