மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் !

29 Jan 2019

‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.

 

தணிப்பரிதாம் துன்பமிது!

தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

தமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

– தமிழ் இயக்கம் 5வது பாடல் வாணிகர்

தமிழகத்தில் தொடர்ந்து தமிழை ஆட்சி மொழியாக்கிடவும், பயிற்று மொழியாக்கிடவும், தமிழைக் கல்வி மொழியாகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் அரசு வேலை தரவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு தொடர் செயல்பாடுகளைத் தமிழ்த்தேச மக்கள் முன்னணி நடத்திவருகிறது, அதன் தொடர் நிகழ்வாக மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் கருத்தரங்கம், வருகிற சனவரி 25, 2017 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.

ஏன் இந்தக் கருத்தரங்கம்?

தமிழகத்தில் படித்த, படிக்காத யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. ஆனால் இந்தி படித்தால் இந்தியா, முழுக்க வேலை பார்க்கலாம். ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை பார்க்கலாம் என்ற பொய்யான. உளவியலை அரசும், சில ஆளும் வர்க்கத்தினரும் மக்களிடையே எப்பொழுதும் பரப்பிய வண்ணம் உள்ளனர். அதே சமயம் இருக்கிற கொஞ்சநஞ்ச வேலை வாய்ப்பையும் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தேர்வு எனும் பெயரில் இந்தி படித்தவருக்கும், ஆங்கில வழிக் கற்றோருக்கும் அள்ளித்தர விதிகளை வகுத்திருக்கிறது மைய அரசு. அதற்குத் துணைபோகிறது மாநில அரசு.

சான்றாக, தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு எப்படி நடக்கிறது என்றால் அவர்களின் தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு முன் பொது அறிவு மற்றும் நுண்ணறிவைச் சோதிப்பதாக ஒரு தேர்வினை எழுத வேண்டும். அதற்கான வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் அமையும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்து அவர்களுக்குரிய தமிழ் சார்ந்த தோவின் விடைத்தாள்கள் திருத்தப்படும். தமிழ் மாணவருக்கோ இந்தி மொழி அன்னிய மொழி! ஆங்கிலமும் அன்னிய மொழி! ஒரு பத்தி கொடுத்து அதைப் படித்துப் புரிந்து கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதச் சொன்னால், இந்தி தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தாருக்கு நேரடித் தாய்மொழியாகவும் புரிந்துகொள்ளும் மொழியாகவும் இந்தி இருப்பதால் அவர்கள் எளிதாக மதிப்பெண் பெற முடிகிறது. தமிழ் படித்தவர்கள் மட்டுமல்ல. தமிழ்வழி பிற துறைசார் படிப்பினைப் படித்தவர்களும், பிற தாய்மொழி வழிக் கற்றவர்களும், ஏனைய மொழிவழித் தேசியத்தாரும் தோல்வியைத் தழுவுகின்றனர்.

உடனே, கல்வி என்பது வேலை பெறும் கருவி மட்டும்தானா? என்று பலர் கேட்கிறார்கள்.

எந்தப் பாதுகாப்பும் சொத்துரிமையும் இல்லாத அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது. இந்தப் படிப்பைக் கொண்டாவது தங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னுக்கு வந்து விட மாட்டார்களா? என்ற ஏக்கத்தில்தான். இதைத் தவறான மனநிலை எனச்சொல்ல முடியுமா? அம்மாணவன் சுய சிந்தனையை வளர்த்து, அறிவு சார்ந்த, கலை, பண்பாடு சார்ந்த வெளிப்பாடுகளை அமலாக்க இந்தச் சமூக நிலைமைகள் எந்த அளவிற்குச் சாதகமான சூழலை வழங்கி இருக்கிறது?

கடைநிலையில் வேலை பார்க்கும் தாய்மாரும் தம் குழந்தையை வசதி இருந்தால் மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சியில் ஆங்கில வழியில்தான் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பேன் என்று ஏங்குகிற உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தையும், ஆங்கில வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தினையும், குறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுமானால் இந்த உளவியலின் பின்புலம் நன்றாகப் புரியும். ஆங்கிலவழி கற்றோர் வேலைவாய்ப்புகளும் நிர்வாகம், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர் பதவிகளில் பெற்ற இடங்களும் அதிகமாகவே இருக்கும்.

“வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது” என்று கூறித் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த கழக அரசுகள் 40 வருடங்களுக்கு முன்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த மெட்ரிக் பள்ளிகளை ஆயிரக்கணக்கில் வளர்த்து விட்டிருக்கின்றன. இன்று சிபிஎஸ்சி கல்வி முறையைப் பரவலாக்கி, ஒரு பாடமாகத் தமிழ் படித்ததையும் ஒழித்து, விரும்பினால் தமிழ் படிக்கலாம்” என்ற நிலைமைக்குத் தள்ளியிருக்கிறார்கள். ஒன்றை அமலாக்குவதற்கு முன்னால் அதற்கான களத்தைத் தயார் செய்வதில் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.

இன்று ஆங்கிலம், இந்தி எனும் இருபெரும் எதிரிகளுக்கு எதிராய்க் களமாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள் தமிழன்னை . உலகில் எந்த மொழியிலும் இல்லாத அளவில் இந்தி ஒழிக’, தமிழ் வாழ்க! எனத் தமிழுக்காகக் குரல் எழுப்பி தம்மைத் தாமே நெருப்பிலிட்டுக் கொண்டவர்களும் மாநில மைய அரசின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கி நூற்றுக்கணக்காய் மாண்டுபோன வீரர்களும் நம் மனக்கண் முன் நிற்கின்றனர். அவர்களின் ஈகத்தை நாம் வீணாக்கிவிடலாகாது.

‘மொழி’ என்பது வெறும் தகவல் வெளிப்பாட்டுக் கருவி மட்டும் அல்ல. அது தான் சார்ந்த தேசிய இனத்தின் அனைத்தும் தழுவியதன் குறியீடு. ஒரு தேசிய இனத்தின் நாகரீகம், பண்பாடு. இலக்கியம், இலக்கணம், விழுமியங்கள், அறிவியல், வரலாறு. அறிவுசார் உடைமைகள் என அனைத்தும் தழுவியதன் வெளிப்பாடே மொழி, தமிழ்த்தேசிய இனத்திற்கு தமிழ் அஃதே!!

சமசுகிருதம் என்பது வேதம், யாகம், இதிகாச புராணம், பிறப்பால் உயர்வு, தாழ்வினை நியாயப்படுத்துதல் போன்றவற்றின் குறியீடு.

தமிழ் இயற்கை சார்ந்த ‘வாழ்வியல், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்ற வாழ்க்கை நெறிகளின் குறியீடு.

சமசுகிருதம் நம்மீது திணிக்கப்பட்டது என்பது அவர்களின் வாழ்வியலை நம்மீது திணிப்பதுதான். அது போலவே ஆங்கிலம் திணிக்கப்பட்டாலும் அதுவும் நம் வாழ்வியலை நசுக்குகிறார்கள் என்றுதான் பொருள்,

ஆக, மொழித்திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், இந்தி பேசுவதாகச் சொல்லி, இந்தியைப் பிற தேசிய இனத்தின் மீது திணிப்பது என்பது. இந்தியாவைப் பரந்த சந்தையாகக் கொண்ட ஒற்றை நாடாக ஆக்கி, சுரண்டலுக்கு மக்களை ஆட்படுத்துவதுவே ஆகும். இந்து. இந்தி. இந்தியா என்பது ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத பார்ப்பனிய பாசிச கும்பலின் கருத்தியல் ஆகும்.

நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், ஊடகங்களில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, எதைப் படிக்க வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதையும் கார்ப்பரேட்டுகளும், பார்ப்பனிய பாசிசகாவிக் கும்பல்களும்தான் தீர்மானிக்கின்றன.

இடதுசாரி, சனநாயகச் சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் இந்தப் பெரும் தீமையை எதிர்த்துக் கடுமையாகக் களமாட வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். சென்ற ஆண்டு 2018, 25 சனவரி இதே நாளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி முன்னெடுத்த தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டின் தொடர்ச்சியே இக்கருத்தரங்கம். சுயநிர்ணய உரிமை இன்றி மொழி உரிமையை மீட்க முடியாது. மொழி உரிமைக்கான போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்கின்ற தெளிவோடும் உறுதியோடும் நாம் முன்னெடுப்போம் நமது பணியை.

வாருங்கள்! ஒன்றுபடுவோம். தமிழையும், தமிழர் வாழ்வினையும் மீட்டெடுப்போம்!

 

நிகழ்ச்சி தலைமை

ஜோ. கென்ன டி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி

வரவேற்பு:

தோழர் இரணியன், மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, நாகை .

முன்னிலை: தோழர்கள் பிரபாகரன், இரகு, செல்வகுமார், விஷ்ணு, தமீமுன் அன்சாரி

நோக்கவுரை: தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி |

 சிறப்புரை:

‘தமிழ் – ஆட்சிமொழி’ – தோழர் பாட்டாளி

‘தமிழ் – தேசிய ஓர்மைக்கா? இனவாதத்திற்கா?’ – தோழர் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

“தமிழ் – பயிற்று மொழி’ தோழர் சிற்பிமகன்

நன்றியுரை: தோழர் அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தஞ்சை

நிகழ்ச்சித் தொகுப்பாளர் : தோழர் சுரேஷ்குமார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

காவேரி டெல்டா மாவட்டங்கள்

94430 79552,72999 99168,

www.peoplesfront.in

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW