மேகேதாட்டு அணைக் கட்ட ஒப்புதல் – காவிரி உரிமை மீதான இறுதித் தாக்குதல் !

03 Dec 2018

காவிரிப் படுகையையே கஜா  புயல் புரட்டிப் போட்டு அந்த பேரிடரின் அதிர்வில் இருந்து மீளாத தமிழகத்தின் மீது அடுத்தொரு தாக்குதலாய் மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்ததாக, மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை கர்நாடக அரசு முன்வைக்க இருக்கிறது.

5,912 கோடி ரூபாய் செலவில் 66 டி.எம்.சி. காவிரி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கான அணையாக மேகேதாட்டு அணைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. இதன் மூலம் மைசூர், மாண்டியா மாவட்டங்களுக்கான நீர்பாசனத்திற்கும் பெங்களூரூ மாநகரத்தின் குடிநீருக்காகவும் மின்சார ஆக்கத்திற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத் துறை ஒப்புதல் வழங்கி இருப்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகும் எதிரானது. காவிரி நீருக்கு உரிமை கொண்ட கேரளம், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஓர் அணையைக் கட்ட அனுமதி அளிக்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற திசம்பர் 6 அன்று கூடவிருக்கிறது. மேகேதாட்டு அணைக் கட்டுவது தொடர்பான பேச்சும் நடக்கவிருக்கிறது.

மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கு அனுமதிக்க கூடாதென தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்ணாவதி ஆகிய அணைகள் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணராஜ சாகர் அணை 1924 இல் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு சுவர்ணாவதி 1984 இலும், கபினி 1978-79 இலும், ஹேமாவதி 1979-80 இலும், ஹாரங்கி 1979-80 இலும்  கட்டப்பட்டன. மேற்படி நான்கு அணைகளும் 1924 சென்னை மாகாணத்திற்கும் மைசூ சமஸ்தானத்திற்கும் இடையிலான 50 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பின் அந்த ஒப்பந்தம் காலவாதியாகிவிடும் என்பதல்ல, அது நடைமுறையில் இருக்கிறது காவிரி நடுவர் மன்றம் பிற்காலத்தில் உறுதிசெய்தது. ஆனால், வெறும் ஐந்து ஆண்டுகளில் நான்கு அணைகளை அடாவடியாக கர்நாடகா கட்டிக் கொண்டது. இப்போது அந்த அணைகள் இருப்பது மெய்நிலை ஆகிவிட்டது. காவிரி நடுவர் மன்றம் கூட இனி அதை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டது. இப்போது மேகேதாட்டு அணையைக் கட்டியே திருவதென கர்நாடக முரண்டு பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் மேலும் மூன்று அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகம். இதன்மூலம் கூடுதலாக 45 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும்.

மேகேதாட்டு அணை மட்டும் கட்டப்பட்டு விட்டாலே 171.73 டி.எம்.சி. தண்ணீரைக் காவிரியில் கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளவான 93.47 டி.எம்.சி. வை விட இருமடங்காகும்.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழேயுள்ள கபினியில் 19.5 டிம்சி தண்ணீரை சேமிக்கலாம். இந்த அணையில் நிரம்பிய உபரி நீர் அர்க்காவதி நதியாக காவிரியில் சேர்கிறது. அந்த தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டிய நீராகும். அவை மேட்டூர் அணைக்குதான் வரும். இப்போது இந்த இடத்தில் மேகேதாட்டு அணை கட்டப்பட்டுவிட்டால் மேட்டூருக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுவிடும். மேகேதாட்டு அணை இருப்புத் தண்ணீர் இருக்கும் அணை( Balance Reservoir) என்று சொல்கின்றனர். கபினி நிரம்பியது போக இருக்கும் உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காகவே இந்த அணையாகும்.

முன்பொரு முறை தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம் என கர்நாடகத்தில் உள்ள இனவாத ஆற்றல் சொல்லிக் கொண்டிருந்தனர். மேகேதாட்டு அணைக் கட்டப்பட்டு விட்டால் அது மெய்யாகிப் போகும். இதுவரை மழைப் பொய்த்துப்போய் தண்ணீர் பற்றாக்குறையின் போது கர்நாடகத்திடம் தமிழகம் மன்றாடும் நிலை இருந்துவந்தது. ஆனால், இனி  வான் பொய்யாதுப் பெய்தாலும் உபரி நீர் என்ற ஒன்று தமிழகத்திற்கு வருவது என்பதற்கு இடமே இல்லாமல் போகும். ஏனெனில் காவிரி தமிழகத்திற்கு நுழைவதற்கு முன்பு இப்படியொரு அணைக் கட்டித் தண்ணீரைத் தேக்க நினைக்கிறது கர்நாடகம். இவ்வாண்டு மழை அளவின்றி பெய்து உபரி நீர் தமிழகத்திற்கு வந்த போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவா நாங்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டிவைத்துள்ளோம் என்று நொந்து கொண்டார்.

காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகத்தின் கண்ணோட்டமென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த ஹார்மன் கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளது. அதாவது, ஆற்றுநீர் பாயும் தமது எல்லைப்பகுதிக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதே ஹார்மன் கோட்பாடாகும். ஆற்றுநீர் பாயும் அண்டை மாநிலத்தவர்க்கு என்ன தீங்கு ஏற்பாட்டாலும் அதைப் பற்றி பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. காலாவதியாகிப் போனதொரு கண்ணோட்டத்தோடு இச்சிக்கலை அணுகிக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு சட்டப் போராட்டத்தின் பயனாய் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் பயனில்லை என்றே படுகிறது. எந்த சட்டநெறிகளை இன்றைக்கு வரை கர்நாடகம் பின்பற்றியதில்லை. அதை இந்திய ஒன்றிய அரசு தட்டிக் கேட்டதுமில்லை.

காவிரியைப் பொறுத்தவரை மேகேதாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால் அதற்குமேல் தமிழகம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையாகும். தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டது, உச்சநீதிமன்றத்தையும் அணுகிவிட்டது. ஆனால், இந்த இரண்டு அமைப்புகளும் உறுதியாக நின்று காவிரி உரிமையை இதுவரை பாதுகாத்ததே இல்லை.

காவிரி நீர் உரிமை மீது அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று கடுமெதிர்ப்பு தெரிவித்து இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். மத்திய அரசு எப்போதும் தமிழகத்தின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தாமல் காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணைக்கட்டும் முயற்சிக்கு ஒப்புதல் தந்ததைத் திரும்பப் பெற வேண்டும்.

 

செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,  இளந்தமிழகம்

9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW