ரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு  

15 Jan 2019

1

இளமைக்காலம்

ரோசா லக்ஸம்பெர்க், 1871 ஆம் ஆண்டு, மார்ச் 5 இல் போலந்து நாட்டின் சிறு நகரமான சமோஸ்க்கில் பிறந்தார். அப்போது போலந்து,   ஜாரிஸ்ட் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. நிலப்பிரபுத்துவ பிற்போக்கும், வறுமையும் கொண்ட  பிரதேசமாக போலந்து இருந்தது. போலந்து மக்களின் சமூகப் பண்பாட்டு வழக்கங்களில் ரஸ்சியமயமாக்கல் மேலிருந்து திணிக்கப்பட்டது. அரசை எதிர்க்கிறவர்கள் நாடு கடத்தப்பட்டனர். ரோசா பிறந்த சமோஸ்க், போலந்து-ரஷ்ய எல்லையில் யூத மக்கள் அதிகம் வாழ்கிற சிறு நகரம் ஆகும். ஜார் ஆட்சியில் அன்றைய போலந்து யூத மக்களின் மீதான ஒடுக்குமுறை தீவிரமாக இருந்தது. யூதர்கள் தனிச் சட்டத்தால் ஒடுக்கப்பட்டனர். ரோசாவின் பெற்றோர்கள் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ரோசாவின் தந்தை, அன்றைய மேற்குலக லிபரல் சிந்தனையின் தாக்கமுடையவர். போலந்து யூதர்களின் அறிவொளி காலத்தைய முற்போக்கு எழுத்தாளர் லியோன் பெரிட்சின் குடும்பத்திடம் ரோசா குடும்பம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தது. ரோசாவின் தந்தை ஐரோப்பிய இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மையை சகிக்க முடியாதவர். போலந்து தேசிய இயக்கத்தின் ஆதரவாளர். ஒப்பிட்டளவில் கல்வி வசதியும் மிக்கவர்.

பெற்றோருக்கு,ரோசா ஐந்தாவது இளைய குழந்தையாவார்.ரோசாவிற்கு இரண்டு வயது ஆகும்போது நல்ல கல்வி வாய்ப்பை வழங்கும் பொருட்டு வார்சா நகரிற்கு அவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. சிறு வயதிலேயே இடுப்பு நோயால் பாதிக்கப்பட்ட ரோசா அன்பும் அரவணைப்பும் மிக்க சூழலில் வளர்க்கப்பட்டார். ரோசாவின் அறிவு வளர்ச்சியில் அவரது தாயின் தாக்கம் அதிகம் உள்ளதாக தெரிகிறது. ரோசாவின் தாய் ஜெர்மன், பிரஞ்சு மொழியில் மிகப் பரிச்சியமானவர் இளமையிலேயே வீட்டில் போலந்து ஜெர்மானிய இலக்கியங்களை படிப்பதற்கு அதிகம் ஊக்கிவிக்கப்பட்டார்.

ரோசா படித்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு, தாய்மொழியான போலீஷ் மொழியில் பேசத் தடை என நெருக்கடி மிகுந்தவையாக இருந்தது. இதன் காரணமாக இயல்பாகவே, ஜாரிஸ்ட்  ஆட்சியின் யதேச்சியதிகாரத்திற்கு எதிரான மாணவர் போராட்ட அலையில் ஈர்க்கப்பட்டார். பள்ளி இறுதிக் காலங்களில் ஜாருக்கு எதிரான மாணவர் இயக்கங்களில் இணைகிற ரோசாவிற்கு, பள்ளியின் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிற தங்க பதக்கம் மறுக்கப்படுகிறது. பதின்ம வயதில் புரட்சிகர சோஷலிச இயக்கமான PROLETARIT கட்சியில்  இணைந்து செயல்படத் தொடங்குகிற ரோசா, மார்க்ஸ் எங்கெல்சின் நூல்களை ஆழமாக பயில்கிறார். அரசின்  கடும் நெருக்கடிகளுக்கு உள்ளான இக்கட்சியின் தொழிலாளர் இயக்க உருவாக்கத்திற்கு தீவிரமாக செயல்படுகிறார்.

போலீஸ் கண்காணிப்பு வளையம் ஒருகட்டத்தில் கட்சி செயல்பாட்டாளர்கள் மீது தீவிரமாகுகிற நிலையில் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்படலாம் அல்லது தூக்கில் தொங்க விடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் போலந்து தோழர்களின் ஆலோசனைக்கு ஏற்ப போலீசில் கையில் அகப்படாமல் சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரத்திற்கு புறப்பட்டார்.  அப்போது, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளர்ச்சியாளர்களின் புகலிடமாக இருந்தது. ஜூரிக்கிற்கு 1887 இல் ரோசா தப்பிச்செல்கிறார். அங்கு அவரது  மூத்த சகோதரர் ஜோசப்புடன் இணைந்து ஜூரிக் பல்கலைக் கழகத்தில் சேர்கிறார்.

2

ஜூரிக் நாட்கள்

ஜூரிக், ஐரோப்பிய நாடுகளின் புரட்சிகர அறிவாளிகளுக்கான கேந்திரமாக அந்நாட்களில் திகழ்ந்தது. ஒரு பொன்னுலக சோஷலிச எதிர்காலத்தை கட்டுவதற்கு வாழ்வை அர்ப்பணித்தவர்கள், மனித விடுதலை குறித்து ராப்பகலும் சிந்தித்தனர் செயல்பட்டனர்.

அப்போது ஜெர்மனியில் அமலில் இருந்த சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டத்தால், ஜூரிக்கில் தங்கியிருந்த ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் எழுத்தாளருமான லுபெக் வீட்டில் ஆரம்பத்தில் ரோசா தங்கினார். ஜூரிக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ரோசா அங்கு, தத்துவதம், இயற்கை அறிவியல், பொருளாதாரத் துறைகளை பயின்றார். ஆளும்வர்க்க கட்டமைப்பிற்கு  ஏற்றார்போல பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிற  கல்வியில் விமர்சனம் கொண்டிருந்த ரோசா, அதன் எல்லைகளை கவனத்தில் கொண்டே படிப்பைத் தொடர்ந்தார். படிப்பிற்கு வெளியே பல சோசலிஸ்ட் புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, ரஷ்யா, ஜெர்மன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த கிளர்ச்சியாளர்களை அவர் சந்தித்தார். மேலும் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியைச்(SDP) சேர்ந்த சோசலிச கிளர்ச்சியாளர்களுடன் அதிக நட்பு கொண்டிருந்தார். பின்னாட்களில் ரோசாவிற்கு சிறந்த தோழர்களாக திகழ்ந்த அடால்ப் வார்சாவ்ச்கி, ஜூலியன் மார்ச்லேவ்ச்கி ஆயியோரை ஜூரிக்கில் சந்தித்தார். அதேபோல ஜூரிக் வட்டத்தில்தான் அவரது தனிப்பட்ட காதல் வாழ்விலும் அரசியல் கிளர்ச்சியிலும் முக்கிய சகாவான ஜோகிச்சை சந்திக்கிறார்.

ஜோகிச, லூதியானா நாட்டிலிருந்து ஜூரிக்கிற்கு தப்பி வந்தவர். பணக்கார யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாட்டாளி வர்க்க புரட்சிக்காக தன்னை ஒப்புவித்தவர். புரட்சிகர பிரச்சாரங்களால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர். வில்னாவில் பாட்டாளி வர்க்க இயக்கத்தை கட்டிய அமைப்பாளர். ரோசாவின் தொடக்க கால அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.

1892 ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம், அதற்கெதிரான ஜாரின் வன்முறை போலாந்து சோசலிச இயக்கத்தில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. பொருளாதாரப் போராட்டம் மற்றும் பிளாங்கிவாதத்திற்கு எதிரான சமூக ஜனநாயகவாத தத்துவார்த்த அரசியல் போராட்டத்தை இந்நிகழ்ச்சியலையொட்டி ஆழமாக எழுதத் தொடங்கினார். போலாந்தில் ரோசாவும் ஜோகிச்சும் இணைந்து போலந்து சோசலிச ஜனநாயகக் கட்சியை(SOCIALDEMOCRACYOF THE KINGDOM OF POLAND) உருவாக்கினார்கள். அதே நேரத்தில் கல்விப் படிப்பைத் தொடர்ந்த ரோசா, தனது டாக்டர்  பட்ட ஆய்வுக்காக  “போலந்தில் தொழிற்துறை வளர்ச்சி” (Industrial development of Poland) எனும் தலைப்பில் ஆய்வு நூலை எழுதினார்.

போலந்தில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரை எழுதினார். ரோசாவின் போலந்து தொடர்பான கட்டுரைகள், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் கவுட்ஸ்கி நடத்தி வந்த NEUEZEIT இதழில் வெளிவந்தது. ரோசா ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களிடம் கடிதப் போக்குவரத்தில் இருந்தார். அப்போது ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்திடம் வலுவான அமைப்பு பலத்துடன் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தது.

பாரீஸ் கம்யூன் வீழ்ச்சிக்கு பின்னர் புரட்சியின் மையம் பிரான்சில் இருந்து ஜெர்மனிக்கு மாறியது என மார்க்சும் எங்கெல்சும் சரியாகவே அவதானித்தனர். வேகமான தொழில்வளர்ச்சி, பாட்டாளி  வர்க்க எண்ணிக்கையின் அதிகரிப்பு, ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் அமைப்பு பலம் ஆகியவை உலக பாட்டாளி வர்க்க புரட்சியை ஜெர்மனி முன்னெடுத்துச் செல்லும் என்கிற வரலாற்று நிலைமையை உருவாக்கியது. இந்நிலைமை ரோசாவை  ஜெர்மனிக்கு செல்கிற ஆர்வத்தை அதிகமாக்கியது. இறுதியாக 1897 இல் ஜூரிக்கில் இருந்து விடைபெறுகிற ரோசா பிரான்சு சென்று அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்கிறார்.

3

சோசலிசம், புரட்சி, வேலை நிறுத்தம்

ஜெர்மனியில் வேற்று நாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டமையால் ,நாடகத் திருமண பதிவு செய்து போலீசை ஏமாற்றி பெர்லினில் குடியேறுகிறார். ரோசா பெர்லினுக்கு வந்த நேரத்தில்,ஜெர்மனியில் சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் அகற்றப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்திருந்த சூழல் நிலவியது. அத்தேர்தலில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து சமூக ஜனநாயக பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிவந்தார். கவுட்ஸ்கியின் மனைவி லூயி மற்றும் கிளாராஜெட்கின் ஆகியோருடன் நெருக்கமான நட்பு பாராட்டினார்.

இக்காலகட்டத்தில், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் வலது சந்தர்ப்பவாதம் மெல்ல மேலோங்கி  வெளிவரத் தொடங்கியது. மார்க்சின் பிரான்சில் வர்க்க போராட்ட நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முன் உரையை பிடித்துக் கொண்டு முதலாளித்துவ சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்கு கோட்பட்டு விளக்கம் கொடுக்கிற மார்க்சிய திருபுவாதம் கட்சியை அரிக்கத்தொடங்கியது. பெர்ன்ஸ்டைன் அதைத் தொடங்கி வந்தார். சோசலிசப் புரட்சியை எதிர்காலத்திற்கு தள்ளி வைத்து, முதலாளித்துவ நாடளுமன்ற சீர்திருத்தையே நீண்டு செல்கிற புரட்சியாக கோட்ப்பாட்டு விளக்கம் அளித்தார்.

இந்நிலையில்தான், மார்க்சிய திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ரோசா அதிக அக்கறை செலுத்தத் தொடங்குகிறார். குறிப்பாக, பென்ஸ்டைனின் திருபுவாத கோட்பாட்டிற்கு எதிராக உறுதியான தாக்குதல்களை தொடுத்து வந்தார். சமூக ஜனநாயக போராட்டத்தின் அன்றாட செயல்பாடு என்பது அரசியல் அதிகாரத்தை நோக்கியதாகும். புரட்சியால் பெறப்பட்ட அரசியல் அதிகாரத்தின் பயன்பாடு மூலமாக நிலவுகிற சமுதாய வடிவத்தை மற்றொரு முன்னேறிய வடிவத்திற்கு மாற்றிச் செல்வதைக் குறித்ததாகும்.

புரட்சி என்பது அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற அரசியல் கேள்வியை பற்றியது. மாறாக சமூக ஜனநாயக சீர்திருத்தல்வாத கோரிக்கையை பற்றியது மட்டுமே அல்ல. சமூக ஜனநாயக கோரிக்கையில் முற்போக்கானதை தேர்ந்துகொள்வது மட்டுமல்ல. முதலாளித்துவ எல்லைக்குள்ளாக சமூக சீர்திருத்த நலன்களை  போராடிப் பெறுவது பற்றியது மட்டுமே அல்ல. .அதாவது முதலாளித்துவ பாராளுமன்ற வடிவத்துடன் ஒத்துழைப்பதா  அல்லது  ஏற்காமல் ஆயுதப் போராட்டத்தை முன்வைப்பதா என்பது பாட்டாளி வர்க்கமானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்த பிரச்சனையே தவிர  சமூகப் பொருளாதார சீர்திருத்தை குறித்த பிரச்சனையல்ல! என்பது திரிபுவாதத்திற்கு எதிரான ரோசாவின் போராட்டத்தின் சாரமாக இருந்தது.

பெர்ன்ஸ்டைன் சீர்த்திருத்தவாதத்திற்கு  எதிரான ரோசாவின் கட்டுரைகள்  சீர்திருத்தமா? புரட்சியா? எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது.

இதன் பின்னர், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கியத்  தலைவராக ரோசா உருவெடுத்தார். 1905 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலும் போலந்திலும் புரட்சிகர எழுச்சி ஏற்பட்டது. ரஷ்யாவிற்கு புரட்சியை நேரடியாக கண்ணுருவதன் பொருட்டு ஆபத்தான ரயில் பயணத்தை மேற்கொண்டார். அங்கு கண்ணுற்ற யதார்த்த போராட்ட வடிவங்களை ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என முனைப்பு காட்டுகிறார். ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்திடம் ரஷ்ய புரட்சியின் எழுச்சி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அது குறித்து தொழிற்சங்க மேடைகளில் பேசுமாறு ரோசாவிற்கு ஜெர்மன் தொழிலாளர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். ரஷ்யாவின் மாபெரும் வேலைநிறுத்த போராட்ட வடிவை ஜெர்மன் தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியோ வேலை நிறுத்தப் போராட்டத்தை ‘நெருப்புடன் விளையாடுகிற வேலை’ என ரோசாவின் அறைகூவலுக்கு முதலில் கட்டுப்பாடு விதிக்கிறது. பின்னர் ரோசாவின் வாதம் வெற்றி பெறுகிறது. போலந்தில் புரட்சிகர எழுச்சியில் ஜோகிச் மற்றும் இதர தோழர்களுடன் பங்கேற்ற ரோசா ஜார் அரசால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்படுகிறார். போலந்து  எழுச்சியில் ரோசாவுடன் பங்கேற்ற –ஜோகிச்சும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.

4

ஆசிரியர், பத்திரிக்கையாளர், நடைமுறை புரட்சியாளர்

1905  ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிகர எழுச்சி ஜார் அரசால் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பெர்லினுக்கு திரும்புகிற ரோசா இதற்கு பிந்தைய பத்தாண்டுகளில் கட்சிப் பள்ளியில் அரசியல் பொருளாதார வகுப்பு எடுப்பது, கட்சி பத்திரிக்கைகளில் எழுதுவது, பொருளாதார ஆய்வுகளில் ஈடுபடுவது, சுரங்கத் தொழிலாளர் இயக்கம் கட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

1913 இல் அவரின் முக்கிய பொருளாதார பங்களிப்பான “மூலதனக் குவியல்”( The accumulation of capital-A contribution to an economic explanation of imperialism )எனும் நூல் வெளிவந்தது. முதலாளித்துவமானது முதாலாளித்துவமல்லாத நாடுகளில் மூலதனத்தை ஏற்றுமதி செய்து, அந்நாடுகளின் சந்தைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மென் மேலும் வளர்கிறது என அந்நூலில் கோட்ப்பாட்டு விளக்கம் அளித்தார். ரோசாவின் இந்த பங்களிப்பை மார்க்ஸ் விட்ட இடத்தில் இருந்து ரோசா தொடர்ந்தார் என்பார் ஜார்ஜ் லூகாஸ். காலனிய நாடுளின் வளச்சுரண்டலை ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சியுறுவதும் பின்னார் அதன் சொந்த முரண்பாட்டால் வீழ்ச்சியுறுவதையும், சோசலிசம் தவிர்க்க முடியாதெனவும் “மூலதனக் குவியல்” நூலில் ரோசா எடுத்துக் காட்டியிருப்பார். ரோசாவின் இந்நூலுக்கு எதிராக கவுட்ஸ்கி, ஒட்ட்போயவர் போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்களின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கிற விதமாக “மூலதனக் குவியல்-விமர்சனத்திற்கு எதிராக”(Accumulation of capital -anti critique எனும் நூலை எழுதி வெளியிட்டார்.

இக்காலகட்டத்தில். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் SPD முழுவதும் வலது சாய்விற்கேற்ப மறுகட்டமைப்பு செய்கிற  பணியை எபெர்ட் மேற்கொள்கிறார்.கட்சி மென் மேலும் வலது படுகுழியில் வீழ்கிறது.

போர்மேகங்கள் ஐரோப்பாவை சூழ்ந்து வந்த நிலையில், போருக்கு எதிரான கம்யூனிஸ்ட்களின் திட்டங்களுக்கு கட்சியை ஆயத்தப் படுத்துகிறார் ரோசா . இறுதியாக,1914 ஆம் ஆண்டின் கோடையில் முதலாம் உலகப் போர் தொடங்கியது.

5

முதலாம் உலகப் போர்

.உலகை  மறு பங்கீடு செய்துகொள்கிற ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான உலகப் போரில் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி சந்தர்ப்பவாத நிலைஎடுத்தது..போர் தொடங்கும்வரை, போரை எதிர்த்த சோசலிஸ்ட் கட்சிகள், போர் தொடங்கியதும் போருக்கு ஆதரவளித்தன. லெனின் தலமையிலான போல்ஷிவிக் கட்சி, உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என புரட்சிக்கு அறை கூவல் விடுத்தன. ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியோ(SPD )  தந்தையர் நாட்டை காப்போம் என அறைகூவி நாடாளுமன்றத்தில் போரில் .ஜெர்மன் பங்கேற்பிற்கு ஆதரவளித்தது. ஜெர்மன சமூக ஜனநாயக கட்சியானது, கட்சியின் திட்டத்தையும் நடைமுறையும் கேலிக்குரியதாக்கியது.

ரோசா, கிளாரா ஜெட்கின், ஜோகிச், லீபட்நீக் உள்ளிட்ட சிறு சோசலிஸ்ட் தலைவர்களே போரை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் போருக்கு எதிரான ரோசாவின் அனல் பறக்கிற புகழ்பெற்ற பிரசாரங்களால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 1915-16 ஆண்டுகளிலும் 1917 இலும் நீண்ட சிறை வாசத்தை எதிர்கொண்டார். ரோசா சிறையில் இருக்கும்போது தான் ரஷ்யாவில் போல்ஷிவ் புரட்சி வெற்றிபெறுகிறது. சோவியத் புரட்சியை வரவேற்ற ரோசா, அதேசமயம் லெனினின் கட்சி மையவாதம், தேசிய இன சிக்கல், தேர்தல், நிலப்பகிர்வு உள்ளிட்ட கேள்விகளில் லெனினை கூர்மையாக விமர்சித்தார். பின்னர் ரஷ்யப் புரட்சி நூலில் இதை தொகுத்து விமரித்தார். அதில் சோவியத் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது கட்சியின் சர்வாதிகாரம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

6

1918-ஜெர்மன் புரட்சி

முதல் உலகப் போரின் முடிவானது ரஷ்யா, ஹங்கேரி-ஆஸ்திரியா-ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெரும் தொழிலாளர் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. சோவியத்தில் புரட்சி, ஸ்பெயினில் அனார்கி சின்டிகளிஸ்ட்களின் உள்நாட்டு யுத்தம் என ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்  போராட்ட அலை வீசியது. ஜெர்மனியில் பேரரசர் கைசர் வில்ஹாம் தூக்கிஎறியப்பட்டு குடியரசு அறிவிக்கிற நிலை ஏற்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ரோசாவும் சிறையில் இருந்து வெளியேறி பெர்லின் வந்தார்.

முன்னதாக 1917 இல் சமூக ஜனநாயக கட்சி இரண்டாக உடைந்தது. பிரெட்ரிக் எபெர்ட் தலைமையிலான முதலாளித்துவ போர் ஆதரவு அணி SPD யின் தலைமைக்கு வந்து பெரும் குழுவை வெளியேற்றியது. சமூக ஜனநாயக கட்சியில் இருந்து பிரிந்த  மைய வலதுகள் UPSD என்ற கட்சியை தொடங்கினர். ரோசா UPSD  இல் ஸ்பார்டகஸ் லீக் என்ற அணியாக செயல்பட்டுவந்தார். இந்நிலையில் நாட்டின் ஆட்சி அதிகாரம் ஜெர்மன் சமூக ஜனநாயாகவாதிகளின் கையில்(SPD) தானாக வந்து விழுந்தது. எபெர்ட் தலைமையிலான SPD  கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது. ராணுவம், அதிகார வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினர் SPD க்கு ஆதரவு அளித்தன. ஆரம்பத்தில் UPSD எபெர்ட் தலைமையிலான ஆட்சிக்கு  ஆதரவளித்து ஆட்சியில் பங்கேற்றது. ரோசாவின் ஸ்பார்டகஸ் லீக் மட்டுமே புரட்சியை ஆழப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலைகளை  தேசியமயப் படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்களை ஆயுத பாணியாக்கப்படவேண்டும்  என எபெர்ட் அரசை எதிர்த்தது. இறுதியில் UPSD  இருந்து பிரிந்த ரோசா  லீபிட்நீக்குடன் இணைந்து ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். ஒருபுறம் எபெர்டின் ராணுவம், போலீஸ் படை, ஆதரவாளர்கள் மறுபக்கம் ரோசாவின் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, UPSD இருந்து சில  ஆதரவு குழுக்கள், ஆயுதம் தாங்கியே சொற்ப எண்ணிக்கையில்  தொழிலாளர் படை என ரோசா எதிர்புரட்சிகர சக்திகளால் விரைவாகவே தனிமைப் படுத்தப் பட்டார்.

சோவியத் புரட்சியின் போது தொழிலாளர் எழுச்சிக்கு தலைமை தாங்கிய போல்ஷ்விக்குகள் எதிர்புரட்சியை நசுக்கி புரட்சியை முழு நிறைவாக்கினார்கள். ஜெர்மன் புரட்சியில், காலம் கடந்து விட்டது. ரோசா தலைமையிலான புதிய ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது போதுமான அமைப்பு பலமும் நாடுதழுவிய பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவும் அமையப் பெறாததால் தனிமைப்பட்டது. எதிர்புரட்சிகர சக்திகள் வென்றது. இறுதியில் 1919, ஜனவரி 15 இல் எபெர்ட் ஏவிய தனியார் ஆயுத கொலைப் பிரிவு ஒன்று ரோசாவையும் லீபிட்நீக்கையும் சுட்டுக் கொன்றது. அதன் பின்னர் நடைபெற்ற நான்காண்டு தொழிலாளர் போராட்டமும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஜெர்மன் புரட்சியின் கடைசி வாய்ப்பும் பறிபோனது.

– அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW