“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத்  தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ?  

28 Nov 2018

 

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத்  தொழிலாளர்கள்)

கடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7 மாவட்டங்களை தலை கீழாகப் புரட்டி போட்டது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இப்புயலின் பாதிப்பால் பெரும் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.சென்னை வெள்ளம்,ஓக்கி புயல்  என கடந்த கால  இயற்கை பேரிடர்களின்போது எப்படி மக்களை அரசு கைகழுவியதோ, அதுபோலவே தற்போதைய கஜா புயலின் போதும்,பாதிக்கப்பட்ட மக்களை அரசு கைவிட்டது. சென்னை பெரு வெள்ளத்தின்போதும் பல மாநிலங்களில் இருந்து சென்னைக்கு குவிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களால் மாநிலத் தலைநகர் ஒரு சில வாரங்களில் மீண்டது.தற்போது கஜா புயலின் தாக்குதலால் சின்னாபின்னாமாக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பை மின்வாரியத் தொழிலாளர்கள் வேகமாக மீட்டு வருகிறார்கள்.

கஜா புயல் பாதிப்பால்,முதலில்  முப்பதாயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன என்ற மின்வாரியம்,தற்போது சுமார் 1.40 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன எனவும்,19,000 கிலோமீட்டர் மின்கம்பிகள்,1505 டிரான்ஸ்பார்மர்கள்,200 துணை மின் நிலையங்கள்  சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து  சுமார் இருபதாயிரம் மின்வாரியத் தொழிலாளர்கள் பாதிப்படைந்த மாவட்டங்களின் மின்சீரமைப்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.கன மழையும் பொருட்படுத்தாமல் நாளைக்கு பத்து மணி நேரம் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களது அயராத உழைப்பால்,சில தினங்களுக்கு முன்பு,புயல் தாக்கிய வேதாரண்யம் நகருக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது, தலைப்புச் செய்தியாகியது.

புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கான முயற்சியில் ஒட்டுமொத்த அரசு  இயந்திரமும் கைகட்டி வேடிக்கை பார்க்க, மின்வாரியத் தொழிலாளர்களின் மின்சாரக் கை மட்டுமே பாதிப்படைந்த மக்களை காப்பதற்கு நீண்டது!துயர் துடைக்கும் பணியில் இதுவரை மூன்று தொழிலாளர்கள் உயிர் விட்டுள்ளனர். அரசோ உயிரிழந்த இரண்டு நிரந்தர தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளது. உயிரிழந்த மற்றொருவர்  ஒப்பந்த தொழிலாளர் என்பதால், அவர் குடும்பத்துக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்காமல் மனித உயிரிடம் பாரபட்சம் காட்டி வருகிறது.

மக்களின் துயர் துடைக்க உயர் அழுத்த மின்கம்பத்தில் அமர்ந்தபடி பொட்டலச் சோற்றை வாயில் திணித்துக் கொண்டும்,சில சமயங்களில் உயிரையும் விடுகிற அந்த மின்வாரியத் தொழிலாளியின் வாழ்க்கையோ  துயர்மிக்கவையாக உள்ளது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,குறைந்த பட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்ற  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக  மின்வாரியத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

சுமார் இருபது வயதில் ஒப்பந்தத் தொழிலாளியாக, மின்வாரியத்திற்கு வேலை செய்ய வருகிற தொழிலாளி ஒருவர்  தற்போது  35 வயதைக் கடக்கிறார். இன்று நிரந்தரமாவோம் நாளை நிரந்தரமாவோம் என அவரது வாழ்க்கை பகல் கனவாக நீள்கிறது.ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என கடந்த காலத்தில் பல்வேறு முறை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் கழக ஆட்சியாளர்களைப் பொருத்தவரைக்கும் தொழிலாளர் நல விரோத கொள்கையில் ஒருமித்த கண்ணோட்டத்துடனே செயல்பட்டு வருகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் மின்வாரியத் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு அவர்கள் ஒருபோதும் செவிமடுப்பதில்லை.

சமூகப் பாதுகாப்பு அற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டலை கழக ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கியுள்ளனர்.ஒரு வாரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்,அறுபதாயிரம் மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது,நூறு துணை மின் நிலையங்கள் சரி செய்யப்படுள்ளன என  மின்துறை அமைச்சர்  வழங்கிற உறுதிமொழிக்கும்,புள்ளி விவரங்களுக்கும் செயல் வடிவம் வழங்குபவர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள்தான்!

அதேநேரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் முப்பதாயிரத்துற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை பொறுத்தவரை அது மீண்டும் மீண்டும் தட்டிக் கழிக்கப்பட்டே வருகின்றது.வர்தா புயலானாலும்,தானே புயலானாலும்,சென்னை வெள்ளமானாலும் ஒப்பந்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு பணியாலேயே நகரமும் கிராமமும் மீண்டெழுகிறது.பின்பு அவர்களை அரசாங்கம் கைகழுவி விடுகிறது!

2015 -சென்னை பெரு மழை வெள்ளத்தின்போது நகரத்தில் குவித்த பலநூறு டன் குப்பைகளை  பல்லாயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றினார்கள். வெள்ளம் வடிந்தபின்னர் துப்புரவு பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும் மறக்கப்பட்டன. அவர்களின் போராட்டங்களும் தனித்து விடப்பட்டன. தற்போது கஜா புயல் தாக்கத்தின் அவசரகால  சீரமைப்பு பணியின் ஊடாக வெளிச்சத்திற்கு வருகிற மின்வாரியத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை, அச்சமயத்தில் மட்டுமே பாராட்டிவிட்டு கடந்து போகாமல், அவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதே மக்களின் முதற் கடமையாக இருக்க முடியும். நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் இருள் போக்கி, ஒளி பெருகச் செய்த மின்வாரியத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சூழ்ந்த இருளை விரட்ட மின்வாரியத் தொழிலாளருடன் கரம் கோப்போம்.

 

– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக

அருண் நெடுஞ்சழியன், arunpyr@gmail.com, 8825425912

 

குறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்cஉணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW