“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் !!
“சம வேலைக்கு சம ஊதியம்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் தண்ணீர் உணவின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள 2000க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2009க்கு பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாத ஊதியம் 18,000 ரூ முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே கொடுப்பதாக கூறுகிறார்கள். அதுவும் தொடக்க ஊதியமாக 5,200 ரூ மட்டுமே கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிகளவு ஊதியம் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியத்தை வழங்காமல் பிரிப்பது ஏன்? நாங்கள் பல முறை அரசிடம் முறையிட்டோம். ஆனால் எந்த பலனுமில்லை. இங்கு வந்திருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வாடகை வீட்டில்தான் வசித்துவருகிறார்கள். பிள்ளைகளைப் படிக்கவைத்து வாடகையைக் கொடுத்து குறைந்த சம்பளத்தில் எவ்வாறு எங்கள் வாழ்க்கையை நடத்தமுடியும்? என கேள்வி எழுப்புகிறார்கள்.
பாம்பு, தேள், பூரான் போன்றவற்றுக்கிடையில் தன் உடலை வறுத்திக்கொண்டு தொடர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் குரலோ தமிழக அரசின் செவிக்கு எட்டவில்லை. முதல்வர் எடப்பாடி இதுவரை வந்து எட்டிப்பார்க்கவில்லை. “தமிழக அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், உறுதிமொழி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து காத்திருக்கிறார்கள். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். பல ஆசிரியர்களின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து தமது போராட்டத்தை துவங்கியுள்ள ஆசிரியர்களிடம் இத்தகைய இக்கட்டான நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் வேடிக்கைப்பார்த்து வருகிறது தமிழக அரசு.. மக்களின் நலனில் எந்தளவிற்கு அக்கறையுள்ள அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் மத்திய மாநில அரசுகள் அரசு பள்ளிகளை மூடுவதில் மும்முரம் காட்டுகிறது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வாழ்வாதார உரிமையை கண்டுகொள்ளாமல் இழுத்தடிக்கும் வேலையை செய்துவருகிறது. கிராமப்புறங்களில் கடைநிலையில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை உரிமையான உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. “அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெறவேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. பாடங்களை நடத்தும் நாங்கள் இடையில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். தேர்ச்சி பெற செய்ய வேண்டும் அரசு கொடுக்கும் மற்ற பணிகளையும் செய்ய வேண்டும்? ஆனால் எங்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு மட்டும் எங்கள் உழைப்பு கசப்பாக தெரிகிறதா?“ என குமுறுகிறார்கள் ஆசிரியர்கள்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அடிப்படை வசதியான கழிவறை வசதிகள் தண்ணீர் ஏற்பாடும் சரியாக செய்துதரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை பெண் ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள். ஆசிரியர்களின் குரலுக்கு செவி மடுக்காத தமிழக அரசின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டிப்போம்
“சமவேலைக்கு சம ஊதியம் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை எமது போராட்டம் தொடரும், அதுவரை பின்வாங்கமாட்டோம்“ என உரக்கச்சொல்லி தொடர்ந்து கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெற்றிபெற துணை நிற்போம்.
மக்கள் முன்னணி ஊடகத்திற்காக
ரமணி