2018, திசம்பர் 24 – தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை !

24 Dec 2018

காவி இருளும் கார்ப்பரேட் வல்லூறுகளும் குத்திக் கிழிக்கும் தமிழ்நாட்டைக் காக்க அணிதிரண்டு வந்துள்ள தமிழினமே! வருக! எழுக!

நோக்கத்தில் தெளிவும் பாதையில் உறுதியும்

”எங்கள் நாடு தமிழ்நாடு! இங்கு ஏதடா இந்துநாடு! காவிக் கூட்டமே வெளியேறு!” என எச்சரித்த தந்தைப் பெரியாரின் மண்ணில், தமிழ்நாட்டில் சாதிக் கூட்டத்தோடு காவிக் கூட்டமும் இணைந்து கொண்டு ’பெரியார் சிலையை இடிப்போம்’, ’இது பெரியாரின் மண்ணா, இல்லை ஆழ்வார்களின் மண்ணா? மோதிப் பார்ப்போம்’ என சவால் விடுகிறது வானரக் கூட்டம். ’சுதந்திர தமிழ்நாடு’ என்று இறுதி மூச்சின் போதும் முழங்கிய பெரியாரின் பெருங்கனவை இந்துராஷ்டிரத்தால் இடிப்போம் என கொக்கரிக்கிறது கடப்பாரை கூட்டம். நூறு ஆண்டுகால சுயமரியாதை இயக்க வரலாற்றை, அது தமிழ்நாட்டுக்கு கொடுத்த கொடையை சில ஆண்டுகளில் சிதறடிக்கலாம் என சிறுநரிகள் ஊளையிடுகின்றன. ஆபத்து, பேராபத்து தமிழ்நாட்டை சூழ்ந்துவரும் பேரிருள் அது. கம்பராமாயணத்து கால இருளல்ல, கார்ப்பரேட் வாகனத்தின் மீதேறி வரும் காரிருள். அதுதான் இன்று நம்மை ஒன்றுகூட வைத்திருக்கிறது.

மோதவரும் ஆபத்தை வெல்லத் துணிய நமக்கு உணர்ச்சி மட்டும் போதாது. காலத்தையும் இடத்தையும் உணர்ந்து கொள்கின்ற பெரியாரின் பகுத்தறிவைக் கைத்துணையாய் கொள்ள வேண்டும். காங்கிரசே ஆபத்தென்று காலத்தே முடிவுசெய்து சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியாரின் மண்ணிலேயே காவிகள் கொக்கரிக்க காரணம் என்ன? காவி உட்புக முடியா முள்வேலியல்ல, மின்சார வேலி என்ற பெருமிதமும் போனதெங்கே? தோள்மாற்றி தோள்மாற்றி இங்குற்ற நரிகள்தாம் காவிக்குப் பல்லக்கு தூக்கின. கதவை திறந்து, பாதை போட்டுத் தந்து பவனி வரவிட்டதுதான் இன்று அது கருநாகப் பாம்பாக படமெடுத்து நிற்கிறது. இந்தி, இந்து,இந்தியா என இந்துராஷ்டிர இலக்கோடு காட்டாற்று வெள்ளமாய் கரை தாண்டி வருகிறது. பல தேசம் என்றன்றி ஒரு தேசம் – இந்து தேசம் ஆக்குகின்ற காவிக் கனவு. பேய் பசி, பெரும் சந்தைக்கு ஒரு தேசம் தோது என்ற கார்ப்பரேட் கனவு, இரு கனவும் இணையும் புள்ளியில், காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

”பிரிட்டிஷ்காரன் கையில் இருந்த அதிகாரம் வட நாட்டான், பார்ப்பன பனியாக்களிடம் போகிறதே” என்று பதைபதைத்த நெஞ்சோடு ஓடித் தேய்ந்த பெருங்கிழவன் ஒரே ஒரு குரலாய், தனித்த குரலாய் ஆகஸ்ட் 15 ஐ துக்க நாளென்று சொல்லத் துணிந்தார். அரசமைப்பை எரிக்கச் சொன்னார். தன் வாழ்நாளெல்லாம் அதன்படியே பாடுபட்டார். இன்றோ, டாட்டாவும், பிர்லாவும், பஜாஜூம் மட்டுமல்ல அம்பானியும் அதானியும் அகர்வாலும் என கொள்ளையர்தம் எண்ணிக்கை கூடிவிட்டது. பன்னாட்டு குழுமமாய் பகாசூர வளர்ச்சிக் கண்டு நிற்கிறது. அவர் காலத்தே பிரிட்டிஷ்காரன் மட்டும் தான். இன்றோ உலகெங்கும் உள்ள கொள்ளையர் எல்லாம் கூட்டு வைத்துகொண்டு பெரியார் நாட்டை வேட்டைக்காடாக்கி உள்ளனர். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே சந்தை என அரைத்துப் பொடியாக்கி கரைத்துவிடப் பார்க்கின்றனர். சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டு உழைப்பை, உழைப்பின் பலனை ஐந்தாண்டில் குலைத்துவிட துடிக்கின்றனர்.

வருகின்ற ஐந்தாண்டும் இந்த வல்லூறுகளை வட்டமிட விட்டால் அவை மரத்தில் இருக்கும் காய், கனிகள், இலை, கிளைகளை மட்டுமல்ல மரத்தையே வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்துவிடும். உடனடி அபாயத்தை தடுத்தாக வேண்டும். தடுத்தால் மட்டும் போதாது. வட்டமிடும் வல்லூறுகளுக்கு நிரந்தர முடிவுகட்டியாக வேண்டும். இங்கே தான் பெரியாரின் உறுதி நமக்கு தேவைப்படுகின்றது. எதிரியை மட்டுமின்றி துரோகிகளையும் விட்டுவைக்காத உறுதி. பார்ப்பனர்களை மட்டுமல்ல முக்காப் பார்ப்பனர்களையும் எதிர்த்து நின்ற உறுதி. இன்று முக்காப் பார்ப்பனர்களாக மட்டுமின்றி அரைப் பனியா, முழுப் பனியா, ஒன்றரைப் பனியாவாக மாறிப் போயிருக்கும் கார்ப்பரேட் துரோகக் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் துணிவையும் கொள்கை பற்றுறுதியையும் பெரியாரிடம் இருந்து கடன் வாங்கிக் கொள்வோம்.

தமிழர்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வழியென்று சாதி ஒழிப்பையும் சுதந்திர தமிழ்நாட்டையும் தன் உயிரினும் இனிய கொள்கையாக சுமந்து நின்றார் பெரியார். ஆட்கள் மாறினாலும் ஆட்சிகள் மாறினாலும் இந்த கொள்கைகளை மாற்றிக் கொள்ள மறுத்தவர்.  சீனத்தின் தந்தை சன் யாட் சென். அவர் மூன்று பெரும் கோட்பாடுகளை சீனத்துக்கு வகுத்து தந்தார். பின்னாட்களில் வந்த சீனப் பெரும்புரட்சியாளர் மாவோ, சன் யாட் சென் வகுத்து தந்த மூன்று பெரும் கோட்பாடுகளைக் காலத்துக்குப் பொருத்தமாய் வார்த்தும் வளர்த்தும் நிறைவேற்றினார். எதிரிகளை மட்டுமின்றி சன் யாட் சென்னின் பெயராலேயே சன் யாட் சென்னின் கொள்கைகளை குழித் தோண்டி புதைத்துக் கொண்டிருந்த துரோகிகளிடமிருந்து சீனத்தைக் காத்து, சன் யாட் சென்னின் பெருங்கனவாம் புதிய சீனத்தைப் படைத்தார். நாமும் இப்போது தமிழ்நாட்டின் தந்தையாம் பெரியாரின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டிய கடமையை தோளில் சுமந்து நிற்கிறோம். காலத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமாய் அவர் கொள்கைகளை வளர்த்தெடுத்து அவர் கட்டளையை நிறைவேற்ற புதிய அரசியல் படையாய் எழுந்து நிற்போம்.

காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!

பெரியாரின் கனவாம்…..”சாதி ஒழிப்பையும் தமிழ்த்தேச குடிஅரசையும் நனவாக்குவோம் !”

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி

periyar (1)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW