51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?
கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில் அமர்த்தினார் மைத்ரி. இராசபக்சே நேற்று முன் தினம் பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். ரணிலைப் பதவி நீக்கியமை அரசமைப்புச் சட்டப்படி செல்லாதென இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திய போதும்கூட அதிபர் காது கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை தன் விருப்பப்படி தள்ளிப்போட்டார். ஒருவழியாக கூடிய நாடாளுமன்றத்தில் இராசபக்சேவால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியாமல் போன போதும்கூட அதிபர் தன் முடிவைத் திரும்பப் பெறவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.
சனவரியில் தேர்தல் என்றும் அறிவிப்பு விட்டார். நாடாளுமன்றத்தில் இராசபக்சேவுக்கு பெரும்பான்மையில்லை என்று இரண்டு முறை மெய்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரின் இருக்கையில் தண்ணீர் ஊற்றுவது தொடங்கி மிளகாய்ப் பொடி வீச்சு, கைகலப்பு என இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனநாயக நிறுவனங்கள் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பை உலகுக்கு படம்பிடித்துக் காட்டினார்கள். கடந்த வெள்ளியன்று இலங்கையின் உச்சநீதிமன்றம், நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்கவியலாது என்று தீர்ப்பு வழங்கியது. மீண்டும் இரணில் பிரதமரானால் தாம் அதிபர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று சொன்ன மைத்ரி, சனநாயக மாண்பை மதித்து இரணிலை மீண்டும் பதவியில் அமர்த்துவதாக சொல்லிவிட்டு தனது முந்தைய செயல்களை நியாயப்படுத்தும் வண்ணம் “122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவைவிட 155 இலட்சம் வாக்காளர்களின் முடிவே ஏற்கத்தக்கதாகும் என்று நான் நம்பினேன். எல்லா முடிவுகளையும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே எடுத்தேன்… இதற்காக நான் வரலாற்றில் நினைவுகூரப்படுவேன்” என்று சொல்லியுள்ளார்.
சிங்களப் பேரினவாத ஆளும்குழாத்தினர் தம்மிடையேயான அதிகாரப் போட்டிக்காக நடத்திய சண்டையின் ஊடாக நாடாளுமன்றம், நீதித்துறை, அரசமைப்புச் சட்டம், தேர்தல் போன்ற புதுமக் கால சனநாயக நிறுவனங்கள் தொடர்பிலும் பொறிமுறைகள் தொடர்பிலும் கொண்டிருக்கும் பற்று எத்தகையது என்பதை அம்பலப்படுத்திக் கொண்டனர்.
இராசபக்சேவை வீட்டுக்கு அனுப்புவதாக சொல்லி, இலங்கை அரசியல் என்றுமே கண்டிராதபடி இருபெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்துக் கொள்ள அதிபர் தேர்தலில் மைத்ரி தமக்கு வாக்கு கேட்டார். தமிழ் மக்களின் வாக்குகள் தாம் மைத்ரியை அதிபராக்கியது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மைத்ரியும் – ரணிலும் தமக்கிடையேயான அதிகாரப் பகிர்வை செய்து கொண்டனர். அதாவது, அதிபருக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வாக அது நடந்துமுடிந்தது. மூன்றரை ஆண்டுகள் ஆனப் பின்பும் தேர்தலின் போது அதிகாரப் பகிர்வு செய்வதாக தமிழர்களிடம் அளித்த வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, மீண்டும் இராசபக்சேவைப் பதவியில் அமர்த்தியது என்பது, எதன் பொருட்டு அதிபர் தேர்தலில் மைத்ரிக்கு மக்கள் வாக்களித்தார்களோ அதன் அடிப்படையையே போட்டு உடைத்ததாகும். அதிபரே அரசமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. கடந்த 51 நாட்களில், ரணில் மீண்டும் பொறுப்புக்கு வந்தால் தாம் பதவி விலகிவிடுவதாக அவரே சொன்னார். மேற்படி காரணங்களுக்காக, மைத்ரி அதிபர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவர் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான பேச்சுகள் பன்னாட்டு மன்றத்தில் எழும்போதெல்லாம் இலங்கை இறையாண்மை கொண்ட சனநாயக நாடென்றும் அது ஒரு உள்நாட்டுப் பிரச்சனையென்றும் தட்டிக் கழித்த இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு நாடுகள் இனியும் அப்படி தொடரவியலாது. தமது அரசமைப்பு சட்டத்தையே இப்படி மதிக்கக் கூடிய சிங்களப் பேரினவாத ஆற்றல்கள், இனச் சிக்கலுக்கு எப்படி அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு உரிய தீர்வைத் தருவார்கள்? தமது இராணுவம் இழைத்த பன்னாட்டு குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நேர்மையாக நடத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியுமா? இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன அழிப்புக்குத் தீர்வு காண வேண்டுமானால் அது மூன்றாம் தரப்பின் வழியாகத் தான் முடியும். எனவே, பன்னாட்டுப் புலனாய்வுதான் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர இயலுமே அன்றி உள்நாட்டு விசாரணை அல்ல. மூன்றாம் தரப்பு முன்னிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் சிங்களப் பேரினவாதத் தலைமைக்கும் இடையிலானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்.
இந்திய அரசு இந்த 51 நாட்களில் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமலே காலந்தள்ளி வந்தது. திரை மறைவில் இருந்தே காய்களை நகர்த்தி வெளிநாட்டுறவுகளில் தமது விரிவாதிக்க நகர்வை மேற்கொள்கிறது. ஒருவழியாக, ரணில் பிரதமர் பதவி ஏற்ற பின், இலங்கை சனநாயகமும் மற்றும் அதன் சனநாயக நிறுவனங்களின் மீட்சித்திறனும் வெளிப்பட்டுள்ளதாகவும் இருநாட்டு உறவு மென்மேலும் மேல்நோக்கி வளரும் என்று நம்புவதாகவும் தமது உண்மையான நட்பு நாடு இலங்கை எனவும் இந்தியா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இராசபக்சே பிதமராக்கப்பட்டதை சீனாவும் பாகிஸ்தானும் வெளிப்படையாக வரவேற்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வெளிப்படையாக இரணிலை ஆதரிக்க இந்தியாவோ ஆப்பசைத்த குரங்குபோல், பொத்தாக பொதுவான அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது. ஆனால், திரைமறைவில் இராசபக்வைப் பதவியில் இருந்து கீழிறக்குவதான முயற்சிகளை மேற்கொண்டது. அதற்குப் பகடைக்காயாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொண்டது. மொத்தத்தில், சிங்கள ஆளும்வர்க்கத்துடனான நட்புறவைப் புதுப்பித்துக் கொள்வதற்கு தமிழர்களைப் பயன்படுத்திக் கொண்டது. மலையகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சனைத் தொடங்கி, ஈழத்தமிழர்களின் இன அழிப்பு ஈறாக கடந்த 51 நாள் சிங்கள ஆளும்குழாம் அதிகாரப் போட்டி வரையான இத்தனை காலமும் இந்திய அரசு தனது விரிவாதிக்க நலனை முன்னிட்டு சிங்களப் பேரினவாத ஆளும் வர்கக்த்துடனான நல்லுறவுக்குப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் நலனை இந்தியப் பெருங்கடலில் அமுக்கியதைத் தவிர வேறெதையும் செய்துவிட வில்லை என்பதே இப்போதுவரையான மெய்ந்நிலையாகும். இதில் மாற்றத்தைக் கொண்டுவருவதில்தான் ஈழ விடுதலை அரசியலின் தீர்மானகரமான திருப்பம் அடங்கியுள்ளது. ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு கழிவறைக் காகிதத்தைத் தூக்கி வீசுவது போல் இந்திய அரசு நடந்துக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான் தமிழக மக்கள் இதன் பொருட்டு செய்ய வேண்டிய கடமையாகும்.
ஆனால், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு ஆற்றல்களோ பெளர்ணமிக்கும் அம்மாவாசைக்கும் காத்திருப்பது போல், மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றம் கூடுவதற்கும் தமிழர்கள் அங்கு கொல்லப்படுவதற்கும் காத்திருந்து செயல்படுவது வாடிக்கையாகி உள்ளது. பா.ச.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.தி.மு.க. போன்ற ஆளும்வர்க்க கட்சிகள் இந்திய அரசு எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கின்றன. தி.மு.க. வோ இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஈழச் சிக்கலில் ’அறிக்கை’ விட்டு வரக் காண்கிறோம். இன்னபிற ஈழ ஆதரவு ஆளும் வர்க்க கட்சிகளோ, தமிழர் தரப்பில் ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் சிங்களப் பேரினவாதிகள் தம்மை தாமே அம்பலப்படுத்திக் கொண்ட போதும், கண்டும் காணாமல் கடந்து போவதுகூட ஒருவகை சந்தர்ப்பவாதமே! சிங்களப் பேரினவாத ஆளும் கூட்டத்திற்கு இடையிலான அதிகாரப் போட்டிச் சண்டை முடிவுக்கு வந்துவிடவில்லை. முறுகல் நிலை தொடர்கிறது. சரியான செயலுத்தியுடன் ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவு ஆற்றல்களும் இதில் தலையீடு செய்ய வேண்டும்.
தமிழர்களை ஒடுக்குவதன் பொருட்டு பலமுறை அவர்களின் அரசமைப்பு சட்டத்தைக் குப்பைத் தொட்டியில் வீசியிருந்த சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கம் இம்முறை தமக்கிடையிலான அதிகாரப் போட்டியின் பொருட்டு அரசமைப்பை வெற்று தாள்களாக்கியுள்ளது. நாடாளுமன்ற சனநாயக மாண்பைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது. சிங்களர்களின் ஒரு பகுதியினரும் ஒட்டுமொத்த தமிழர்களும் இராசபக்சேவுக்கு எதிராக மைத்ரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்து இருந்தனர். தேர்தலின் வாயிலாக மக்கள் வழங்கியிருந்த கட்டளையையும் மைத்ரி தெள்ளத்தெளிவாக மீறிவிட்டார். இலங்கை அரசமைப்பையும் மக்களின் கட்டளையையும் மீறிய இலங்கை அதிபர் மைத்ரியைப் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்திய அரசு தனது விரிவாதிக்க நலனுக்காக சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்தை மறைமுகமாக ஆதரித்துவருவதை தமிழ்நாடு ஏற்கவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது தனது விரிவாதிக்க நலனின் பொருட்டு அன்றி இலங்கையில் ஒடுக்கப்பட்டு வரும் தமிழர்களின் பக்கம் நிற்பதாக இருக்க வேண்டும். அமைந்திருக்கும் புதிய அரசு 2015 தேர்தலின் போது தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை, பறிக்கப்பட்ட காணிகளை தமிழர்களிடம் ஒப்படைத்தல், சிங்கள இராணுவத்தை வெளியேற்றுதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுப் புதிய அரசுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும். இனியும் தமிழர் பிரச்சனையை உள்நாட்டுப் பிரச்சனை என்று சொல்லி ஒதுங்கி நிற்பதற்கு மாறாக, பன்னாட்டுப் புலனாய்வின் வழி இனப்படுகொலைக்கு நீதியை உறுதி செய்யவும் மூன்றாம் தரப்பின் தலையீட்டின் வழி இலங்கையில் நீடித்துவரும் இனச்சிக்கலுக்கு தீர்வு காணவும் பன்னாட்டு அரசுகள் முன்வர வேண்டும்.
செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499